Ad Space Available here

முஸ்லிம்களைச் சீண்டி இன அழிவை ஏற்படுத்த இனவாதிகள் சதி அ.அஸ்மின்


முஸ்லிம்களைச் சீண்டி இன்னுமொரு இனவாத அழிவினை ஏற்படுத்தும் ஒரு சதித்திட்டம் தற்போது அரங்கேற்றப்படுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினரும் NFGG பிரதிநிதியுமாகிய அ.அஸ்மின் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில், இப்போது நல்லாட்சி அரசிலும் இனவாத சக்திகள் அவர்களுடைய பலத்தை பலாத்காரமாகவேனும் முன்னெடுக்க முயல்கின்றார்கள், இதற்குத் தூபமிடும் வகையில் அண்மையில் முஸ்லிம் அமைப்புகள் சில செயற்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது. இப்போதும் கூட எமது அரசியல் தலைவர்கள் அவர்களுடைய வீராப்பு அரசியலை முன்னெடுக்க முயல்கின்றார்களே தவிர அறிவுபூர்வமாக சிந்தித்து மக்களை வழிநடாத்துவதற்குத் தவறியிருக்கின்றார்கள். 2015 பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தமக்குப் பொறுத்தமான தலைவர்களைத் தெரிவு செய்யவில்லை மாறாக மஹிந்தவை விட்டு வெளியேறி மைத்திரியோடு இணைந்துகொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம்களுக்காக மஹிந்த அரசில் பேசாதிருந்த அதே தலைவர்களைத் தான் மீண்டு தெரிவு செய்திருக்கின்றார்கள்.


இந்த நாட்டிலே நீண்டகால புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு வழியேற்படுகின்ற சந்தர்ப்பத்தில் என்ன விலை கொடுத்தாவது இதனைக் குழப்பியடிக்க இந்த நாட்டின் இனவாத சக்திகள் முயற்சிக்கின்றன, அவர்கள் சிறுபான்மை இனங்கள் மேலோங்குகின்றார்கள் என்ற கருத்தை மிக இலகுவாக சிங்கள மக்களிடம் விற்றுவிட முயற்சிக்கின்றார்கள், அதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகவும் கச்சிதமாகப் பயன்படுத்துகின்றார்கள். 


தமிழ் மக்களின் மீது பழிசொல்வதை இன்னமும் அவர்கள் விட்டுவில்லை, பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களின் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து இந்த நாட்டிலே மீண்டும் ஒரு அமைதியற்ற சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்த முனைகின்றார்கள், அத்தகைய இனவாத சக்திகளுக்குத் தூபமிடுகின்ற தமிழ்த் தலைவர்கள் இருந்தாலும், அவர்களது கருத்துக்களைவிட நிதானமாக செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்களின் கருத்துக்கு தமிழ் மக்கள் கட்டுப்படுவதால் அவ்வளவு வேகமாக தமிழ் மக்களை அவர்களால் தமது நிகழ்ச்சிநிரலுக்குப் பயன்படுத்த முடியாமல் போய்டுகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு சில அசம்பாவிதங்களை திசைதிருப்ப முனைந்த நிகழ்வுகளைக் குறிப்பிட முடியும்.


அதேபோன்று இப்போது முஸ்லிம் சமூகத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் இனரீதியான அடைவுகளை ஈட்டிக்கொள்ள முடியுமா என்பது பேரினவாதிகளின் எண்ணமாகவும் முயற்சியாகவும் இருக்கின்றது. இதற்கு பக்க வாத்தியம் வாசிக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் செயற்படுவது மிகவும் வருத்தமளிக்கின்றது. அதே சந்தர்ப்பத்தில் முன்மாதரி முஸ்லிம் அரசியல் குறித்துப் பேசுகின்ற புத்திஜீவிகள் எவ்விதமான திட்டமிடல்களும் இன்றி திகைத்து நிற்கின்ற சூழல் மேலும் வருத்தமளிக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே முஸ்லிம் மக்கள் மிகவும் பொறுப்புணர்வோடு செயற்படக் கடமைப் பட்டிருக்கின்றோம்.


பாராளுமன்ற உரையொன்றில் இந்த நாட்டின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ அவர்கள் முன்வைத்த கருத்துக்களும் நான் மேலே சுட்டிக்காட்டிய சதி நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இருக்கின்றதோ என்ற ஐயமும் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுகின்றது. எல்லாவகையான மதரீதியான தீவிரவாதங்களும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைக்க முனைந்த அமைச்சர் முஸ்லிம் மக்கள் குறித்து முன்வைத்த கருத்துக்கள் முஸ்லிம் மக்களுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக இனவாதிகளைத் தூண்டிவிடும் செயலாகவே அமைந்திருக்கின்றது. இவ்வாறாக தற்போது நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலைகளை குறிப்பாக முஸ்லிம் மக்கள் கூடுதல் நிதானத்தோடு அணுகவேண்டும். 


தகவல் என்.எம்.அப்துல்லாஹ்

முஸ்லிம்களைச் சீண்டி இன அழிவை ஏற்படுத்த இனவாதிகள் சதி அ.அஸ்மின் முஸ்லிம்களைச் சீண்டி இன அழிவை ஏற்படுத்த இனவாதிகள் சதி அ.அஸ்மின் Reviewed by Madawala News on 11/20/2016 12:23:00 AM Rating: 5