மாணிக்கமடு புத்தர் சிலையை நீக்க விடாப்பிடியாக மறுக்கும் பௌத்த பிக்குகள். நேற்றைய சந்திப்பில் நடந்தது இதுதான்.



அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாணிக்கமடு என்ற தமிழ் , முஸ்லிம்  கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்கு நேற்று அரசாங்க அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்தில் தீர்வு காணப்படவில்லை. பௌத்த குடியிருப்புகளே இல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது கடந்த சனிக்கிழமை அம்பாறை நகரிலிருந்து வந்த பௌத்த பிக்குகளினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

 
அந்த பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களினாலும் தமிழ் , முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபரால் மாவட்ட செயலகத்தில் இந்த சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இந்து ஆலய நிர்வாகிகளுடன் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம் தரப்புகள்,

 பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது. இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.  இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வராய்ச்சிக்குரிய 19 இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாக பௌத்த பிக்குகளினால் இதற்கு பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது

இரு தரப்பும் தங்கள் கருத்துக்களை முன் வைத்த நிலையில் இந்த விவகாரத்தை ஆராய்ந்து சுமூகமான தீர்வொன்றை காண்பதற்கு தமிழ் , முஸ்லிம் , பௌத்த துறவிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் என 15 பேர் கொண்ட குழு வொன்று இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழு இன்று  கூடவிருக்கின்றது.

முஸ்லீம் பிரதேசங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தில் மாணிக்கமடு கிராமம் மட்டும் தான் தமிழ் பேசும் மக்களின்  கிராமம் ஆகும்.அந்த கிராமத்தை அண்டியதாக மாயக்கல்லி மலை அமைந்துள்ளது.
மாணிக்கமடு புத்தர் சிலையை நீக்க விடாப்பிடியாக மறுக்கும் பௌத்த பிக்குகள். நேற்றைய சந்திப்பில் நடந்தது இதுதான்.  மாணிக்கமடு புத்தர் சிலையை நீக்க விடாப்பிடியாக மறுக்கும் பௌத்த பிக்குகள். நேற்றைய சந்திப்பில் நடந்தது இதுதான். Reviewed by Madawala News on 11/03/2016 09:42:00 AM Rating: 5