Ad Space Available here

வைத்தியத்துறையின் நம்பிக்கை காப்பாற்றப்படுமா?


மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டிருக்கிறான். இருப்பினும், தவறுகள் உணரப்பட்டு திருத்தப்படுவதும், செயற்பாடுகள் நிதானத்துடனும் அலட்சியமின்றியும் முன்னெடுக்கப்படுவதும் அதற்கான மனப்பாங்கை உருவாக்கிக்கொள்வதும் முக்கியமாகும். ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால,; ஒருவர் கூட தங்களை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. தவறுகளை, பிழைகளைத் திருத்திக்கொள்ள முயல்வதில்லை.

மாற்றம் என்பது மானிடத்தத்துவம் அந்தத் தத்துவத்தை பின்பற்ற வேண்டியவர்கள், மாற்றம் காணவேண்டியவர்கள் மனிதர்கள்தான். மாறாதிருக்க தவறுகளைத் திருத்திக்கொள்ளாதிருக்க நாம் விலங்குகளல்ல. மாற்றத்திற்கான மனப்பாங்குகள் நம்மில் உருவாக வேண்டும். ஆனால், தற்காலத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் சாதாரண மக்களினதும் துறைசார்ந்தோரினதும் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை நாடு தழுவிய ரீதியில்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைகின்றன.

இச்சேவை நிலையங்களிலும், தொழிலகங்களிலும் பணிபுரிகின்ற மனிதாபிமானமற்ற மனப்பாங்கு கொண்டோரின் பேச்சுக்கள், செயற்பாடுகள், அலட்சியங்கள் போன்றவற்றினால் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சேவை, தொழில், சமூக மற்றும் உளவியல் ரீதியாகப்; பாதிக்கப்படுகின்றனர். உயிர்களும் பறிபோகும் நிலையும் காணப்படுகின்றன.

குறிப்பாக ஒரு சில தொழில்வாண்மைகொண்ட தொழில் புரிகின்றவர்களிடமிருந்து அல்லது அவர்களது தொழிலகங்களிலிருந்து சேவையை, உதவியைப் பெற்றுக்கொள்ளச் செல்கின்ற சாதாரண மக்கள்; பல சந்தர்ப்பங்களில் உதாசீனப்படுத்தப்படுவதும், வஞ்சிக்கப்படுவதும், அலட்சியப்படுத்தப்படுவதும், பராமுகம் காட்டப்படுவதும் என்ற செயற்பாடுகளினூடாக பாதிக்கப்படுவதானது அத்தொழில்வாண்மைத்துறையில் தொழில்புரிகின்ற நல்ல சேவை மனப்பாங்கும் மனிதநேயமும் கொண்ட ஏனையவர்களையும் அவர்களது அச்சேவை நிலையங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்குவதுடன்; அவகௌரவத்துக்கும் நம்பிக்கையீனத்துக்கும் இட்டுச்செல்வதாக அமைந்து விடுகிறது.

மக்களின் வரிப்பணத்தின் மூலம் அரசினால் வழங்கப்படுகின்ற அதி உச்ச சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்ற தொழில்வாண்மை தொழிற்துறைசார்ந்தோர் மக்களின் நலன்களில், அவர்களுக்கான சேவைகளில் இவ்வாறு நடந்துகொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. அதிகாரமும் பதவியும் இருக்கும்போதுதான் மக்கள் அதிகாரத்தினதும் பதவியினதும் பக்கம் சாய்ந்து கொள்வார்கள். இவ்விரண்டும் இல்லையேல் மக்களின் காலடிக்கே உரியவர்கள் செல்ல நேரிடும் என்பது மறக்கப்படாலாகாது என்பதை ஞாகப்படுத்துவதும் சமகாலத்தில் அவசியமாகவுள்ளது.

இறைவன் சிலரை சிலரை விட பட்டம், பதவி, சொத்து, அந்தஸ்து போன்றவற்றில்; உயர்ந்தவர்களாக, அதிகப்படியானவர்களாக ஆக்கியிருக்கிறான். அவ்வாறு இறைவன் அவர்களை ஆக்கியிருப்பது பெறுமையடித்துக் கொண்டும் ஏனையவர்களை அலட்சியப்படுத்திக் கொண்டும் வாழ்வதற்கல்ல, இறையருளால் கிடைத்துள்ள வளங்களை உரிய முறையில் மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தும்போதூன் அவற்றையளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக அமையும்.

