Ad Space Available here

நெருப்புக்கு ஏது எல்லைக்கோடு..?- முஹம்மது மஸாஹிம்

இன்றைய நாட்களில் அதிக சூடுபிடித்துள்ள இஸ்ரேல் நெருப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்களைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டுரை வரையப்படுகின்றது.

சிலர் இஸ்ரேலுக்கு இது தேவைதான் என்றும் இன்னும் சிலர் பாவம் இஸ்ரேல் என்றும் பதிவுகளை இட்டு தங்கள் தரப்பு நியாயங்களை நிறூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆம்..

எம்மைப் படைத்து பரிபாலிக்கும் இரட்சகனான அல்லாஹ், முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் எமது வாழ்க்கையின் சகல தருணங்களையும் அல்குர்ஆனிலும், நபிகளாரின் அழகிய முன்மாதிரிகளைக் கொண்டும் எமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளான்.

ஆம்.. இஸ்ரேல் உலகிற்கு என்ன செய்தது..? முஸ்லிம்களுக்கு என்ன செய்தது..?

உலகிற்கு மிக அற்புதமான பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும், உற்பத்திகளையும் வழங்கி மனித குலத்தின் வாழ்க்கைத் தரத்தை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டுவந்த சேர்த்த ஒரு முக்கிய பங்காளி இஸ்ரேல் ஆகும்.
அதற்கு அவர்களது வணிக நோக்கு மற்றும் உலக ஆதிக்கம் தொடர்பான காரணங்கள் பல கூறப்பட்டாலும், இஸ்ரேலின் உற்பத்திகளை நூறுவீதம் புறக்கணித்த மக்கள் சிலரையே எம்மால் அடையாளப்படுத்த முடியும்.
எனவே பொதுவாக நோக்கும்போது உலகிற்கு அவர்களால் விளைந்த நன்மைகளே அதிகம். ஆனால், முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்கள்..?


பலஸ்தீன மண்ணிலுள்ள முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவும், நபியவர்களின் விண்ணுலக யாத்திரையுடனும் தொடர்புபட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைத்துல் முகத்திஸ் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் அங்குள்ள முஸ்லிம் உறவுகள் மீதான அத்துமீறல்களும் உலகில் இஸ்லாத்தை ஆழமாக நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிம்களின் இதயத்தின் மீது விழும் மரண அடிகள்.

எனவே, அதுவும் அதனை மீட்பதற்காக போராடும் முஸ்லிம் சமூகமும் தாக்கப்படும்போது, குழுந்தை பெண்கள் என்ற எந்த வித்தியாசமுமின்றி இரத்தமும், சதையும், கண்ணீருமாக உருக்குழைத்து போட்டபோது - ஏதோ பட்டாசு வேடிக்கை போன்று புதினம்பார்த்த இஸ்ரேல் மக்களிடம் மதத்தை விடுங்கள், மனிதாபிமானமாவது கொஞ்சம் மிச்சமிருக்க கூடாதா..? என்றே உலகமே எதிர்பார்த்தது.

அந்த ராட்சசர்களுக்கு எதிராக ஒரு பலமான பதிலடி கொடுக்க முடியாமல் முஸ்லிம் சாம்ராஜ்ஜியங்கள் மௌனித்தபோது தொலைவிலிருந்த ஈமானிய உணர்வுள்ள முஸ்லிம்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நோன்புகளையும் உலகெங்குமிருந்து ஆயுதமாக்கி இஸ்ரேலின் அழிவுக்காக சாபமிட்டார்கள்.
ஆம்.. அவர்கள் எதிர்பார்த்து கிடந்த அந்த அழிவு ஆரம்பமாகிவிட்டது என்றே இந்த நெருப்புக்கு அவர்கள் வரைவிலக்கணம் செய்வதில் என்ன தவறு இருக்கின்றது..? என்பது சிலரின் வாதம்.

பின்வரும் இறைவசனத்தில் பள்ளிவாயல்களை பாழாக்க முயல்பவனுக்கு இவ்வுலகிலும் இழிவுதான் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பது அவர்களின் வாதத்தை ஊர்ஜிதப்படுத்துவது போன்றே தோன்றுகின்றது.
“ இன்னும்,  அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 2:114 )”
இருப்பினும், நாங்கள் நடுநிலையான சமூகமாக எதையும் இரண்டுபக்கமும் அவதானிக்க கூடியவர்களாகவும் கருத்துச் சொல்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

எந்த இஸ்ரேலிய மக்கள் அக்கிரமங்களை வேடிக்கை பார்த்தார்களோ, அதே இஸ்ரேலில் இருந்து பல யூத குருமார்களும், தாய்மார்களும் கூட பலஸ்தீன் அத்துமீறல்களுக்கு எதிராக குரல்கொடுத்தே இருக்கின்றார்கள் என்பதையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. இப்பொழுது கீழுள்ள இறை வசனத்தைக் கவனியுங்கள்.


“மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 60:8 )


ஆம்.. நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்டிறைச்சியில் நஞ்சு கலந்ததும் ஒரு யூதப் பெண்தான். நபி (ஸல்) அவர்களது போர்க்கவசத்தை அடகு வைத்துக் கொண்டு வாற்கோதுமை கொடுத்துதவியதும் ஒரு யூதன்தான் என்பது வரலாறு.
எனவே, உலகில் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் - அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை இறங்கியே தீரும் என அதை அவர்கள் உணர்ந்து முஸ்லிம்கள் மீதான எதிர்கால தாக்குதல்களை ஓரளவுக்கேனும் தணித்துக் கொள்ள இந்த நெருப்பு அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வாய்ப்பிருந்தால், அதனை நாங்கள் தட்டிக் கழித்து “உங்கள் கை சுத்தம்.. வேண்டிதை செய்யுங்கள்.. இந்த இயற்கை அனர்த்தம் எல்லாம் சும்மா.. உலக வழமைதான்..” என்று மனம் மாற வாய்ப்புள்ளவர்களையும் நாங்கள் மாறவிடாமல் அறிவுரை கொடுக்க வேண்டாம்.


ஆனாலும், அத்துமீறல் செய்தோரின் அக்கிரமங்களை எதிர்த்துக் குரல்கொடுத்த இஸ்ரேலின் நல் உள்ளங்களுக்காகவேணும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு மனிதாபிமானத்தோடு அவர்களை காப்பாற்ற எம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்ய வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

இந்தியாவின் வெள்ள அனர்த்தத்தின்போது, எப்படி ஒரு பாபர் மசூதி இடித்த நாளில், அதே இனத்தை சேர்ந்த இந்துக்கள் எமது பள்ளிவாயல்களில் தங்கவைக்கப்பட்டு அழகான முறையில் உபசரிக்கப்பட்டு எமது நற்குணங்களின்பால், மற்றவர்கள் கவரப்பட்டார்களோ – அதோபோன்ற ஒரு சூழ்நிலைதான் இப்போது இஸ்ரேலியர்களுக்கும் என்பதை உணர்ந்து, எமது நற்குணங்களை உலகிற்கு பறைசாற்ற இதையொரு சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இஸ்ரேலில் உள்ளவர்கள் திருந்துகின்றார்களோ இல்லயோ, உலகில் இஸ்லாத்தை விமர்சிக்கும் பலரை நாம் செய்யப் போகும் இந்த மனிதாபிமான உதவிகளும், எமது ஆராக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும்தான் - ஆபத்தென்றால், எதிரிக்கும் உதவும் மனப்பக்குவத்தில் வளர்ந்த ஒரு ஆச்சரியமிக்க சமூகமாக எம்மை உலகிற்கு அடையாளப் படுத்தப் போகின்றது.

இஸ்ரேலுக்கு வேண்டுமானால் எல்லைக் கோடு போடலாம். நெருப்புக்கு எப்படி நாங்கள் எல்லைக்கோடு போடுவது..? எனவே அடுத்த வீட்டில் தீப்பிடித்தால், எதிரியாய் இருந்தாலும் அது அவர்களுக்குத்தானே என்று எப்படி எங்களால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாதோ – அப்படித்தான் இந்த அனர்த்தமும் என்பதை உணர்ந்து, நாங்கள் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்ததை செய்து அந்த மக்களை மீட்டெடுக்க கை கோர்ப்போம்.
அல்லாஹ் மாபெரும் கருணையாளன். அவர்கள் செய்த தவறுகளிலிருந்து படிப்பினை பெறும் வகையிலும், எமது நற்பண்புகளை உலகம் புரிந்து கொள்ளும் வகையிலும் இஸ்ரேலின் நிலமைகளை மாத்திவிடுவானாக..

ஆமீன்.

நெருப்புக்கு ஏது எல்லைக்கோடு..? நெருப்புக்கு ஏது  எல்லைக்கோடு..? Reviewed by Madawala News on 11/26/2016 02:40:00 PM Rating: 5