ஒலுவிலில் படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடன் அகற்ற வேண்டும் - பாராளுமன்றில் பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள்!


 
(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாஸீன்)
 
ஒலுவில் துறைமுகத்தில் படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கையினை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
 
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தொடர்பான பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (28) கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்படி வேண்;டுகோளை விடுத்தார். 
 
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் தொடர்ந்தும் பிரதி அமைச்சர் உரையாற்றுகையில்.
 
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கவின் கவனத்திற்கு ஒலுவில் துறைமுக பிரச்சினையினை கொண்டுவர விரும்புகின்றேன். இது தொடர்பில் இதற்கு முன்னதாகவும் அமைச்சர் மற்றும் துறைமுக பிரதம பொறியியலாளர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன்.  ஒலுவில் துறைமுக படகுப் பாதையில் மண் நிரம்பியுள்ளதால் துறைமுகத்தில் தரித்திருக்கும் 650க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்காக கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாக இம்மீனவர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொள்ளவிருந்தனர். ஆனால் நானும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும் இம்மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வினை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சருடன் பேசி பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து போராட்டங்கள் இடம்பெறாது தடுத்து நிறுத்தியுள்ளோம்.
 
அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க சிறந்த செயல்திறன் மிக்க அமைச்சர் என்ற வகையில் அவருடைய அமைச்சை சிறந்த முறையில் வழிநடத்துகின்றார். எனவே இப்பிரச்சினை மீனவர்களின் ஜீவனோபாயத்துடன் தொடர்புடையது என்பதால் அமைச்சர் மிகுந்த கவனமெடுத்து குறித்த மண்ணை அகற்றுவதற்கு ஏதுவான இயந்திரத்தை வழங்கி மண் அகற்றும் பணியினை உடன் ஆரம்பிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 
பாராளுமன்றத்தில் இதன்போது பிரசன்னமாகி இருந்த அமைச்சர் அருஜூனா ரணதுங்கவிடம் எழுத்து மூலமான கோரிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தனதுரையின் பின்னர் வழங்கினார். இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் இரண்டு நாட்களுக்குள் இயந்திரத்தை வழங்கி மண் அகற்றும் பணியினை ஆரம்பிப்பதாக வாக்குறுதியளித்தார்.


ஒலுவிலில் படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடன் அகற்ற வேண்டும் - பாராளுமன்றில் பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள்! ஒலுவிலில் படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடன் அகற்ற வேண்டும் - பாராளுமன்றில் பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள்! Reviewed by Madawala News on 11/28/2016 10:32:00 PM Rating: 5