சமூக மட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழில் புரிகின்றவர்களாகவும் சேவை செய்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். அரச, தனியார் துறைகளில்; பல சேவை நிலைகள் காணப்படுகின்றன, அரச சேவையில்; அத்தியாவசிய சேவைகள் என்றும் சாதாரண சேவைகள் என்றும் பல சேவைகள் மக்களின் தேவைகளின் நிமித்தம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, கல்வி  போன்ற அத்தியாவசிய சேவைகள் அரச துறையில் காணப்படுகின்றன. இவற்றில் அதிக முக்கியத்துமிக்க, அத்தியாவசிய சேவையாகக் கருதப்படுவதும் மக்கள் நலன் அதிகம் கொண்ட சேவையாக விளங்குவதும் சுகாதார வைத்திய சேவையாகும்.

இச்சேவைத் துறையில் உள்ள ஒவ்வொரு சேவையாளரினதும் சேவை நாட்டுக்கும் மக்களுக்கும் இன்றியமையாதது. அதிலும், வைத்தியத்துறைசார்ந்த வைத்திய அதிகாரிகளினதும் தாதி உத்தியோகத்தர்களினதும் சேவைகளானது அதிமுக்கியமானது. ஏனெனில், அவர்களது ஆக்கபூர்வமானதும் அலட்சியமற்றதும் மனிதாபிமானத்துடனான சேவை  உயிர்களோடு சப்பந்தப்பட்டது.

அதனால்தான், சமூக மட்டத்தில் வைத்தியதுறைசார்ந்;தோர்கள் கௌரவத்துக்குரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய கௌரவத்துக்குரியவர்களின் சேவைகள் மனிதாபிமானமிக்க மனப்பாங்குடன் முன்னெடுக்கப்படுவது அவசியமாகவுள்ளது. மருத்துவ சேவையானது மனிதநேயத்துடன் முன்னெடுக்கப்படும்போதுதான் இச்சேவைக்கான கௌரவம் பாதுகாக்கப்படும். மக்களிடத்திலே நன்மதிப்பையும் பெறும்.

சமகாலத்தில் வைத்தியத்துறையில்; அத்துறைசார்ந்த சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற அலட்சியங்கள், கவனக்குறைவுகள, கருணையற்ற கருத்தாடல்கள் அத்துறைமீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. குறிப்பாக வைத்தியசாலைகளில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற அலட்சியச் செயற்பாடுகள் அவ்வைத்தியசாலைகளுக்;கும் வைத்தியத்துறைக்கும் அத்துறைசார்ந்த வைத்திய அதிகாரிகள் தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய ஆளனியினருக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதுடன்; விமர்சனங்களை எதிர்நோக்கச் செய்வதையும் அவதானிக்க முடிகிறது.

வைத்தியசாலைகள் மக்களின் ஆரோக்கியத்துக்காகச் செயற்படக்கூடிய பொது ஸ்தாபனமாகும். இதில் எத்தனிநபரினதும், எந்த அரசியல் சக்தியினதும் தலையீடுகள் இடம்பெறக் கூடாது. அவ்வாறு தலையீடுகளுக்கு உள்வாங்கப்படுகின்றபட்சத்தில் அவ்வைத்தியசாலையின் நம்பகத்தன்தை கேள்விக்குறியாவதோடு தரமும் மக்கள் மத்தியில் குறைவாகவே கணிக்கப்படுகிறது.

ஆரோக்கியத்தில் வைத்தியசாலைகள்

சமூக, பொருளாதார, ஆன்மீக மற்றும் உள ஆரோக்கிய விருத்தியில் ஆரோக்கியமுள்ள பிரஜைகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்;வதே அரசின்; இலக்காகவுள்ளது. இந்த இலக்கை அடைவதில் அதிக பங்குவகிப்பது வைத்தியசாலைகளாகும். ஏனெனில,; ஆரோக்கியமற்ற நிலையில் வைத்தியசாலைகளை நாடும் நோயாளர்களர்களின் நோய்களைக் குணப்படுத்தி அவர்களை ஆராக்கிமிக்கவர்களாக மாற்றும் நற்பணியில் வைத்தியசாலைகளும் வைத்தியர்களும் செயற்படுகின்றனர்.

வைத்தியசாலைகளினதும். அவ்வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர், வைத்தியதுறைசார்ந்தோர் மற்றும் ஏனைய ஆளனிணியரின் விகிபாகம் இவ்விலக்கை அடைந்துகொள்வதில் அளப்பெரியதாகும்.

