Ad Space Available here

முஸ்லிம் தனியார் சட்டத்தை பாரதூரமான நிலைக்கு விட்டுச் சென்றது யார்..??


-Muja Ahraff -
எமது நாட்டில் வசிக்கின்ற பிரதான இனங்கள் ஒவ்வொன்றுக்கும்  தனித்துவமான சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன தமிழர்களை மையப்படுத்தி தேசவளமைச் சட்டமும்,சிங்களவர்களை மையப்படுத்தி கண்டிச்சட்டமும், முஸ்லிம்களை மையப்படுத்தி முஸ்லிம் தனியார் சட்டமும் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில்  ஏனைய இனங்களை மையப்படுத்தி அமைந்த சட்ட திட்டங்கள் வழக்கொழிந்து போன வேளையில் ஒன்று மட்டும் தொடர்தேர்ச்சியான முறையில் பேனப்பட்டு வந்தது அதுவே முஸ்லிம் தனியார் சட்டம்.

1835 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களுக்கென தனியான சட்ட அலகொன்றுக்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டு 1951 ஆம் ஆண்டளவில் சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொட்டு இன்று வரை பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் பேனப்பட்டு வந்த இச் சட்டத்தில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமன்ற கோரிக்கையின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் தலைமையில் உயர்மட்ட குழுவொன்று அமைக்கப்பட்டது.

கொழும்பு றன்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  உலமா சபை, முழு நாட்டினையும் பிரதிபலிக்கும் வகையில் 66 காதி நீதிபதிகள், சட்டவல்லுனர்கள், துறைசார் நிபுணத்துவம் கொண்ட புத்தி ஜீவிகளை உள்ளடக்கிய குழு கலந்துகொண்டது.

முக்கியமான சில மாற்றங்களை வேண்டி ஒவ்வொரு தலைப்பின் கீழும் உப குழுக்கள் நியமிக்கப்பட்டு  அவற்றின்  மூலம் பெறப்பட்ட சில சீர்திருத்தங்களுடன்  இந்த சட்டத்தின் இறுதிவடிவம் ஏகமனதாக நிரல்படுத்தப்பட்டது.

அதன்பின்  துரதிர்ஷ்டவசமாக அமைச்சரவையில் இடம்பெற்ற மாற்றங்கள் காரணமாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் நீதி அமைச்சராக நியமிக்கப்படுகிறார் விளைவு தன்னம்பிக்கையுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்த காதி நீதிபதிகள் தங்களுக்கான ஆண்டு  விழாவின் பிரதம அதீதியாக அத்துறை சார் அமைச்சரையே அழைத்து ஆறு கோரிக்கைகளும் முன்வைக்கின்றனர் அந்த ஆறின் முதன்மையான  கோரிக்கையே முஸ்லிம் தனியார் திருத்தச்சட்டத்தை அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டமாக அங்கீகரிப்பது.

ஆறு கோரிக்கையினையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்ட அமைச்சர் எனது  அதிகாரத்துக்குட்பட்டே இவைகள் காணப்படுவதால் இலகுவான முறையில் இவ்விடயங்களை அமுல்படுத்த முடியும் என்ற வாக்குறுதியையும் எமக்கான சுதந்திர நம்பிக்கையினையும் அவ்விடத்தில் விட்டுச்செல்கிறார்.

நிமிடங்கள் மணித்தியாலங்களாக மாற நாட்கள் மாதங்களாக மாறி வருடங்களாகின்றன மீறப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டுமன்ற முனைப்பில் இருந்த அப்போதைய காதி நீதிபதிகளின் செயலாளர் அப்துல் லதீப் தமது அடுத்த ஆண்டுக் கூட்டத்தொடருக்கும் அமைச்சருக்கே அழைப்பிதழ் விடுத்தார்.
எனினும் ஆறு மாதங்களின் பிற்பாடே சமூகம் அழித்த அமைச்சர் காலதாமதத்திற்கும் தன் தவறுகளுக்கும் வருத்தம் தெரிவித்துவிட்டு அதே வாக்குறுதியையே மீண்டும் வழங்கிச் சென்றார்.

காலங்கள் கடந்து சென்றன காதி நீதிபதிகளும் காத்துக்கொண்டிருந்தனர் கொடுத்த வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் கானல் நீராக மாறிப்போன எச்சங்கள் மட்டுமே மிகுதியாகிப்போகின. அன்றைய தினங்கள் வாய்ப்புகள் வாசற்படிகளை தட்டிக்கொண்டிருந்தன அதை பயன்படுத்திக்கொள்ள சமூகமும் தயாராக இருந்தது ஆனால் அந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மட்டும்  தயாராக இல்லை என்பதுதான் எமக்கான வேதனைகளாக பரிணமித்து நிற்கின்றது.
முஸ்லிம் தனியார் சட்டத்தை பாரதூரமான நிலைக்கு விட்டுச் சென்றது யார்..?? முஸ்லிம் தனியார் சட்டத்தை பாரதூரமான நிலைக்கு விட்டுச் சென்றது யார்..?? Reviewed by Madawala News on 11/05/2016 06:11:00 PM Rating: 5