Ad Space Available here

புதிய தலையிடி..

 


இலங்கை சமூக, பொருளதார, அரசியலில் மாற்றம் கண்டு வரும் நிலையில் அவற்றோடு தொடர்புபட்ட பிரச்சினைகளும் பல பரிணாமங்கள் பெற்று வளர்வதைக் காண முடிகிறது. அபிவிருத்தி அடைந்து வரும் நிலைக்கு ஏற்ப பிரச்சினைகளும் விருத்தியடைந்து வருகின்றன.

ஒரு தனிநபரினது அல்லது தனிநபர்களின் கூட்டத்தினது. சாதாரண நடவடிக்கைகளில் இடைஞ்சல்களை ஏற்படுத்தும் அல்லது அவர்களுக்கு அசௌகரியத்தை உருவாக்;கும் இலஞ்சம், ஊழல், மோசடி, கொலை, கொள்ளை, போதைப்பொருள் பாவனை, சிறுவர் பெண்கள் மீதான துஷ்பிரயோங்கள்,  வன்முறை போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகள் அரசுக்கு விமர்சனங்களையும், சிரமங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் நகரப் பிரதேசங்களில் குறிப்பாக கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இடம்பெறும் போக்குவரத்து நெரிசல்களும் அதனால் ஏற்படுகின்ற சமூக பொருளாதாரத் தாக்கங்களும் மக்களுக்கு மாத்திரமின்றி அரசுக்கும் புதிய தலையிடியை உண்டுபண்ணியிருக்கிறது.

சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் பல்வேறு கோணங்களிலும், மட்டங்களிலும் அரசியனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், திட்டமிடலில் காணப்படும் வலுக்களினால்; சில பிரச்சினைகள் உருவெடுக்கிறது.

அவ்வாறு எழுந்த பிரச்சினைகளில் ஒன்றாக கொழும்பு நகரப் பிரதேசங்களில் செயற்பட்ட அரச நிறுவனங்கள் இப்பிரதேசங்களிலிருந்து பத்தரமுல்லைப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டதனால் கொழும்பு மற்றும் பத்தரமுல்லைக்கான போக்குவரத்து மார்க்கத்தில் அதிக வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதை தினமும் காண முடிகிறது.

இப்போக்குவரத்து நெரிசல்கள் மனித வள செயற்பாடுகளிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் எதிர்மறைத் தாக்கங்களை  ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்களினால் கூறப்படுகிறது.

குடும்ப, பொருளாதார விருத்தியை எவ்வாறு ஏற்படுத்துவது? அதற்கான நேரத்தை எவ்வாறு சேமித்துக் கொள்வது?, எவ்வாறு செலவழிப்பது என்று ஒவ்வொரு தனிநபரும் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்த இயந்திர வாழ்க்கைப் பொழுதுகளில், தொழில் நிமித்தமோ அல்லது வர்த்தக, கல்வி நடவடிக்கைக்காகவோ, சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்து கொள்வதற்காக பயணிக்கும்போது, அதிகரித்த வாகனப் பயன்பாட்டினால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்கள்; பெறுமதிமிக்க நேரத்தைப்  பாதைகளில் கரைக்கிறது. இலக்குகளைச் தவறச் செய்கிறது.

இதனால், பொதுமக்களும்;. அரச, தனியார் தொழிலகங்களுக்குச் செல்லும் ஊழியர்களும் சிரமங்களின் அவஸ்;தைகளினால உள நெருக்கடிகளுக்கு அந்நேரங்களில் தள்ளப்படுகின்றனர். இவ்வாறானதொரு நிலைமையினை கடந்த ஓரிரு மாதங்களாக கொழும்பு பத்தரமுல்லை போக்குவரத்து மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகளிடையே காண முடிவதாக விமர்சரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தலைநகரும்; வாகன நெருக்கடியும்

13 பிரதேச செயலக எல்லைப் பிரதேசங்களையும் 566 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்ட கொழும்பு நகரானது 676 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் 2,309,809 மக்கள் தொகையைக் கொண்ட சன நெருக்கடி மிக்க நகரமாகத் திகழ்கிறது. குறைந்த நிலப் பரப்புக்குள் அதிக சனத்தொகையைக் கொண்ட உலக நாடுகளின் தலைநகரங்களில் வர்த்தக தலைநகரமான கொழும்பும் ஒன்றாகக் காணப்படுகிறது.

