முஸ்லிம்களுக்கான தடை குறித்த வாசகங்கள் மீண்டும் டிரம்ப் இன் இணையத்தில் சேர்க்கபட்டது.



அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையில் அடுத்ததாக அமையவிருக்கும் அரசில் தற்போதுள்ள குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ளும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

டிரம்ப் தலைமையிலான புதிய அரசில், மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவது,

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு நுழைவு இசைவு சீட்டு (விசா) வழங்க மறுப்பது,

குடியேற்றக் கொள்கையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

மதவெறி சித்தாங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள், அணு ஆயுதங்கள், இணையதளத் தாக்குதல் ஆகிய மூன்று விவகாரங்களுக்கு டிரம்ப் அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

குடியேற்றக் கொள்கைகளைப் பொறுத்தவரை, 10 அம்சத் திட்டங்களை உருவாக்கி, விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் பிரசாரத்தின்போது குடியேற்ற விதிகள் குறித்து டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நாட்டின் தெற்கு எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவது மட்டுமின்றி, எல்லை தாண்டி அத்துமீறி நுழைபவர்களைக் கைது செய்து உடனடியாக விடுவித்து விடும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

மேலும், குற்றச் செயல் புரியும் குடியேற்ற வாசிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வது,

குடியேற்ற வாசிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பகுதிகளுக்கு நிதியுதவியை ரத்து செய்வது,

குடியேற்ற விதிகளை மிகக் கடுமையாக செயல்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

அமெரிக்காவுக்கு வரும் நபர்களின் பின்னணி குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நாடுகளிலிருந்து, யாருக்கும் நுழைவு இசைவு வழங்குவதைத் தடைசெய்வது,

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பும்போது அவர்களை பிற நாடுகள் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வது ஆகியவை குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சட்டத்துக்குட்பட்ட குடியேற்ற முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம் என்று டிரம்ப்பின் ஆட்சி மாற்றக் குழுவினர் தெரிவித்தனர்.

முஸ்லிம்களுக்கான தடை குறித்த வாசகங்கள்: டிரம்ப் வலைத்தளத்திலிருந்து தற்காலிக நீக்கம்

தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்களுக்குத் தடை விதிப்பதாக டொனால்டு டிரம்ப் கூறிய வாசகங்கள், அவரது தேர்தல் பிரசார வலைதளத்திலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டன.

எனினும், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து, அந்த வாசகங்கள் இணையதளத்தில் மீண்டும் இடம்பெற்றன.

இதுகுறித்து டிரம்ப்பின் தேர்தல் பிரசார நிர்வாகிகள் கூறியதாவது:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேர்தல் பிரசார வலைதளத்தில் இடம் பெற்றிருந்த சில வாசகங்கள் மறைந்தன. தற்போது அது சேர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சான் பெர்னாடிகோ, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவில் முஸ்லிம்கள் அனுமதிக்குத் தடை விதிக்கப் போவதாகக் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கான தடை குறித்த வாசகங்கள் மீண்டும் டிரம்ப் இன் இணையத்தில் சேர்க்கபட்டது. முஸ்லிம்களுக்கான தடை குறித்த வாசகங்கள் மீண்டும் டிரம்ப் இன் இணையத்தில் சேர்க்கபட்டது. Reviewed by Madawala News on 11/12/2016 08:57:00 AM Rating: 5