Ad Space Available here

யுத்தத்தினால் கல்குடா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை வரலாற்று பதிவுகளாக சமர்ப்பிக்கின்றார் மீராவோடை சுபைர்.ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

(வீடியோ).,யுத்தத்தினால் கல்குடா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை வரலாற்று பதிவுகளாக சமர்ப்பிக்கின்றார் மீராவோடை சுபைர்..
வீடியோ சுபைரின் கருத்து இரண்டு முன்னுரை கவிதைகளும்:-மட்டக்களப்பு கல்குடா தொகுதி முஸ்லிம் சமூகம் கடந்த 1985 தொடக்கம் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின் பொழுது தமிழீழ விடுதலை புலிகளினால் எதிர் நோக்கிய இனச்சுத்திகரிப்பு மற்றும் விவசாய, பொருளதார அழிப்பு தொடர்பான தனது அனுபவத்தினை ஓட்டமாவடி மீராவோடையை சேர்ந்த சுபைபர் எதிர் சமூகத்தின் வரலாற்று பதிவிற்காக நெஞ்சிலிருந்து எனும் சிறுகதையாக தயாரித்து அதற்கு மேலும் உரம் சேர்க்கும் வகையில் தனது கருத்தினையும் முன்னுரையாக இரண்டு கவிதைகளையும் வீடியோ காணொளியாக இங்கே சமர்ப்பிக்கின்றார்.
சிறுகதை நெஞ்சிலிருந்து…


இது நடந்து இருபத்தாறு வருஷம் இன்னும் அந்தச்சம்பவம் நெஞ்சுக்குள் தீயாய்.... ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டு திகதி நினைவில்லை... எமதூர் எங்கும் வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்த காலம் நாங்களெல்லாம் கமவட்டவான் எனும் இடத்திலுள்ள நெற்காணிக்குள் அறுவடை செய்திருந்த உப்பட்டிகளை கட்டுவதும், சூடு வைப்பதுமாக சுறுசுறுப்பாய் வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஏழு சூடு வைத்தாகிவிட்டது இன்னும் ஒரு சூடு வைத்தால் நாளையிலிருந்து சூடு அடிப்பம் என்று நானும் வாப்பாவும் பேசிக் கொண்டோம்.


எங்கள் வயலுக்கு மேற்குப்பக்கமாக வெடிச்சத்தம் கேட்கிறது. வேலை செய்தவர்கள் முறுத்தானைப் பாலத்திற்குப் பக்கத்தில்தான் வெடிச்சத்தம் என்று பேசிக் கொள்கிறார்கள். சில நிமிடங்கள் கழித்திருக்கும் கெதியா ஓடுங்க, ஓடுங்க என்று சொல்லிக் கொண்டு பலபேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் வாப்பாவும், வேலை செய்தவர்களும் செய்வதறியாது நின்று கொண்டிருக்கிறோம். அப்போது எங்கள் ஆடுகளை மேய்ப்பதற்கு ஒருவரை கூலிக்கு வைத்திருந்தோம். அவர் சின்னதுரை எங்களை நோக்கி ஓடி வருகிறார். வந்தவர் மூச்சிறைக்க
”போடியார் வாப்பாவை கூட்டிக்கிட்டு ஊருக்க ஓடுங்க இயக்கம் வந்து முஸ்லிம் ஆட்களை துரத்தி, துரத்தி சுடுறாங்க” என்று சொல்லி முடித்தார்.


இனியோசிக்க நேரமில்லை. வாப்பாவையும் கூட்டிக் கொண்டு நானும் ஓடத் தொடங்கினேன். வேலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களை விட்டு விட்டு எங்களுக்கு முன்னால் ஓடியவர்கள் மறைந்து விட்டார்கள். நானும் வாப்பாவும் தான் யாரையுமே காணவில்லை சற்று தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது. அப்படியே நின்று விட்டோம். எங்கள் வயலை காவல் பார்க்கும் சீனியண்ணன். அவனுக்கு நிலைமை விளங்கியிருந்தது. அரிசி, சாமான் வாங்க ஊருக்கு போனவன் அடப்பையை தோளில் போட்டிருந்தான். அதைத் தூக்கி மறு தோளுக்கு மாற்றிக் கொண்டே சொன்னான்.
“போடியார் வார வழியில நிலமை மோசமாய் இரிக்கி, வகுளாவளை சந்தியில இயக்க காரனுகள் முஸ்லிம் ஆட்களை பிடிச்சு கைகளைக் கட்டி இருப்பாட்டி வெச்சிருக்கானுகள். நீங்க இப்ப போக வேண்டாம்.

இங்க ஒரு இடத்தில பார்த்து மறைஞ்சுக்கிட்டு இரிங்க. நான் போய் சாமான வெச்சுப்போட்டு மனிசி, பிள்ளைகளை நம்மட வாடியில கொண்டு வந்து விட்டுட்டு அவகளை சூட்டைக் காவல் பாக்க சொல்லிப்போட்டு ‘சைட் அடியன்’ னை எடுத்திக்கிட்டு வாறன். நீங்க நிற்கிற இடத்துக்கு நேர ஒரு சீலத்துண்ட கட்டி வையுங்க. நேரம் செக்கலாகிட்டு போகுது” என்று சொல்லி விட்டு போய்விட்டான். எனது பெனியனைக் கழட்டி ஒரு பத்தையில் கட்டி வைத்து விட்டு நானும் வாப்பவும் காட்டுக்குள் மறைந்து ஒரு மரத்தடியில் பதுங்கி கொண்டோம்.
நேரம் போய்க் கொண்டிருந்தது