இவ்வாறு காணப்படும் கொழும்பு நகரின் வீதிக் கட்டமைப்பானது அதிகரித்துள்ள சனத் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்பவும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்பவும் முறையாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படவில்லை என்பதை தலைநகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெருசல்கள் புடம்போட்டுக் காட்டுகின்றன.

போக்குவரத்து அமைச்சின் தரவுகளின் பிரகாரம், சகல வகையான வாகனங்களும் அடங்கலாக 6,302,141 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் கடந்த 2015ஆம் ஆண்டு புதியதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையானது 668,902 ஆகும். இதில்  129,547 முச்சக்கர வண்டிகளும், 370,889 மோட்டார் சைக்கிள்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கொழும்பு நகருக்குள் அதிகளில் காணப்படும் வாகனமாக முச்சக்கர வண்டி காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. விபத்துக்களில் அதிகளவு சம்பந்தப்படும் வாகனங்களாக இந்த முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிலும் என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இவ்வாறனா நிலையில்,  பல்வேறு காணங்களுக்காக கொழும்பு நகருக்குள் தினமும் மக்கள் வந்து போகின்றனர்.   தினமும் 1.8 மில்லியன் மக்கள் தொகையினர் தினமும் கொழும்புக்கு வருவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன இவ்வெண்ணிக்கையானது கொழும்பின் சாதாரண சனத்தொகையை ஏறக்குறைய 2 மில்லியனுக்கு அதிகமாக வேலைநாட்களில் அதிகப்படுத்துகிறது.

தினமும் கொழும்புக்கு வருகின்றவர்களில் ஏறக்குறைய 50 வீதமானனோர் அரச, தனியார் தொழிலகங்களில் பணிபுரிவதன் நிமித்தமும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும,; கல்விச் செயற்பாட்டுக்காகவும் வருவதாகச்  தெரிவிக்கப்படுகிறது. தினமும் 5 இலட்சம் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் நுழைவதாகவும், இவ்வானங்களினூடாக ஏறக்குறைய 1.8 மில்லியன் மக்கள் தொகையினர் கொழும்பை அடைவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கொழும்புக்கு தினமும் வருகின்ற 509,248 வாகனங்களில் 443,586 தனியார் வாகனங்களும், 29,064 அரச வாகனங்களும் மற்றும் 36,598 வாகனங்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டுவருவதாகவும் இவ்வெண்ணிக்கையானது வருடத்திற்கு வருடம் அதிகரித்துச் செல்வதையும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகிறது.

இந்நிலையில்தான், புதிய அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் 2020ஆம் ஆண்டளவில் கொழும்;பு நகரை வர்த்தக கேத்திரமிக்க நகராகவும் கொழும்பு புறக்கோட்டையின் மையப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 20 கிலோமீற்றர் தூரத்துக்குட்பட்ட பத்தரமுல்லையை அரச நிருவாக நகராகவும் மாற்றும் நோக்குடன் நகரிலுள்ள அரச நிறுவனங்கள் பத்தரமுல்லையை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதன்காரணமாக, அரச ஊழியர்களினதும் சேவை பெரும் பொதுமக்களினதும் பயணங்கள் பத்தரமுல்லையை நோக்கி செல்வதனால் கொழும்பு பத்தரமுல்லை இரு வழிப் பாதை அந்திமாலைப் பொழுதிலும் அமைதிக் காலை வேளையிலும்;  வாகனங்களினால் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் உருவாகும் நெரிசல்களினால் பொன்னான நேரம் பாதைகளில் கரைந்து செல்வதனால் உரியவர்களின் இலக்குகள் உரிய நேரத்திற்குள் அடையப்படுவது தடுக்கப்படுவதுடன் பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பத்தரமுல்லையும் அலுவலர்களும்

