Ad Space Available here

முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள நல்லாட்சி!


-சஹாப்தீன் -   
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் இனவாதிகளினால் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார்கள். பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். இதனை அன்றைய அரசாங்கம் பாராமுகமாக இருந்தது. ஆளுந் தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கைகளை விடுத்தார்களேயன்றி, அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு வலுவற்றவர்களாகவே இருந்தார்கள். 

இந்நிலையில் ஆட்சி மாற்றம்தான் முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த வழி என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் வந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் சுயமாகவே மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்தார்கள்.

முஸ்லிம்கள் நினைத்த மாதிரி ஆட்சி மாற்றப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நடந்ததை விடவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்று முஸ்லிம்கள் அச்சம் கொள்ளும் வகையில் பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கடந்த ஆட்சியில் நடைபெற்றதைப் போன்று மீண்டும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் மாத்திரம் வாழ்கின்ற பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலை வைக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு இன்றைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதன் பின்னர் பொலன்நறுவை மாவட்டத்தில் போகஹதமன கிராமத்தில் இயங்கி வந்த சிறியதொரு குர்ஆன் மத்ரஸா இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. கொழும்பு பொரளையில் அமைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது இனந் தெரியாதவர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டது. இப்பாமுகவ, பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்களை வாள் வெட்டிற்கு ஆளானார்கள். அத்தோடு மூன்று இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள். அக்கரைப்பற்று நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியில் திடிரென்று சிறிய அளவிலான பௌத்த தூபி ஸ்தாபிக்கப்பட்டது.  

வெல்லம்பிட்டி - பொல்வத்தை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலில் இஷா தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பிய முஸ்லிம்கள் மீது 'சிங்க லே' என்று கோஷமிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு திட்டமிட்ட வகையில் முஸ்லிம்கள் மீது 2015இல் பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
இது போலவே 2016ஆம் ஆண்டிலும் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அத்தோடு ஆட்சியாளர்களும் இதற்கு துணையாக இருந்து கொண்டு வருகின்றார்கள். களுத்துறையில் ஒரு பாடசாலையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாடறுப்பை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக இறைச்சியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு தான் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிடம் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது முஸ்லிம்கள் உணவுக்காக மாடு அறுப்பதனை தடை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருப்பவர்களின் வாயில் சீனி போட்டதனைப் போன்றதாகவே இருந்தது.

வத்தளை, வெலிசர 20 அடி பாதை வீதியில் மஸ்ஜித் நிர்மாணப் பணிகளுக்கு வத்தளை பிரதேச சபை தடை உத்தரவு பிறப்பித்தது. 

மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் பலாங்கொடை ஜீலானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு பௌத்த இனவாதிகள் முயன்றார்கள். பின்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. ஆயினும், இன்றைய ஆட்சியில் சிங்கள ராவய அமைப்பு ஆயுதங்களுடன் பிரவேசிக்க முற்பட்ட போது அங்கு வாழும் சிங்களவர்கள் விரட்டி அடித்தார்கள்.கண்டி லைன் ஜும்ஆப்பள்ளிவாசல் மினராவின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. 

வரகாபொலை பள்ளிவாசளின் மினராவை வரகாபொலை தேவகிரி விகாரையை விட உயரமாக கட்டக்கூடாதென்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களின் மனங்களை புண்படுத்தியமை. மஹியங்கனையில் பௌத்த கொடியை முஸ்லிம் இளைஞர்களில் ஒரு சிலர் எரித்தார்கள். 

இவர்களை பொலிஸார் கைதும் செய்திருந்தார்கள். ஆயினும்,  பொதுபல சேனவினால் இதனை ஒரு குழப்பமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆயினும், பொலிஸாரின் துரித நடவடிக்கைகளினால் அது தடுக்கப்பட்டது. 
அக்குரணை, அளவத்துகொடை மல்கம்மந்தெனிய ஜும்மா பள்ளிவாசலுக்கருகில் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள்; பன்றியின் உடற்பாகங்களை வீசி விட்டு சென்றார்கள். தெஹிவளை, பாத்தியா பள்ளிவாசலின் விஸ்தரிப்பிற்கு தடைவிதிக்கப்பட்டது.

