Ad Space Available here

அமைச்சர் ஹக்கீம் உலமாக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்..

 

கல்முனை மஹ்மூத் பாலிகா பெண்கள் உயர் பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.ஆர்.ஏ பஷீரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 14-11-2016ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றிருந்தது.இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் எங்களது பெண்கள் அரசியலுக்குள் வருவதை உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நாங்கள் உருவாக்க வேண்டிய அவசியமுள்ளது என கூறியிருந்தார்.முஸ்லிம்களாகிய நாம் எது செய்தாலும் அது இஸ்லாமிய வரையறைகளுக்குள் தான் அமைய வேண்டும்.இன்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாக உள்ளவர்களிடம் ஷரியா பற்றிய பூரண அறிவு இருப்பதாக கூற முடியாது.அவர்களுக்கு ஷரியா சம்பந்தப்பட்ட விடயங்களின் போது எமது சமூகத்தில் காணப்படுகின்ற உலமாக்களின் வழி காட்டல்கள் இன்றியமையாதது.

இன்று முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உட்பட பல விடயங்களில் ஷரீயாவை கற்றுணர்ந்தவர்களின் வழி காட்டல்களின் தேவைகள்  உணரப்படுகிறன.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்று இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும்.அமைச்சர் ஹக்கீம் ஓரிரு உலமாக்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் கூறுவதை ஏற்க முடியாதென கூறியிருந்தாலும் பறவாயில்லை.இவர் ஒட்டு மொத்த உலமாக்களின் வழி காட்டல்கள் எவ்வாறு இருந்தாலும் இப்படித் தான் செயற்பட வேண்டுமென கூறியிருப்பதை ஒரு முஸ்லிமால் சிறிதளவும் ஏற்க முடியாது.இது எமது முஸ்லிம் சமூகத்தின் பொக்கிசங்களாக மதிக்கக் வேண்டிய உலமாக்களை அகௌரவப்படுத்தும் ஒரு கூற்றாகும்.இக் கூற்றின் மூலம் அமைச்சர் ஹக்கீம் உலமாக்களின் இஸ்லாமிய அடிப்படையிலான வழி காட்டலை தான் தேவையில்லையென புறக்கணித்துள்ளார்.இதன் மூலம் இவர் மறைமுகமாக தங்களுக்கு இஸ்லாமிய வழி காட்டல் அவசியமில்லை என கூறுகிறார்.குர்ஆனையும் ஹதீதையும் யாப்பாக கொண்டு மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட மு.காவின்  தலைவராக உள்ள இவர் இவ்வாறு கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.அதனை மு.காவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான என்னால் சகிக்கவும் முடியாது.

பெண்கள் அரசியலுக்குள் வருவது இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையில் சரியா பிழையா என்பது தொடர்பில் ஷரியாவை நன்கு கற்றுணர்ந்த உலமாக்களின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.அது பிழையென ஷரியாவை நன்கு கற்றுணர்ந்த உலமாக்கள் கூறினால் அதனை இலங்கை அரசாங்கமல்ல அதற்கும் மேல் அதிகாரங்களை கொண்ட யார் எப்படி சட்டமாக்கினாலும் அதனை முஸ்லிம்களாகிய நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.இவர்கள் அனைவரது சட்டங்களையும் விட அல்லாஹ்வின் சட்டமே எமக்கு முதன்மையானது.இலங்கை அரசாங்கம் இலங்கையிலுள்ள ஒவ்வொரும் ஒரு நாளைக்கு குறித்தளவு மதுபானம் அருந்த வேண்டுமென்ற சட்டத்தை கொண்டுவருவதாக வைத்துக்கொள்வோம்.அப்போது உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் மதுபானத்தை அருந்தியாக வேண்டுமென அமைச்சர் ஹக்கீமால் கூற முடியுமா? இதற்கும் அதற்கும் எந்த வேறு பாடும் இல்லையே!

முஸ்லிம் காங்கிரஸில் கூட உலமா காங்கிரஸ் என்ற ஒரு பிரிவு உள்ளது.அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறியதன் மூலம் உலமா காங்கிரஸ் என தங்களால் நிர்வகிக்கப்படும் அமைப்பை கூட இழிவு படுத்தியுள்ளார்.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் தனது சுய முடிவின் பிரகாரம் மௌலவிகளான இல்யாஸ் மற்றும் கலீல் ஆகியோரை நீக்கியிருந்தார்.இதில் மௌலவி இல்யாஸ் உலமா காங்கிரஸ் பிரதிநிதிகளில் ஒருவராவார்.மௌளவில் கலீல் மஜ்லிஸ் அஷ் ஷூறாவின் தலைவராவார்.பிற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் மீதி எந்த வித தவறுமில்லையென அறிந்து அவர்களை கட்சிக்குள் உள் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அண்மைக்காலத்தில் அமைச்சர் ஹக்கீம் மு.காவில் உள்ள மௌலவிமார்களை புறக்கணித்தமைக்கான ஆதாரமாகவும் கூறலாம்.இவைகளை உற்று நோக்கும் போது  அமைச்சர் ஹக்கீம் உலமாக்களையும் இஸ்லாமிய வழி காட்டல்களையும் புறக்கணித்து செயல்பட முனைகிறாரா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

என்னைப் பொறுத்தமட்டில் இக் கூற்றின் மூலம் அமைச்சர் ஹக்கீம் குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட மு.காவின் தலைமைத்துவத்திற்கு சிறு தகுதியுமற்றவராகிறார்.இவர் மு.காவிற்கு தகுதியான தலைவரோ இல்லையோ தனது கூற்றிற்காக உலமாக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

கே.ஆர்.ஏ சித்தீக் 
தலைவர்
மத்திய மாகாண முஸ்லிம் கவுன்சில்  

அமைச்சர் ஹக்கீம் உலமாக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.. அமைச்சர் ஹக்கீம் உலமாக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.. Reviewed by Madawala News on 11/17/2016 11:52:00 PM Rating: 5