“சீனியனைக் காணவில்லை. யானையும் வார நேரம் என்ன செய்வம் வாப்பா” என்று வாப்பாவிடம் மெதுவாகக் கேட்டேன். “பயப்படாத சீனியன் நன்றி மறக்காதவன். எப்படியும் வருவான். அவனுக்கு என்ன பிரச்சினையோ, எதற்கும் தைரியமாய் இரு எப்படியாவது நம்மல அல்லாஹ் காப்பாற்றுவான்“ என்று தைரியமூட்டினார். என்னதான் சொன்னாலும் என்னை பயம் கவ்விக் கொண்டது. சுமார் மூன்று மணித்தியாலம் கழிந்து விட்டது. சற்று தூரத்தில் யானை கத்தும் சத்தம். இனி நமக்கு கடைசி நேரம்தான் என்று எண்ணிக்கொண்டு கலிமாச் சொல்லத் தொடங்கினேன். வாப்பாவின் தைரியம் எனக்கு ஆறுதலை தந்தாலும் நெஞ்சு படபட வென அடிக்கத் தொடங்கிற்று.
யாரோ செருமிக் கொண்டு நடந்து வருவது கேட்கிறது.

 “சீனியன் வாறான் போல” என்று வாப்பா மெதுவாக சொல்லிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். அவசரப்படாதீங்க வாப்பா பண்டி சுட வேற ஆட்களும் வார” என்று சொன்னவுடன் வந்தவன் ஏதோ அடையாளம் தேடுவது விளங்கிற்று. பெனியனைக் கட்டிய இடத்தில் அவன் நிற்பது மங்கிய நிலாவெளிச்சத்தில் தெரிகிறது. அது சீனிதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டோம். மெதுவாக செருமினான். வாப்பாவும் பதிலுக்கு செருமினார். அவன் எங்களை நோக்கி வந்து “போடியார்!” என்று மெதுவாக கூப்பிட்டான். “இந்தா இரிக்கம் சீனி” என்றவுடன் “சரி போடியார் நாம குறுக்கால போவம். நான் எப்பிடியும் உங்கள கொண்டு போய் சேப்பன்” என்று சொல்லியவன். எங்களை பின்னால் வரச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். தோளிலே சைட்அடியன், கச்சை மட்டும் கட்டியிருந்தான். கையில ஒரு கத்தி அவனது உடலமைப்பு மிக வைரமானது. உருவம் கறுப்பு திடகாத்திரமான ஒரு ஆம்பிள அவன்.

அவனது நடைக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.... குனிவதும், நிமிர்வதும் இப்படியே பாஞ்சான் ஓடைக்கு வந்து விட்டோம். “நான் போற இடத்தால வாங்க போடியார் கிடங்குகள் இரிக்கும், முதலைச் சனியனும் புளங்கும் பயப்படாம வாங்க” என்று ஓடைக்குள் அவன் இறங்கினான். வாப்பா “நீ போ மன சீனிக்குப்பின்னால” என்று எனக்குப் பின்னால வாப்பா. முதலையச் சொல்லாம போயிருக்கலாமே என் மனம் சொல்லிக் கொண்டது. சீனியன் கரையேறிவிட்டான்.  பயந்து பயந்து நாங்கள் கஸ்டப்பட்டு வித்தனில் ஏறிக் கொண்டோம். மீண்டும் காட்டுக்குள் புகுந்தான் சீனி. நாங்களும் தொடர்ந்தோம். அரைவாசித் தூரம் போனவுடன் சீனி திடீரென நின்றான். பின்னோக்கி வரத் தொடங்கினான். நாங்கள் அசையாமல் நின்றோம். பின்னுக்குப் போகுமாறு எங்களிடம் மெதுவாக சொன்னான். அவன் தோளில் வைத்திருந்த சைட் அடியனை கையிலெடுத்து தயாராகிக் கொண்டான்.

எங்களுக்கு எதுவும் புரியவில்லை. சுமார் பத்து நிமிடங்கள் அவ்விடத்தில் நின்றிருந்தோம். மரங்கள் உடையும் சத்தம் கேட்டது நேரம் போகப்போக சத்தம் தூரமாகிப் போனது. அப்போதுான் சீனி சொன்னான் “ஆண ரெண்டு போடியார் இனி எடுங்க நாம போவமென்று” நடக்கச் சொன்னான்.
சூரங்கொடியும் முள்ளும் எங்களை இடையிடையே பதம் பார்த்தது. இதுவொன்றும் எங்களுக்கு பெரிதாய் படவில்லை எப்படியாவது உயிர்தப்பி ஊர் போய்ச் சேர வேண்டுமென்று மனதில் உறுதியிருந்தது. மீரான்தாண்ட ஓடை வந்துவிட்டது அதையும் தாண்டி ஆணைவணங்கி வெட்டைக்கு வந்து சேர்ந்து விட்டோம். ஓடை வித்தனில் சீனியன் குந்திக் கொண்டான். “போடியார் வெத்தில ஒன்டு போட்டிட்டு போவம்” என்று சொன்னான்.

எங்களுக்கு சரியான பசியும், களைப்பும், ஓடையில் இறங்கி வாப்பாவும், நானும் முகம் கழுவி தண்ணீரை இருகைகளாலும் அள்ளிக் குடித்துக் கொண்டோம். இனி போவோம் போடியார் என்றவன் சைட்அடியனை ஒரு முறை சரிபார்த்து சரிபார்த்துக் கொண்டான். “போடியார் இந்த துண்டு மட்டும் வெட்டை ஓடித்தான் ஆத்துக்குள்ள இறங்கனும்” என்றவன் ஓடத் தொடங்கினான். வாப்பா பாவம் வயசு எழுபது வாப்பாவுக்கு பின்னால நானும் வாப்பாவின் வேகத்தில்தான் ஓட வேண்டியிருந்தது.  மாந்தறை ஆற்றுக்குள் வந்து இறங்கிவிட்டோம்.  மெதுமெதுவாகச் சத்தம் கேட்காமல் ஆற்றை தாண்டிவிட்டோம். போடியார் சீனியன் மெதுவாகப் பேசத் தொடங்கினான். சந்தியாற்றுப் பாலத்தை கடந்திட்டம் என்றால் நாம எப்படியும் போயிரளாமென்றவன் இருமல் வந்தால் சீலையால வாயப் பொத்தி இருமுங்க வேறெந்த சத்தமும் வரப்படாது என்றவன். மெல்ல மெல்ல நகரத் தொடங்கினான்.

