Free Space

அரசியல் தீர்வு விடயத்தில் வடக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடும் கிழக்கு முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது...


எமது நாட்டிலே கடந்த 30வருடங்களாக ஒரு கொடிய யுத்தம் நடைபெற்றுள்ளது. இந்த நாட்டின் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரும் இந்த யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.இன்மேலும் தீர்வு தாமதமாவதும், அமைதி நிலை தாமதமாவதும் இந்த நாட்டின் மக்கள் என்றவகையில் எம் எல்லோரையும் பாதிப்புக்குள்ளாக்கும்.


இந்த யுத்ததிற்கான அடிப்படைக் காரணம் இந்த நாட்டின் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரியமையாகும். இந்தக் கோரிக்கையின் பின்னால் தமிழ் மக்களிடத்தில் ஒரு நியாயப்பாடு இருந்தது. இந்தப் போராட்டத்தை “தமிழ்த் தேசியத்திற்கான போராட்டம்” என்று அடையாளப்படுத்த முடியும். தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மக்கள் கூட்டமாக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பொது அடையாளத்தோடு நோக்கப்பட்டார்கள், இவர்களுக்கான பூகோளப் பிராந்தியமாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் அடையாளப்படுத்தப்பட்டன, சிலபோது வடக்கு மாகாணத்தின் எல்லையானது புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. அகிம்சா ரீதியான போராட்டம் நிகழ்ந்த காலகட்டத்தில் குறிப்பாக வடக்குக், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு இணைந்து செயற்பட்டார்கள் என்பது வரலாறு.


அதுவே ஆயுதப் போராட்டமாக மாறிய சூழலில் அதற்கு நேரடி ஒத்துழைப்பு வழங்கும் தீர்மானத்தை நோக்கி ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் செல்லவில்லை. யுத்தம் எல்லா வடிவங்களிலும் தொடர்ந்தது. ஜனநாயகத்திற்கு இடமில்லாமலாக்கப்பட்டது, மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், சூறையாடல்கள், இனச்சுத்திகரிப்புகள், இனவழிப்புகள், கெரில்லாத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், மத ஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள், பொருளாதார மத்திய நிலையங்களின் மீதான தாக்குதல்கள், மக்கள் தலைவர்களின் படுகொலைகள் என யுத்தம் விஸ்வரூபம் எடுத்தாடியது. யுத்தம் எல்லா மக்களுக்கும் பல அழிவுகளை விட்டுச்சென்றது.


இப்போது யுத்தம் முடிவுக்கு வந்திருக்கின்றது; தீர்வு இதுவரை எட்டப்படவில்லை, ஆனால் நாட்டின் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தமட்டில் தீர்வுக்கான முயற்சிகள் இடம்பெறுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில்தான் முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வு குறித்து சிந்திக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். தென்னிலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்களுக்கு இருப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அவற்றை கையாள்வதற்கு அதிகாரப் பரவலாக்கல்களின் அவசியம் அவர்களுக்குக் கிடையாது. குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களே இது விடயத்தில் கூடுதல் ஆர்வம் செலுத்துகின்றார்கள். அதிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையானது அவர்களது இருப்பை அடிப்படையாகக் கொண்டே முன்னெழுகின்றது. அதே சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினையானது அதிகாரத்தை மையமாகவைத்து முன்னெழுகின்றது. அரசியல் தீர்வு விடயத்தில் வடக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடும் கிழக்கு முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. தேசிய ரீதியில் முஸ்லிம் சமூக விவகாரங்களில் தேசிய முஸ்லிம் சமூகமாக ஒன்றிணையும் அதே சந்தர்ப்பத்தில் தாம் வாழ்கின்ற பிராந்தியங்களில் அவர்கள் எதிர்நோக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம்மை ஒழுங்கமைப்பதே சிறப்பானது.


இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளும், கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளும் அவை ஒன்றோடு ஒன்று தாக்கம் செலுத்தக்கூடியதாக இருப்பினும், தனித்தனியே அணுகப்படவேண்டும். அப்போது மாத்திரமே ஒருவரின் நலனுக்காக மற்றொருவரின் நலன் விட்டுக்கொடுக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படாதிருக்கும். இதனை முஸ்லிம்கள் தமக்குள் புரிந்துகொள்கின்ற அதே சந்தர்ப்பத்தில் இந்தப் பிரச்சினயோடு தொடர்புறுகின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களும் இந்தப் புரிதலை ஏற்படுத்துவது சிறப்பானது. அவ்வாறு இரண்டு அணுகுமுறைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் ஒன்றையொன்று தொடர்புபடுத்தி பேரம் பேசும் சூழ்நிலைகள் எழுகின்றன. அல்லது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஒன்றுக்காகவே வடக்கில் பழி தீர்க்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது, இவை நியாயமற்றவை என்பதோடு நீண்ட விவாதத்திற்கும் அவசியமற்றவையுமாகும்.


குறிப்பாக வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் வடக்கு முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள், அதாவது வடக்குக் கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களால் முன்வைக்கப்படுகின்றது; அதற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்கான தீர்மானம் கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களோடு கலந்துபேசியதன் பின்னர் அவர்களுடைய பெரும்பான்மை விருப்புடன் இடம்பெறல் அவசியமாகும். இந்நிலைப்பாட்டை வடக்கு முஸ்லிம்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 


முஸ்லிம் மக்கள் தீர்வு விடயத்தை அணுகுகின்றபோது மிகுந்த நிதானத்தோடு அணுகுதல் அவசியமாகும். சிங்கள மக்களும் தமிழ் மக்களும்; முஸ்லிம் மக்களின் நடுநிலைத் தன்மையையும் அவர்களிடம் இருக்கும் நியாயப்பாடுகளையும் உணர்தல் அவசியமாகின்றது. முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த அர்ப்பணிப்போடு முயற்சிக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் தங்களுடையதும் தங்களுடைய எதிர்கால சந்ததியினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயற்படுவதை உறுதிசெய்தல் வேண்டும்.  தீர்வு என்கின்ற விடயத்தில் குறிப்பாக அதிகாரப் பகிர்வு அல்லது பரவலாக்கம் என்கின்ற விடயத்தில் முஸ்லிம் மக்கள் போதுமான அறிவையும் ஈடுபாட்டையும் கொண்டிருத்தல் அவசியமாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வடக்குக் கிழக்கு இணைப்பு என்கின்ற தமிழ் மக்களின் ஒரு கோரிக்கையினை முன்னிறுத்தி பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் தங்களுடைய தெளிவான நிலைப்பாட்டையும், அதற்கான நியாயப்பாட்டையும் முன்வைத்தல் அவசியமாகும். ஆனால் வடக்குக் கிழக்கு இணைப்பு மாத்திரம் தீர்வு என்றாகிவிடாது என்பதையும் முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்திருத்தல் அவசியமாகும்.


“தமிழ் மக்களுக்கான தீர்வு, முஸ்லிம் மக்களால் குழப்பியடிக்கப்பட்டது” என்ற பழியை ஒருபோதும் வடக்குக் கிழக்கு முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறாயின் இதுவிடயத்தில் முஸ்லிம் மக்கள் தமது கூடுதல் ஈடுபாட்டையும், கவனத்தையும் செலுத்துவது இன்றியமையாது. தமிழ் மக்களுடைய கோரிக்கைகளுக்கு அல்லது அவர்களுடைய முன்மொழிவுகளுக்கு எதிர்க்கருத்தையோ அல்லது மறுப்பையோ வெளியிடுவதைத் தவிர்த்து முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்தினால் இந்த முரண்பாட்டிலிருந்து விலகும் வாய்ப்பு ஏற்படும். எனவே குறிப்பாக வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் ஏற்படப்போகும் அரசியல் அமைப்பு மாற்றத்தில் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை, எதிர்பார்ப்புகளை, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, நிறைவு செய்யப்படவேண்டிய தேவைகளை முன்வைப்பது வரவேற்கத்தக்கதாக அமையும்.

அரசியல் தீர்வு விடயத்தில் வடக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடும் கிழக்கு முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது... அரசியல் தீர்வு விடயத்தில் வடக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடும் கிழக்கு முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது... Reviewed by Madawala News on 11/01/2016 08:35:00 PM Rating: 5