Free Space

இலங்கையில் முதல்த்தர தொழில்நுட்ப பட்டதாரிகளை உருவாக்குவதே தென்கிழக்கு பல்கலையின் நோக்கம் ...


-எம்.வை.அமீர் -

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 6 வது பீடமான, தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் 5 ஆம் திகதி புதிதாக தனது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், புதிய தொழில்நுட்ப பீடம் தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு, 2016-11-29 ஆம் திகதி பல்கலைக்கழக கூட்ட மண்டபத்தில் தொழில்நுட்ப பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.எம்.தாரீக் தலைமையில் இடம்பெற்றது.

இப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டார். இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த பீடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இப்பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்துள்ள பெருமை என்றும், தற்காலத்துக்குப் மிகவும் உவந்த இப்பீடத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்ப பட்டதாரிகளை உருவாக்க முடியும் என்றும் இங்கு படித்து வெளியேறும் பட்டதாரிகள் அவர்களது கற்கை நெறிகளின்போதே தொழில்நுட்பம் சார்ந்த களப்பயணங்களில் ஈடுபடுத்தப்படவுள்ளதால் பட்டம் பெற்று வெளியேறும்போதே அவர்களுக்கான தொழில்களை பெறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத்தெரிவித்த உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், ஏனைய சில பல்கலைக்கழகங்களில் சில துறைகளுக்கு குறித்த பல்கலைக்கழகத்தைக் குறிப்பிடுவதுபோல் தொழில்நுட்ப பீடம் என்றால் அது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற உயர் ஸ்தானத்துக்கு இப்பீடத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் இதேபோன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத்தெரிவித்த பதில் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.எம்.தாரீக், புதிதாக தொழில்நுட்ப பீடத்துக்கு 160 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இதில் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு 75 மாணவர்களும் உயிரியல் முறைமைகள் மற்றும் தொழில்நுட்பவியல் துறைக்கு 85 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப பீடத்தின் உட்கட்டமைப்புக்கு 170 மில்லியனும் கட்டிட நிர்மானங்களில் பீடத்தின் புதிய கட்டிடங்களுக்காக 450 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு  மேலதிகமாக மாணவர் விடுதிகளும்  சம்மாந்துறை மல்வத்தையில் பண்ணை ஒன்று அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இப்பீடத்தில் 4 வருடங்களைக்கொண்ட கற்கைநெறிகள் நடைபெறவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதனோடு தொடர்புபட்ட அனைத்து உயர் கற்கைநெறிகளும் இடம்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்வின்போது புதிய பீடத்தின் விரிவுரயாலர்களான  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.என்.எம்.முபாறக், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செவ்வந்தி கமகே. சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எல்.அப்துல் ஹலிம், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி யு.எல்.அப்துல் மஜீட்,  விரிவுரையாளர் எம்.ஜெ.அஹமட் சபானி, பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் ஏ.ஆர்.எம்.சுல்பி ஆகியோரும் கலந்துகொண்டு புதிய பீடம் தொடர்பான கருத்துக்களையும் விளக்கங்களையும் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் ஒருவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருக்கும் ஊடக கற்கைநெறி ஆரம்பிக்கப்படுமா? என உபவேந்தரிடம் வினவியபோது எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அதற்காக மாணவர்களை உள்வாங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் முதல்த்தர தொழில்நுட்ப பட்டதாரிகளை உருவாக்குவதே தென்கிழக்கு பல்கலையின் நோக்கம் ...  இலங்கையில் முதல்த்தர தொழில்நுட்ப பட்டதாரிகளை உருவாக்குவதே தென்கிழக்கு பல்கலையின் நோக்கம் ... Reviewed by Madawala News on 11/29/2016 01:43:00 PM Rating: 5