Yahya

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தமும் சிலரின் குழப்பங்களும் - பாகம் 2


மனித உரிமைகள் சட்டம்- என்பது என்ன?

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பாக உலமா சபைக்கெதிரான விமர்சனத்தின் ஒரு பிரதான அம்சம், ' அடிப்படை மனித உரிமைகளை முடக்குகின்ற வகையில் இஸ்லாத்திற்கு மரபு ரீதியான விளக்கங்களை உலமா சபையினர் வழங்குகின்றார்கள்; என்பதாகும். அதாவது, சர்வதேச அடிப்படை மனித உரிமை என்பது இஸ்லாத்தைவிட உயர்ந்தது. குர்ஆன், ஹதீஸை, மனித உரிமைகளுக்கு உடன்படக்கூடிய விதத்தில் நவீன வியாக்கியானங்களைச் செய்யவேண்டுமே தவிர, அடிப்படை மனித உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. இதனைச் செய்யக்கூடிய தகுதி, அறிவு இன்றைய உலமா சபையில் இருப்பவர்களுக்கு இல்லை. எனவே உலமா சபைக்கு சமாந்தரமாக, இஸ்லாத்திற்கு நவீன விளக்கம் கொடுக்கக் கூடிய பத்திஜீவிகளைக் கொண்ட ஒரு  சபை தெரிவு செய்யப்பட வேண்டும்; என்பது அவர்களது நிலைப்பாடாகும்.


அதாவது, இஸ்லாத்தை வியாக்கியானம் செய்ய இன்றைய உலகில் உலமாக்கள் தகுதி அற்றவர்கள். உலகக் கல்வி கற்றவர்களே அதற்குத் தகுதியானவர்கள்; என்பது அதன் பொருளாகும். இன்று வெளிநாடுகளில் சில முஸ்லிம் பேராசிரியர்கள் என்பவர்கள் கூட குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்து இன்றைய உலகத்திற்குப் பொருத்தமான நவீன விளக்கங்களைக் கொடுக்க முனைகின்றார்கள், அல்லது கொடுக்க வேண்டும்; என்று பேசத்தொடங்கியுள்ளார்கள். இன்னும் modern Islam - நவீன இஸ்லாம், என்றும் பேசத் தொடங்கியுள்ளார்கள். இதுதான் கிறிஸ்துவத்திற்கும் நடந்தது.

இந்தோனீசியாவில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்ட இரு ஆண்களுக்கு விரைவில் கசையடித் தண்டனை வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு, அது சர்வதேச மனித உரிமை மீறல், அவர்களுக்கு அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டால் அது சர்வதேச சட்டப்படி, ' சித்திரவதை - torture' ஆக கொள்ளப்படும்; என்றெல்லாம் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கோசமெழுப்புகின்றனர். இந்நிலையில், எதிர்காலத்தில் ஓரினத்திருமணம் இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் உள்வாங்கப் படவேண்டும்;  குர்ஆன், ஹதீசை அதற்கு ஏற்ற நவீன முறையில் வியாக்கியானப் படுத்தப்பட வேண்டும், என்று நமது மனித உரிமை ஆர்வலர்கள் கோசமெழுப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இந்நிலையில்தான் பிரச்சினைக்குரிய விடயங்களுக்குள் செல்வதற்கு முன், இவர்கள் பேசுகின்ற ' சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அடிப்படி உரிமை, அவற்றின் மூலங்கள் போன்ற எனது முதல் பாகத்தில் கூறப்பட்ட விடயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது.


