Ad Space Available here

பொறுமையின் சோதனைக் காலம்..அமெரிக்காவில் சமூக உரிமையை நிலைநாட்டுவதற்காக காந்திய வழியில் போராடியஆபிரிக்க-அமெரிக்க தலைவரான மார்ட்டின் லூதர் கிங்,'நாடுகள் யாவும் காலஓட்டத்தில் யுத்தங்களை நடாத்தி சுதந்திரத்தைப் பெற்றுவிட்டன. ஆனாலும் அந் நாடுகளில் இடம்பெறுகின்ற வன்முறைகள் தற்காலிகமான வெற்றியை தந்திருந்தாலும் கூட, நிரந்தரமான அமைதியைக் கொண்டு வருவதில்லை' என்று கூறினார். அரை நூற்றாண்டுக்கு முன்னர் அவர் சொன்ன வார்த்தைகள் இன்று இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளன.

தமிழர்களும் முஸ்லிம்களும் கடந்தநூறு வருடங்களாக இனவாதம் மற்றும் அதன் பாதிப்புக்களை அனுபவித்து வந்திருக்கின்றார்கள். உலக வரலாற்றைப் போலவே இலங்கையின் வரலாறு நெடுகிலும் இனம், மதம் சார்ந்த மேதாவித்தனங்களும் அடக்குமுறைகளும் நிகழ்ந்தே வந்திருக்கின்றன. இலங்கையில் கட்டமைக்கப்பட்ட முதலாவது இனக்கலவரம் 1915ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதற்குப் பின்னர் 1970 களிலும் 1983 இலும் சிறுபான்மை மக்களது உயிர்களையும் உடமைகளையும் இலக்குவைத்து கலவரங்கள் இடம்பெற்று விட்டன. அதற்குப் பின்னரே தமிழர்கள் ஆயுதமேந்தி பேராடினர். யுத்த சூழலின் வன்கொடுமைகளை தமிழர்கள் மட்டுமன்றி நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் அனுபவித்தார்கள். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது,ஏதோவொரு வகையில் அமைதிச் சூழல் நிலவும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்;. ஆனால் யுத்தம் முடிவடைந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே இனவாதம் தூக்கம் கலைத்து எழுந்து நிற்கத் தொடங்கியது.

ஆட்சிக் கவிழ்ப்பு
முஸ்லிம்களின் தார்மீக மத உரிமைகளை கபளீகரம் செய்தது ஒருபுறமிருக்க, பகிரங்கமாகவே தம்புள்ளை பள்ளிவால் உள்ளடங்கலாக நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டன. பயங்கரவாதத்தையும் விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை பொருந்திய இனவாதம், பெருந்தேசிய கட்சிகளின் கொல்லைப் புறத்தில்செழித்து வளர்ந்திருக்கின்றது என்பதை அழுத்கம, பேருவளை கலவரம் நமக்கு உணர்த்தியது. அப்போது,பரமசிவன் கழுத்தில் அமர்ந்திருக்கும் பாம்பை கழுகு பார்ப்பது போல,சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இது முஸ்லிம்கள்,தமிழர்களின் மனங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி குறித்த பெரும் வெறுப்பினை உண்டுபண்ணியது. உண்மையிலேயே, தம்புள்ளைப் பள்ளிவாசல் பிரச்சினைதான் மஹிந்தவை ஆட்சி கவிழ்ப்பதற்கான வேலைத்திட்டத்தின் தொடக்கம் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். மத ரீதியாக இலகுவில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் இருப்பதால் அவர்களை சீண்டும் விதமாக மேற்கொள்ளப்பட்ட காய்நகர்த்தல்கள், மஹிந்தவை மெதமுலனவுக்கு அனுப்பி, மைத்திரியை அரியாசனம் ஏற்றியது.

