Ad Space Available here

இனவாதத்தை தூண்டியதா SLTJ யின் ஆர்ப்பாட்டம்..கடந்த இரண்டு நாட்களாக முகநூல் வட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டம் பற்றிய செய்திகள் பரப்பப் படுவதை அனைவரும் அறிந்திருக்கிறோம்.
GSP+ வரிச் வலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் முன்வைத்துள்ள நிபந்தனையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைப்பதை எதிர்த்தே தௌஹீத் ஜமாஅத் சார்பில் குறித்த ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தை SLTJ அறிவித்தவுடனேயே பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார முஸ்லிம்களுக்கும், தௌஹீத் ஜமாஅத்திற்கும் எதிரான தனது இனவாத கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக அல்லாஹ்வைப் பற்றி பேசுகிற நேரத்தில் அல்லாஹ்வுக்கு இரண்டா? மூன்றா? இருக்கிறது? என்று அல்லாஹ்வை கேவலப்படுத்தியெல்லாம் கடுமையாக ஞானசார பேசியிருந்தார். அது மட்டுமன்றி ஆர்பாட்டம் நடத்த கோட்டை புகையிரத நிலையம் வந்தால் அடித்து விரட்டுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மிரட்டலுக்கு அஞ்சாத தௌஹீத் ஜமாஅத்
ஞானசாரவின் மிரட்டலுக்கு அஞ்சாத தௌஹீத் ஜமாஅத் “திட்டமிட்டபடி ஆர்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்தது. தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தொடங்கிய பேரணி மாளிகாவத்தை பரன் ஜயதிலக பாடசாலை முன்பாக செல்லும் போது அங்கு வந்திருந்து பொலிஸ் உயர் அதிகாரிகள் பேரணியை வழிமறித்தார்கள்.

புறக்கோட்டையில் ஏற்கனவே இரண்டு ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நேரத்தில் நீங்களும் அங்கு செல்வது முறையல்ல என்று கூறியே பேரணியை வழிமறித்தனர் பொலிசார்.

வேகம் முக்கியம் என்பதை விட விவேகம் அதிமுக்கியம் என்பதை உணர்ந்த தௌஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் “நாங்கள் நாட்டு சட்டத்தை மதித்து செயல்படுபவர்கள், ஞானசாரவுக்காக நீங்கள் எங்களை தடுத்தால் உங்கள் பதவிகளின் பெருமதியை அது இழக்க செய்து விடும், எங்கள் ஜனநாயக உரிமையை பரிப்பது முறையல்ல, இருப்பினும் சட்டத்திற்கு மதிப்பளிக்கிறோம். வீம்புக்கு ஆர்பாட்டம் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை. எங்கள் உணர்வுகளை அரசு புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதனை மாற்றிக் கொள்கிறோம். இருப்பினும் இந்த இடத்தில் எங்கள் கண்டன ஆர்பாட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். 

தௌஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பொலிஸ் தரப்பு அவ்விடத்தில் கண்டன உரையாற்றி மக்களுக்கு தெளிவு வழங்குவதற்கு அனுமதியளித்தது.

முஸ்லிம்களின் மன உணர்வை வெளிக்காட்டிய கண்டன உரைகள்.
ஆர்பாட்டப் பேரணியின் முடிவில் தௌஹீத் ஜமாஅத் சார்பில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன.
அவ்வமைப்பின் செயலாளர் ராசிக் சிங்களத்திலும், தமிழில் அவ்வமைப்பின் துணை செயலாளர் ரஸ்மினும் உரையாற்றினார்கள்.
காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சலாம்.
கண்டன உரைகளில், 

GSP+ என்றால் என்ன?
GSP+ க்கும் தனியார் சட்டத்திற்கும் முடிச்சுப் போடுவது ஏன்?
GSP+ க்காக முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாதது ஏன்?
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் செய்யும் உரிமை முஸ்லிம் தலைமைகளுக்கு மாத்திரம் தான் உள்ளது.
தனியார் சட்டத்தில் பெண்களின் வயதெல்லை 12 என்று போடப்பட்டது ஏன்?
சிறுவர் திருமணத்தை இஸ்லாம் ஏன் மறுக்கிறது. 
பெண்கள் வயதை 16ஆக மாற்றச் சொல்லும் அதிகாரம் ஐரோப்பிய யூனியனுக்கு இருக்கிறதா? இல்லையா?

