Kidny

Kidny

சுயாதீன ஆணைக்குழுக்கள் தத்தமது சுயாதீனத்தை உரிய விதத்தில் உறுதிப்படுத்த வேண்டும்..


நாட்டில் இன ரீதியான பிளவுகளை ஏற்படுத்த முனைகின்றவர்களுக்கெதிராக சுயாதீன நீதிச் சேவை ஆணைக்குழு, பொலிஸ் நீதிச் சேவை ஆணைக்குழு என்பன உருவாக்கப்பட்டுள்ள போதும் அவைகள் தத்தமது சுயாதீனத்தை உரிய விதத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என (29.11.2016ஆந்திகதி செவ்வாய்கிழமை) நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவசர பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...

கடந்த காலங்களில் அரசியல் வாதிகள் இனவாதத்தினை தோற்றுவிக்க முற்பட்டவேளை ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் பெரும்பான்மை மதத்தினைச்சேர்ந்த ஒரு சில மதகுரு மார்களின் இனவாதத்தினை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் மிகவும் கவலையளிக்கின்றது. அதேவேளை 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இந்நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான சுயாதீன அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ள போதும் அத்தகைய சுயாதீன ஆணைக்குழுக்கள் இத்தகைய இனவாத செயற்பாடுகளின்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்லாமையானது அவ்வாறான சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை மீது உள்ள நம்பிக்கையினை இழக்கச் செய்கின்றது. இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இந்நாட்டினுடைய மக்கள் என்பதனை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளாமையே இத்தகைய இனவாத மனப்பான்மைகள் உருவாவதற்கான பிரதான காரணங்களாகும்.

சிங்கள வரலாற்று மூலாதாரமான மஹாவம்சம் நூல் கூறும் போது "விஜயனும் அவனது இருநூறு தோழர்களும் வங்க தேசத்திலிருந்து விரட்டப்பட்டு தோணியில் இலங்கை தம்பபண்ணியில் வந்து இறங்கியபோது இலங்கையில் இயக்கர்கள், நாகர்கள் என்று இரு கூட்டத்தினர் வாழ்ந்து வந்தனர். விஜயன் இயக்கர் குலத்தை சேர்ந்த குவேனி என்ற பெண் மீது காதல் கொண்டு அவளை திருமணம் செய்தான்." என்றும் அதிலிருந்துதான் சிங்கள இனத்தின் வரலாறு ஆரம்பிப்பதாகவும் சிங்கள வரலாற்று மூலாதாரமான மஹாவம்சம் நூல் கூறுகின்றது.

மேலும் “விஜயனின் பேரக்குழந்தையான பண்டுவாச தேவ (3ஆம் சிங்கள மன்னன்) அப்போதைய பூர்விகக் குடிகளான சோனகர்களுடன் மிகவும் நட்புறவைப் பேணினான். அனுராதபுரத்துக்கருகில் அவர்களைக் குடியமர்த்தி வைத்திருந்தான்.” எனவும் அது குறிப்பிடுகின்றது. ஆகவே இதிலிருந்து பார்க்கும் போது இந்நாட்டின் மக்கள் அனைவரும் இந்நாட்டினுடைய பூர்வீக குடிமக்கள் என்பது உறுதியாகின்றது. இத்தகைய சமத்துவமான மன நிலை அனைத்து மக்களுக்கும் வர வேண்டும்.

மேலும் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தமக்கிடையில் நீண்ட காலமாக நிலவிவந்த கசப்புணர்வுகளை மறந்து தற்போது சுமுகமாக வாழ்ந்து வாருகின்ற ஒரு நிலையில் இரு சமூகத்திற்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முகமாக ஒரு சில தீய சக்திகளால் புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்துவரக்கூடாது என்றும், சேலை மாத்திரமே அணிந்து வர வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்த போதும் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

ஆகவே இத்தகைய இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு இனவாத செயற்பாடுகளை யார் முன்னடுத்தாலும் இந்நாட்டிலுள்ள உரிய சுயாதீன ஆணைக்குழுக்கள் தம்முடைய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவதன் மூலம் தம்முடைய சுயாதீனத்தினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தத்தமது சுயாதீனத்தை உரிய விதத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.. சுயாதீன ஆணைக்குழுக்கள் தத்தமது சுயாதீனத்தை உரிய விதத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.. Reviewed by Madawala News on 12/01/2016 09:47:00 PM Rating: 5