Kidny

Kidny

அன்பான SLTJ சகோதரர்களே! உங்களோடு சில நிமிடங்கள்.


அன்பான SLTJ சகோதரர்களே! 
உங்களது ஏராளமான பணிகளை எம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. எனினும் சில விடயங்களில் உங்களது நிலைப்பாடுகள், நீங்கள் சுன்னாவை அணுகுகின்ற விதம் அதனை முன்வைக்கின்ற போக்கு போன்றவற்றில் எமக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. 

அண்மையில் நீங்கள் அரங்கேற்றிய ஆர்ப்பாட்டத்தின் போது எல்லை கடந்து கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியமைக்கு ஆதாரமாக ஹுதைபியா உடன்படிக்கையின் போது அபூ பக்ர் ரழி அவர்கள் பேசிய வாசகங்களை ஆதாரமாக முன்வைத்துள்ளீர்கள். இதனை குர்ஆன் மற்றும் நபிகளாரின் தெளிவான வழிகாட்டலில் வைத்து நோக்கும் போது உண்மையில் அது பிழையான ஓர் ஆதாரமாகவே உள்ளது. 


ஹுதைபிய்யாவில் உர்வா பின் மஸ்ஊத் ரழி அவர்கள் வந்து பேசியபோது நபிகளாரின் சாணக்கியத்தையும் அவர்களது விட்டுக் கொடுப்பையும் மௌனத்தையும் கண்டு கொள்ளாத நீங்கள் அபூபக்ர் ரழி அவர்கள் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு கோபத்தில் சொன்ன வாசகங்களை தமக்கு ஆதாரமாக கொள்கிறீர்கள்..

மூச்சுக்கு முன்னூறு தடவை ஸஹாபாக்களை பின் பற்றுவது வழிகேடு என்றும் சொல்லிக் கொள்கிறீர்கள்.

கேட்டால் நபிகளார் அதை தடுக்கவில்லை எனவே அதுவும் நபிகளார் அங்கீகரித்த ஒரு சுன்னா என்பதாக தப்பித்துவிட நொண்டிச் சாட்டு வேறு. அப்படியாயின் இதே வழிகாட்டலை உங்கள் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்தால் அதுவும் தவறில்லையே.. உங்கள் வாப்பாவோடு அல்லாஹ்வுக்காக கோபப்பட்டு இப்படி சொல்வீர்களா ? தெருப்பொறுக்கிகள் பாதைகளில் உம்மா ..... வாப்பா .....

என்று ஆவேசப்பட்டு சப்தமிட்டு கூக்குரலிடுவதும் உங்களது பார்வையில் நபிகளாரின் வழிமுறைதான் என்று பகிரங்கமாக அறிவிக்க முடியுமா ? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அபூ பக்ர் ரழி அவர்கள் பேசியதை நபிகளார் குறித்த அந்த இடத்தில் கண்டிக்கவில்லை என்றால் அது அங்கீகாரமாகிவிடுமா ? அதே இடத்திலே குறித்த அந்த தவறை கண்டிக்கவில்லையென்றால் அது அங்கீகாரமாகிவிடும் என்றால் வாழ் நாள் முழுக்க கண்டித்தார்களே அதனை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை ? வாழ் நாளில் அவர்கள் எதிரிகளோடும் பகைவர்களோடும் எவ்வாறு பேசினார்கள் கோபம் அதிகரித்த நிலையிலும் எப்படி நடந்து கொண்டார்கள் என்ற வழிமுறைகளை அவர்களது ஸீராவை படிக்கின்ற சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயமே.


ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு இறை மறுப்பாளன் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை கடும் வார்த்தைகளால் தூசித்துக்கொண்டிருந்தான், இதை பார்த்து நபி (ஸல்) அவரகள் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள், சிறிது நேரம் மௌனமாக இருந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் பொறுமை இழந்து தானும் பதிலுக்கு கடும் வாரத்தைகளால் பதிலளிக்கலானார்கள் உடனே நபி (ஸல்) அவரகள் அதிருப்தியுடன் தான் அமர்திருந்த இடத்திலிருந்து விரைவாக அகன்றார்கள், பதறிப்போன அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் நபிகளாரை சந்தித்து பணிவாக காரணம் வினவ நபி (ஸல்) அவரகள் "அவன் உங்களை தூசித்துக்கொண்டிருக்கும் போது மலக்குமார்கள் உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள் நீங்கள் எப்போது அவனுக்கு கோபத்துடன் பதில் கொடுக்க ஆரம்பித்தீர்களோ மலக்குமார்கள் அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார்கள் ஷைதான் அவ்விடத்தை நிரப்பினான்,
ஷைதான் இருக்கும் சபையில் நான் இருப்பதில்லை" என பதிலளித்தார்கள்.
- முஸ்னத் அஹ்மத் - ஸஹ்ஹஹுல் அல்பானி.


