Kidny

Kidny

விஷேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பம்.. கல் வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள் போலீஸ் பிடியில்.



நீதிபதியின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள், மக்களுக்கு காயம் ஏற்படுத்தியவர்களை  கைதுசெய்ய தொடர்ந்தும் விஷேட சுற்றிவளைப்புக்கள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகம் மற்றும் உத்தேச தொழிற்பூங்காவைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பித்து, கடந்த வௌ்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எனினும், அந்த உத்தரவை மீறி நேற்று காலை அம்பலன்தோட்டை நகர் மற்றும் உத்தேச தொழிற்பூங்காவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பேராட்டத்தால் அந்தப் பிரதேசங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

இந்தநிலையில் இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களால் பொலிஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, காயமடைந்த பொலிஸார் உட்பட 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 52 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் 23 பேரை நேற்று ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை, அதில் 21 பேரை நாளை வரையிலும், ஏனைய இருவரை எதிர்வரும் 11ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அப் பகுதியின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப் பகுதியில் தற்போது இயல்பு நிலை காணப்படுவதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விஷேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பம்.. கல் வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள் போலீஸ் பிடியில். விஷேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பம்.. கல் வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள் போலீஸ் பிடியில். Reviewed by Madawala News on 1/08/2017 10:44:00 AM Rating: 5