Kidny

Kidny

கருணா அம்மானின் கைதும், அதனுள் புதைந்து கிடக்கின்ற அரசியல் பின்னணியும்.முகம்மத் இக்பால் : சாய்ந்தமருது 

முன்னாள் பிரதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதி தலைவருமான கருணா அம்மான் என்று அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் கடந்த 29.11.2௦16 ஆம் திகதி நிதி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அரச வாகனத்தை பயன்படுத்துவதில் துஸ்பிரயோகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைக்காக அழைக்கப்பட்டே அவர் கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டானது பாமரமக்களை நம்ப வைப்பதற்காக கூறலாமே தவிர அரசியல் ஆய்வாளர்களினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு குற்றச்சாட்டாகும்.

கருணா அம்மான் அவர்கள் மகிந்தவின் ஆட்சியில் வெள்ள வேனை கொண்டு பலரை கடத்தியமை, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொலை செய்தமை, யுத்தக்குற்றம் போன்ற ஆதாரபூர்வமான பாரிய குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்திருந்தால் அதனை ஓரளவாவது ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

ஆனால் கோடிக்கணக்கான அரச சொத்துக்களை கொள்ளையடித்த எத்தனையோ அமைச்சர்களும், அதிகாரிகளும் அரசாங்கத்துடனும், மகிந்த அணியுடனும் இருக்கத்தக்கதாக வாகனத்தை துஸ்பிரயோகம் செய்தார் என்ற சிறிய குற்றத்துக்காக கருணா அம்மானை கைது செய்ததனை யாராலும் நம்ப முடியாத ஒரு விடயமாகும்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் கருணா அம்மான் ஒரு தமிழ் தேச துரோகியாக பார்க்கப்பட்டாலும், சிங்களவர்களை பொறுத்தவரையில் அவர் ஒரு கதாநாயகனாகவே பார்க்க படுகின்றார். இந்த நாட்டில் இன்று இருக்கின்ற சமாதானம் உருவாகுவதற்கு கருணா அம்மானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்திருக்காவிட்டால் விடுதலை புலிகள் அமைப்பினை தோற்கடிக்க செய்திருக்க முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆறாயிரம் போராளிகளை விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்தது மட்டுமல்லாமல், அரசாங்கம் அறிந்திராத விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வு மற்றும் இராணுவ  கட்டமைப்பு போன்றவற்றின் இரகசியமான தகவல்கள் கருணா மூலமாகவே அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பை வெற்றிகொள்ள செய்ய வழிவகுத்தது. இப்படிப்பட்ட கருணாவை வாகனத்தினை துஸ்பிரயோகம் செய்தார் என்று குற்றம் சுமத்தி சிறையில் அடைத்ததனை ஏற்றுக்கொள்ளலாமா?

மகிந்த ராஜபக்ஸ அவர்கள் அதிகாரத்தில் இல்லாதுவிட்டாலும் கருணா அம்மானுக்கும், மகிந்தவுக்கும் இடையிலான உறவு இன்றும் பலமானதாகவே இருக்கின்றது. எப்படியும் இந்த நல்லாட்சி நிலைக்காது என்றும் மிக விரைவில் மகிந்த அவர்கள் ஆட்சியை மீண்டும் கைப்பெற்றி விடுவார் என்ற நம்பிக்கையுமே அதற்கு காரணமாகும்.      

பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை வழக்கில் தற்போது திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதாவது கருணாதான் ரவிராஜை கொலை செய்தார் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்க பட்டுள்ள நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லகூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனாலேயே அதனை தடுக்கும் பொருட்டு வாகன துஸ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டினை முன்னிறுத்தி கருணா அம்மானை சிறையில் அடைத்திருக்கலாம் என்றும் ஊகிக்க தோன்றுகின்றது.

அத்துடன் கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று ஏற்பட்டு ஆட்சி மாறலாம் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டதனை நாங்கள் தட்டிக்கழிக்க முடியாது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அவர்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படையாக இந்த விடயத்தினை கூறிய பின்பே இந்த இராணுவ புரட்சி விடயம் பலராலும் பேசப்பட்டது.

இந்த இராணுவ புரட்சியின் பின்னணியில் சீனா இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. அண்மையில் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது அந்த பயணத்தின் பிற்பாடுதான் இராணுவ புரட்சி பற்றிய கதைகள் பரவலானது.  

அப்படி ஒரு இராணுவ புரட்சி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தால் அதில் கருணாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இதனை அறிந்துதான் சில முக்கிய இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

எனவேதான் ரவிராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கருணா அம்மான் நாட்டை விட்டு தப்பி ஓடாமல் இருப்பதற்காகவும், இராணுவ புரட்சி ஒன்று ஏற்படுவதாக இருந்தால் அதில் கருணாவின் வகிபாகம் மகிந்தவுக்கு சென்றுவிட கூடாது என்றவகையிலும் கருணா அம்மான் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்பதுதான் உண்மையாகும்.

எதிர்வரும் நாட்களில் ஒய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணவர்த்தன உற்பட வேறு இராணுவ உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டால் இந்த விடயம் உண்மை என உறுதிப்படுத்தப்படும். அதுவரைக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.  
கருணா அம்மானின் கைதும், அதனுள் புதைந்து கிடக்கின்ற அரசியல் பின்னணியும். கருணா அம்மானின் கைதும், அதனுள் புதைந்து கிடக்கின்ற அரசியல் பின்னணியும்.  Reviewed by Madawala News on 12/01/2016 07:24:00 PM Rating: 5