Ad Space Available here

ஒரு நோயாளி எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்பதனைக் கணிப்பதற்கு முடியாதவர்கள் வைத்தியத்துறையில் இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்இன்றைய நாட்களில் சமூக வலைத் தளங்களில் மட்டுமல்லாது பல ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ள மடுவத்து ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பற்றிய எனது நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன். பல பேருடைய பங்களிப்புடன் மிகவும் கரிசனையுடன் பலகோடிகளைக் கொட்டி அபிவிருத்தி செய்யப்பட்ட ஓரிடம், கடந்த இருபது வருட காலத்தில் பலப்பல பிரச்சினைகளை சந்தித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அங்கு அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பரிதாபத்துக்குரிய இரண்டு மரணங்கள் தொடர்பான அலசல்கள், குற்றச் சாட்டுக்கள், அவற்றுக்கான தன்னிலை விளக்கங்கள் எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் காணக் கிடைத்தன. மருத்துவத் துறையைச் சார்ந்தவன் என்ற முறையிலும் மருத்துவ நிர்வாகத்திலும், பொது நிர்வாகத்திலும் தேர்ச்சியும், அனுபவமும் பெற்றவன் மட்டுமல்லாது, எமது நாட்டின் நிர்வாக முறைமைகளை முழுவதுமாக அறிந்தவன், அதன் விளைவுகளை அறுவடை செய்தவன் என்ற முறையிலும் எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகின்றேன்.

இந்த வைத்தியசாலையில் நடந்த மரணங்கள் தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகி என்ற முறையில் டாக்டர் . ரஹுமான் கொடுக்க முனைந்துள்ள விளக்கங்கள் உண்மையில் இது தொடர்பான விசாரணை பக்கச் சார்பற்ற முறையில் நடந்து முடிந்த பின்னரே கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். உடனடியாக நிர்வாகம் எந்த விதமான முடிவுக்கும் வர முடியாது. மரணித்தவர்களது சொந்தங்கள் குற்றம் சாட்டும் பொழுது, முழுவதும் தன்னுடைய ஆளணி சொல்வதை மட்டும் நம்பி விளக்கமளிப்பது ஒரு சரியான நடைமுறையன்று.

எமது வைத்தியசாலைகளில் குறைபாடுகள் உள்ளன என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுதுதான், அதற்கான தீர்வினைப் பெறமுடியும். எங்களது நிறுவனங்களில் தியாகத்துடன் கூடிய ஈடுபாட்டினைக் காண்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது டாக்டர் ரகுமானுக்குப் புரியாத ஒன்றல்ல. ஒருகாலம் இருந்தது, மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஆளணி இருந்தது, ஆகவே இருந்தவர்கள் தங்களைத் தியாகம் செய்து வேலைகளில் ஈடுபட்டார்கள்.

அந்தக் காலத்திலும் சில சுய நலமிகள் இல்லாமலில்லை. 1986ம் ஆண்டு நான் என்னுடைய திருமணத்துக்கு விடுமுறை எடுப்பதற்குக் கூட என்னுடன் வேலை செய்த ஒருவர் ஒத்துழைக்கவில்லை. அதன் காரணமாக எனது முதலிரவு வேளையில் ஒரு தாயின் குழந்தைப் பேறுக்காக அன்றிரவு முழுவதும் அந்தத் தாயுடனேயே கழிக்க வேண்டியிருந்தது. இது சரித்திரம்.

இன்றைய கால கட்டத்தில் இன்னொருவர் மேல் தங்களது பொறுப்பினைத் திணிக்கின்ற ஒரு பரிதாப நிலையை நாம் பார்க்கின்றோம். கர்ப்பிணித் தாய் மரணமானாலும் சரிதான், டெங்கு நோய் மரணமானாலும் சரிதான், தவிர்க்க முடியாத மரணமானால் நோயாளியின் சொந்தங்கள் பார்ப்பது அவர்கள் நாடி வந்த நிறுவனத்தின் ஈடுபாட்டையும் முயற்சியையுமே.

ஒரு நோயாளி எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்பதனைக் கணிப்பதற்கு முடியாதவர்கள் வைத்தியத் துறையில் இருப்பதற்குத் தகுதியற்றவர்கள். அனுபவப்பட்டவர்கள் இல்லையென்றால், துறைசார் நிபுணர்கள் இருக்கின்றார்கள்.