அது தட்டுப்புல் காடு மிக அடர்த்தியாக வளர்ந்திருந்தது. குனிந்து அவன் நடக்க நாங்களும் அவனப்போல நடந்து கொண்டோம். இதற்குள்ள பண்டிக்கிள அல்லாஹ்தான் நம்மல காப்பத்தனும் வாப்பா பிரார்த்தித்துக் கொண்டார். வாப்பா பீடி குடிப்பார். இருமிவிடுவாறோ என்று எனக்கொரு பயம் பதுங்கி பதுங்கி பாலத்தருகிற்கு வந்துவிட்டோம். சுமார் நூறடியிருக்கும் படபடவென வெடிச்சத்தம் மூன்று பேரும் அவ்விடத்தில் குந்திக் கொண்டோம். சேமன் போடியார் வாடிப்பக்கம்தான் வெடில் கேட்குது என்று சீனியன் சொன்னான். எதற்கும் கொஞ்ச நேரம் இவ்விடத்த இருப்பம் என்றான்.

தவளையின் அலறல் சத்தம் கேட்குது புடையன் பிடிச்சிட்டு போல என்று சொல்லிக் கொண்டே வெத்தில போட்டுக் கொண்டான்.
மீண்டும் வெடிச்சத்தம் நாங்கள் மறைந்திருந்த பகுதியை நோக்கி சுமார் முப்பது முப்பத்தைந்து பேர் பெரும் ஆரவாரத்தோடு தமிழ் ஈழம் வாழ்க தனிநாடமைப்போம், சோனிகளை துரத்தியடிப்போம் என்று கோசம் எழுப்பியவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பனியிலும் எனக்கு வேர்க்கத் தொடங்கிற்று. வந்தவர்கள் அனைவரும் விறகெடுத்து தீமூட்டி கூதல் காயத் தொடங்கினார்கள். அவர்களது நடவடிக்கைகள் தெளிவாக பார்க்கக் கேட்கக் கூடியதாக இருந்தது. சுமார் நூறடி தூரதை்தில் நாங்கள் இருந்தோம். நுளம்புக்கடி தாங்க முடியவில்லை.

நுளம்பைக் கூட அடிக்க முடியாத கஸ்ட நிலையில் நாங்களிருந்தோம். இதுவும் அல்லாஹ்ட சோதன தானாக்கும் என்று வாப்பா முனுமுனுத்துக் கொண்டு பெருமூச்சு விடுகிறார். நான் செய்வதறியாது மௌனமாக குந்திக் கொண்டிருக்கிறேன். பெரும் ஆரவாரத்தோடு வந்தவர்கள் அமைதியாக கூதல் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே ஒரு பெண் வருகிறாள். அங்கே அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்கிறது. காதை கூர்மையாக்கி கொண்டோம். என்னத்தான் போன விசயம் வெற்றி போல அவள் கேட்கிறாள். அதில் ஒருவன் அது என்னத்த கேட்கிற பதில் சொன்னவன் அவளின் புருஷனாக இருக்க வேண்டும்.

உன்னையும் நான் கூட்டிப் போயிருக்கனும் அந்த புதினத்தை நீயும் பார்த்திருப்பாய் புணானைக்கட்டு (பொத்தானை) இரிக்கே அங்க இரிந்த சோனிகளெல்லாத்தையும் வெட்டித் தள்ளிட்டம் ஒரு குஞ்சு குறுமானையும் விடல.  இவன் தம்பி (ஒருவனை சுட்டிக்காட்டி) இவன்தான் என்னோட, இவன் சுட்டுப்போவான் நான் வெட்டித்தள்ளினேன். ஒரு வெடில் ஒரு வெட்டு ஆட்கள் குளோஸ்.

அதுக்குள்ள ஒரு புதினம் நடந்திச்சு சோனி பொம்புளைகள் கத்தின கத்துவய நீ பார்த்திருக்கனும் “என்ட அல்லா” என்ட அல்லா” என்று நக்கலாய்ச் சொன்னான். அவளால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. கலகலவெனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் நரசிம்மனப் போலதான் இருந்திருப்பீங்களாக்கும் என்று. அதற்குள் இன்னுமொருவன் இண்டைக்குத்தான் தெரியும் இப்டி இவரு வெட்டுவாரென்று சொன்னான். இதைக் கேட்டு எல்லோருமே சிரித்தார்கள்.
இனி இவ்விடத்தில் இருப்பது ஆபத்தென்று உணர்ந்தோம். சீனியன் சொன்னான். “என்னோட வாங்க போடியார்” என்று விட்டு மீண்டும் வந்த வழியே பதுங்கத் தொடங்கினான். நாங்களும் செய்வதறியாது பின்தொடர்ந்தோம். ஆற்றின் மறுகரையை அடைந்தோம்.