இப்பள்ளிவாசலில் முஸ்லிம்களின் ரமலான் மாத தாராவிஹ் தொழுகைக்கூட தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஹிரியுல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட மும்மானை முஸ்லிம் வித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தைக் பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்றி அதனை பொது மைதானமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. முஸ்லிம்களின் வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடாதென்று பௌத்த இனவாத அமைப்பு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது. 
பொரலஸ்கமுவ பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், முஸ்லிம்களை 30 நிமிடத்தில் அழித்துவிடுவோம் என்று கூட பௌத்த இனவாத கடும் போக்காளர்கள் பொலிஸாரின் முன்னிலையே சொன்னார்கள். மாதம்பை பழைய நகரில் பரம்பரையாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு வரும் காணியைக் கூட இனவாதிகள் அபகரிப்பதற்கு முயற்சிகளை எடுத்தார்கள். கடந்த அரசாங்கத்தைப் போன்று அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை முஸ்லிம்களுக்கு கையளிப்பதில் சரியான முடிவுகளை இன்றைய அரசாங்கம் எடுக்காதுள்ளது.

கடந்த வாரம் குருநாகல் மாவட்டத்தில் தெலினாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இரவு வேளையில் கெப்ரக வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அத்தோடு, நிக்கவரெட்டிய நகர் ஜும்ஆப் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று முஸ்லிம்கள் கோரியுள்ளார்கள். குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். இதுதான் நல்லாட்சியில் முஸ்லிம்களின் நிலையாகும்.
இன்றைய அரசாங்கத்தின் காலத்திலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் மீது இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். ஆயினும், யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸாரின் முன்னிலையில் முஸ்லிம்களை எச்சரிக்கை செய்தவர்கள் கூட கைது செய்யப்படவில்லை.

ஆதலால், ஆட்சி மாறிய போதிலும் முஸ்லிம்களின் மீதான இனவாதிகளின் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பௌத்த இனவாதிகளுக்கு பின்னணியில் இருந்ததைப் போன்று இன்றைய ஆட்சியிலும் அதிகாரம் பெற்றவர்கள் இனவாதிகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்கின்றவர்களை கைது செய்ய வேண்டுமென்று அழுத்தங்களை கொடுக்காது அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனவாதிகளின் சதிகளை முறியடிக்க வேண்டுமென்று மஹிந்தராஜபக்ஷவின் காலத்தில் பாவித்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய ஆட்சியில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் விழுங்கி ஏற்பமிடும் வகையில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான தயாகமகேவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இறக்காமம் பிரதேச செயலகத்தின் எல்லைக்குரிய மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை எனக்குத் தெரியாது. தற்போது சிலை வைக்கப்பட்டுள்ளது. 

அதனை எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது. அவ்வாறு அகற்ற முற்பட்டால் எனது பதவியை இராஜினாமாச் செய்வேன். வரலாற்றில் தீகவாபி விகாரைக்கு 12ஆயிரம் ஏக்கர் காணி இருந்துள்ளது. அதன்படி கல்முனை முதல் பொத்துவில் வரை தீகவாபி விகாரைக்கே சொந்தமாகும் என 07.11.2016 அன்று அம்பாரை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர்  தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்ற பெயர் சூட்டியுள்ள அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் சிங்களவர்கள் எவருமில்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையை அகற்ற முடியாதென்றும், கல்முனை முதல் பொத்துவில் வரை உள்ள பிரதேசம் தீகவாபி விகாரைக்குரியது என்றும் தெரிவித்துள்ளமை அவரின் இனவாத சிந்தனையின் வெளிப்பாடாகும். புத்தர் சிலையை அகற்றினால் நான் பதவியை இராஜினாமாச் செய்வேன் என்ற எச்சரிக்கை இன்றைய அரசாங்கத்தையும் எச்சரிக்கை செய்வதாகவே இருக்கின்றது. 

இவரின் இராஜினாமா அரசாங்கத்தையே கவிழத்துவிடும் என்பது போல் உள்ளது. இவர் இவ்வாறு ஆக்கோரசமான கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் எதுவும் பேசாது செவிட்டுக் கிளிகளைப் போல் இருந்துள்ளார்கள். தயாகமகேவின் கருத்துக்களின் மூலமாக மாணிக்கமடுவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை எதிர் காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற  உறுப்பினர்கள் பைசால் காசிம், ஹரிஸ் ஆகியோர்கள் சமூகமளிக்கவில்லை. அம்பாரை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அவ்வேளையில் இருந்துள்ளார்கள். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வது சொல்வதனை கேட்டுக் கொண்டிருப்பதற்கல்ல. 

தயாகமகே வரலாற்றை திரிபுபடுத்தி தமது ஆக்கிரமிப்பு எண்ணத்தை வெளிப்படுத்திய போது தகுந்த பதில் கொடுத்திருக்க வேண்டும். இல்லையாயின் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யாது கேட்டுக் கொண்டிருந்தமை அவர் சொல்லியது உண்மை என ஏற்றுக் கொண்டதாக இருக்கும்.