பெண்களின் வயதெல்லையை குர்ஆன், சுன்னா பிரகாரம் எப்படி நிர்ணயம் செய்வது? 

முஸ்லிம்களின் வாக்கு பலத்தினால் பெற்றி பெற்ற நல்லாட்சி அரசு தொடர்ந்தும் முஸ்லிம்களை வஞ்சிப்பது ஏன்?
போன்ற விபரங்கள் தெளிவாக மக்களுக்கு தெளிவுபடுத்தப் பட்டன.
விபரம் அறியா விமர்சகர்கள்
GSP+ என்றால் என்ன? எதற்காக இந்த ஆர்பாட்டம்? முஸ்லிம் தனியார் சட்டம் என்ன சொல்கிறது? முஸ்லிம் தனியார் சட்டத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? போன்ற எந்த விதமான அடிப்படை அறிவும் அற்ற ஒரு கூட்டம் தௌஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் செய்தது என்கிற ஒரே காரணத்திற்காக பொதுத் தளத்தில் அவர்களை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தௌஹீத் ஜமாஅத் செய்த ஆர்பாட்டம் சமுதாயத்திற்கு தேவையானதா? இல்லையா? என்பதைத் தான் பார்க்க வேண்டுமே தவிர இது தௌஹீத் ஜமாஅத் செய்த ஆர்பாட்டம் என்பதினால் சமுதாயத்தின் நலனை பின்னுக்குத் தள்ளி அவர்களை விமர்சிப்பது எந்தளவு நியாயம்?

நேற்றைய தினம் கஹடொவிட பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பள்ளியின் குத்பாவிலேயே தௌஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் பேருக்காகவும், புகழுக்காகவும் செய்யப்பட்டது. GSP+ க்காக தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று எந்த இடத்திலும் அரசாங்கம் சொல்ல வில்லை. என்று விபரமே இல்லாமல் நாட்டில் என்ன நடக்கிறது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு மதனி உரையாற்றினார்.

இதனை கேட்டபோது இவர்களுக்காக கவலைப்படுவதா? கண்ணீர் விடுவதா? அல்லது வாய் விட்டு சிரிப்பதா? என்று பல வாராக சிந்திக்கத் தோன்றியது.
தௌஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் மார்க்க விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனை அதற்குறிய முறையில் அனுகி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து தௌஹீத் ஜமாஅத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக தொடர்பே இல்லாமல் GSP+ பற்றிய எவ்வித தெளிவும் இல்லாமல் தங்களை மாமேதைகளாக நினைத்துக் கொண்டு பேசும் இந்த மௌலவி மார்களை என்னவென்பது?

சமுதாயத்திற்காக தானும் குரல் கொடுக்க மாட்டேன். தௌஹீத் ஜமாஅத் போன்றவர்கள் குரல் கொடுத்தாலும் சகட்டு மேனிக்கு விமர்சிப்பேன் என்பது என்னே நியாயம்?

தௌஹீத் ஜமாஅத்தின் பல கருத்துக்களில் உடன்படாத ஒருவராக நானும் இருந்தாலும் இந்த விடயத்தில் அவர்களுடன் ஒத்திசைந்து போகவே விரும்புகிறேன். 

அறிஞர் அப்துல் அஸீஸ், TB ஜாயா, சித்திலெப்பை போன்ற எத்தனையோ தலைவர்கள் விடயத்தில் அவர்களின் மார்க்க நிலைபாடுகளில் பலத்த மாற்றுக் கருத்து இந்த சமுதாயத்தில் எத்தனையோ பேருக்கு இருந்தாலும் அந்த தலைவர்களின் சமுதாய உரிமை போராட்டங்களை முன்னுதாரணமாக எடுப்பதில் யாரும் பின் நிற்பதில்லையே? காரணம் என்ன முஸ்லிம்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் அவ்வளவு தான்.

