Ad Space Available here

நீதி அமைச்சரி பேச்சு ஞானசார தேரரின் இனவாத பேச்சை ஒத்தது...

(அகமட் எஸ். முகைடீன்)
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியிருப்பது ஞானசார தேரரின் இனவாதப் பேச்சை ஒத்ததாக அமைவதோடு தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
 
நேத்ரா தொலைக்காட்சியில் சென்ற வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற 'வெளிச்சம்'  நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்தி ஆற்றிய உரை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது பிரதி அமைச்சர் சமூக உணர்வுடன் உணர்வு பூர்வமாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.   
 
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் குறித்த நேரடி ஒலிபரப்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.
 
இந்த நாட்டின் எந்த ஒரு முஸ்லிம் நபரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகளுடன் தொடர்போ அல்லது அதன் உறுப்பினராகவோ இல்லை என இராணுவப் பேச்சாளர் உத்தியோக பூர்வமாக கடந்த 10 நாட்களுக்குள் பகிரங்கமாக கூறியிருந்தார். ஆனால் இன்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதற்கு முற்றிலும் முரணாக இலங்கையைச் சேர்ந்த 33 நபர்கள் சிரியாவில் இருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறுகின்றார். அச்சந்தர்ப்பத்தில் நான் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை, அமைச்சரின் இக்கூற்றானது ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கெதிராக கீழ்த்தரமான முறையில் பேசுவதைப் போன்றதாகவே காணப்படுகின்றது. அரசு சிறந்த புலணாய்வுப் பிரிவைக் கொண்டிருக்கின்ற நிலையில் உண்மையினை அறிந்துகொள்ளாமல் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தேவையற்றதாகவும் வீண் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் அமைகின்றது.
 
நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அரசுக்கெதிரான கூட்டு எதிர்க்கட்சியினால் மூட்டி விடப்படுகின்ற தீ ஆக இருக்குமானால் இத்தீயினை அணைக்கும் வகையிலான அரசின் நடவடிக்கையாக இனப்பிரச்சினையை தூண்டுகின்ற ஞானசார தேரர் மற்றும் பல இனவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை என நிகழ்ச்சித் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
 
வெளிநாட்டவர்கள் அரபு மதரசாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற சிந்தனைகளை விதைத்து மாணவர்களை மூளைச்சலவை செய்கின்றனர் என்று நீதி அமைச்சர் பொறுப்பில்லாத வித்தில் பொய்க்; குற்றம் சுமத்தி இருக்கின்றார். இவரின் இக்கூற்று தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு பெற்றோல் இடுவதுபோன்று அமைகிறது. எனவே இதை ஒரு பாரதூரமான விடயமாக பார்க்க வேண்டியிருக்கின்றது.
 
இந்த நாட்டின் நீதி அமைச்சர் பெரும்பாண்மை சமூகத்தில் தன்னுடைய அரசியலை மையப்படுத்தி பேசுகின்ற ஒரு பேச்சாக அமைகின்;றது. அவர்சார்ந்த சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக இன்னுமொரு சமூகத்தின் மீது வீண்பழி சுமத்துவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. சிங்கள பௌத்த விகாரைகள் பயங்கரவாத பயிற்சி வழங்குகிறது என்று எங்கலாளும் பேச முடியும். ஆனால் அவ்வாறு பேசி இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இந்த விடயம் சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆராய்ந்து செயற்படவேண்டும் என பிரதி அமைச்சர் வேண்டிக்கொண்டார்.
 
இதன்போது வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்.
 
நாட்டின் தற்கால சூழ்நிலைக்கேற்ப அரசாங்கம் யதார்த்தமான ஒரு வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இதில் நாட்டின் உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிலிருந்து பெறப்படுகின்ற கடன் தொகையினையும் உள்நாட்டு செலவீனங்களையும் குறைத்து மக்களுடைய நலனையும், நாட்டின் தேசிய அபிவிருத்தியையும்  மையமாக வைத்து இந்த வரவு செலவுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வரவு செலவுத்திட்டத்தின் விஷேட அம்சம்மாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதனை ஆதரித்திருப்பதாகும்.   
 
இவ்வரவு செலவுத்திட்டத்தில் நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தகாலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த ஹெடஓயா நீரப்பாசனத்திட்டத்தை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் இவ் வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அதற்கான முதற்கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பொத்துவில் பிரதேச மக்களின் நீண்டகால குறையாக இருந்துவந்த குடிநீர் பிரச்சினை மற்றும் கோடைகாலங்களில் விவசாயம் மேற்கொள்வதில் இருந்த பிரச்சினைகள் தீர்கப்படவுள்ளதுடன் பொத்துவிலை அண்டிய பிரதேசங்களான பாணம, திருக்கோவில், ஆலையடிவேம்பு லஹுகல போன்ற பிரதேசங்களும் பயன்பெறவுள்ளன. அத்தோடு றவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சுக்கு 3000 இற்கும் மேற்பட்ட மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக வருகின்ற வருடத்தில் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை நாடுபூராகவும் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
 
அதேபோன்று விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் கடந்த வருடத்தைவிட பெருமளவான நிதி இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 'திறமையினை அடையாளம் காணல்' என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 3 இலட்சத்து 75 ஆயிரம் மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு விருத்தி செய்வதன் மூலம் சர்வதேச வெற்றிகளை பெறுவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை  மேற்கொள்ளவுள்ளோம். அதேநேரம் நாடுபூராகவும் பல புதிய விளையாட்டு மைதானங்கள் அமைத்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அத்தோடு வடகிழக்கில் விளையாட்டுதுறை ஊடாக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விஷேட நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது தெரிவித்தார். 
 
நீதி அமைச்சரி பேச்சு ஞானசார தேரரின் இனவாத பேச்சை ஒத்தது... நீதி அமைச்சரி பேச்சு ஞானசார தேரரின் இனவாத பேச்சை ஒத்தது... Reviewed by Madawala News on 11/21/2016 11:48:00 PM Rating: 5