கரையோரமெல்லாம் காடுகள் அடர்த்தியாக மரங்கள் வளர்ந்திருந்தன அதன் ஓரத்தின் வழியாக எங்களை கூட்டிக் கொண்டு போனான். ஊரியன் வெட்டையை வந்தடைந்தோம். அங்குமிங்கும் பார்த்து விட்டு கல்லோடை வாய்க்காலுக்குள் இறங்கினான். நாங்களும் அவன் பின்னால் குனிந்து கொண்டே வெகுதூரம் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் கடந்து பள்ள வெளியைத் தாண்டி விட்டோம். ஒரு ஆத்திமரம் படர்ந்து விரிந்து நல்ல இருட்டாக இருந்தது. அவ்விடத்தில் சற்று அமர்ந்தோம். இடுப்பெல்லாம் விண்விண்னென்று வலித்துக் கொண்டிருந்தது. வாப்பாவும் வயசு போனகாலம் மிகவும் சோர்வுற்றாலும் மிக தைரியமாக இருந்தார்.


சீனியன் எழுந்தான். ”நீங்க ரெண்டு பேரும் இவ்விடத்தில் இரிங்க நான் எரிக்கலம் காட்டுப் பாலத்தடிக்குப் போய் ஒரு தரம் ரோட்டைப் பார்த்துவிட்டு வாறன் என் போனவன் சுமார் பதினைந்து நிமிடம் போய் இருக்கும் திரும்பி ஓடிவந்தான். கெதியா ஓடிவாங்க போடியார் ரோட்டைக்கடந்திட்டம் என்றால் எப்படியும் நான் உங்களை கொண்டு சேர்த்திடுவன். என்று சொல்லிக் கொண்டு இருபது வயது இளைஞனின் சுறுசுறுப்பில் மிக வேகமாக நடந்து கொண்டிருந்தான். ஓட்டமும் நடையுமாக வந்து ரோட்டைத் தாண்டிவிட்டோம்.

 கொஞ்ச தூரம் போனவுடன் சீனியனுக்கு உற்சாகம் பிறந்தது. நடையின் வேகம் குறையாமல் அவன் நடந்து கொண்டிருந்தான். வரவைகளும், வரம்புகளும், புல்லுகளும், எங்களுக்கு கடும் கஸ்டமாக இருந்தது. அவன் இதையெல்லாம் மிக லேசாகக் கடந்து போய்க் கொண்டிருந்தான். எங்களுக்கும் அவனுக்குமிடையில் நீண்ட இடைவெளி இருந்தது அவன் கொஞ்ச தூரம் போய் விட்டு நின்று திரும்பிப் பார்ப்பான். நாங்கள் அவனை நெருங்கியவுடன் மீண்டும் நடக்கத் தொடங்குவான். இடையிடையே பன்றிகளும் சத்தமிட்டுக் கொண்டு செல்லும்.


எங்களுக்கு கடும் பயமாக இருந்தாலும் சீனியன் தைரியத்தில் நாங்களும் பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தோம். பொருக்கண்ட குளத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். சீனியண்ணன் சொன்னான் “இனிப்பயமில்ல போடியார் இன்னம் கொஞ்ச தூரம் போனால் புதுவெளிப்பாலம் வந்திரும். மிச்சம் கவனமாய் கீழபார்த்து வரனும் இந்த பகுதியில நல்ல பாம்பு கூட புளங்குற பயப்படத் தேவையில்ல கபுறடியில இருக்கிற சாமி நம்மள காப்பாத்துவாரு என்று சொல்லிக் கொண்டு நடந்தான்.

 சீனியன்ட தைரியமும், உறுதியும் நம்மக்கிட்ட இல்லியே என்று என்னையே நான் நொந்து கொண்டேன்.
புது வெளிப்பாலத்தடிக்கு வந்து சேர்ந்து விட்டோம் அவ்விடத்தில் சீனியன் சைட்அடியனையும் கத்தியையும் வைத்து விட்டு வெத்திலை போடத் தொடங்கினான். ”அல்ஹம்துலில்லாஹ்” வாப்பா வானத்தை அன்னார்ந்து பார்த்து அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டார். தனது ரெட்டபக்கட்டு வாரைத் துறந்து அதற்குள் இருந்த பணத்தை எல்லாத்தையும் எடுத்து சீனியனுக்கு நன்றி கூறிவிட்டு அவன் கையில் திணித்தார்.


”இதென்னத்துக்கு போடியார்! நான் உங்கட சோத்தை எவ்வளவு திண்டிருக்கன். வேணாம்” என்று மறுத்தான். பரவாயில்லை சீனி வெச்சுக்க என்று சொல்ல அவன் அதைப் பெற்றுக் கொண்டான். அப்போது நான் சீணியண்ணே அந்த சந்தியாற்று கட்டுல வந்தவங்க, பேசினவங்க யாரு என்று கேட்டேன். அதான் போடியார் அவங்கதான் இயக்கம் அயினக்கி கதச்சவங்க இயக்கத்துல இரிக்கிற கந்தனும் பெண்சாதியும் அநியாயமா மனிஷன்ட உசிர வெட்டிக் கொண்டிருக்கானுகள் இது கடவுளுக்கு பொறுக்காது போடியார். எல்லாத்தையும் மேல இரிக்கிறவர் பார்ப்பாரு என்று வேதனையோடு சொல்லி விட்டு சைஅடியனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு போயிட்டு வாறன் சீவன் கிடந்தா சந்திப்பம் என்று சொல்லிவிட்டு அவன் போய்க் கொண்டிருந்தான். வாமன போவம் என்று வாப்பா சொல்ல திரும்பி நடந்தோம்.

