Ad Space Available here

முஸ்லிம்களின் உரிமை பறிப்பு போராட்டம் ..


இலங்கை முஸ்லிம் மக்கள் மிகவும் அகம் மகிழ்ந்த விடயங்களில் ஒன்றாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி வெற்றி வாகை சூடிய விடயத்தை கூறலாம்.மைத்திரியின் வெற்றியில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பை அவ்வளவு இலகுவில் யாராலும் மறந்து விட முடியாது.முஸ்லிம் மக்களின் மிகப் பெரும் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட இவ்வரசு முஸ்லிம்களின் உரிமைகளில் கடந்த கால அரசுகள் கை வைக்க தயங்கிய விடயங்களில் கூட கை வைக்க முனைவதை அவதானிக்க முடிகிறது.இது முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியமான பயணத்திற்கு சிறந்த சமிஞ்சைகள் அல்ல.மஹிந்த ராஜ பக்ஸ காலத்தில் அரங்கேறிய இனவாதத்தை விட தற்போது இனவாதம் மேலோங்கிக் காணப்படுவதாகவே தோன்றுகிறது.

இவற்றிற்கான முக்கிய காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் உணர்ச்சி அரசியலுக்குள் சிக்குண்டமையாகும்.அந் நேரத்தில் இவ்வாட்சி முஸ்லிம்களுக்கு நலவா? கெடுதியா? என்பதை கூட முஸ்லிம் மக்கள் சிந்திக்க மறந்துவிட்டனர்.இன்று தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றாக முஸ்லிம் சமூகத்தால் நோக்கப்படுகிறது.கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரசின் முக்கிய புள்ளிகளின் வாய்களில் இருந்து தேர்தல் முறை மாற்றம் அவசியமென்ற பேச்சுக்கள் வெளி வந்திருந்தன.அந் நேரத்தில் முஸ்லிம்கள் விழித்து எழுந்திருந்தால் எமது கோரிக்கைகளில் ஒன்றாக அதனை முன் வைத்து சாதித்திருக்கலாம்.அதற்கான பேரம் பேசும் வல்லமையும் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தது.ஆனால்,அன்று இதனை சுட்டிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த நாதியில்லாத நிலையே இருந்தது.முஸ்லிம் சமூகத்திடம் தோற்றம் பெற்றிருந்த மஹிந்தவை எதிர்க்க வேண்டுமென்ற உணர்ச்சி நிலை தான் இவற்றை சிந்திப்பதை விட்டும் முஸ்லிம்களை தடுத்திருந்தது என்றால் மிகையாகாது.அந் நேரத்தில் முஸ்லிம் கட்சிகள் தங்களது தனிப்பட்ட பேரம் பேசலின் மீது அதிகம் கவனம் செலுத்தியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.முஸ்லிம் மக்கள் மஹிந்த மீது கொண்டிருந்த வெறுப்பு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவின்றியும் தாங்கள் வெற்றி பெறலாம் என்ற விடயத்தை பொதுக் கூட்டணியிடம் கூறியிருந்தமையால் முஸ்லிம் கட்சிகள் அழுத்தமான பேரம் பேசும் சக்தியை இழந்திருந்தன.அந் நேரத்தில் முஸ்லிம் கட்சிகள் சமூகம் தொடர்பான நிபந்தனையுடனான ஆதரவளிக்காமல் நிபந்தனையின்றி ஆதரவளித்தமை மிகத் தவறாகும்.முஸ்லிம் கட்சிகள் நிபந்தனைகளை முன் வைத்திருந்தால் முஸ்லிம் மக்கள் அக் கட்சியை கரித்து கொட்டியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.பிழையான வழியில் பயணிக்க நினைக்கும் மக்களை சரியான பாதையில் அழைத்து செல்பவனே உண்மைத் தலைவனாவான்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஒரு தசாப்தங்களுக்கும் மேலாக சிந்தித்து வருகிறார்கள்.கண்டியச் சட்டம்,தேச வழமை சட்டமென போன்ற பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதும் இலங்கை அரசு முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர சிந்திப்பது போன்று ஏனைய சட்டங்களில் இவ்வளவு அக்கறை கொள்வதை காண முடியவில்லை.தற்போது இச் சட்டம் மிக விரைவில் மாற்றத்திற்குள்ளாகலாம்.இருந்தாலும் அது எவ்வாறான மாற்றத்திற்கு உள்ளாகப் போகிறதென்பது தொடர்பாக இலங்கை அரசு அறிவிக்கவில்லை.இச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்பது இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒட்டு மொத்த நிலைப்பாடும் கூட.அண்மையில் முஸ்லிம் பெண்கள் அமைப்பொன்றும் இது தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்திருந்தது.இப் பிரச்சினை எழுந்துள்ள சமகாலத்தில் இந்தியாவிலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டுமென்ற கோசம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதனை வைத்துப் பார்க்கும் ஏதோ முஸ்லிம்களை நோக்கிய திட்டமிட்ட சதியா என்றும் சிந்திக்க தோன்றுகிறது.

