Kidny

Kidny

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் கருத்து முற்றிலும் தவறு -ஊடகவியலாளர் முஸாதிக் அப்துல் முஜீப் -
இலங்கையைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்  குடும்பங்களின் அங்கத்தவர்கள் 32 பேர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியிருந்த கருத்து எவ்வித அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்ட கருத்தாகும் என Utv Srilanka இனையத்தள தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியரும் நவமணி பத்திரிகையின் ஊடகவியலாளருமான முஸாதிக் அப்துல் முஜீப் குறிப்பிட்டுளார். 

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நீதியமைச்சரும், புத்த சாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கூறியிருந்த கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஊடகவியலாளர் முஸாதிக் அப்துல் முஜீப் மேற்படி கூறியுள்ளார்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் பல திசைகளிலிருந்தும்  சிறுபான்மைச் சமூகங்கள் பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த இனவாத செயற்பாடுகளுக்கு கெதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற தொனியில் தனது கருத்தை வெளியிட்ட நீதியமைச்சர் விஜயதாஸ தனது உரையின் இறுதியில் இனவாத சக்திகளைத்  மேலோங்கச் செய்யும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தியிருப்பது நாசகார செயலாகும். 

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து அங்கு உயிரிழந்ததாக கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஆப்கானிஸ்தானில் அரச சார்பற்ற அமைப்பில் சேவை செய்த இலங்கையை சேர்ந்த ஒருவர் அங்கிருந்து ஐ.எஸ் அமைப்பின் மீது ஈர்ப்புக் கொண்டு தனது உறவினர்கள் குடும்பங்கள் மூன்றுடன் சிரியாவுக்கு சென்றுள்ளார். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

எனினும் ஐ.எஸ் அமைப்பினர் இலங்கைக்கு வந்து இங்குள்ளவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக ஒரு போதும் செய்தி வெளியாகவில்லை. இவ்வாறு இருக்கையில்....

இலங்கையில் சிங்கள இனவாதத்திற்கு எதிராக உரையை ஆரம்பித்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சட்டம் சகலருக்கும் பொதுவானது என்றும் பௌத்த பிக்குகள் மதகுருமார்கள் என்பதற்காக சட்டத்தில் யாருக்கும் சலுகைகள் கிடையாது என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும்  சட்டம் ஒரேவிதமாக செயற்படும் என்றும் கூறியிருந்த கருத்து சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற்ற அதேவேளையில் தனது உரையின் இறுதியில் இலங்கை முஸ்லிம்களை  ஐ.எஸ்.ஐ.எஸ.; அமைப்போடு தொடர்பு படுத்தி அமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்து சிறுபான்மை மத்தியில் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்நாட்டு முஸ்லிம்களில் சிலர் ஐஎஸ்ஐஎஸ்; அமைப்பில்  இணைந்திருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகைதருவதாக கூறியிருந்த கருத்து எவ்வித அடிப்படை ஆதாரங்களற்றவையாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் அரசாங்கத்தில் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தகுந்த ஆதாரங்களோடு இவர் தனது கருத்தை முன்வைத்திருக்க வேண்டும். அமைச்சரின் ஆதாரமற்ற இந்தத் கூற்று, தெற்கில் எரிய ஆரம்பித்திருக்கின்ற  இனவாத நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் செயலாகவே அமைச்சரின் இந்தக் கருத்து அமைகின்றது.

புலனாய்வு நிறுவனங்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து நான்கு பேர் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக வெளிவந்த செய்திகள் கூட இன்னும் சரியாக ஊர்ஜிதம் செய்யப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லாட்சியின் பொறுப்புள்ள அமைச்சர் ஒருவர் வெறும் இப்படி ஆதாரமற்ற கருத்துக்களை கூறி மக்கள் மனதில் இடம்பிடித்திட முடியாது. அது மட்டுமின்றி  பாராளுமன்றத்தில் ஒரு சிறுபான்மை சமூகத்தின் மீது இப்படி ஆதாரமற்ற, அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்  செயலாகும் என தெரிவித்தார்.

-பாத்திமா ஜுமானா

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் கருத்து முற்றிலும் தவறு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் கருத்து முற்றிலும் தவறு Reviewed by Madawala News on 11/22/2016 07:10:00 PM Rating: 5