Ad Space Available here

டாக்டர், எஞ்சினியர் மாப்பிள்ளைகள் தேடுவது போல் இனி ட்ரபிக் பொலிசாருக்கும் மவுசு கூடும்..தண்டத்தொகை 500 ,1000 ஆக இருந்த கடந்த காலங்களில் கூட..
இலங்கையில் ஆக கூடுதலாக போக்குவரத்து சட்டங்களை மீறுகிற ஆட்டோக்காரர்களோ, பேருந்து ஓட்டுனர்களோ அதிகமாக தண்டப்பணம் செலுத்துவதில்லை.

ட்ரபிக் பொலிசார் அவர்களை பெரிதாக விரட்டுவதுமில்லை.
காரணம் பொருளாதார நிலையில் அவர்கள் பின்தங்கியவர்கள் என்ற கருத்தியல் உண்டு.

பெரிதாக அவர்களிடம் கறப்பது கடினம்.

நெடுஞ்சாலைகளில் காடு மரங்களுக்குள் கள்வனைப்போல் ஒழிந்திருந்து திடீரென நடுவீதியில் மாயாவி போல் பாய்ந்து அமுக்குவது பெரும்பாலும் காரோட்டிகளைத்தான்....

காரோட்டுபவர்கள் பணக்காரர்கள் அல்லது பணக்காரர்களின் சாரதிகள் அதனால் அவர்களிடம் இலகுவாக கறந்துவிடலாம் என்ற உறுதியான நம்பிக்கை தொண்டு தொட்டு ட்ரபிக் பொலிஸாருக்கு உண்டு.
அதிகவேகம் 76 என்று மீட்டரை காட்டி ஒரு காரோட்டியை அமுக்கியிருப்பார்கள், அதே நேரம் இன்னொரு பேருந்து அதே வீதியால் 100 இற்கும் அதிகவேகத்தில் லாவகமாக பறந்துகொண்டிருப்பான்.
ட்ரபிக் பொலிஸ் கண்ணுக்கு அது தெரியாது.

வந்தாறுமூலை பகுதியில் ஓவர் ஸ்பீட் என கூறி என்னை ஒரு முறை காருடன் அவர்கள் அமுக்கிவைத்திருந்த போது அவ்வழியே அமைச்சர் ஒருவரின் வாகனத்தொடரணி மின்னல் வேகத்தில் பறந்து போனது.
நான் அதனை பற்றி கேள்வி எழுப்பினேன்.

நாட்டில் சகலருக்கும் சட்டம் என்பது சமனானதுதானே என்று தர்க்கப்பட்டபோது....

500 ரூபா பகாவில் முடியவேண்டிய எனது கேஸை நீதி மன்றத்திற்கு இழுத்தார்கள்.
Rest was history.

சில நீதிமன்ற சம்பிரதாயங்கள் கருதி அந்த நிகழ்வின் முடிவை தவிர்க்கிறேன்.
இப்போது சில குற்றங்களை வகைப்படுத்தி குறைந்த தண்டத்தொகையாக 2500 அமுலாகிறது. இன்னும் சில பாரிய குற்றங்களுக்கு 25000, இதில் அதிகவேகமும் அடக்கம்.

இந்த தண்டத்தொகைக்கு பலியாகப்போவதும் காரோட்டிகளே!
வேகமாக காலி வீதிகளில் ரேஸ் ஓடுகிற பஸ்காரனையோ, முடுக்குச்சந்துகளில் முட்டி மோதுகிற முச்சக்கர வண்டிக்காரனையோ நிறுத்தி இவர்கள் தண்டம் கோரப்போவதில்லை.

இதற்கு செலவழிக்கும் நேரத்தில் நான்கு கார்களை மடக்கினால் நாற்பதினாயிரமாவது தேறும் என்ற மனநிலைக்கு நமது தேசத்தின் போக்குவரத்து பொலிசாரை இந்த தண்ட அதிகரிப்பு கொண்டுவருமே தவிர, அதன் பிரதான நோக்கங்களை ஒரு போதும் நிறைவு செய்யாது.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப்பாதீட்டினால் நாட்டின் சாதாரண பிரஜையின் குடிசைக்கு குப்பி விளக்கு ஏற்றுவதற்கு முடிந்ததோ என்னவோ.....

ட்ரபிக் பொலிஸ் வாழ்வில் வளம் கொழிக்கும் ஒளியினை பாய்ச்சியிருக்கிறது.

டாக்டர், எஞ்சினியர் மாப்பிள்ளைகள் தேடுவது போல் இனி ட்ரபிக் பொலிசாருக்கும் மவுசு கூடும் போல்தான் தெரிகிறது!

வாழ்க தேசத்தின் சட்டங்கள்.
வாழ்க ட்ரபிக் பொலிஸ்.

- முஜிப் இப்ராஹீம் -
டாக்டர், எஞ்சினியர் மாப்பிள்ளைகள் தேடுவது போல் இனி ட்ரபிக் பொலிசாருக்கும் மவுசு கூடும்.. டாக்டர், எஞ்சினியர் மாப்பிள்ளைகள் தேடுவது போல் இனி ட்ரபிக் பொலிசாருக்கும் மவுசு கூடும்.. Reviewed by Madawala News on 11/22/2016 09:01:00 AM Rating: 5