அண்மையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் ஆராய்வதற்கென ஒரு உப குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.இதனை ஓய்வு பெற்ற நீதிபதி முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.இவர் தலைமையிலான குழுவினர் நீதியமைச்சராக மிலிந்த மொறகொட இருந்த 2009 ஆண்டு காலப்பகுதியிலும் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன் வைக்க நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறுவதற்காகவே இதில் மாற்றம் கொண்டுவர முயற்சிப்பதாக பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மூலம் இலங்கை மிகப் பெரும் நன்மைகளை சுவைக்கும்.இலங்கையின் வளர்ச்சிக்கு அது அத்தியாவசியமான ஒன்றும் என்பதை மறுப்பதற்கில்லை.இச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் இலங்கை அரசு ஜீ.எஸ்.பீ வரிச் சலுகையை பெற்றிருந்தது.2009ம் ஆண்டு காலப்பகுதியிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி ஜீ.எஸ்.பீ வரிச் சலுகையை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அப்போது ஐரோப்பாவிற்கு இச் சட்டம் கண்ணில் குற்றவில்லையா? என்ற வினா முஸ்லிம் தரப்பிடமிருந்து எழுப்பப்படுவதை அவதானிக்க முடிகிறது.இவ்வினா ஒரு கோணப் பார்வையில் சரியாக தோன்றினாலும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் ஜீ.எஸ்.பீ வரிச் சலுகையை வழங்குவதற்கான நிபந்தனைகளில் சற்று இலகுவான போக்கை கடைப்பிடித்திருக்கலாம்.தற்போது தனது நிபந்தனைகளில் கடினப் போக்கை கடைப்பிடிக்கலாம் என்ற பதிலுமுள்ளது.இப்போதும் ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம் விவாக வயதெல்லையை மாத்திரம் மாற்றவே  நிபந்தனை விதித்துள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் மார்க் தெரிவித்துள்ளார்.இதனை வைத்து நோக்கும் போது இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் நாமத்தை பயன்படுத்தி தனது இனவாத செயற்பாட்டை நடாத்தப் போகிறதா என்ற பலத்த சந்தேகம் முஸ்லிம் மக்களிடத்தில் எழுந்துள்ளது.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பினர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுவதை கண்டித்து 2016-11-03 ம் திகதி வியாழக் கிழமை கொழும்பிலும்,2016-11- 11ம் திகதி வெள்ளி கிழமை சம்மாந்துறையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பினரால் வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்  நடாத்தக் கூடிய சாத்தியமுமுள்ளது.இந்தியாவில் பொது சிவில் சட்டத்தில் மாற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் திட்டங்கள் இடம்பெறுவதால் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் பெண்களை அணிதிரட்டி பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும்  முன்னெடுக்கின்றனர்.இவர்களை அச்சொட்டாக பின்பற்றும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தாங்களும் இது போன்ற ஆர்ப்பாட்டங்களையும்,பேரணிகளையும் நடாத்தும் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம்.