சரித்திர முக்கியத்துவமிக்க பத்தரமுல்லை பிரதேசம் அரச நிர்வாக கேந்திரத்தளமாக மாறிக்கொண்டு வருகிறது. புதிய பாராளுமன்றத்தின் அமைவினால் பிரபல்யம் அடைந்த பத்தரமுல்லை, கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், செச்சிறிபாய கட்டடத் தொகுதி என்பவற்றினாலும் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. இந்நிலையில் தியவன்ன ஓயாவை மையப்படுத்தியதாக கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பத்தரமுல்லை பூங்கா, அபே கம எனும் எங்களது கிராமம், அவற்றோடு இணைந்த நடைபாதை மற்றும் பல்வேறு கலை, காலசார நிலையங்கள் என்பவற்றினால்  மக்களின் மன அமைதிக்கும் உடற்பயிற்சிக்கும் சிறந்த இடமாக  தற்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, அண்மைய நாட்களில் இப்பிரதேசம் இந்நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது அதற்கான காரணமாக இப்பிரதேசத்தில் மக்களின் முக்கிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அநேகமான அமைச்சுக்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள் என பல அரச நிருவனங்கள் கொழும்பு நகரிலிருந்து பத்தரமுல்லைக்கு இடமாற்றப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக குடிவரவு குடியகல்வுத் திணைககளம், ஆட்பதிவுத் திணைக்களம், மேல் மாகாண கல்வி அமைச்சு, மேல் மாகாண பொதுசேவைகள் ஆணைக்குழுவின் காரியாலயம், அத்தோடு இன்னும் பல முக்கிய அரச அலுவலகங்கள் பத்தரமுல்லையில் இயங்க ஆரம்பித்துள்ளதனால் மக்களின் தேவையும் இப்பிரதேசத்தை நோக்கியதாக அமைந்துள்ளது.

அத்தோடு, கொழும்பு பத்தரமுல்லை பொதுப்போக்குவரத்து வழியாக அநேகமான பிரதேசங்களுக்காhன பொதுபோக்குவரத்து பஸ்கள் சேவைகளும் இடம்பெறுகின்றன. இவற்றின் காரணமாகவும் இப்பாதயினூடான போக்குவரத்தில் நெரிசல்கள் ஏற்படுகின்றன. அத்துருகிரிய, மீகொட, கடுவெல, கொலனாவை, முல்லேரியா, தெஹிவலை - பத்தரமுல்லை, பாணந்துறை-கண்டி அத்தோடு காலி மாத்தறை நகரங்களுக்கான அதிவேக பாதைவழிக்கான பிரதான மார்க்கமாகவும் இப்பாதை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல்மிக்க வழியாக இப்போக்குவரத்து மார்க்கம் காணப்படுவதனால் பெரும் போக்குவரத்து சிரமத்தை மக்களும் அரச, தனியார் ஊழியர்களும் எதிர்நோக்குகின்றனர்.

பத்தரமுல்லை பிரதேசத்தின் சனத்தொகையான 75,633 மக்கள் தொகையை விடவும் தற்போது இப்பிரதேசத்திற்கு அல்லது இபிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் மற்றும் அரச தனியார் பணியாளர்கள், சேவை பெறுநரின் எண்ணிக்கை 350,000யையும் விட அதிகமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலைமைகளைச் சமாளிக்குமுகமாக இப்பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் பணிபுரியும்  ஊழியர்களின் கடமை நேரங்களை இலகுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கடந்த வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தது.

நெரிசல்களும் இலகு பணி நேரமும்  

கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களினால்  ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு ஏற்படும் நேர சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பரீட்சார்த்தமாக அடுத்த மாதம் முதல் இலகு வேலை நேரங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இத்திட்டம் வெற்றியளிக்கும் சந்தர்ப்பத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நிரந்த இலகு வேளை நேரமாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதன் பிரகாரம், அரச ஊழியர்கள் காலை 7 மணிக்கும் 10 மணிக்குமிடையில் வேளைக்கு சமூகமளிக்க முடியுமெனவும், அதேபோல் மாலை 3 மணிக்கும் 6 மணிக்கும் பணியை நிறைவு செய்து செல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியர்கள் காலை 10 மணிமுதல் 3 மணி வரை கட்டாயம் மக்களி;ன் சேவைக்காக பணியகங்களில் கடமையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை பாரிய மற்றும் மேல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரை ஆதாரம் காட்டி அப்பத்திரிகை தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