அதற்கு பிறகு நிறுவப்பட்ட ஆட்சிக்கு நல்லாட்சி என செல்லப்பெயர் சூட்டப்பட்டது. தமிழர்களும் முஸ்லிம்களும் 'இனியெல்லாம் சுகமே'ஆறுதல் பெருமூச்சு விட்டுக் கொண்டனர். அரசாங்கமும் சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியது. இருப்பினும் என்ன காரணத்திற்காக சிறுபான்மை மக்கள் மஹிந்தவை புறக்கணித்தார்களோ, அதே காரணம் மீண்டும் மெல்ல மெல்ல உருவெடுத்தது. புதிய அரசாங்கம் உருவாகி குறுகிய காலத்திற்குள்ளேயே இனவாதிகள் மீள எழுச்சி பெறத் தொடங்கிவிட்டனர். மஹிந்த ஆட்சியில் கோலோச்சிய பொது பலசேனா, இராவண பலய, சிங்கள ராவய என்பனவெல்லாம் இன்னும் களத்தில் இருக்க,நேற்றுப் பெய்த இனவாத மழையில் புதிய புதிய காளான் இயக்கங்களும் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

இருவர் கைது
சிங்கள கடும்போக்கு சக்திகள் மீளவும் அடாவடித்தனம் புரிவதும் அதை நல்லாட்சியும் கண்டும்காணாதுபோல் இருப்பதும் முஸ்லிம்கள், தமிழர்கள் மத்தியில் பெரும் மனவெறுப்பை ஏற்படுத்தியிருந்த சூழலிலேயே, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட காரணங்களுக்காக இரண்டு பேர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'முஸ்லிம்கள் சிங்களவர்களின் நிலங்களை கைப்பற்றுகின்றார்கள். அடிப்படைவாதிகளுக்கு துணைபோகின்ற அமைச்சர் ஹக்கீம் நினைத்தால் குடிநீரில் விசத்தை கலந்து நம்மை கொன்றுவிடலாம். அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையில் ஒன்றுதிரண்டு நம்மையெல்லாம் அழித்து விடுவதற்கிடையில் அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். 

இன்னுமொரு பிரபாகரன் உருவாகும் வரை காத்திருக்க முடியாது...' என்றெல்லாம், வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாத விடயங்களை கூறிக் கொண்டு திரிந்த டான் பிரியசாந் என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் றாசீக் என்பவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனியார் சட்டத்தை திருத்தும் முயற்சிகளுக்கு எதிராக கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் இனவெறுப்பு கருத்துக்களுக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே றாசிக் கைதாகியுள்ளார்.

பிரியசாந்தை கைது செய்வது பொலிஸாருக்கு ஒரு பெரிய காரியமாக இருந்திருக்காது. ஆனால் இவரது கைது இடம்பெற்ற பின்னர் சிங்கள கடும்போக்காளர்கள் மத்தியில் ஒருவகையான கொந்தளிப்பு ஏற்படும் அறிகுறிகள் நிறையவே தென்பட்டன. அத்துடன் நாடுதிரும்பியிருந்த பொது பலசேனாவின் ஞானசார தேரர், அப்துல் றாசிக்கை பொலிஸார் கைது செய்ய வேண்டுமென்று அவரது வழக்கமான எச்சரிக்கும் பாணியில் குறிப்பிட்டிருந்தார். அந்த தருணத்திலேயே றாசிக் கைதானார். இவ்விடயத்தை சிறுபான்மை மக்கள் மிகவும் பக்குவமாக நோக்க வேண்டியுள்ளது.

அதாவது,சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நாட்டில் இனவாத இயக்கங்களும் அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளும் இன்னும் பலமான நிலையிலேயே இருக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம்களின் முறைப்பாட்டுக்கு  அமைய சிங்களவர் ஒருவரை கைது செய்துவிட்டு, சிங்களவர்களின் முறைப்பாட்டை கணக்கெடுக்காமல் விடமுடியாது. இப்பவே எதையாவது செய்துவிட துடிக்கும் இனவாதிகள் அதை தமக்கு சாதமாக பயன்படுத்தி கலகங்களை ஏற்படுத்தி விடுவார்கள் என்று அரசாங்கமும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரும் எண்ணியிருக்கலாம். அதன்படி, கடும்போக்கு சக்திகளிடையே நிலைமை உக்கிரமடைவதை தடுக்கும் முகமாக தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கலாம். இவ்வாறான சூழலில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சற்று பதற்றமான இன்றைய சூழலில் பல விடயங்கள் குறித்து முஸ்லிம்களும் தமிழர்களும் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது.பிரியசாந்த் கைது செய்யப்பட்ட பிறகு ஏற்பட்டிருந்த நிலைமைகள், றாசிக் கைது செய்யப்பட்ட பின்னர் சற்று தணிவடைந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. 

