Ad Space Available here

தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் கைது செய்யப்பட்டமை அரசியல் மயமாகின்றது.-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

அவர்களது ஆர்பாட்டம் மற்றும் அதற்கெதிரான பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் என்பன ஒரே அரசியல் பின்புலம் கொண்டதாக இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹகீம் பகிரங்கமாக கூற அதே கட்சியின் தவிசாளர் இல்லை இல்லை அப்துல் ராஸிக் தலைவர் அஷ்ரபின் மறு வடிவம் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜித முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் புலனாய்வு பிரிவுடன் தொடர்புபடுத்தி தகவல் வெளியிட்திருந்தமை அறிவோம்.
தற்பொழுது அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான இணைய தளங்கள் அவரது சட்டத்தரணிகளே சகோதரர் அப்துல் ராஸிக் அவர்களது பிணைக்கு எதிராக தீவிரம் கட்டுவதாக உலமாக் கட்சி முபாரக் மௌலவியை தொடர்பு படுத்தி தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமது பங்கிற்கு ஆஸாத்ஸாலி, மற்றும் அவரது சகோதரர் ரியாஸ் ஸாலி ஆகியோரும் கைதுக்கு ஆதரவாக கருத்து வெளிட்திருந்தனர்.
மேற்சொன்ன சகலருக்கும் தத்தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் இருக்கின்றன.

உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத், அதனது தீவிரப்போக்கு குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும், அவர்கள் அரசியல் சாக்கடைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு சீரழிந்தவர்கள் அல்லர் என்பது உண்மையாகும்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் உள்வாங்கப்படுகின்ற அல்லது பாதிப்புறுகின்ற அவர்கள் அரசியல் களத்திற்குள் பலவந்தமாக தள்ளப் படுகின்றார்கள் என ஊகிக்கலாம்.


சகோதரர் அப்துல் ராசிக் குறித்தோ SLTJ குறித்தோ புதிதாக சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து அவர்களும் சமூகமும் மிகவும் நிதானமாக வெளியே வரல் வேண்டும்.
இனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் மிகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் கூட்டுப் பொறுப்புணர்வுடன் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்றும் அவர்களது வேகத்தை விவேகத்துடன் நெறியாண்டு முதிர்ச்சியுள்ள சமூக அமைப்பாக அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ஊழல் மோசடிகளும் பொய்யும் உருட்டும் புரட்டும் திருட்டும் காடைத் தனங்களும் நிறைந்த மட்டரகமான சூதாட்ட அரசியல் கலாசாரத்தை மாற்றீடு செய்ய அவர்களது தூய்மை வாத சீர்திருத்தப் பணிகள் எதிர்காலத்தில் உச்சகட்ட சாணக்கியத்துடன் இடம்பெற வேண்டும்.
நாளை ஒருநாள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பொறுப்புள்ள ஒரு முஸ்லிம் தலைமையாக அவர்கள் மிளிர வேண்டும் என்றும் எதிர்பார்கின்றேன்.

இஸ்லாமிய இலட்சியப் பயணத்தில் அரசியல் இறுதி இலக்காக இல்லாவிட்டாலும் பிரதானமான ஒரு வஸீலா ஆகும் என்பதனை அவர்களும் இப்பொழுது உணர்ந்திருப்பார்கள், அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம்கள் பறிகொடுத்துப் பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.

அவர்களை இஸ்லாமிய அடிப்படிவாத தீவிரவாதசக்திகளாக தேசத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் காட்டவும் அதனடிப்படையில் பேரின தீவரவாதிகளை ஊக்க்விக்கவும் வேண்டிய தேவைப்பாடு பல்வேறு சக்திகளுக்கு இருக்கின்றமை தெளிவாகவே தெரிகின்றது.

இந்த நிலையில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பொருத்தமான ஏதேனும் ஒரு வழியில் அல்லது பொறிமுறையில் அவர்கள் இணைந்து கொள்வது சமயோசிதமான நகர்வாக இருக்கும் என எதிர்வு கூறலாம்.
நிகழ்வுகள் சம்பவங்களால் உந்தப்படாது அவற்றிற்குப் பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல்கள் குறித்து சகல தரப்புக்களும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

பல்கோண பல்பரிமாண சவால்கள் நிறைந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப் படாமல் இருப்பதனையும்,பலிக்கடாவாக்கப் படாமல் இருப்பதனையும் அவர்களும் சமூகத்தின் பொறுப்புள்ள தலைமைகள் அவதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் கைது செய்யப்பட்டமை அரசியல் மயமாகின்றது. தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் கைது செய்யப்பட்டமை அரசியல் மயமாகின்றது. Reviewed by Madawala News on 12/02/2016 12:02:00 PM Rating: 5