உளவியல் ரீதியாக முஸ்லிம் மக்களை தங்கள் பக்கம் இலகுவாக ஈர்க்க இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் வழி சமைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களின் ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களிடத்திலும்,அந்நிய மக்களிடத்திலும் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.முதலில் இந்த ஆர்ப்பாட்டம் அவசியம் தானா? என்ற வினாவிற்கான விடையை தேடுதல் அவசியமாகின்றது.அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது பற்றி சிந்திக்கின்றதே ஒழிய அதில் என்ன என்ன பாகங்கள்,சரத்துக்கள் மாற்றம் பெற வேண்டும் என்பது பற்றி வெளிப்படையாக எதனையும் கூறவில்லை.முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் நிலைப்பாடாகவும் உள்ளது.அண்மையில் ஒரு பெண்கள் அமைப்பு மற்றும் சில முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் தங்களது விமர்சனங்களை பகிரங்கமாகவே முன் வைத்திருந்தனர்.இப்படி இருக்கையில் இது தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டிய கடமை உள்ளது.இதற்கு ஜீ.எஸ்.பீ வரிச் சலுகையை என்ற விடயத்தை கூறாமல் இந்த முஸ்லிம் பெண்களை காரணம் காட்டியிருந்தால் முஸ்லிம் சமூகம் எதனையும் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.இந்த பெண்கள் இவ்வாறான கோசங்களை எழுப்பிய போது அவர்களுக்கு தகுந்த முறையில் முஸ்லிம் அமைப்புக்கள் பதில் வழங்க தவறி இருந்தமையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.சில வேளை இச் சட்ட மாற்ற முயற்சி இஸ்லாமிய ஷரீயவை உள் நுளைப்பதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்துவிடலாம்.இப்படி இருக்கையில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாதின் தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் அவசியமற்றது.எப்போதும் இறுதி ஆயுதமாகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இச் சட்ட மாற்றம் இஸ்லாமிய ஷரீயாவிற்கு எதிராக அமையும் என உறுதி செய்யப்படும் போதே இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது பொருத்தமானது.இவ்வரசு இவ்விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முயற்சிப்பது வெளிப்படையான விடயம்.முஸ்லிம்களை நிராகரித்து செயற்பட நினைத்தால் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிய முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை.முஸ்லிம்களின் ஆதரவின்றி இச் சட்ட மூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பலமும் இலங்கை அரசிடமுள்ளது.இலங்கை அரசு இஸ்லாமிய ஷரியா பற்றி அறிந்திருக்குமென நினைக்க முடியாது.இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் திருமண வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனை வைத்து அவர்கள் வேறு வகையிலும் கணக்கு போட்டு வைத்திருக்கலாம்.இச் சந்தர்பத்தில் இது தொடர்பான தெளிவை அரசிற்கு வழங்க முயற்சித்தல்.பல் கோண அழுத்தங்களை வழங்க முயற்சித்தல்.இலங்கை முஸ்லிம்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதே பொருத்தமானது.இவற்றை செய்ய ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் தவறி இருந்ததாகவே நான் கருதுகிறேன்.