“அல்லாஹூ அக்பர்” காவத்தமுனை பள்ளிவாசலில் சுபஹூக்கான பாங்கு கேட்கிறது. ஊருக்கு வந்து சேர்ந்து விட்டோம். நாங்கள் உயிரோடு வந்து சேருவோம் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. கேள்விப்பட்டதும் நண்பர்களும், உறவினர்களும் ஓடிவந்து எங்களை தழுவிக் கொண்டனர். ஆயுசு நூறென்றார்கள். சிலபேர் தொழில் போனா மசிராச்சி உசிரு இருந்தா உழைச்சுக்கலாமென்றனர். சிலபேர் வீடு வந்து சேர்ந்தோம் மையத்து வீடு போல இருந்தது. எங்கள் வீடு உம்மாவும், தங்கச்சியும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப் போய் இருந்தனர். கண்டவுடன் உம்மாவும் தங்கச்சியும் மீண்டும் அழத் தொடங்கினார்கள். நாங்கள்தான் வந்து சேர்ந்திட்டம்தானே இன்னம் ஏன் கத்துறீங்க வாப்பா அதட்டினார். நாங்கள் வருவதற்கு முன்னரே இயக்கத்தால் வயலிலுள்ளவர்களேல்லாம் கடத்திச் செல்லப்பட்ட செய்தி வந்து சேர்ந்திருந்தது.


காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் வீடுகளில் எல்லாம் மரண ஓலம். குளித்து விட்டு பள்ளிவாயல் பக்கம் போனேன். அங்கே பள்ளிவாயல் கட்டுவதற்கு ஆற்றுமண் பல இடங்களில் வாங்கி குவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்கும்பத்தில் பத்துப் பேர், பதினைந்து பேரென்று கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர். அத்தனை பேரும் நேற்றைய சம்பவம் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர். தப்பி வந்தவர்கள் சில பேர் மற்றவர்களைக் காணவில்லை உயிரோடு அவர்கள் இருப்பார்கள் இனி சந்தேகமே இப்படி பலபேரும் பலவிதமாக பேசிக் கொண்டனர். இத்தனைக்கும் பாதுகாப்பற்ற இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் ஊர் மக்கள் இருந்தனர். எல்லைப் பகுதியில் குடியிருந்த மக்கள் ஊரின் நடுப்பகுதியிலுள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.


இதற்கிடையில் ஊருக்குள் நமது சமூகத்திலும் பலபேர் இங்கே நடக்கும் செய்திகளை “வாக்கி டோக்கி” மூலம் பணத்திற்காக காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இவர்களில் சிலபேர் இணங்காணப்பட்டனர். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சில தரங்கெட்டதுகள் அவனுகள் போடும் எச்சில்களை நக்கிக் கொண்டு பட்டியல் போட்டு தகவல் பரிமாற்றத் தோடு ர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களின் பெயர்களை வழங்கிக் கொண்டிருந்தது. இப்படியான சூழ்நிலையில் சில நாட்களின் பின்னர் மஃரிப் தொழுகை தொழுது விட்டு வெளியில் வந்து நிற்கிறோம்.


முகம்மது முத்து சேர்மனைக் கடத்திட்டாங்க என்ற செய்தி பரவிற்று விசாரித்துப் பார்த்தால் விசயம் உண்மையாக இருந்தது. ஊரே அல்லோல கல்லோலம் தல பெய்த்து இனி நாம இந்த ஊரில இரிக்க ஏலாது என்று பெரும்பாலானவர்கள் இரவோடு இரவாக மூட்டை முடிச்சுக்களை கட்டி தயாராகிவிட்டனர். (இன்னும் ஒரு செய்தி இதற்குள் சொல்லியாக வேண்டும் இயக்கம் தமிழ் பேசும் மக்களுக்காகத்தான் என்று உதட்டளவில் ஒரு மாயை ஏற்படுத்தியிருந்தனர். இதை நம்பி இங்கே முக்கிய புள்ளியாக புகாரி என்றொருவனும் உமறு என்று ஒருவனும் புலியில் சேர்ந்திருந்தனர். இவர்களிருவரும் ஆட்களை கடத்தி கப்பம் பறிப்பதும் புலிக்கு வேண்டாதவர்களை கொலை செய்வதும் இவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை இவர்கள் இயக்கத்தின் விசுவாசிகளாக இருந்து கொண்டு  முஸ்லீம்களுக்கு அநியாயம் செய்து கொண்டிருந்தவர்கள்). இயக்க உறுப்பினர்களாக இருந்த சில லேபல் முஸ்லிம்களை இயக்கம் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தது.

இதில் உமறும் கொல்லப்பட்டான். புகாரி தப்பியோடி ஆமியில் சரணடைந்து விட்டான். இவனுகள் இரண்டு பேரும் செய்த அநியாயத்திற்கு அளவே இல்லை. இவனுகள் பல முக்கிய புள்ளிகளை படித்த புத்திஜீவிகளை கொலை செய்தனர். புகாரி விதானை, சரீப் அலி மாஸ்டர், வெத்திலைக்கடை அலி இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவனுகள் மரணித்தாலும் சமூகம் இவனுகளை இன்னும் மன்னிக்கவே இல்லை என்பது உண்மையாகும்.

மீண்டும் கதையை தொடருகிறேன். விடியற்காலை பொது மக்களெல்லாம் கைகளில் அகப்பட்ட பொருட்களுடன் வீடு, வாசல், அத்தனையும் விட்டு விட்டு அகதிகளாக போகத் தொடங்கினர். எவ்வளவோ சமூக உணர்வுள்ளவர்களால் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. போய்க் கொண்டேயிருந்தனர். பொலன்னறுவை, கணேவல்பொல, மடாட்கம என பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து போய்க் கொண்டிருந்தனர். அரைவாசிப் பேர் போய் விட்டனர். மிகுந்த பயத்துடன் ஊர் அமைதி கொண்டிருந்தது.