நெரிசல்களின் விளைவுகளும் தீர்வுகளும்

போக்குவரத்து நெரிசல்களினால் ஏற்படும் சமூக பொருளாதா நஷ்டம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர்களின் 2009ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம், பாரிய கொழும்புப் பிரதேசத்தில் தினமும ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக 2009ஆம் ஆண்டில் 32 பில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இவ்விழப்பானது வருடாந்த இழப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கான நேர தாமதம், ஊழியர்களின் நேர விரையம்;, குறித்த நேரத்திற்கு பணிக்குச் செல்ல முடியாதானால் பணியில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சந்தைகளுக்காக பொருட்களை உரிய நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமை, வளி மற்றும் சூழல் மாசடைவு என பல விளைவுகள் இப்போக்குவரத்து நெரிசல்களினால் ஏற்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு மத்தியில் வாகனங்களின் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப பொருளாதாரத்தில் விருத்தியைக் காணமுடியவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

வினைத்திறனற்ற நகர போக்குவரத்துப் பொறிமுறையும், முறையற்ற பொது போக்குவரத்து சேவையும், ஒழுங்கற்ற வீதிப் போக்குவரத்து நடைமுறையுமே நகரப்பகுதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்களுக்குக் காரணமென தெரிவிக்கப்படுகிறது.
 
நகரப் புறங்களில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க வேண்டுமனால் அல்லது வாகன நெரிசலற்ற போக்குவரத்து இடம்பெற வேண்டுமானால் வெளிநாடுகளில் அமுல்படுத்தப்படுகின்ற போக்கவரத்து நடைமுறைகள் பின்;பற்றப்படுவது அவசியமென போக்குவரத்து  ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சில தசாப்தங்களுக்கு முன்னர் ஆசியாவில்  சிறந்த போக்குவரத்து பொறிமுறை கொண்ட நாடுகள் வரிசையில் இரண்டாம் இடத்தை இலங்கை கொண்டிருந்தது.
 
ஆனால், அந்தப் பெயரானது 1960களின் பிற்பாடு இலங்கைக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில், இலங்கையின் போக்குவரத்து பொறிமுறையானது பிந்திய காலத்தில் வினைத்திறனற்றதாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர். இந்நிலையில் பத்தரமுல்லை கொழும்பு மார்கத்தில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல்களை குறைக்;குமுகமாகவும் இப்போக்குவரத்து நெரிசல்களினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலையிடியை தவிர்க்குமுகமாகவும், பயணிகளின்  சிரமங்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்;குமுகமாகவும் 550 மீற்றர் நீளமான மேம்பாலம் அமைக்கும் திட்டம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இராஜகிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
ஐந்து வழி சந்தியைக் கொண்டதான இம்மேம்பால நிர்மாணப்பணிகள் ஸ்பானிஸ் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 4.7 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இராஜகிரியைக்கும் பத்தரமுல்லைக்குமிடையிலான 550 மீற்றர் நீளமான இம்மேம்பாலமானது இவ்வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரசிசலைக்குறைக்கும் என எதிர்பார்க்க்பபடுகிறது.

இருப்பினும், இப்பாதைக்கான மேம்பாலத்தை நிர்மாணித்ததன் பிற்பாடு கொழும்பு நகரப்; பிரதேசங்களில் இயங்கி வந்த அரச அலுவலகங்களை பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்திருந்தால் தற்போது இவ்வீதியில் ஏற்பட்டிருக்கும் வாகனப் போக்குவரத்து நெரிசல்களையும் அதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தலையிடியையும் அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களையும் குறைத்திருக்க முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுவதில் யதார்த்தம் இருப்பதாகவே புரிகிறது.
புதிய தலையிடி.. புதிய தலையிடி.. Reviewed by Madawala News on 11/10/2016 03:01:00 PM Rating: 5