சுகாதார  அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின் பிரகாரம், இந்நாட்டிலுள்ள மக்களின் சுகாதார, வைத்திய நலன்களுக்காக சகல வகையான வைத்தியசாலைகள் அடங்கலாக 622 வைத்தியசாலைகள் செயற்படுகின்றன. இவற்றில் 17,615 வைத்திய அதிகாரிகளும், 38,451 தாதிய உத்தியோகதர்களும் பணிபுரிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கைகளாவன சமகாலத்தில் அதிகரித்து இருக்கும்;. ஏனெனில் 2014ஆம் ஆண்டின் பின்னர் வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டும் வைத்தியர்களும், தாதிகளும் மற்றும் ஏனைய வைத்தியதுறைசார்ந்தோரும் நியமிக்கப்பட்டுமிருக்கிறார்கள்.

நகரங்களிலும் கிராமங்களிலும் காணப்படும் மக்கள் தொகைக்கேற்பவும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கைக்கேற்பவும் வைத்திய அதிகாரி;களும் தாதி உத்தியோகதர்களும் நியமனம் செய்யப்பட்டு சேவை செய்து வருகின்றனர். நகரப்புற வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற வாய்ப்பு வசதிகளுக்கு ஏற்ப கிராமப் புற வைத்தியசாலைகளில் காணப்படுவதில்லை என்ற போதிலும், அவ்வைத்தியசாலைகளில் மனிதநேயத்துடன் பணிபுரிகின்ற வைத்திய அதிகாரி;களையும், தாதியர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆனால், ஒரு சில வைத்திய அதிகாரி;களும் தாதி உத்தியோதர்களும் இத்தகைய வசதி வாய்ப்புக்கள் குறைந்த வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு வருத்தப்படுவதையும் அவற்றை ஏற்க மறுப்பதையும் காணமுடிகிறது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வைத்திய அதிகாரி;கள் கூட அப்பிரதேசங்களில் கடமை புரிவதற்கு விரும்பாத நிலை காணப்படுவதாக கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும். இதற்குக் காரணம் அவர்கள் மத்தியில் காணப்படும் சேவை மனப்பாங்கற்ற உளநிலையின் வெளிப்பாடாகும்.

மக்களின் சுகாதார மேம்பாட்டுக்கும் முகாமைத்துவத்துக்குமாக சுகாதார அமைச்சு பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவற்றிற்காக பல மில்லியன் ரூபாய்கள் செலவளிக்கப்படுகிறது. இந்த ரூபாய்கள் பெறுமதிமிக்கதாக மாற்றப்பட வேண்டுமாயின் சுகாதாரத்துறைசார்ந்தோரின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

அரச சேவையில் அதி உன்னதமான சேவையாகக் கருதப்படும் வைத்திய சேவைக்காகவும் அச்சேவையிலுள்ளவார்களின் நலன்களுக்காகவும் பல சலுகைகள் அரசினால் வழங்கப்படுகிறது. வழங்கப்படுகின்ற நலன்களில்  ஒரு சில குறைபாடுகள் உள்ளபோதிலும், இச்சேவையில் உள்ளவர்களின் பல்வேறு தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.

ஆனால், பிரபல்ய பாடசாலைகளில் தமது பிள்ளைகளுக்கு அனுமதி கிடைக்க வில்லையெனவும், தங்களுக்குரிய தீர்வையற்ற வாகனங்கள் கிடைக்கவில்லையெனவும் இன்னும் பல்வேறு காரணங்களைக் காட்டி மக்களின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குரியாக்கும்  வகையில், மனித உயிர்களோடு விளையாடும் தொழில்சங்க நடவடிக்கைகளும் அவ்வவப்போது இந்த வைத்திய துறைசார்ந்தோரினால் முன்னெடுக்கப்படுகிறது. தொழில்துறையில் மிக உன்னத தொழில்துறையாகக் கருதப்படும் வைத்தியத்துறையிலுள்ள சிலரினால் மனிதாபிமானத்தை விலைபேசும் நடவடிக்கைளும் அங்காங்கே சில வைத்தியசாலைகளில் இடம்பெற்று வருகின்றன.

வைத்தியசாலைகளும் விமர்சனங்களும்

மக்களின் ஆரோக்கியத்துக்கான அடிநாதமாக விளங்குகின்ற வைத்தியசாலைகளில் பணிபுரிகின்ற ஒரிரு வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஆளணியினரின் செயற்பாடுகள் அவ்வைத்தியசாலை குறித்த விமர்சனங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்துகின்றன. ஒரு சில வைத்தியத்துறைசார்ந்தோரின் அலட்சியங்கள், கவனயீனங்கள,; பொறுபற்ற செயற்பாடுகள் நோயாளர்களின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் உயிர்கள் வீணாகப் பறிபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஒரு சிலரை நீண்ட கால அங்கவீனர்களாக மாற்றவும் செய்கிறது. இந்நிலை ஒரு சில அரச வைத்தியசாலைகளில் காணப்படும் அதேவேளை தனியார் வைத்தியசாலைகளில் பணத்தை மையப்படுத்தி ஆரோக்கியம் விலைபேசப்படுகிறது.