இந்த செய்தியில் கூட நபிகளார் அபூபக்ர் ரழி அவர்களுக்கு உணர்த்த வரும் விடயத்தைப் புரிந்து கொண்டாலே போதும் அவர்கள் எவ்வளவு தூரம் தகாத வார்த்தைகளையும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும் கண்டித்திருக்கிறார்கள் என்பதனை.. குறித்த ஒரு செயலை அதே இடத்தில் உணர்த்தியிருந்தால்
அவர் இருந்த கோபமான நிலையில் அதனை உணர்ந்து கொள்ளமாட்டார் என்பதனையும் அதனை உணர்த்தும் சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமாகவும் உணர்த்தியுள்ளார்கள் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டும். 


அல்லாஹ் கூறுகிறான்: “நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுப்பீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போல் ஆகிவிடுவார். (41:34)
இறைவனின் இக்கட்டளைக்கு கொஞ்சமாவது செவிசாய்க்க வேண்டாமா ?

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி), (திர்மிதீ)

இந்த நபி மொழியிலுள்ள முஃமினின் வரைவிலக்கணக்கத்தை கொஞ்சமாவது சிந்தித்துணர வேண்டாமா ?


அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்” என்று கூறப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை; அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இணைவைப்பாளர்கள் நபிகளாரை எவ்வளவோ துன்புறுத்தியும் கூட அவர்களுக்கெதிரான ஏச்சுக்களையோ வசைபாடல்களையோ சாபமிடல்களையோ நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து உங்களால் காட்ட முடியுமா ?

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, ஏசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில் “அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்” என்று சொல்பவர்களாக இருந்தார்கள் (ஸஹீஹுல் புகாரி)

நபிகளாரின் உச்சகட்ட கோப நேரத்தில் கூட நபிகளாரின் முன்மாதிரிகள் இவ்வாறிருக்க இதனை விட்டு விட்டு நீங்கள் மறுக்கின்ற ஒன்றை வலிந்து ஆதாரமாகக் கொள்வது எவ்வகையில் நியாயமாகிவிடப்போகிறது.

சரி உங்களது வாதப்படி குர்ஆன் ஹதீஸில் அல்குர்ஆனை முற்படுத்தவேண்டும் அங்கு இல்லாத ஒரு விடயம் என்றால் ஸஹீஹான ஹதீஸ்களைப் பார்க்க வேண்டும்
அப்படியிருக்கையில் அல்குர்ஆனில் நான் தான் ரப்பு என்று வாதிட்ட உலகின் மிகப்பெரிய அநியாயக்காரன் பிர்அவ்னுடன் ( மூஸா , ஹாரூன் ஆகிய ) நீங்களிருவரும் பேசும் போது நிதானமாதகவும் மென்மையாகவும் பேசுங்கள் என்ற இறை கட்டளைக்கு முரணாக வந்திருக்கின்ற அபூபக்ர் ரழி அவர்களின் கருத்துக்களை பொதிந்துள்ள அந்த அறிவிப்பை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று தட்டிவிடவேண்டுமே.. சரி அப்படித்தான் முடியாவிட்டாலும் அமலுக்கு பொருத்தமற்றது என்று கூட சிந்திக்க வேண்டாமா ?

ஹதீஸ்களில் சொல்லை
முற்படுத்துவதா? செயலை முற்படுத்துவதா? என்று ஒரு பகுதியுண்டு அப்படியிருக்கையில் தெளிவான குர்ஆன் , ஹதீஸை விட்டு விட்டு ஸஹாபியின் கருத்துக்கு போவச் சொன்னது மனோ இச்சையே அன்றி வேறில்லை..

புத்திக்கு படாத ஸஹீஹான ஹதீஸையே மறுத்த நீங்கள் உங்களது நிலைப்பாட்டை சரிசெய்ய ஸஹாபாக்களின் கருத்துக்களை தூக்கிப்பிடித்து குர்ஆன், ஸுன்னாவை உதறித்தள்ளுவது ஏன்?

குர்ஆனும் , ஸஹீஹான ஹதீஸும் என்ற நீங்கள் இப்போது இரண்டையும்
விட்டு விட்டு ஸஹாபாக்களில் தொங்குவது ஏன் ?

குர்ஆனின், ஹதீஸின் போதனைகளை விட அபூபக்ர் ரழி அவர்களின் கருத்துக்கள் ஆதாரமானதுதான் நகைப்புக்குரிய விடயமாகத் தெரிகிறது.

நல்லதைப் பாராட்டுவதும் தவறென்று தெரிகின்ற போது உணர்த்துவதும் எமது கடமை, அல்லாஹ் நமது முயற்சிகளை பொருந்திக் கொள்வானாக.

- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி
அன்பான SLTJ சகோதரர்களே! உங்களோடு சில நிமிடங்கள். அன்பான SLTJ சகோதரர்களே! உங்களோடு சில நிமிடங்கள். Reviewed by Madawala News on 11/21/2016 07:01:00 PM Rating: 5