Kidny

Kidny

விரைவில் நல்ல கள்வர்கள் பிடிபடுவார்கள். U.N.P அமைச்சர்."இன்று பிரதேச செயலாளர் காரியாலயம் ஒன்றுக்கு முன்னரை விட மும்மடங்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அத்தோடு சமுர்த்திக்கு ஒதுக்கப்படும் நிதியும் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த அதிகரிப்பினால் எமது கட்சியினருக்கு எவ்வித பிரதிபலனும் இல்லை. இது மாபெரும் அநீதி. எங்களுக்குத் தெரியும், சென்ற காலங்களில் சமுர்த்தி ஊழியர்கள் பணி புரிந்தது முன்னைய அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்காகும். அக்காலங்களில் எவ்வளவு தகுதி இருந்தாலும் ஐ.தே.க. இற்கு வாக்களித்தால் அவர்களின் சமுர்த்தி இரத்துச் செய்யப்படும் நிலைமை காணப்பட்டது. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் அரச ஊழியர்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இன்று எங்களது அரசு சகல கொடுப்பனவுகளையும் அதிகரித்துள்ளது.

இத்தருணத்திலும் எங்களது கட்சியினர் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐ.தே.க. இனருக்கே பூரண உரித்து இருந்தது. அவ்வாறு பாடுபட்டவர்களுக்கு இன்னும் அநீதிகள் இழைக்கப்படுவதாக இருந்தால், அவற்றுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களுடன் வீதிக்கு இறங்குவோம்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சென்ற 03 ஆந்திகதி படல்கும்புர, மடுகஸ்முல்ல பழைய கதிர்காமம் வீதியை புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்காக ரூபா 230 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "பட்டப்பகலில் கொள்ளை நடாத்திய கூட்டுக் கள்வர்கள் இன்று எம்மிடம் கேட்கிறார்கள், இந்த அரசு கடந்த ஒன்றரை வருடங்களாக என்ன செய்தது என்று. அக்கேள்விக்கு மொனராகலையில் இருந்து மாத்திரம் சில உதாரணங்களைச் சொல்கிறேன். 1977 இற்கு முன்னர் இம்மாவட்டத்தில் ஒரே ஒரு தேசிய பாடசாலையே இருந்தது. ஆனால் நாங்கள் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து 1994 ஆண்டை அடையும் போது இம்மாவட்டத்தில் 9 தேசிய பாடசாலைகளை அமைத்திருந்தோம். அப்பாடசாலைகள் மூலம் பல்கலைக்கழகம் நுழைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் எம்மிடம் என்ன செய்தீர்கள் என்று கேட்பவர்கள் இருபது வருடங்களாக இப்பிரதேசத்தில் ஒரு பாடசாலையையாவது அபிவிருத்தி செய்ய முடியவில்லை. மறுபடியும் அபிவிருத்தியானது எமது அரசில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது 'அருகிலுள்ள பாடசாலை, சிறந்த பாடசாலை' என்ற வேலைத்திட்டமாகும். இதன் கீழ் மாவட்டத்திலுள்ள 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவதுடன், மேலும் 121 பாடசாலைகள் சகல வளங்களும் கொண்டதாக புனரமைக்கப்பட்டுள்ளது.

இன்று ஊவா முதலமைச்சர் பாடசாலைகளை அபிவிருத்தி செய்கிறார். அது நல்லதுதான். ஆனால் அந்த நிதி மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ள 18000 இலட்ச ரூபா நிதி என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும். வரலாற்றில் முதன்முதலாக இவ்வளவு நிதி ஊவா மாகாணக் கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டிலுள்ள அரசியல் கலாசாரம் விசித்திரமானது. தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது. சென்ற முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சொய்ஸா அவர்கள் இன்று நாடாளுமன்றம் சென்ற அமைச்சராக உள்ளார். ஆனால் அவரினது கட்சியின் 20 வருட ஆட்சியில் செய்ய முடியாத அபிவிருத்திகளை இன்று செய்கிறார். அது நல்லதுதான். ஆனால் அப்படி செய்யும் போது அவர் நீல நிறக்கொடிகளைப் பயன்படுத்துகிறார். இது நல்லதல்ல. ஏனென்றால் இது ஐ.தே.க. அரசாங்கம். அவர் இன்று அமைச்சராக இருப்பது எங்களது கட்சியினர் மைத்திரிபால அவர்களை ஜனாதிபதியாக்கியதுடன் ஜனாதிபதியவர்களுக்குக் கட்சித்தலைமைப் பதவி கிடைத்ததாலாகும். அப்படிப்பார்த்தால் சொய்ஸா அவர்களையும் அமைச்சராக்கியது ஐ.தே.க.யினராவர்"

"அத்துடன் இன்று மத்திய வங்கியின் கணக்கு சம்பந்தமாக சில அரசியல் அநாதைகள் கூச்சலிடுகின்றனர். நாங்கள் இது சம்பந்தமாக வௌிப்படையாக செயற்படுகின்றோம். அன்றும் கோப் குழு இருந்தது. ஆனால் அன்று அதனது தலைவராக அரசின் சார்பில் ஒருவர் இருந்தார். ஆனால் இன்று நாம் அப்பதவியை எதிர்க்கட்சியான ஜே.வி.பி.க்கு வழங்கியுள்ளோம். அன்று நடைபெற்ற ஊழல்களை நாம் தொடரவேண்டும் என்றால் எங்களது ஒருவரையே தலைவராக்கியிருக்கலாம். அவ்வாறு செய்யாததனாலேயே நாம் அதனை எதிர்க்கட்சியிற்கு வழங்கியுள்ளோம். எங்களுக்கு ஞாபகமிருக்கிறது, சென்ற அரசின் தலைவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படும் போது அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தற்போது தயாரிக்கப்படும் அறிக்கையில் சென்ற அரசினால் செய்யப்பட்ட ரூபா 33000 கோடி மோசடியும் வௌிவரும். நாங்கள் களவு செய்வதும், கள்வர்களைப் பாதுகாப்பதுமான அரசு அல்ல.

கள்வர்களைப் பிடித்தீர்களா? என்று கேட்பவர்களிடம் நான் சொல்கிறோன், விரைவில் நல்ல திருடர்கள் பிடிபடுவதைப் பார்க்கப்போகிறீர்கள். அதே போன்று நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம். இந்த 5 வருடங்களில் யாராலும் இவ்வரசை வீழ்த்த முடியாது. சரியான காலம் வருகையில் நாட்டிற்கு பாரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்து, எதிர்வரும் தேர்தல் பலமான அரசொன்றை அமைப்போம்." என்றார்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி - 
விரைவில் நல்ல கள்வர்கள் பிடிபடுவார்கள். U.N.P அமைச்சர். விரைவில் நல்ல கள்வர்கள் பிடிபடுவார்கள். U.N.P அமைச்சர். Reviewed by Madawala News on 11/08/2016 02:12:00 PM Rating: 5