Kidny

Kidny

சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சு போடும் ஐரோப்பிய யூனியன் முஸ்லிம்களுக்கு எதிரான ஐரோப்பிய யுத்தத்தை இலங்கைக்குள் கொண்டு வர வேண்டாம்...


இஸ்லாமிய ஷரீஆ சட்டம் பற்றி அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாது. அறிவீனமானதோர் நிலையில் காணப்படுகின்றது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒரு குழுவை அரசு நியமித்துள்ளது.அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளதன் பிரகாரம் 'முஸ்லிம் திருமணச் சட்டத்தில் ஆகக் குறைந்த திருமண வயதெல்லை உட்பட சில பிரிவுகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த சர்வதேச உடன்பாடுகளில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கின்றது. எனவே இந்த சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இறை சட்டங்களான ஷரீஆ சட்டங்கள் மேலைத்தேச ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையதாக சர்வதேச சட்டங்கள் எனப்படும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு ஏற்புடயவை அல்ல என்று எந்த அடிப்படையில் அவர் கூறினார் என்பது தெளிவில்லை.

இதனை மேலும் நியாயப்படுத்தும் வகையில் சட்ட ஒழுங்கு மற்றும் தென்பகுதி அபிவிருத்தி அமைச்சர் சாகல றட்ணாயக்க ஷரீஆ சட்டம் பற்றி எதுவும் தெரியாமல் ஊடக சந்திப்பு ஒன்றில் பேசும் போது GSP +  சலுகைகளைப் பெற்றுக் கொள்ள சர்வதேச சட்டங்களை மதிக்கும் வகையில், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை சர்வதேச எதிர்ப்பார்ப்புக்களின் ஒரு அங்கமாக திருத்தி அமைக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொருத்தமான திருத்தங்கள் பற்றி ஆராய்வதற்கும் அது பற்றிய முன்மொழிவுகளை பிரேரிக்கவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்திருந்தார்.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய பெல்ஜியம் விஜயத்தின் பின் புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் GSP + சலுகைகளை மீண்டும் பெற்றுக் கொள்வது பற்றி ஐரோப்பிய பாராளுமன்ற வெளிவிவகார குழுவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். 

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது GSP + சலுகைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தொடராக அக்டோபர் 31 முதல் நவம்பர் மூன்றாம் திகதி வரை இலங்கைக்கும் மாலைதீவுக்கும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் விஜயம் செய்துள்ளனர். நான்கு பேர் கொண்ட ஒரு தூதுக் குழுவாக இந்த விஜயம் அமைந்துள்ளது. GSP + சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கு சாத்தியமான கள நிலவரங்களை இவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இங்கு எழுப்பப்படும் முக்கிய கேள்வி ஐரோப்பிய யூனியன் வேண்டு கோளுக்கும் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? GSP + சலுகைகள் நிறுத்தப்பட்டமைக்கு முக்கிய காரணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் கடை பிடிக்கப்பட்ட குறுகிய நோக்கம் கொண்ட இனவாதக் கொள்கையாகும்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கங்கள் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் இந்தக் கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

GSP + என்பதும் ஷரீஆ சட்டம் என்பதும் இரண்டு வேறுபட்ட விடயங்கள்.
உதாரணத்துக்கு GSP  என்பது பொதுமயப்படுத்தப்பட்ட முன்னுரிமை முறைமைகள். உலக வர்த்தக ஸ்தாபனத்தின் பொதுவான விதிமுறைகளில் இருந்து விலக்களித்து முறையான ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக வழங்கப்படுகின்ற ஒரு வகை வரிச் சலுகையுடன் கூடிய ஏற்றுமதி வாய்ப்பாகும்.

ஆனால் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் என்பது முஸ்லிம்களின் புனித நூலான புனித குர்ஆனின் போதனைகளின் கீழ் அமைந்ததாகும். இது விவாகம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டு விடயங்கள் பற்றியும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கும் தெய்வீக சட்டமாகும்.

இந்த சட்டங்கள் 1430 வருடங்களுக்கு முன் புனித குர்ஆன் ஊடாக வழங்கப்பட்ட தெளிவான சட்டங்களாகும். பெண்கள் தமது விருப்பப் படி ஒரு கணவரை தெரிவு செய்யும் உரிமை இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதேபோல் இணங்கி வாழ முடியாத நிலை ஏற்படும் போது விவாகரத்துச் செய்யவும் உரிமை உண்டு. மனிதனால் இன்று உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் பெண்களுக்கான உரிமை பற்றி பேசுவதற்கும் சித்திப்பதற்கும் நீண்ட காலத்தக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ளது. விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் அது தெளிவு படுத்தியுள்ளது.

சொத்துக்கள் மீதான உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய யுத்த வெறியர்களும் அவர்களோடு தற்போது கை கோர்த்துள்ள புதுடில்லியின் முஸ்லிம் விரோத ஆர்.எஸ்.எஸ் இனவாதிகளும் இஸ்லாம் பற்றி என்னதான் தவறான கருத்துக்களை பரப்பினாலும் இஸ்லாம் பெண்களுக்கான தெளிவான உரிமைகளை வழங்கியுள்ளது என்பதே நிதர்சனமாகும்.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு விவாக மற்றும் விவாக ரத்து பற்றிய எல்லா விதமான தெளிவுகளையும் வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. முஸ்லிம்களின் பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், கலாசாரங்கள் என்பன நாட்டுக்கு நாடு சமூக அமைப்புக்களுக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப வித்தியாசப்பட்ட போதிலும் முஸ்லிம்கள் பின்பற்றும் ஷரீஆ சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதே.