இப்பொழுதெல்லாம் அந்த நிபுணர்களுக்கு நேரமில்லை, ஒரு நாளைக்கு ஒரே ஒரு தடவை காலையில் வைத்தியசாலைக்கு வந்து பார்வையிட்ட பின்னர் பிரத்தியேக சனலிங் நிலையங்களுக்குப் பறப்பதிலேயே அவர்கள் காலங்கள் கழிகின்றன. இதற்கு அவர்களை மட்டும் குறைகூற முடியாது. நாட்டில் system அப்படித்தான் இருக்கிறது. நான் குடியிருக்கும் கனடாவில் எந்த ஒரு தனி நபரும் வைத்திய நிபுணர்களை அணுக முடியாது. தங்களது குடும்ப வைத்தியரை தொடர்பு கொண்டு, அவர் முடிவெடுத்து , இந்த நோய்க்கு இந்த நிபுணரை அணுக வேண்டும் என்று, அவரே பதிவு செய்து அதன் பின் குறிப்பிட்ட திகதியில் நிபுணர் பார்வையிடுவார்.

எமது நாட்டில் ஒரு சிறு தடுமல் என்றாலும் நிபுணர். பிள்ளை சிறிது செருமினாலும் நிபுணர், கர்ப்பிணித் தாய்மார்களை நிபுணர்கள் பார்வையிடவில்லை என்றால், வைத்தியசாலையில் அனுமதிக்கவே கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறார்களாம். ஒரு காலத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த நாம், இன்று சாதாரண வைத்தியர் கூட கையாளக் கூடாது என்று கட்டளை இடப் பட்டிருக்கிறோம். இதில் பரிதாபம் என்னவென்றால், இந்த நிபுணர்கள் பணத்தை மட்டும் சேகரித்துக் கொள்கின்றார்கள், பிரசவம் பார்ப்பது என்னவோ மருத்துவ மாதுக்கள் தான். ஏதாவது பிரச்சினை என்றால் மட்டும் நிபுணரை வரவழைப்பார்கள். அதுவும் HO, SHO, RO போன்றோருக்கு முடியாவிட்டால். அப்பொழுதும் நிபுணர் விடுமுறையிலோ அல்லது தொடர்பு கொள்ள முடியாத தூரத்திலோ இல்லாதிருக்க வேண்டும். அதுவரைக்கும் தாய் மாரின் ஆயிரக் கணக்கான ரூபாய்களை அந்த நிபுணர் சுருட்டி இருப்பார். ஏதாவது பிழைத்துப் போனால் இந்த கனிஷ்ட வைத்தியர்கள் அவர்களை நன்றாகவே பாதுகாப்பார்கள்.

எமது சமுதாயமும் திருந்த வேண்டும். இதனைத் தட்டிக் கேட்க வேண்டும். தேவையில்லாத விடயங்களுக்கெல்லாம் நிபுணர்களை அணுகக் கூடாது, அவர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது. வைத்திய நிபுணர் ஒருவரை இரவு இரண்டு மணிக்குக் கூட பிரத்தியேகமாக சந்திக்கக் கூடிய ஒரு நாடு எமது நாடு. இராப்பகலாகப் பறக்கிறார்கள். ஒருவிதமான monopoly எமது நாட்டில் இருக்கிறது.

இதை விட வைத்திய வியாபாரிகளும் நிறைந்து விட்டார்கள். அவர்களுக்கென ஒவ்வொரு channelling சென்டர். அவர்களுக்கென ஒவ்வொரு pharmacy. எல்லாமே வியாபாரமாய்ப் போன ஒரு கால கட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

அந்தப் பிள்ளையை உங்களால் காப்பாற்ற முடியாது போனாலும், உங்களது ஈடுபாட்டுடன் கூடிய முயற்சியை அவர்கள் கண்களால் கண்டிருப்பார் களேயானால் உங்களுடன் அப்படி அவர்கள் முரண்பட மாட்டார்களே என்பதுதான் எனது கருத்து.

எனது சொந்த அனுபவத்தில் பல சிரமமான நோயாளர்களை நான் கையாண்டுள்ளேன். பலர் உயிர் பிழைத்தார்கள், சிலர் உயிர் நீத்தார்கள். இருந்தும் நாங்கள் கவனக் குறைவாய் இருந்தோம் என்று எவரும் குற்றம் சுமத்தவில்லை. அப்படி குற்றம் சுமத்தினாலும் அதனை நிர்வாகம் இன்றைய கால கட்டத்தில் தனக்கெதிரான ஒன்றாக எடுத்துக் கொள்ளவும் கூடாது.

ஒரு காலம் இருந்தது, நிர்வாகமும் நாமே, சேவை வழங்குனரும் நாமே, எல்லாமே எம் தலையில். இப்பொழுதெல்லாம் திரும்பிய இடமெல்லாம் நிறைந்து நிற்கின்ற வைத்தியர் பட்டாளத்தின் நடுவே நாம் கவனக் குறைவாக இருக்கின்றோம் என்ற பெயர் வர அனுமதிக்கக் கூடாது.