எவ்வாறேனும் நோயையும் அதனால் ஏற்படும் உயிர் ஆபத்தையும் தவிர்த்துக்கொள்வதற்காக தனியார் வைத்தியசாலைகளை நாடி நோயைக் குணப்படுத்தி உயிரைக் காப்பாற்றிக்கொண்டவர்கள் அவற்றிற்காக செலவளித்து இன்னும் கடனாளிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு தனியார் வைத்தியசாலைகளின் கட்டண அறவீடுகள் காணப்படுகின்றன. மனிதாபிமானமும் மனிதநேயமும் அங்கும் பணத்திற்காக விலைபேசப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஒரு சில அரச வைத்தியசாலைகளில் கவனயீனமாகவும்;, அலட்சியமாகவும் பொறுபற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நடவடிக்கைகள் ஒரு சிலரை நிரந்தர நோயாளர்களாக்கியும் உள்ளது. அத்தோடு, ஒரு சில வைத்தியர்களுக்கிடையே காணப்படுகின்ற போட்டாபோட்டிகள், வெட்டுக்குத்துக்கள் நோயாளர்களைப் பாகுபாட்டுடன் நோக்கவும் செய்கிறது. இவ்வாறான சம்பவங்களும் கடந்த காலங்களில்  வைத்தியசாலைகளில் இடம்பெற்றிக்கின்றன.

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இது நோய்த்தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல் முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு உடல்நல அறிவியல், உயிர்மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

இவ்வாறான குணப்படுத்தல் பெரும்பாலும் மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவ தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் இன்றியமையாதவை. எனினும் நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு அவர்களை அந்நோய்களிலிருந்து குணப்படுத்துவதற்கு அவர்களின் நோய்களைக் கண்டறிவதற்கு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் கருணையும், மனிதாபிமானமும் நல்ல சேவை மனப்பாங்கும் தற்காலத்தில் வைத்தியதுறைசார்ந்தோருக்கு தொடர்ந்தும் அவசியமாகவுள்ளது.

இத்தகைய நாகரீகமிக்க மனிதப்பண்புகள் மறக்கப்படுகி;ன்றபோது அல்லது அவற்றை வெளிக்காட்ட முயற்சிக்காதபோது அவற்றினால் ஏற்படுகின்ற தவறுகள், பிழைகள், அலட்சியங்;கள் இப்புனிதமிக்க சேவையையும் சேவையாளர்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுடன் உயிர்களோடும் விளையாடச் செய்கிறது.

அண்மையில் கல்முனைத் தெற்கு வைத்தியசாலையாகக் கருதப்படும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ; அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த 11வயது உடைய மாணவனின் உயிர் இழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் இவ்வைத்தியசாலை தொடர்பிலும் அங்கு பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஆளணியர் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்;பட்ட இந்த வைத்தியசாலை ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட வைத்தியர்களையும் 150 மேற்பட்ட தாதியர்களையும் கொண்டுள்ளதுடன் ஏறக்குறைய 500 ஆளணியினரைக் கொண்டு இயங்குகிறது. இந்நிலையில் இவ்வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற தவறுகள், பிழைகள் தொடர்பாக காலத்திற்குக்காலம் அல்லது அடிக்கடி விமர்சனங்களும் வினாக்களும் எழுப்பப்பட்டுக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகவுள்ளது. இதன் தொடராகவே  அண்மையில் உயிரிழந்த சிறுவன் ஒருவனின் மரணம் தொடர்பிலும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

குறித்த அச்சிறுவனின் பெற்றோர் சமூகவலைத்தளங்களுக்கு வழங்கியுள்ள கருத்துக்களின்படி இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவனுக்குரிய நோய் உரியவகையில் கண்டறியப்படவில்லையெனவும,; அளிக்கப்பட்ட சிகிச்சைகள் திருப்பதியளிக்கவில்லையெனவும், சிகிச்சை அளிப்பதில் போடுபோக்கும் அலட்சியமும் காட்டப்பட்டுள்ளதாகவும், அச்சிறுவனுக்கு நேர்ந்தது போன்றும் அதனால் அப்பெற்றோர் வேதனையடைவது போன்றும் இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற ஏனைய பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நேரக் கூடாது எனவும் கருத்துத் தெரிவித்துள்ள அப்பெற்றோர் இவ்விடயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு சம்பந்தப்படடவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்

இதேவேளை, இப்பெற்றோரின் கருத்துக்களுக்கு அப்பால் தங்களை ஊடகவியலாளர்கள் என்றும் சிரேஷ்ட எழுத்தாளர்கள் என்றும் அடையாளப்படுத்திக்கொள்கின்றவர்கள் இவ்வைத்தியசாலையின் நடவடிக்கை தொடர்பில் மிக மோசமாக விமர்சித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்கள். விமர்சனங்களினால் உண்மைத்தன்மையை வெளியில் கொண்டுவர முடியும். இருப்பினும் அவ்விமர்சனங்கள் பக்கச் சார்பின்றி நடுநிலைத்தன்மையொடு இருத்தல் அவசியம்.

