Kidny

Kidny

SLTJ அப்துர் ராஸிக்கின் கைது தொடர்பில்...

SLTJ ஜேயின் அணுகுமுறைகளிலும், பல விளக்கங்களிலும் முற்று முழுதாக எனக்கு தெளிவான முரண்பாடு இருக்கின்ற நிலையிலும்.......


எஸ்ஸெல் டீ ஜே என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று யார் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்பதையும், காதியானி, ஷீஆ ரேஞ்சில் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களாக அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் யார் என்பதையும் எனது இரண்டு கண்களாலும் பார்த்து இரண்டு காதுகளாலும் கேட்டவன் என்ற நிலையிலும்....


தெளிவான மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அணுகுமுறைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதோ, தடைசெய்யுமாறு கூறுவதோ மிகப் பிழையான கருத்து என்பதையும், அவர்களை சேர்த்துக் கொள்வதனூடாகவே அறிந்தோ அறியாமலோ தவறு விடுகின்றவர்களை அதிலிருந்து தூரமாக்க முடியும் என்பதையும் உறுதியாக ஆணித்தரமாக கூறி முன்னைய கருத்தை உடைப்பில் போட்டவர்கள் யார் என்பதையும் எனது இரண்டு கண்களால் பார்த்து இரண்டு காதுகளால் கேட்டவன் என்ற நிலையிலும் இதனை எழுதுகிறேன்.


சமூகத்தின் யதார்த்த நிலை இன்னும் மிகத் தெளிவாக எவ்விதமான தூரநோக்குமற்ற கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சகோ. அப்துர் ராஸிக்கின் கைது தொடர்பிலான எம்மவர்களின் கருத்துக்களாகும்.

உள்ளக முரண்பாடுகள் என்பது வேறு, இஸ்லாமிய ரீதியான சகோதரத்தும் மற்றும் உடன்பாடு என்பது வேறு என்பதை மிகச் சரியாகப் புரிந்து கருத்துத் தெரிவிக்க முடியாத நிலையிலேயே நாம் இன்னும் இருக்கின்றோம்.

படித்தவர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மத்தியில், தடை செய்து விட்டு அல்லது ஒதுக்கி வைத்து விட்டு  பிரச்சினையிலிருந்து தப்பிக் கொள்கின்ற மனோநிலையும், பின்புலங்கள் தெரியாமல் ஃபேஸ்புக்கில் கருத்துச் சொல்பவர்கள் மத்தியில், கைது செய்யப்பட்டால் அதனைக் கொண்டாடும் மனோநிலையும் இருப்பதானது எமது சமூகத்தின் பலவீனத்தின் உச்சகட்டத்தை மிகத் தெளிவாக அடையாளப்படுத்துகின்றது.

அவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்?, அதன் நோக்கம் என்ன?, ஏன் ஏன் ஏன் என்ற பல கேள்விகளுக்கான மிகச் சரியான விடை அவர்களுக்கும் அல்லாஹ்வுக்குமே தெரியும். 


எண்ணங்கள் பிழையாக இருந்தால் அவர்கள் அதற்குரிய கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வார்கள். எண்ணங்கள் சரியாக இருந்தால் அதற்குரிய கூலியையும் அவர்கள் அல்லாஹ்விடம் நிரப்பமாகப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் சரியான எண்ணங்கள் பிழையான வழிமுறைகளை ஒருபோதும் நியாயப்படுத்த மாட்டா என்பது அடிப்படை விதியாகும்.

ஆர்ப்பாட்டம் செய்தது பிழையல்ல. ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்தில் கையாளப்பபட்ட அணுகுமுறைகளும், பாவிக்கப்பட்ட கோஷங்களும், வார்த்தைகளும் எந்தளவு தூரம் பொருத்தமானது என்பதில் எனக்குத் தெளிவான முரண்பாடு இருக்கின்றது.


அந்த ஆர்ப்பாட்டமும் அதற்கு முந்திய பிந்திய நடவடிக்கைகளும், அரசின் உளவியலும் இன்னும் பலவும் இந்தக் கைதின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கலாம். எது எப்படியிருப்பினும் ஒரு முஸ்லிமின் நோவினையைக் கொண்டாடும் இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கின்றோம் என்பது வெட்கக் கேடான ஓர் அம்சமாகும்.


தமது போக்கையும் அணுகுமுறைகளையும் மறுபரிசீலணை செய்ய வேண்டிய தேவை எஸ்ஸெல்டீஜே சகோதரர்களுக்கு இருக்கின்றது. எப்படி அவர்களது அணுகுமுறைகள் பல போராட்டக் குணமுடைய இளைஞர்களை அவர்களை நோக்கி ஈர்த்திருக்கின்றதோ அவ்வாறே அவர்களது அதே அணுகுமுறைகள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே அவர்களுக்கு பல எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றது என்பதை இது காட்டுகின்றது.


மறுபக்கத்தில் எது எப்படியிருந்த போதிலும் நூற்றுக்கு எட்டு, பத்து வீதமே இருக்கின்ற முஸ்லிம்கள் தமது கருத்து வேறுபாடுகளையும் உள்ளக முரண்பாடுகளையும் தமக்குள் வைத்துக் கொண்டு, ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்று வருகின்ற போது உள்ளுக்குள் சந்தோஷப்படுகின்ற அல்லது அதனை வெளிக்காட்டி மகிழ்கின்ற கீழ்த்தரமான நிலைகளுக்குச் சென்று விடாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது.


சில வேளைகளில் இதையெல்லாம் சொல்ல நீ யார் என்ற ரேஞ்சில் சிலர் வரலாம், அல்லது இதற்கு வரிக்கு வரி பதில் கூட வரலாம். அதுவெல்லாம் பரவாயில்லை, ஆனால் இந்த உண்மை இங்கு உரத்துச் சொல்லப்பட்டே ஆக வேண்டும் என்பதால் இதனை இங்கு பதிவிடுகிறேன். எடுத்துக் கொள்பவர்கள் இதனை எப்படியும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களைப் பொறுத்தது. ஆனால் சகோ. அப்துர் ராசிக்கின் கைதைக் கொண்டாடுவதை மனதார வெறுக்கிறேன், அவர் பிரச்சினைகள் எதுவுமின்றி வெளியே வர வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

Affan Abdul Haleem
2016-11-16
SLTJ அப்துர் ராஸிக்கின் கைது தொடர்பில்... SLTJ அப்துர் ராஸிக்கின் கைது தொடர்பில்... Reviewed by Madawala News on 11/16/2016 07:06:00 PM Rating: 5