Free Space

மாணவர்கள் இறந்தது, தற்செயலாக நடந்த விபத்து என வாக்குமூலம் கொடுக்கவும். பொலிஸார் வேண்டுகோள்.



யாழ். கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்தமை தற்செயலாக நடந்த விபத்து என வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸார் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தியதாக நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணியூடாக இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

யாழ். கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு நீதவான் எஸ். சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை சட்டத்தரணியூடாக விசாரணை செய்வதற்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், யாழ். பொலிஸ் நிலையத்தின் ஆயுதக்களஞ்சியம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸார் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 16 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போதிலும், மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கி சூட்டுக்காயம் காணப்பட்டது.

இதனை அடுத்து, மாணவர்கள் உயிரிழந்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் இறந்தது, தற்செயலாக நடந்த விபத்து என வாக்குமூலம் கொடுக்கவும். பொலிஸார் வேண்டுகோள். மாணவர்கள் இறந்தது,  தற்செயலாக நடந்த விபத்து என வாக்குமூலம் கொடுக்கவும். பொலிஸார் வேண்டுகோள். Reviewed by Madawala News on 12/02/2016 04:08:00 PM Rating: 5