ஒரு தனிநபரினால் அல்லது ஒரு ஸ்தாபனத்தினால் தவறு இழைக்கப்பட்டிருப்பின். அத்தவறு குறித்தான உண்மை நிலைகள் உரிய முறையில் ஆராயப்படாது தனிநபரின் கௌரவத்துக்கு அல்லது அந்த நிறுவனத்தின் சிறப்புக்கு கலங்கமும, அபகீர்த்தியும்; ஏற்படும் வகையில் விமர்சனங்களை முன்வைப்பது ஊடகத்தர்மமாகாது.

தங்களை சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொள்கின்றவர்கள் ஊடகத்தர்மத்தை மறந்து சிரேஷ்டத்துவத்தை இழந்து சிறுபிள்ளைத்தனமாக விமர்சிப்பது நாகரியமற்ற செயற்பாடு என்பதை சுட்டிக்காட்டுவது அவசிமாகும்.

இந்நிலையில், இவ்வைத்தியசாலைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களை இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அப்துல் றஹ்மான் முற்றாக நிராகரித்துள்ளார். இது குறித்து ஊடகவியலாளர்களை அழைத்து இவ்விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்;பில் தமது சார்ப்பு நியாயங்களையும் இச்சிறுவனுக்கு ஏற்பட்ட நோய் தொடர்பிலும், அளிக்கபட்பட்ட சிகிச்சைகள் தொடர்பிலும், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டமை தொடர்பிலும் விளக்கமளித்துள்ள வைத்திய அத்தியட்சகர் சிறுவனின் இழப்பு தாங்க முடியாத ஒன்றுதான் என்றும் இச்சிறுவனின் உயிரைக் காப்பாற்ற அதிக சிரத்தையுடன் முயற்சி மேற்கொண்டதாகவும், முடியாமல் போனது கவலையான விடயமென்றும்; குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் வைத்திய அத்தியட்சகராக கடமையேற்றது முதல் நிர்வாகம் உள்ளிட்ட ஒவ்வொரு விடயத்திலும் அக்கரையுடன் அவதானம் செலுத்தி வருவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது எழுந்துள்ள இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற பெற்றோருக்கு உரிய நீதி, நிவாரணம் வழங்கப்படுவதும் அவசியமாகும். இதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுப்படுவதும் முக்கியமாகும். அப்போதூன் இவ்வைத்தியசாலையின் நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியும். வைத்தியத்துறைக்கான கௌரவத்தையும் நம்பிக்கையையும் பாதுகாக்க முடியும்.

ஏனெனில், சமூகத்திற்காக பல்வேறு தியாகங்களைப் புரிந்து இப்பிரதேசத்தை அபிவிருத்தியிலும் அரசியலிலும்; அலங்கரிக்கச் செய்த பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் பெயர்தாங்கிய இந்த அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிரதேசவாதிகளினதும் இனவாதிகளினதும் விமர்சனங்களுக்கு ஆளாக்காமல், அதன் வளர்ச்சியை பின்நோக்கி நகச் செய்யாமல் தொடர்ந்தும் இவ்வைத்தியசாலையினூடாக மக்களுக்கான சுகாதார மற்றும் வைத்திய சேவையை சிறப்பாக முன்னெடுக்க இப்பிரதேச மக்களும் சமூக அமைப்புக்களும் ஒன்றுபட்டு செயற்படுவதும், அதற்கு இவ்வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய அதிகாரிகள். தாதி உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து ஆளணியினரும் சிறந்த மனப்பாங்குடன் ஒத்துழைப்பு வழங்கவும் முன்வர வேண்டுமென்பதுமே இவ்வைத்தியசாலை குறித்த எதிர்கால எதிர்பார்ப்பாகும்.
வைத்தியத்துறையின் நம்பிக்கை காப்பாற்றப்படுமா? வைத்தியத்துறையின் நம்பிக்கை காப்பாற்றப்படுமா? Reviewed by Madawala News on 11/17/2016 12:21:00 PM Rating: 5