எங்கு பார்த்தாலும் கொலை வெறியோடு முஸ்லீம்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டுக் கொண்ருந்தனர். கறுவாக்கேணி தொடக்கம் செங்கலடி வரை பஸ்ஸில் கூட பயணம் செய்ய முடியாத நிலை. பஸ்ஸிலிருந்து இறக்கி கொலை செய்து கொண்டிருந்தனர். காத்தான்குடி பள்ளிவாயலில் கொண்டிருந்தபோது நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்தனர். ஏறாவூர் சதாம் ஹூசைன் கிராமத்தில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களையும் கொலை செய்தனர். மஜீத்புரம், பங்குறான, பள்ளித்திடல்  போன்ற கிராமத்தில் வாழ்ந்த முஸ்லீம்களை கொன்று குவித்தனர்.


இந்த செய்தி பரவத் தொடங்கியதும் ஊரில் இருந்த மிகுதி சனங்களும் ஊரைவிட்டு சென்று விட்டனர். ஊர் மயானம் போலக் காட்சியளித்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஊர்ப்பற்றும், சமூக உணர்வுமுள்ள சிலபேரைத் தவிர மற்ற எல்லாரும் போய் விட்டார்கள். சாப்பாடு இல்லை, மின்சாரத்தையும் வெறிப்புலிகள் உடைத்து விட்டார்கள். இருட்டுக்குள் இடையிடையே வந்து ஊருக்குள் தாக்குதல் நடத்தினார்கள். இப்படியாக இருக்கும் போது எங்கள் நாட்டு இராணுவம் வந்து சேர்ந்து விட்டது. பல இளைஞர்கள் ஊர்காவல் படையில் இணைந்து கொண்டார்கள்.


சுமார் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும் மார்க்கட், அலுவலகங்கள் அத்தனையும் மூடப்பட்டுக் கிடந்தது. ஊர் வெறிச்சோடிப்போய் இருந்தது. வாழைச்சேனைப் பெற்றோல் செட் அருகில் ஒரு மார்க்கட் இராணுவத்தின் பாதுகாப்பில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் – முஸ்லிம் மக்கள் எல்லோரும் வந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடிந்தது. நானும் போயிருந்தேன். தேங்காய் வாங்கிக் கொண்டிருக்கும் போது போடியார் என்று சொல்லிக் கொண்டு என் தோளில் ஒரு கை பட்டது.

திரும்பிப் பார்த்தேன் சீனியண்ணன் நின்று கொண்டிருந்தான்.
ஆச்சரியத்தில் என் கண்கள் விரிந்தது. அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன். நான் எதுவும் பேசவில்லை. பக்கத்திலிருந்த தேனீர்க் கடைக்குக் கூட்டிப் போனேன். மிகவும் கணத்தவனாகக் காணப்பட்டான். பனிஸ் ஒன்று எடுத்துக் கொடுத்துவிட்டு டீயிற்கு ஓடர் பண்ணினேன். அவன் கடும் பசியோடு வந்திருப்பான் போல அவ்வளவு வேகமாக அதை சாப்பிட்டான். இன்னும் ஒரு பனிஸ் எடுத்துக் கொடுத்தேன். வேணாம் போடியார் என்றவன். அதையும் வாங்கிக் கொண்டான்.


தேனீர் குடித்து முடியும் வரை நான் எதுவும் பேசவில்லை. தேனீர் குடித்து முநெ்ததும் அவனது வெற்றிலைக் குட்டானை எடுத்தான். காய்ந்து போன வெற்றிலையும் உளுத்துப் போன பாக்கும்தான் அதிலிருந்தது. இதைப்பார்த்தவுடன் அதை தூக்கி எறி சீனியண்ணே என்று சொல்லிவிட்டு அவனைப் பக்கத்திலிருந்த வெற்றிலைக் கடைக்கு கூட்டிப் போனேன்.  இரண்டு பகுளி வெற்றிளையும் ஒரு கிலோ பாக்கும் போயிலை, சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தேன். அரிசி சாமான்கள் எல்லாவற்றையும் வாங்கச் சொல்லி காசு கொடுத்தேன்.

எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு ஆலமரத்தடிக்கு வரச் சொல்லி விட்டு வந்தேன்.

சீனியண்ணன் வரும் வரை ஆலமரத்தடியில் உட்காந்திருந்தேன் அவன் வந்ததும் அவன் முகத்தில் நீண்ட நாளைக்குப் பிறகு நல்ல வெற்றிலை போட்ட திருப்தி தெரிந்தது. எனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான். பிறகு என்ன பாடு சீனியண்ணன் என்று கேட்டேன். அதேன் கேக்குறீங்க போடியார். நாங்க படுற பாட்ட ஒரு பக்கம் ஆமி தொல்லை மறுபக்கம் இயக்கத் தொல்லை தவிலப்போல கிடந்து அடிபடுறம் என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டான் சீனியண்ணன்.


நிறுவனங்கள் ஏதும் கொண்டு வந்து தந்தால்தான் சாப்பாடு, இல்லாட்டி பட்டினிதான் என்று தொடர்ந்தவன். நம்மட சூட்டை அடிக்க வந்தானுகள் இப்பிடி செய்யாதீங்க கடவுளுக்கு பொறுக்காது என்று நானும் என்ட மனிசியும் தடுத்தம். நீயெல்லாம் சோனிக்கி சூத்து கொடுக்கிறவன்தான் என்று எனக்கும் அடித்துப்போட்டு சூட்டை அடிச்சிட்டு நெல்லை ஏத்திட்டுப் போனானுகள். சூட்டடியில கிடந்த பதக்கடையையும், நெல்லையும் புடச்சி எடுத்துக் குத்தி அஞ்சாறு நாள் திண்டம். இப்ப அதுமில்ல போடியார். ஒவ்வொரு சூடும் நுற்றி இருபது நூற்றி முப்பது மூடை அடிச்சிது போடியார். ஒரு சாக்கு நெல்லுக் கூட அவனுகள் போடல. வழிச்சி துறச்சி கொண்டு போனானுகள். எனக்கு வயிறு வாய் எல்லாம் கொதிச்சிச்சு. என்ன செய்யிறது என்னால எதுவும் செய்ய முடியல போடியார் என்று வேதனைப்பட்டுக் கொண்டான்.


