Free Space

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில்...



அனா

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதி கோரி ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் இன்று புதன்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் அம்பிட்டிய சுமனரத்ன தேரோவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக முன்பாக உள்ள வீதியோரத்தில் கறுப்பு பட்டி அணிந்து ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையான பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கச்சைக்கொடி கிராமத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கச் சென்றிருந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அலுவலர், காணி அதிகாரி உட்பட  அதிகாரிகளுக்கு இவரால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை கண்டித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கிராம சேவை உத்தியோகத்தரின் தேசிய உடை நிர்வாணமா?, காவியுடையே நீ மதகுருவா மடக்குருவா?, தரம் கெட்டு பேசும் நீ பிக்குவா? மக்குவா?, மதம் பிடித்த காவிக்கு சட்ட நடவடிக்கை உண்டா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதைகளுடன் வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்நல்லாட்சி அரசாங்கம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் அம்பிட்டிய சுமனரத்ன தேரோவை உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்றுமாறும், இந்நடவடிக்கை தொடர்பாக மன்னிப்பு கோர வேண்டும் இவ்வாறு இடம்பெறவில்லையாயின் எமது பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் எதிர்காலத்தில் தொடருமென கிராம சேவை உத்தியோகத்தர்கள் கருத்து தெரிவித்தார்.

இந்தப் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் வீதியோரத்தில் நடைபெற்ற போது இதற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வாறான பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில்... கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில்... Reviewed by Madawala News on 11/16/2016 01:34:00 PM Rating: 5