எவ்வாறிருப்பினும்,பொது பலசேனாவின் கிருலப்பனை அலுவலகத்தில் நடக்கின்ற கூட்டங்களும் சில கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளும் முஸ்லிம்களை அச்சமூட்டுவனவாக அமைந்துள்ளன. 
சிங்களவர்களுக்கு மத்தியில் சிறு தொகையினராக வாழும் முஸ்லிம்கள் கடந்த சில இரவுகளை மிகவும் பதற்றமான மனநிலையுடனேயே கடத்திக் கொண்டிருக்கின்றனர். பாரதூரமாக எதுவும் நடக்காது என்றாலும்,நடக்கக் கூடாத அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என்று தாம் அச்சம் கொண்டுள்ளதாக கொழும்பில் வசிக்கும் நண்பர்கள் கூறுகின்றனர். இவ்விடயத்தை மிகவும் பொறுப்புடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
பொறுப்புடன் செயற்படல்
முஸ்லிம்களின் பார்வையில், பிரியசாந்த் என்பவர் சண்டித்தனம் பேசும் ஒரு பேர்வழியாகவும், அப்துல் றாசிக் மார்க்கம் பரப்பும் போதகராகவும் தெரியலாம். 

ஆனால், சிங்கள கடும்போக்காளர்களின் பார்வையில் இது மறுதலையாகவே தென்படும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதேபோன்று, பிரியசாந்தை கைது செய்தததற்காக சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சொற்பமான பிக்குகளும் இனவாதிகளுமே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். பெருமளவிலான சிங்கள சகோதரர்கள் நமக்கு நடக்கின்ற அநியாயத்தை அங்கீகரிக்கவில்லை என்பதுடன், பல பிக்குகள் இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தும் வருகின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது.

அதேபோன்று அப்துல் றாசிக் கூறிய கருத்துக்களுக்காகவும் அவருக்கு நீதிமன்றம் வழங்கியிருந்த அறிவுரையை மீறியதற்காகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கலாம். அவர் கூறிய கருத்துக்கள் இனக்குரோதமானவை என்ற வகையறாவுக்குள் உள்ளடங்குவதாக இருந்திருக்கலாம். அதுவேறு விடயம். ஆனால், அவர் ஏதோ ஒரு அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றார் என்பதை மறந்து விட முடியாது. அவரது விடுதலைக்காக தார்மீகமான அடிப்படையில் போராட வேண்டும். இந்தக் கைது சட்டப்படி நிகழ்ந்திருக்கின்றது என்பதால் இந்த விடயத்தை சட்டப்படியே அணுக வேண்டும். இது சிறுபான்மையினரின் பொறுமையைச் சோதிக்கும் காலம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது. அதைவிடுத்து சட்டத்தை கையில் எடுத்தால், இனவாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விடும்.

மிகப் பெரிய கேள்வி
அது ஒருபுறமிருக்க, இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இனவாதம் மற்றும் குரோதப்பேச்சு போன்ற காரணங்களுக்காக இவ்விரு கைதுகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஏதோ ஒரு அடிப்படையில் சட்டத்தின் ஆட்சி கண்ணுக்கு புலப்படும் விதத்தில் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், இவ்விடத்தில் ஒரு கேள்வி எழுகின்றது. அதாவது,சிவில் உடை தரித்த இரண்டு பிரஜைகளை மிகவும் இலாவகமாக கைது செய்து சிறையில் அடைக்கின்ற பொலிஸார் இதற்கு முன்னர் இடம்பெற்ற பெரிய இனவாத சம்பவங்களுடன் தொடர்புபட்ட காவியுடை தாரிகளை ஏன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை? என்பதே அக்கேள்வியாகும். ஒருவேளை, இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டம் இப்போதுதான் தன் கடமையைச் செய்யத் தொடங்குகின்றதா என்பது அதன் உப கேள்வியாக இருக்கின்றது.
தம்புள்ளை பள்ளிவாசல் தொடங்கி, அளுத்கம கலவரம் வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான எல்லாவிதமான இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கெடுக்கின்ற பௌத்த துறவியான கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சட்டம் இவ்வாறான ஒரு கடமையை செய்யத் தவறிவிட்டது. இவர் இன்னும் பகிரங்கமாக இனக்குரோத கருத்துக்களை சொல்கின்றார், முஸ்லிம்களை விரட்டியடிக்கும் தோரணையில் பேசுகின்றார். 

