Ad Space Available here

ஒட்டு மொத்த இந்திய மக்களை பசியுடன் அலைய விட்ட மோடி


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பை அடுத்து நாடு முழுதும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் பெட்ரோல் நிரப்புவதில் என்று அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


பேருந்து, ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ரயில்களில் செல்பவர்கள் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு சில்லரை கிடைக்காமல் அங்குமிங்கும் பரிதாபமாக அலைந்து திரிந்ததாகவும், சுங்க வரி செலுத்துமிடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் வாகனங்களுடன் காத்திருப்பதையும் காட்சி ஊடகங்களும் செய்தி ஊடகங்களும் தகவல் வெளியிட்டு வருகின்றன.

தினசரி கூலி வருவாய் ஈட்டுபவர்கள், குறைந்த வருவாய்க்காக தினசரி அல்லாடும் வர்க்கத்தினர் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளனர். சாலையோர கடைகளில் உணவு அருந்தி விட்டு பணிக்குச் செல்பவர்கள் சில்லரை கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். சிறிய வியாபாரிகளான காய்கறி விற்பவர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்களிடையே ‘இது எதில் போய் முடியுமோ?’ என்ற கவலை எழுந்துள்ளது. பதற்றமடைய வேண்டாம் என்று பிரதமர் முதல் ஆர்பிஐ வரை கூறினாலும், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500 கொடுக்கலாம் என்று கூறினாலும் பெட்ரோல் பங்க்குகளில் ரூ.500க்கு சில்லரை இல்லை என்கின்றனர், அல்லது 500க்கோ, ஆயிரத்திற்கோ பெட்ரோல் நிரப்பிச் செல்லுங்கள் என்று இந்திய நகரங்கள் முழுதிலும் இன்று காணும் காட்சியாக இருந்து வருவதை ஊடகங்கள் செய்தியாக்கி வருகின்றன.

பல நகரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட நிலவரங்களின் படி சிறு வியாபாரிகள், மளிகைக் கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரள் அல்லாடி வருகின்றனர். சில மருந்துக் கடைகளிலும் இதே பாட்டைப் பாடுவதும் வேதனையளிக்கும் காட்சியாக இருந்து வருகிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்குக் கூட ரூ.500, ரூ.1000 கடைக்காரர்களால் மறுக்கப்பட்டு வருகிறது. 

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட நகரங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமலும் பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.

அதாவது 500 ரூபா நோட்டை எடுத்துக் கொண்டு பால், காய்கறி வாங்கச் சென்றால் சில்லரை இல்லாத காரணத்தினால் ஒன்று மீதி வாங்காமல் வர நேரிடுவதாகவும் இன்னும் சிலர் முழுதும் எதையாவது வாங்கிக் கொண்டு வருவதாகவும் இன்றைய தினம் கழிந்ததாக தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல் நிலையங்கள் சில திறக்காமல் பூட்டு போடப்பட்டும், திறந்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் ரூ.500, ரூ.1000 வைத்திருப்பவர்களுக்கு சில்லரை அளிக்கவும் மறுத்து வருவது வாடிக்கையான காட்சியாகியுள்ளது, இதனால் மும்பை, டெல்லி, சென்னையில் சில பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.

“ஆயிரம் ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் நிரப்பினால் வீட்டில் பணம் இல்லாத நேரத்தில் நான் எப்படி மற்ற குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும், கடினமாக உழைத்து சேமித்த எனது பணம் (ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் காண்பித்து) ஒரே இரவில் பயனற்ற காகிதமாகிவிட்டது. இப்போது நான் ஏமாற்றப்பட்டதாகவும், என்னிடமிருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் நான் உணர்கிறேன்” என்று மும்பை அந்தேரியைச் சேர்ந்த நிறுவன ஊழியர் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டார்.

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ராஷ்மி சவான் கூறும்போது, “இந்த நடவடிக்கையினால் ஊழல்/கருப்புப் பண ஒழிப்பு வெற்றியடையும் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை ஆனால் ஒரு நாளோ இரண்டு நாளோ சாதாரண மக்களின் கடினப்பாடுகளை அல்லாட்டங்களை கண்டுகொள்ளப்போவது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

தலைநகர் டெல்லியில் மதர் டெய்ரி மற்றும் பிற அரசு நடத்தும் கூட்டுறவு விற்பனை மையங்களில் பெரும் குழப்ப நிலை உருவானது. அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட நெடும் வரிசையில் மக்கள், தகராறு, குழப்பங்கள் உருவாகியது.

ரூ.100 கிடைக்காததால் சிறு வியாபாரிகள், ரிக்‌ஷா, ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் அனைத்து நகரங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களது வருமானம் ஒன்றுமில்லாமல் போனதாக கடும் ஆத்திரமடைந்துள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் ஒருபடி மேலே போய் வங்கிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று டிஜிபி ஜாவீத் அகமது அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் சில்லரை விற்பனை நிலையங்கள், நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பெட்டிக் கடைகள் ஆகியவற்றில் ரூ.500, ரூ.1000-உடன் வரவேண்டாம் என்று போர்டு வைக்காத குறைதான் என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

ஹரியாணாவில் பெட்ரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகளில் பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்படும் சூழ்நிலை காரணமாக போலீஸ் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு சுங்கச் சாவடிகளில் வரலாறு காணாத நீண்ட வரிசையில் மக்கள் வாகனங்களுடன் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவு இருந்தாலும் பலரும் அதனை உதாசீனப் படுத்தி வருவதால் பொதுமக்கள் பாடு திண்டாட்டம் நிரம்பியதாக இந்திய நகரங்கள் உள்ளன. 

ரூ.500, ரூ.1000 நடவடிக்கையை பலரும் பாராட்டினாலும், இந்தக் குழப்ப நிலை எத்தனை நாள் நீடிக்கப் போகிறதோ, வங்கிகளில் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றச் செல்லும்போது என்னென்ன குழப்பங்கள் நேரிடுமோ என்று மக்கள் பெரும் கவலையும் பதற்றமும் அடைந்துள்ளதாக நாடு முழுதிலிருந்தும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
ஒட்டு மொத்த இந்திய மக்களை பசியுடன் அலைய விட்ட மோடி ஒட்டு மொத்த இந்திய மக்களை பசியுடன் அலைய விட்ட மோடி Reviewed by Madawala News on 11/09/2016 10:39:00 PM Rating: 5