பக்கச் சார்பற்ற விசாரணையை நிர்வாகம் நடாத்த வேண்டும், முடிவினைப் பகிரங்கப் படுத்த வேண்டும், யார்மீது தவறென்று காண வேண்டும், அதனைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இதனை case auditing என்பார்கள். கர்ப்பிணித் தாய் மரணம் போன்று கையாள வேண்டிய விடயம் இது.

இதை விடுத்து யாரைக் காப்பாற்றுவதற்கு நாம் தன்னிலை விளக்கமளிக்க வருகின்றோம். இந்த வைத்திய நிபுணர்கள் உண்மையிலேயே தங்கள் மனச் சாட்சியத்தின் மீது கைவைத்துச் சொல்ல வேண்டும், நீங்கள் உண்மையிலேயே சரியான முறையில் இயங்குகின்றீர்களா? உங்களின் கடமை என்ன? நீங்கள் எதற்குக் கற்றுள்ளீர்கள்? சாதாரண காய்ச்சலுக்கும், தடுமலுக்கும் மருந்து கொடுப்பதற்காகவா? எந்த நோயாளி யானாலும் பார்வையிட நேரம் காலம் பாராமல் அலைகின்றீர்களே, உங்களது சொந்த நோயாளர்கள், உங்களை நாடி வந்து வைத்தியசாலை விடுதிகளில் உயிர் விடுகின்றார்களே, உங்களுக்கு மனச் சாட்சியில்லை? நீங்கள் ஒரு முறையாவது பார்வையிட்டிருந்தால் அந்த உயிர் காப்பாற்றப் பட்டிருக்க லாம் அல்லவா?

விடுதியில் இருந்த வைத்தியன் அனுபவக் குறைவுள்ளவனாக இருக்க வாய்ப்புண்டு. அதற்காகத்தானே உங்களை விசட நிபுணர்களாக நியமிக்கின்றார்கள். நீங்கள் இராப்பகலாக channelling இல் அலைந்து திரிய அனுபவம் குறைந்த இளம் வைத்தியர்கள் உங்கள் நோயாளரைப் பராமரிக்க வேண்டும், நீங்கள் மக்களது பணத்தைச் சுருட்டிக் கொண்டு அந்த வைத்தியசாலையையும், இளம் வைத்தியரையும், நிர்வாகத்தையும் நடுச் சந்தியில் நிறுத்த வேண்டுமா? உங்களால் கூட ஆறு நாட்களாக அந்தக் குழந்தை டெங்கு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளது என்பதனைக் கண்டு பிடிக்க முடியாது போய் விட்டது என்று சொன்னால் வெட்கக் கேடு.

நீங்கள் நாட் கணக்கில் வேலைக்கு வரவில்லை என்று சொன்னால், அது நிர்வாகத்தின் முறை கேடு. இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் காய்ச்சல் வந்து மூன்றே நாளில் சுகமாக வில்லையானால், அதுவும் தாங்க முடியாத உடல் சோர்வுடனும், உடல் வலியுடனும் இருந்தால், அது பரிசோதனைகளில் தென்படாவிட்டாலும் டெங்கு வாக இருக்கலாம் என்ற பாலர் பாடத்தை இந்த வைத்தியர்களுக்கு கற்பியுங்கள்.

அத்துடன் டெங்கு நோய்க்கு நாம் செய்யும் சிகிட்சை வெறுமனே உடலின் நீரிழப்பை ஈடு செய்வது மாத்திரமே, அத்துடன் ஒரு நாளைக்கு பல தடவைகளில் platelet எண்ணிக்கையை கண்காணித்து வருவதே என்பதனையும் சொல்லி வையுங்கள். இவைகளுக்கு விசேட நிபுணத்துவம் தேவையில்லை.

ஆக, எல்லோரது கவனக் குறைவாலும் ஒரு தவறு நடந்த பின், அதனைத் தவறு என்று ஏற்றுக் கொள்கின்ற நற்குணம் வராத வரை முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இனிமேலாவது இன்னுமொரு பெறுமதி மிக்க உயிர்கள் காவு கொள்ளப் படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு எல்லோரும் முயற்சிக்க வேண்டும். வெறுமனே ஓரிடத்தில் இருந்த நிறுவனத்தை நிர்மூலம் செய்து எல்லாம் நாங்களே என்று பாரமெடுத்து கொண்டவர்கள் அதீத கவனத்துடன் காரியமாற்ற வேண்டாமா?


ஒரு நோயாளி எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்பதனைக் கணிப்பதற்கு முடியாதவர்கள் வைத்தியத்துறையில் இருப்பதற்குத் தகுதியற்றவர்கள் ஒரு நோயாளி எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்பதனைக் கணிப்பதற்கு முடியாதவர்கள் வைத்தியத்துறையில் இருப்பதற்குத் தகுதியற்றவர்கள் Reviewed by Madawala News on 11/18/2016 03:29:00 PM Rating: 5