வெளிநாடுகளுக்கு எவ்வித தடையுமின்றி போய் வருகின்றார். ஆனால், பிரியசாந்தை கைது செய்தது போல்,றாசிக்கை கைது செய்ததுபோல் அந்த தேரரை கைது செய்ய முடியாத நிலையில் சட்டம் இருக்கின்றது.
இதேநேரம், அம்பாறை மாணிக்கமடு தமிழ்க் கிராமத்தில் அடாத்தாக புத்தர் சிலை வைத்த பிக்குகள் மற்றும் இனவாதிகள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதபடி பொலிஸாரின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன. இதுபோல தமிழர், முஸ்லிம்கள் வாழும் இடங்களில் அத்துமீறி குடியேறுவோர்,காணிகளை சூறையாடுவோர் மற்றும் வலுக்கட்டாயமாக குடியேறும் சிங்களவர்களை எல்லாம் சட்டத்தின் துணை கொண்டு தடுக்க முடியாத நிலைதான் இன்றும் இருக்கின்றது. நல்லாட்சியிலும் ஏனிந்த நிலைமை?
குறிப்பாக, மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி சுமணரத்ன தேரர் அண்மையில் நடந்து கொண்ட விதம் அருவெறுப்பானதாகவும் சில வேளைகளில் ஆத்திரமூட்டுவதாகவும் இருக்கின்றது. ஆனால் தமிழர்களும் முஸ்லிம்களும் பொறுமை காத்து வருகின்றனர். 

பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் கச்சக்கொடி கிராம சேவகர் பிரிவில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட இந்த தேரரை, உத்தியோகபூர்வ அடிப்படையில் தடுக்க முயன்ற அரச அதிகாரிகளை மிகக் கேவலமான வார்த்தைகளால் பேசிய ஒளிப்படக் காட்சியை கண்டு சிங்களவர்களே முகம் சுழிக்கின்றனர். மிக மிக மோசமாக அவர் பேசிய வார்த்தைகள் எழுதும் தரமன்று. ஆனால் அவர் பேசும் போது அவ்விடத்திலேயே சட்டம், ஒழுங்கு அதாவது, ஒரு பொலிஸ் அதிகாரி நிற்கின்றார். பிக்குவை சமரசப்படுத்தி அழைத்துச் செல்வதை தவிர, இனக்குரோத பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவரால் இயலவில்லை.
அதற்குப் பிறகு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்க முற்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. 

அத்துடன்,பங்குடாவெளி பிரதேசத்தில் அரசமரம் இருக்கும் காணி ஒன்றுக்குள் புகுந்து அங்கு சிங்கள மக்களை குடியேற்றப் போவதாக கூறி பிடிவாதம் பிடித்துள்ளார். இதனையெல்லாம் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சிவிலியனைப் போல இவர் போன்றவர்களை கைது ஏன் சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியவில்லை என்று எழுகின்ற கேள்வியில் யாரும் குறைகாண முடியாது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இனவாத நெருக்கடிகளுக்குப் பின்னால் வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலே நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. ஆட்சிமாற்ற சதி இருப்பதாக கூறப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் முயற்சி என்றெல்லாம் கணித்துக் கூறுகின்றனர். 

சரி, ஒரு இனவாத செயற்பாட்டிற்குப் பின்னால் இத்தனை நிகழ்ச்சித்திட்டங்கள், சதிகள் இருக்குமென்றால் அதற்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க ஏன் அரசாங்கம் தயங்குகின்றது? முஸ்லிம்கள் பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்படுவது ஒருபுறமிருக்க, பிரச்சினைகளுக்கு காரணங்களை கூறிக் கொண்டிருக்கும் அரசாங்கமும் சட்டமும் எல்லோரையும் ஒரே விதமாக நோக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரணங்கள் ஒரு போதும் நியாயங்கள் ஆகாது !

- ஏ.எல். நிப்றாஸ் (வீரகேசரி 11.201.2016)
 
 
பொறுமையின் சோதனைக் காலம்.. பொறுமையின் சோதனைக் காலம்.. Reviewed by Madawala News on 11/20/2016 03:33:00 PM Rating: 5