வைத்தியசாலைகளில் பணிபுரியும் சிற்றூழியர்களே, காவலாளிகளே உங்களோடு சில நிமிடங்கள் ..


வைத்தியசாலைக்கு  சிகிச்சை  பெற  வரும்  நோயாளிகளிடமும்  வைத்தியசாலையில்  தங்கி  சிகிச்சை  பெறும்  நோயாளிகளை    பார்க்க  வருபவர்களிடமும்  நீங்கள்  நடந்து  கொள்ளும்  விதம்  மோசமானதும்  கண்டிக்கத்தக்கதுமாகும்.


வைத்தியசாலை  என்பதே  கருணைக்கான  தளம்.  உடலளவிலும்  மனதளவிலும்  பலவீனமடைந்தவர்கள்  சிகிச்சை  பெறும்  இடம்.  ஆனாலும்  பின்வரும்  சந்தர்ப்பங்களில்  நீங்கள்  நடந்து  கொள்ளும்  விதம்  மோசமானது. 


1.  நோயாளிகளை  பார்வையிட     பார்வையாளர்கள்  வைத்தியசாலையினுள்  நுழையும்  போது.


2.  வாட்டுகளில்  உள்ள  நோயாளிகளை  பார்ப்பதற்காக  வரிசையில்  நிற்கும்  போது.


3.  வாட்டுகளுக்கு  சென்று  நோயாளிகளை  பார்வையிடும்  போது.


4.  OPD -  வெளிநோயாளர்  பிரிவில்  சிகிச்சை  பெறுவதற்காக  வரிசையில்  நிற்கின்ற  போது.


நீங்கள்  நோயாளிகள்  மீதும்  பார்வையாளர்கள்  மீதும்  கடுஞ்சொற்களைப்  பயன்படுத்துகிறீர்கள்.  


சோகத்தோடு  வருபவர்களை  உங்கள்  வார்த்தைகள்  மேலும்  காயப்படுத்தி  விடுகிறது. 


"கனி  இருக்க  காய்  கவர்ந்தற்றா  உங்களுக்கு.......  கனி  போன்ற  அன்பான  வார்த்தைகள்  இருக்கும்  போது நீங்கள்  ஏன்  கடுஞ்சொற்களை  பயன்படுத்துகிறீர்கள்,அவர்கள்  மீது  எரிந்து  விழுகிறீர்கள்.  


நோயாளிகளை  பார்க்க  வருபவர்கள்  நீண்ட  தூரம் பயணம்  செய்து  அந்த  பயணக்  களைப்புடனே,  சோகத்தை  நெஞ்சில்  சுமந்து  கொண்டு  ஆறாத  உள  ரணத்துடன் வைத்தியசாலைக்கு   வருகிறார்கள்  என்பதை  நினைவிற்  கொள்ளுங்கள்.  இவ்வாறான  கடின  சூழலில்  வருபவர்கள்  மீது தான்  நீங்கள்  சீறிப்  பாய்கிறீர்கள்.


அல்குர்ஆன்  கூறுகிறது  நீங்கள்  இன்னோருவருடன்  பேசும்  போது  அன்பான  வார்த்தைகளைக்  கொண்டு  கதையுங்கள்.  அவருடன்  வாதம்  செய்ய  வேண்டி  ஏற்படின்  அதை  விடவும்  அழகான  வார்த்தைகளை  பயன்படுத்துங்கள்.


பெருமளவிலான  சனக்கூட்டத்தை  கட்டுப்படுத்தி  வைத்திய  நடவடிக்கைகளை  இலகுபடுத்தல்,  பெரிய  வைத்தியசாலைகளில் ( கொழும்பு   கண்டி  போன்ற )  அதன்  சுற்றுவட்டாரத்தில்  வாகனங்களை  சரியாக  ஒழுங்குபடுத்தி  தேவையற்ற  வாகன  போக்குவரத்து  நெரிசலை  தவிர்த்தல்,  பொதுமக்கள்  வைத்தியசாலை  ஒழுங்குகளை  கடைப்பிடிக்க  உதவுதல்  போன்ற  தலையாய  கடமைகள்    உங்களுக்கு  இருப்பது  உண்மைதான்.


உங்களது  இக்கடமைகளை  நிறைவேற்ற  அன்பான  வார்த்தைகளை  பயன்படுத்தலாமே.அதைவிடுத்து  ஏன்  நோயாளிகள்  மீதும்  பார்வையாளர்களின்  மீதும்  கடுகடுத்துக்  கொள்கிறீர்கள்.


வைத்தியர்கள்,  தாதிமார்,  நிறைவு காண்  மருத்துவ  சேவையாளர்கள்  போன்ற  உங்களிலும்  பார்க்க  பதயில்  ஒரு  படி  மேலுள்ளவர்கள்  கூட  அவர்களுடன்  அன்பாக  நடந்து  கொள்ளும்  போது  நீங்கள்  மட்டும்  ஏன்  அதிகார  தொனியில்  நடந்து  கொள்கிறீர்கள்.


உங்களில்  பலர்  நோயாளிகளுடனும்  பார்வையாளர்களுடனும்  அன்பாகவும்  பண்பாடுடனும்  நடந்து  கொள்ளும்  போது  ஒரு  சிலரின்  சிந்தையற்ற,  கருணையில்லாத  நடவடிக்கைகளால்  உங்கள்  தொழிலின்  தரம்  இழந்து  போவதை  அனுமதிக்காதீர்கள். இது  தொடர்பாக  சக  வைத்தியசாலைகளில்  தொழில்  புரியும்  உங்கள்  நண்பர்களிடம்  எடுத்துக்  கூறுங்கள்.  பொதுமக்களுக்கு  சேவை  செய்வதற்காக  நீங்களே  தவிர  உங்களுக்காக  பொதுமக்கள்  அல்லவே.


-  மூதூர்  யூ.  எம்.  லுத்பி(f)-

    

வைத்தியசாலைகளில் பணிபுரியும் சிற்றூழியர்களே, காவலாளிகளே உங்களோடு சில நிமிடங்கள் .. வைத்தியசாலைகளில்  பணிபுரியும்  சிற்றூழியர்களே,  காவலாளிகளே  உங்களோடு  சில  நிமிடங்கள் .. Reviewed by Madawala News on 11/08/2016 08:10:00 AM Rating: 5