சிலர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாதின் ஆர்ப்பாட்டமானது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்பதால் எதிர்கின்றனர்.பலர் தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக எதிர்க்கின்றனர்.தௌஹீத் ஜமாத் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக எதிர்க்கின்றவர்களில் முஸ்லிம் அமைப்பை சேர்ந்த சிலரையும்,பொது பல சேனா அமைப்பினரையும் கூறலாம்.இதில் தௌஹீத் ஜமாஅத் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக விமர்சிக்கும் முஸ்லிம்கள் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொது பல சேனா எதிர்க்கின்றது என்பதற்காக மௌனிக்க முடியாது.இவ் விடயத்தை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் இஸ்லாமிய ஷரியாவிற்கு எதிரான விடயமாக கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் இதற்கு எதிராக தனது ஆர்ப்பாட்டத்தை அறிவித்த மறு கணமே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராக அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வோரை தாங்கள் விரட்டி அடிப்போம் என அறிக்கை விட்டிருந்தார்.குறித்த தினம் சில இனவாதிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு இவர்களின் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை ஞானசார தேரர் எதிர்க்காமல் விட்டிருந்தால் நான்கோடு ஐந்தாக அனைவராலும் நோக்கப்பட்டிருக்கும்.இவர்களின் இந்த முறுகல் காரணமாக இவ்விடயம் சந்து பொந்தெல்லாம் சென்றடைந்துள்ளது.முஸ்லிம்களுக்காக இலங்கை நாடு மிகப் பெரும் வரப்பிரசாதத்தை இழப்பதா என்ற இனவாத கோசமும் எழுந்துள்ளது.அன்று கோட்டை முன் கூடியது பத்து பேர் தான்.அதில் கூடிய ஒருவர் பிற்பாடு நூற்றுக்கணக்கானோரை ஒன்று கூட்டியிருந்தமை இதனை தெளிவாக்குகிறது.இதனை காதோடு காத்து வைத்தாப் போல சாதிக்க முயல்வதே முஸ்லிம்களுக்கு பொருத்தமான வழி முறையாகும்.தௌஹீத் ஜமாத் முன் வைக்கும் விடயங்கள் பேரின மக்களிடையே இனவாத கோசமாக நோக்கப்படுவதால் முஸ்லிம்கள் சம்பந்தமான சில விடயங்கள் பற்றி அவர்கள் கதைக்காமல் விடுவது சிறப்பு.

தௌஹீத் ஜமாதானது தங்களது ஆர்ப்பாட்டத்தை மாளிகாவத்தையில் அமைந்துள்ள தங்களது தலைமையகத்தில் இருந்து ஆரம்பித்து பஞ்சிகாவத்தை சந்தி நோக்கி வந்த போது பஞ்சிகாவத்தை சந்திக்கு சற்று முன் வைத்து பொலிசார் அதனை தடுத்து நிறுத்தினர்.பொலிசார் பொது பல சேனா அமைப்பினர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நிற்பதால் பிரச்சினைகள் எழும் என்பதையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டியிருந்தனர்.சட்ட ரீதியான அங்கீகாரத்தோடு மிகவும் அழகிய முறையில் முன்னெடுத்த தௌஹீத் ஜமாத்தின் பேரணியை பொது பல சேனா நிற்பதை காரணம் காட்டி நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது.அவர்களின் கோரிக்கை சரி பிழை என்பதற்கு அப்பால் அவர்களின் ஜனநாயக போராட்டத்திற்கு மதிப்பளித்திருக்க வேண்டும்.இலங்கை இனவாதத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதோடு இவ்வரசும் பொது பல செனாவிற்கு அஞ்சுவதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.அங்கு பத்து பேர் அளவிலானோரே கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஒரு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்பு அதற்கான தயார் படுத்தல்கள் மிக முக்கியமானவை.அது தொடர்பில் மக்களுக்கு பல்வேறு வழிகளில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.தௌஹீத் ஜமாஅத் இது தொடர்பில் சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் அது அவர்களது இயக்கத்தவர்களை மையப்படுத்தியதாகவே இருந்தது.தௌஹீத் ஜமாதின் ஆர்ப்பாட்டம் மிகவும் அழகிய திட்டமிடல்களுடன் நடைபெற்றிருந்தமை பாராட்டத்தத்தக்கது.அவர்களின் ஆர்ப்பாட்டத்தால் யாருமே சிறிதும் பாதிக்கப்படாத வகையில் தங்களது திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தனர்.இருந்தாலும் குறித்த பிரச்சார மேடையில் ஞான சார தேரர் மிகவும் கடுமையான வார்த்தைகளை தாக்கி பேசியிருந்தமை ஆபத்தான விடயம்.இது தௌஹீத் ஜமாத்திற்கும் பொது பல சேனாவிற்குமான உறவை இன்னும் பாதிக்கும்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 15-11-2016ம் திகதி செவ்வாய் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 69 கட்டுரையாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
முஸ்லிம்களின் உரிமை பறிப்பு போராட்டம் .. முஸ்லிம்களின் உரிமை பறிப்பு போராட்டம் .. Reviewed by Madawala News on 11/15/2016 07:08:00 PM Rating: 5