சீனியண்ணே அந்த சூட்டை எல்லாம் யாரு அடிச்சவங்க என்று கேட்டேன். வேறயாரு இயக்கத்துல இரிக்கிறவனுகள் அப்பாமாரும்,
அண்ணன்மாரும்தான். அதுமட்டுமா போடியார் உங்கட ஆடு, மாடு எல்லாம் மேய்ச்சானே சின்னதுரை அவனுக்கும் போட்டு அடிச்சிப்போட்டு உங்கட ஆடு, மாடெல்லாம் ஒதுக்கிட்டு போயிட்டானுகள் அண்டைக்கு கண்ட சின்னதுரைதான் இன்னம் நான் காணல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கையில் வா சீனி போவம் கூட வந்தவன் போல் ஒருவன் கூப்பிட்டான். எல்லாரும் போப்பறானுகள் ஆட்களோட ஆட்களாப் போனாத்தான் போய்ச் சேரலாம் போடியார் இல்லாட்டி கேம்புல பிரச்சினப்படுத்துவானுகள் வாப்பாவைக் கேட்டன்டு சொல்லுங்க. நான் போயிட்டு என்று சொல்லி விட்டு போனான் சீனி.


இதிலிருந்து மிக நீண்ட நாட்களாய் சீனியனைக் காணவேயில்லை.  கடைசியாக சந்தித்ததிலிருந்து சுமார் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு, என் வீட்டுக் கேற்றில் தட்டும் சத்தம் கேட்கிறது. வெளியில் வந்து பார்த்தேன். எனது றண்பர்களில் ஒருவரான ஹூசைன் நின்று கொண்டிருந்தான். என்னடா என்று கேட்டேன். உண்ட வயலுக்க முந்தி கிடந்தவராம் பேரு சீனியாம் நம்மட சந்தைக்குள்ள வந்து தேடினாரு நான் விசகலம் சொல்லுறன் நில்லுங்க என்று சொல்லிவிட்டு வந்தன். மஜீதுட கடை வாங்கில இரிக்காறு போய்ப் பாரு என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.


நான் அவசரமாக பைசிக்களை எடுத்துக் கொண்டு சீனியனைக்கான சந்தைக்குப் போனேன். அங்கே சொன்ன இடத்தில் சீனியனைக் காணவில்லை. அவ்விடத்தில் நின்ற ஒருவரிடம் விசாரித்தேன். இப்ப இவடத்த ஒரு ஆள் நின்டு உங்கள விசாரிச்சாரு தம்பி. என்று சொல்லிக் கொண்டு அந்தா இரிக்காரு தம்பி என்று காட்டினார். மிகவும் வயது போன ஒருவர் அவ்விடத்தில் குந்திக் கொண்டிருந்தார். அவரிடம் போனேன். என்னால் நம்ப முடியவில்லை. நீங்க சீனியண்ணனா? என்று சந்தேகமாகக் கேட்டேன். என்ன போடியார்! என்ன மதிக்கலியா? நான் உங்கள மதிச்சிட்டன். நான்தான் உங்கட வயலுக்க கிடந்தவன் என்று சொன்னான்.


கருங்காலி மரம் போல உருண்டு திரண்ட உடலமைப்பில் இருந்த சீனியண்ணனா இது? எலும்பும் தோலுமாய் உருக்குலைந்த நிலையில் முழுப்பாக்கை பாக்கு வெட்டி இல்லாமல் கடித்துச் சப்பி வெத்திலை போடும் சீனிக்கு வெறும் முரசு மட்டும் இருந்தது. சொக்கு ரெண்டும் ஒன்றோடொன்று ஒட்டிப் பார்க்க பரிதாபமாக இருந்தது.


வாங்கண்ணே! என்று பொலிஸ் காசின்ட ஹோட்டலுக்கு கூட்டிப் போனேன். தம்பி காசின் சீனியண்ணனுக்கு புட்டும் இறச்சிக் கறியும் குடு என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் அமர்ந்து கொண்டேன். என்ன போடியார் வாப்பா சுகமா இரிக்காரா? என்று சீனி கேட்டார். அவரு மௌத்தாகி எட்டு வருஷமாச்சியண்ணே என்றேன். செத்திட்டாரா! அட கடவுளே! எனக்குத் தெரியாமல் போச்சே என்று மிகவும் வேதனைப்பட்டவனாய், நல்ல மனிசன் வாப்பா நல்லவங்களத்தான் ஆண்டவன் முதல்ல எடுப்பான் போடியார் நாமதான் இன்னும் இழுபட்டுக்கிட்டு கிடக்கம். என்று பெரு மூச்சு விட்டான்.
என்ன செய்யுற சீனியண்ணே! எல்லாரும் போய் சேரத்தான் வேணுமென்றேன். ஓமோம் என்று தலையை ஆட்டிக் கொண்டான்.

சாப்பிடுங்கண்ணே என்றேன். நீங்க சாப்பிடலயா போடியார்? இல்ல இப்பதான் சாப்பிட்டன் நீங்க சாப்பிடுங்க என்றதும் சாப்பிடத் தொடங்கினான். அவன் சாப்பிட்டு முடியும் வரை பேசாமல் இருந்தேன். பழைய நினைவுகள் மீண்டும் என் மனசுக்குள் அசைபோட்டவனாய் இருந்து கொண்டிருந்தேன்.