உரிமைக்காக குரல் கொடுப்பவன் யாராக இருந்தாலும் அதற்கு நாம் ஏன் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது? சரி ஒத்துழைக்கா விட்டாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே!
ஞனாசாரவை விமர்சித்தது குற்றமா?

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றப்பட்ட கண்டன உரையில் சிங்களம், தமிழ் மொழிகளில் ஞானசாரவுக்கு எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. 
இந்த கருத்துக்களை ஒரு சிலர் “மீண்டும் இனவாதத்தை தௌஹீத் ஜமாஅத் தூண்டுகிறது” என்று பரப்புகிறார்கள். ஞானசார என்ன சொன்னாலும் நமக்கென்ன நாம் மௌனமாக இருந்து விட்டு போகலாமே? அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையென்ன என்று நினைக்கிறார்கள்.
இப்படி பேசும் எந்த மேதாவியாவது அவன் என்ன சொன்னான் என்பதை அறிந்து வைத்துள்ளார்களா? 

அல்லாஹ்வை பற்றி சகட்டு மேனிக்கு பேசியுள்ளான். முஸ்லிம் பெண்களை நிந்தித்திருக்கிறான். முஸ்லிம் ஆண்களை கேவலப்படுத்துகிறான். இதனையெல்லாம் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும் என்கிறது ஒரு கூட்டம்.

விவேகம் இல்லாத காரியத்தை தௌஹீத் ஜமாஅத் செய்வதாக விவேகம் பற்றி பேசுகிறார்கள் சில பேர்கள்.

எது விவேகம் என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்கு இரண்டா? மூன்றா? இருக்கிறது என்று ஞானசார கேட்ப்பது குற்றமாகத் தெரியவில்லை. ஆனால் ஞானசாரவுக்கு எதிராக தௌஹீத் ஜமாஅத் பேசியது தான் நமக்கு குற்றமாக தெரிகிறது என்றால் நம் நிலையை சிந்தித்துப் பாருங்கள்?

அல்லாஹ்வை கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை. நாம் வாய் திறக்கா ஊமைகளாக இருந்து விட்டு போய் விட வேண்டும். உரிமைகள் இழந்தாலும் பரவாயில்லை. ஊமையாய் இருந்தாலும் பரவாயில்லை. அடி வாங்கி கேவலப்பட்டாலும் பரவாயில்லை. அல்லாஹ்வைப் பற்றியோ, அவன் தூதரைப் பற்றியோ அவன் பேசினாலும் பரவாயில்லை நாங்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் இவர்கள்.

நபியவர்களின் உரிமைப் போராட்டம் பற்றி மிம்பரில் பேசும் இவர்கள், கட்டுரைகளாக வடிக்கும் இவர்கள் அதனை நடைமுறைப் படுத்த தயங்குவது ஏன்?
இறுதியான ஒரு கோரிக்கை
தயவு செய்து தௌஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும் கலந்து கொண்டு கருத்து சொல்பவர்களாக இருந்தாலும் தௌஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்த சமுதாயத்தின் தலைமைகள் என்று சொல்லிக் கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களெல்லாம் அமைதியாக இருக்கும் நிலையில் நமது உரிமையில் கை வைப்பவர்களுக்கு எதிராக பாதையில் இறங்கி போராடும் இவர்களில் தைரியத்தை கொச்சைப் படுத்தாதீர்கள். 

நம்மால் முடியவில்லை என்பதற்காக தௌஹீத் ஜமாஅத் செய்ததை எதிர்ப்பது என்ன நியாயம்? என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

-ஹிபா- ( islamat ceylon )


இனவாதத்தை தூண்டியதா SLTJ யின் ஆர்ப்பாட்டம்.. இனவாதத்தை தூண்டியதா SLTJ யின் ஆர்ப்பாட்டம்.. Reviewed by Madawala News on 11/05/2016 03:35:00 PM Rating: 5