Accaddemy

கொழும்பில் பதற்றங்கள் இல்லை! வீண்வதந்திகள் பரப்ப வேண்டாம்!l

- அஷ்ரப் அலி பரீத்-

கொழும்பில் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் பல்வேறு வாகனங்களில் இளைஞர்கள் வந்து இறங்கிக் கொண்டிருப்பதாகவும், இனக்கலவரத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பல்வேறு சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்சப்பில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது.

நேற்றைய இரவில் சுமார் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் அங்கு திரண்டு வந்திருந்த போதும், இன்று தற்போதைய நிலையில் மொத்தமே 25 பேர் தான் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் கலவரம் செய்யும் நோக்கில் வந்தவர்கள் இல்லை. 

எனது வீட்டின் பாதுகாப்புக்கு தரப்பட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தருடன் சற்று முன்னர் இது தொடர்பாக நேரில் ஆராய்ந்து, உண்மையை அறிந்த பின்னரே இந்த தகவலை பகிர்கின்றேன். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவிகளின் நிம்மதியையும், தூக்கத்தையும் கெடுக்க வேண்டாம். 

பொதுபல சேனா தலைமையகத்தின் அருகே அவர்களின் அனைத்து நடமாட்டங்களையும் வெகு அருகில் இருந்து, அதுவும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புடன் அவதானிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கு வாய்ப்பைப் தந்துள்ளான். அத்துடன் பொதுபல  சேனாவின் உயர்மட்டத்தில் இருக்கும் நபர் ஒருவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் என் தொடர்பில் இருப்பதால் அவர்களின் திட்டமிடல்கள் குறித்து உடனுக்குடன் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வசதியையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அளித்துள்ளான். 

அதனைப் பயன்படுத்தி  இங்கு அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படுமிடத்து அது தொடர்பில் உடனடியாக சமூக வலைத்தளங்கள் ஊடாக உங்கள் அனைவரையும் அறிவுறுத்துவேன். மேலும் அரசாங்கத்தின் உயர்மட்டம் மூலமாக அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையும் நான் எடுப்பேன். அல்லாஹ் அதற்கான சக்தியை எனக்கு வழங்கியுள்ளான். அதனை இந்த சமூகத்தின் நன்மைக்காக நான் பயன்படுத்துவேன். 

நேற்றைய பதற்ற நிலை இன்று சகோதரர் அப்துல் ராசிக்கின் கைது நடவடிக்கை காரணமாக பெரும்பாலும் தணிந்து விட்டது. அந்த வகையில் இந்த சமூகத்தின் நிம்மதிக்காக தன் சுதந்திரத்தை சில நாட்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள நேர்ந்துள்ள அந்தச் சகோதரரின் இம்மை , மறுமை வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் மேலானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.  

முடிந்தவரை அவரின் செயற்பாடுகளில் காணப்பட்ட ஆக்ரோசம் குறித்து விமர்சிப்பதை விடுத்து,  அவரது உயர்வான நோக்கத்திற்கு உரிய நற்கூலியைக் கொடுக்குமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்து கொள்ளுங்கள். 

எனவே அநாவசிய பதற்றங்கள் வேண்டாம். அவதானமாக ,  அமைதியாக இருந்து கொள்ளுங்கள். நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாப்பையும்,  நிம்மதியையும் தந்தருள்வானாக. ஆமீன்..
கொழும்பில் பதற்றங்கள் இல்லை! வீண்வதந்திகள் பரப்ப வேண்டாம்!l கொழும்பில் பதற்றங்கள் இல்லை! வீண்வதந்திகள் பரப்ப வேண்டாம்!l Reviewed by Madawala News on 11/16/2016 11:57:00 PM Rating: 5