இவ்வாறான ஒரு சூழலில் GSP + சலுகையை மீண்டும் தர வேண்டுமானால் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துங்கள் என்று ஐரோப்பிய யூனியன் கூறுவதும் அதற்கு இலங்கை அரசு ஒத்து ஊதுவதும் மடத்தனமானதாகும் என்றே குறிப்பிட வேண்டியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான முஸ்லிம்களுக்கு எதிரான போக்குடைய யுத்த வெறியர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைந்து கொடுக்கும் வகையிலேயே இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் யாவும் அமைந்துள்ளன. இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்களிப்பச் செய்த முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் புன்படுத்தும் வகையிலேயே அவை அமைந்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகள் மீது யுத்தத்தை திணித்து அந்த நாடுகளை சின்னாபின்னப்படுத்திய அமெரிக்கா தலைமையிரான ஐரோப்பாவையும் இஸ்ரேலையும் உள்ளடக்கிய முஸ்லிம் விரோத யுத்த வெறிகொண்ட சக்திகளின் முஸ்லிம்களுக்கு எதிரான ஒட்டுமொத்த சதித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே முஸ்லிம்கள் இதை நோக்குகின்றனர். 

அவர்கள் நவீன முஸ்லிம் நாடுகளை மட்டும் அழிக்கவில்லை. அமைதியாகவும் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர். இன்னும் இலட்சக் கணக்கான முஸ்லிம்களை அகதிகளாக்கியுள்ளனர், வறுமைக்குள் தள்ளிவிட்டு அவர்களை நிர்க்கதி ஆக்கியுள்ளனர்.

இவ்வளவு அநியாயங்களையும் புரிந்த ஐரோப்பிய யூனியன் தான் இன்று GSP +  சலுகை வழங்குவதற்காக ஷரீஆ சட்டத்தை திருத்துமாறு இலங்கையிடம் கேட்டுள்ளது. அரசாங்கமும் இதை ஏற்று இந்த சட்டங்கள் மீதான ஒரு சந்தேகப் பார்வையுடன் அவற்றை மீளாய்வு செய்ய ஒரு குழுவையும் நியமித்துள்ளது. இது இலங்கை முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்யும் ஒரு செயலாகவே நோக்க வேண்டியுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஆங்காங்கே சில ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவை கலைத்துவிட்டு முஸ்லிம் சமூகத்தை அவர்கள் பாட்டில் வாழ வழிவிடுமாறு கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் இந்த மேலைத்தேச யுத்த வெறியர்கள் தம்மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திணிப்பதற்காக இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்து ஆட்சி பீடத்தில் ஏற்றவில்லை. அரசியல் பொருளாதார ஸ்திரப்பாடு அற்ற ஒரு நிலையில் சென்று கொண்டிருக்கும் இந்த நாட்டில் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டியது முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை மாற்றுவது தானா?

ஊழலையும் மோசடிகளையும் குற்றச் செயல்களையும் குழிதோண்டிப் புதைக்கப் போவதாக கோஷமிட்டுக் கொண்டு பதவிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று அதே குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் வக்காளத்து வாங்கும் நிலைக்கு வந்துள்ளது. மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது இந்த நாட்டில் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய தருணம். தற்போதைய குழப்ப நிலையில் இருந்து இந்த நாட்டை மீட்டு எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஐரோப்பிய யுத்த வெறியர்களை திருப்தி படுத்த முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவது விவேகமான செயல் அல்ல.

2002 பெப்ரவரியில் குஜராத் முஸ்லிம்களின் படுகொலைகளுக்கான பிரதான சூத்திரதாரி தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டிலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்திய முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை அழிப்பது தான் அவரின் குறிக்கோள். மோடியின் ஆட்சியின் கீழ் பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு பொலிஸாரின் உதவியோடு காடையர்கள் கும்பலால் முஸ்லிம் சமூகத்தின் மீது அன்றாடம் கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித் தனம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி மியன்மாரின் வடக்கில் உள்ள முஸ்லிம் கிராமங்கள் பல அந்த நாட்டு பாதுகாப்பு படைகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

மீண்டும் அங்கு முஸ்லிம்கள் மீது படுகொலைகளும் கற்பழிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. சொத்துக்கள் மொத்தமாகச் சூறையாடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இடம்பெற்று பத்து தினங்கள் கழித்து ஆங் சாங் சூகி இந்தப் பிராந்தியத்தில் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளின் கேந்திர நிலையமான புது டில்லிக்கு விஜயம் செய்து அங்கு பல புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ளார். தெற்காசியாவிலும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள் தலைதூக்கி வருகின்றiயை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான பிராந்திய மற்றும் பூகோள நிலைமைகளின் கீழ் முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை மீளாய்வு செய்ய இலங்கை அரசு நியமித்துள்ள குழுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் யுத்த திட்டம் அமுல் செய்யப்படுவதை முஸ்லிம்கள் மட்டும் அல்ல எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். (முற்றும்)
சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சு போடும் ஐரோப்பிய யூனியன் முஸ்லிம்களுக்கு எதிரான ஐரோப்பிய யுத்தத்தை இலங்கைக்குள் கொண்டு வர வேண்டாம்... சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சு போடும் ஐரோப்பிய யூனியன் முஸ்லிம்களுக்கு எதிரான ஐரோப்பிய யுத்தத்தை இலங்கைக்குள் கொண்டு வர வேண்டாம்... Reviewed by Madawala News on 11/06/2016 10:09:00 AM Rating: 5