தமது இயலாமையையும், ஆளுமைக் குறைபாட்டையும் மறைப்பதற்கு தயாகமகே போன்று தாங்களும் வார்த்தைகளை பிரயோகிக் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். இது மக்கள் பிரதிநிதிகளுக்கு அழகல்ல. மக்கள் பிரதிநிதி என்போர் மக்களின் குரலாக இருக்க வேண்டும். அதற்காக சண்டை பிடிப்பதல்ல. சிங்கள மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை எதற்கென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கேட்டுள்ளார்.ஏன் இவ்வாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கேட்க முடியாது. பௌத்தர்கள் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் போது அதனை தட்டிக் கேட்பதனை இனவாதமென்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றார்களா என்று கேட்கின்றோம்.

இனவாதிகள் முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளின் தலைவர்களும் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். 

மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் இவ்வாறுதான் வேதாந்தம் பேசினார்கள். ஈற்றில் அளுத்கமவில் பெரிய அழிவுகளை முஸ்லிம்கள் சந்தித்தார்கள்.

இன்றைய பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்கள் பாராளுமன்றம் சென்றுள்ளமை கதிரைகளை சூடாக்குவதற்கல்ல. சமூகத்தின் குரலாக இருப்பதற்கே முஸ்லிம்கள் வாக்களித்தார்கள்.குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் எனத் தெரிவித்துக் கொண்டாலும்,அவர்கள் சேவகம் செய்கின்றவர்களைப் போலவே உள்ளார்கள். அரசாங்கத்தில் பங்காளிகள் என்றால் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்கு பாதுகாப்பு  இல்லையாயின் அரசாங்கத்தில் பங்காளிகள் எனச் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.

முஸ்லிம்களை பொறுத்த வரை நல்லாட்சியில் காட்டுத்தர்பார்தான் நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு பதவி மோகங் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் துணை போய்க் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக இருக்க வேண்டும். இதுதான் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் வழி முறையாகும். ஆட்சி மாறும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளும் ஆட்சியின் பக்கம் செல்லுகின்றார்கள், அமைச்சர் பதவிகளைப்  பெற்றுக் கொள்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பறிபோகும் போது பொறுமையாக இருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் மரணித்து 16 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த காலம் முழுவதும் இதனையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.கேட்காத உரிமைகள் தேவையற்ற உரிமைகளாகவே கருதப்படும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் காலத்தில் மஹிந்தவின் ஆட்சி ஒழிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டால் பௌத்த இனவாதிகள் நாய்க் கூட்டில் அடைக்கப்படுவார்கள் என்றார்.ஆனால், இன்று பௌத்த இனவாதிகள் சுதந்திரமாக தமது இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

அவர் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் விடுதலைப் புலிகளாக இருந்தாலும் சரி அல்லது தெற்கின் இனவாத அமைப்புக்களாக இருந்தாலும் சரி அனைத்தும் ஒன்றுதான்.இதில் யாருக்கும் தனி இடம் வழங்கப்பட முடியாது. நாட்டின் அமைதியை குழப்பவும் மக்கள் விரும்பும் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும். இவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் சரி அலலது தமிழர்களாக இருந்தாலும் சரி அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்து நாட்டில் குழப்பங்களை  ஏற்படுத்த முயற்சிகளை தடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள, முஸ்லிம் மக்களிடையே     ஒற்றுமையை சீர்குழைப்பதற்கு சில அமைப்புக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சோபித தேரரின் நினைவு தினக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அரசாங்கத்தின் தலைவர்கள் தெரிவித்துக் கொண்டாலும் பௌத்த இனவாதிகளுக்கு எதிரான இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை முஸ்லிம்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு புதிய காணி வழங்கப்பட்டுள்ளது.இக்காணியில் பள்ளிவாசல் அமைக்கப்படுவதனை எதிர்த்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை நடத்துவதற்கு பௌத்த இனவாத அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் எடுக்க வேண்டுமென்று பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸில் முறைபாடு செய்துள்ளது.

இவ்வாறு பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு, மதவழிபாடு போன்றவைகளுக்கு அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருப்பவர்களின் துணையுடன் அச்சுறுத்தல்களையும், அழிவுகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமைப்படுவதற்கு பதிலாக முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டும், ஆளுக்கு ஆள் குழிபறித்துக் கொண்டும், தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கு கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். 

இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாதிகளை விடவும் மோசமானவர்கள். இனவாதிகளை மன்னித்தாலும், சமூகத் துரோகிகளை மன்னிக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள நல்லாட்சி! முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள நல்லாட்சி! Reviewed by Madawala News on 11/15/2016 09:05:00 AM Rating: 5