அவன் விட்ட ஏப்பத்தில் சுய நினைவுக்கு வந்தேன்.  என்ன போடியார் கடும் யோசன என்று கேட்டான். ஒண்டுமில்ல என்றேன். மிச்சங்காலத்திற்கு பிறகு முஸ்லிம் ஆக்கள்ர சாப்பாடு வயிறு நிறைய சாப்பிட்டு இருக்கன் என்று சொல்லி திருப்திப்பட்டு பொக்கை வாய்ச் சிரிப்பு சிரித்துக் கொண்டு போடியார் சுருட்டெல்லாம் முந்திய போல காரமில்ல எல்லா இடத்தையும் கள்ள சுருட்டுதான் புளங்குது முந்தின்டா யாழ்ப்பாணத்திலருந்து வரும் கோடா போட்ட யானை மார்க் சுருட்டு முருகன் ஸ்டோர்ல வாங்கி அத கொழுத்தியடிச்சா அந்த மாதிரி மனக்கும்.

நுளம்பெல்லாம் கிட்டயும் வராது. இப்பதான் நுளம்புத்திரிய வெச்சாலும் நுளம்பு கடிக்குது. நம்மட ஆச்சி அப்பன் காலத்தில இதெல்லாம் ஏது போடியார். நீங்க குடிக்கிற பிடி போட்ட வெள்ளை ஒன்டு வாங்கித்தாங்க என்று சிரித்துக் கொண்டே கேட்டான். (ஹோல்ட்லிfப்) காசின் தம்பி அண்ணனுக்கு சிகரெட் கொடு என்றேன். அதவாங்கி பற்றவைத்து இழுத்தான். அது மூக்காலையும், வாயாலையும் புகை வந்து கொண்டிருந்தது. அந்த நாளைய கரிக்கோச்சி போல

என்ன வட்டவான் பக்கம் போகலியா என் கேட்டேன். ஏன் போகல்ல. இயக்கத்தால ஒரு கூட்டம் போட்டாங்க என்னன்டு பார்க்கப் போனேன். என்ன நடந்திச்சி இயக்கத்து பெரியாக்களெல்லாம் வந்திருந்தாங்க. அதுல பேசினாங்க சோனிகளெல்லாம் இங்கு வர விடக் கூடாது இந்த வயல் எல்லாத்தையும் குறஞ்ச விலையில் வாங்கி எடுங்க அதுவரைக்கும் எல்லாரும் பிரிச்சு செய்யுங்க. அதிலேயும் மாவீரன் குடும்பங்களுக்குத்தான் முன்னுரிமை என்று சொன்னாங்க போடியார்.

கந்தசாமி என்றொருவனை வட்டயனாய்ப் போட்டிருந்தாங்க. இவன்ட மகளும் இயக்கத்துல இருந்தவள். அவள்ர புருஷனும் இயக்கத்துல இருந்தவன் அவங்க மாவீரன் குடும்பமாம். கந்தனைத்தான் பொறுப்பாய்ப் போட்டிருக்காங்க. அவன் அவன்ட பென்சாதி மகன் எல்லாம் இயக்கம்தானே அவனையும் போட்டிருக்காங்க போடியார்.

என்டக்கி நீங்களெல்லாம் வந்து வெள்ளாமை செய்யுறீங்களோ அண்டைக்குத்தான் எங்களுக்கு நிம்மது. அப்பதான் எங்களுக்கு தொழிலும் சாப்பாடும் கிடைக்கும் எல்லாத்தையும் மேல இரிக்கிரவன் பார்ப்பான் போடியார். என்று சொல்லி விட்டு எழும்பிக் கொண்டான். இந்தாங்கண்ணே என்று ஆயிரம் ரூபாவை அவன் கைக்குள் வைத்தேன். புறப்பட்டு அவன் போனான். அன்று போனவன்தான் சீனி. என்ன ஆனானோ தெரியவில்லை இது வரையும் நான் காணவேயில்லை....

முஸ்லிம் சமூகம் இருந்த சகல காணிகளை எல்.ரீ.ரீ.ஈ தரகர்களால் பயமுறுத்தி, வற்புறுத்தி, ஏக்கர் பத்தாயிரம், பண்ணெண்டாயிரம் என்று அடிமட்ட விலைக்கு விற்கப்பட்டு இன்று காணியில்லாது வக்கற்றவர்களாக வாழ வழியின்றி வெறும் ஜடங்களாக...


முஸ்லிம்களை வெட்டிப் பிளந்து கொலை செய்து சந்தோஷம் கொண்டாடிய கந்தனும் பெண்சாதியும் நமக்குள் நல்லவர்களாகி நமக்குள் கலந்து.....
பெரிய கோங்களை, சின்னக் கோங்களை, சுரிச்சவத்தி, பொத்தானை, பூலாக்காடு, தட்டாவெளி, காரையடிப்பட்டி, நூறேக்கர், சேம்பையடி, செம்பிக்காடு, நடுத்தவனை, பட்டியடிவெளி, ஆணைவணங்கி, அரசக்குடா, ஒல்லித்தவளை, ஒட்டுவெளி, கொட்டுவம், மதுரங்கேணி, மதுரங்குளம், வகுலாவலை, குஞ்சன்கல் குளம் இப்படி எத்தனை கண்டங்களில் எத்தனை ஆயிரம் ஏக்கர் இழந்திருக்கிறோம். இதற்கு தீர்வு?

(மீராவோடை – சுபைர்)

யுத்தத்தினால் கல்குடா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை வரலாற்று பதிவுகளாக சமர்ப்பிக்கின்றார் மீராவோடை சுபைர். யுத்தத்தினால் கல்குடா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை வரலாற்று பதிவுகளாக சமர்ப்பிக்கின்றார் மீராவோடை சுபைர். Reviewed by Madawala News on 11/23/2016 11:27:00 AM Rating: 5