Ad Space Available here

புத்தளம்; தொகுதியில் நேரடி அரசியல் களத்தில் ஒரு போதும் இறங்கமாட்டேன்..


அமைச்சின் ஊடகப்பிரிவு.
புத்தளம் தொகுதியில் தான் தேர்தலில் குதிப்பதற்காகவே மக்கள் காங்கிரஸ் தேசிய பட்டியலை புத்தளத்தின் மைந்தன் நவவிக்கு வழங்கியதாக பரப்பப்பட்டுவரும் விஷமத்தனமான பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் உயிருள்ளவரை புத்தளத் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். 

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் தொழில் அதிபருமான அலி சப்றியின் சொந்த நிதியில் அமைக்கப்பட உள்ள இந்த மதில் கட்டுமான அங்குரார்ப்பண விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, டொக்டர் இல்யாஸ், வலயக் கல்விப் பணிப்பாளர் சன்ஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யஹ்யா, சமூக சேவையாளர் முஃஸி ரஹ்மதுல்லா, அமைச்சரின் இணைப்பாளர் இர்ஸாத் ரஹ்மதுல்லா, நிறைவேற்றுப் பணிப்பாளர் அலிக்கான், தொழில் அதிபர் ஜிப்ரி மற்றும் இப்லால் மரைக்கார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர் ஐ. எல். சிறாஜிதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது புத்தளம் தொகுதியை புத்தளத்தில் பிறந்த ஒருவரே ஆள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

கடந்த 26 வருடங்களாக புத்தளத்தில் வாழும் அகதி முஸ்லிம்களை அரவணைத்து ஆதரித்து வாழ வைத்த இந்த மண்ணை எனது சொந்த மண்ணாக நான் நேசிக்கின்றேன்.

அகதிகளை எவ்வாறு ஆதரிக்க வேண்டும் என இஸ்லாம் கூறிய வழி முறைகளுக்கு ஒப்ப அகதிகளை அரவணைத்து பராமரித்த புத்தளம் மக்களையும் இந்த மண்ணையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். என்னையும் புத்தளத்தையும் பிரித்து வேடிக்கை பார்ப்பதாக சிலர் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுகின்றனர். வன்னித் தலைமைத்துவம் என்றும் வடக்குத் தலைமைத்துவம் என்றும் கதையளந்து பிரிவுகளை உருவாக்க சிலர் முனைந்த போதும் பெரும்பாலான புத்தளம் மக்கள் எம்மை நேசிப்பதனாலேயே இந்த உறவு இன்னும் தொடர்கின்றது.

வன்னியிலே தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படும் போது நான் வெல்ல முடியாது என்ற காரணத்தினாலேயே புத்தளத்திலே நாட்டம் கொண்டதாக கூறுகின்றனர்.

அகதி மக்களின் வாக்கினாலும் ஏனைய இனங்களின் ஆதரவினாலும் நான் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று அரசியலில் உயர் பதவியில் இருக்கின்றேன். இறைவனுக்குப் பொருத்தமாக அரசியல் செய்வதால் எனது கட்சி வளர்ந்து செல்கின்றது.

முஸ்லிம் சமூகம் இன்று கல்வித் துறையிலே நான்காவது இடத்தில் நிற்கின்றது. ஒரு நாட்டினது கல்வி வளர்ச்சியின் வீதமே அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு அளவு கோலாக அமைகின்றது. ஆசிய நாடுகளிலே கல்வியிலே இலங்கை உயர்ந்த நிலையில் இருக்கின்றது. எனினும் நாங்கள்; கல்வியிலே பின்தங்கி இருப்பதற்கு காரணம் அக்கறை இன்மையே. முஸ்லிம் பெண்பிள்ளைகள் கல்வியிலே உயர்ச்சியாக உள்ள போதும் ஆண் பிள்ளைகள் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்.

கையடக்க தொலைபேசி பாவனை, வேண்டாத காரியங்களில் ஈடுபடல், இவைகளினால் தமது காலத்தை கழிக்கின்றனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வைத்திய துறையில் மூன்று சதவீதமாக இருந்த முஸ்லிம் சமூகம் கடந்த வருடம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு சமூகத்திலே அரசியல்வாதிகளும் சமூகவாதிகளும் ஆன்மீகவாதிகளும் கல்வியியலாளர்களும் கருத்தொருமைப்படுவதன் மூலமே அந்த சமூகத்தை உயர்ந்த முடியும். அரசியல்வாதிகளை புறந்தள்ளி ஏனைய மூன்று சாராரும் சில விடயங்களை முன்னெடுக்கும் போது அவை உரிய இலக்கை அடைய முடியாத அல்லது தோல்வியை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படுகின்றன. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகளுக்கு உதவுவதுடன் சிலர் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலை மாறி அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை சொல்பவர்களாக அவர்களுடன் இணைந்து பயணிப்பவர்களாக மற்றைய சாரார் இருந்தால் சமூகத்தை சரியான வழியில் நடத்த முடியும் என்பதே எனது கருத்தாகும். சமுதாய நலனுக்காக, சமூகங்களுக்கிடையில் நல்லுறவுக்காக சமத்துவ வாழ்வுக்காக நான்கு சாராரும் ஒன்று சேர்ந்து பயணிக்கக் கூடிய சூழல் உருவாக வேண்டும்.

மாமனிதர் மர்ஹ_ம் அஷ்ரப் முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. அந்த மகான் அரசியல் நடத்திய காலத்தில் பாடசாலை மாணவனாக இருந்த போதும் அவரது பல கூட்டங்களில் பார்வையாளராக இருந்து அவரது சிந்தனைகளை, சமூகப் பற்றை, சமூகத்துக்காக குரல் கொடுக்கும் பாங்கை நான் கண்டிருக்கின்றேன் என்றும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும். அவர்களுக்கு கடமை செய்ய வேண்டும். இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது. படிக்கும் காலத்தில் கையடக்க தொலைபேசியை கையில் எடுக்காதீர்கள். இந்தப் பழக்கம் உங்கள் இலக்கை அடைவதற்கு ஒருபோதும் துணை செய்யாது. 

ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை நிர்மாணிப்பதில் சகோதரர் பாயிஸ், மாகாண சபை உறுப்பினர் நியாஸ், முன்னாள்; மாகாண சபை உறுப்பினர் யஹ்யா, மாகாண சபை உறுப்பினர் தாஹிர் உட்பட இந்த ஊரின் மண்ணின் மைந்தர்கள் பலரின் பணியை நாங்கள் மறக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை பூரணப்படுத்தி கேட்போர் கூடமொன்றை அமைத்து தருவதற்கும், கல்லூரி இடவசதியைக் கருத்திற் கொண்டு அயலில் உள்ள காணியொன்றைப் பெற்றுத் தருவதற்கும் நிதியுதவி வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

புத்தளம்; தொகுதியில் நேரடி அரசியல் களத்தில் ஒரு போதும் இறங்கமாட்டேன்.. புத்தளம்; தொகுதியில் நேரடி அரசியல் களத்தில் ஒரு போதும் இறங்கமாட்டேன்.. Reviewed by Madawala News on 11/27/2016 02:32:00 PM Rating: 5