இந்த சர்வதேச மனித உரிமைகளின் தோற்றுவாய்
------------------------------------------------

' மனித உரிமைகள்' என்றால் என்ன? அவை ஐ நா சாசனத்தினுள்ளும் ( UN Charter), மற்றும் ஐ நா மனித உரிமை சாசனங்களிற்குள்ளும் ( UN human rights instruments) கடந்த 65- 70 வருடங்களுக்குள் புகுந்து கொண்டதன் அடிப்படை என்ன? ' மனித உரிமைகள் ' என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு ஒருமித்த பதில் எங்கும் கிடையாது? ஆனால் இவைகள்தான் மனித உரிமைகள் என்கின்றனர். எவற்றின் அடிப்படையில் இவற்றை 'மனித உரிமைகள்' என்கின்றனர்? ஒருமித்த விடை கிடையாது. ஏனெனில் வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கோணங்களில் இருந்து இவற்றினைப் பார்த்திருக்கின்றார்கள். ஆனால் நமது முஸ்லிம்களில் சிலர்  குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் இதனைப்பார்ப்பதற்கு மறுத்து அவர்கள் கூறுகின்ற ' மனித உரிமைகளின்' அடிப்படையில் குர்ஆன், ஹதீஸைப் பார்க்க வேண்டும், வியாக்கியானப்படுத்த வேண்டும். அதற்கு மறுக்கின்ற உலமாக்கள் ' தகுதி அற்றவர்கள் ' என்று கூறுகின்ற அளவுக்கு முன்னேறிவிட்டார்கள்.

மனித உரிமைகள் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ஒரு பகுதி தத்துவஞானிகளின் கருத்துக்களின் அடிப்படையிலான பதில்-' .... human rights are a set of moral principles and their justification lies in the province of moral philosophy' ( Jerome J. Shestack, The Philosophical Foundations of Human Rights, Human Rights Quartely, Vol. 20, 1998, p 202)
இதன் பொருள், ' மனித உரிமைகள் என்பது ஒரு தொகுதி moral கோட்பாடுகளாகும். இவற்றை நியாயப்படுத்துவது அந்த moral தத்துவத்தின் விஸ்தீரண எல்லையில் தங்கியிருக்கின்றது. அதே நேரம்,' intuitive moral philosophers claim that the definitions of human rights are futile because they involve moral judgments..' என்கிறார்கள். Ibid p 203.

இங்கு 'moral' என்ற சொல்லின் அர்த்தம் புரிய வேண்டும். Moral என்பது,' ஒரு சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் நடந்துகொள்ள வேண்டிய ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை' என்பதாகும். உதாரணமாக, திருமணமுடிக்காத ஒரு ஆணும் பெண்ணும் தனியாக ஒரு இடத்தில் வாழுவதை இலங்கைக் கலாச்சாரம் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அது morally பிழையாகும். இந்த moral standard சமயப் பின்னணியில் அல்லது கலாசார, அல்லது வேறு பின்னணியில் இருந்து வந்திருக்கலாம். ( சில நேரடி தமிழ் சொற்களைக் கண்டுகொள்வதில் சிரமமிருப்பதால் சில இடங்களில் நேரடியாக ஆங்கில சொற்களையே பாவிக்க வேண்டி இருக்கின்றது. Please bear with me.)

எனவே moral standards என்பது சமூகத்திற்கு சமூகம், நாட்டுக்கு நாடு மாறுபடக் கூடியது மட்டுமல்ல, காலத்திற்கு காலமும் மாறுபடக் கூடியது. உதாரணமாக, சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் அநாகரீகமாக பார்க்கப்பட்ட சில மனித நடத்தைகள் இன்று அவ்வாறு பார்க்ப்படுவதில்லை. எனவே மனித உரிமைகள் moral கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றால் உலகின் ஒரு பகுதியிலுள்ளவர்களின் moral standards ஐ அடிப்படையாக வைத்து வரையப்பட்ட மனித உரிமை சட்டம் முழு உலக மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க முடியுமா? என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்த மனித உரிமைகளுக்காக குர்ஆன், ஹதீஸின் பொருளையே நவீன வியாக்கியானம் என்ற பெயரில் நம்மவர்களில் சிலர் மாற்றச் சொல்வதும் அதை மாற்ற உடன்படாத உலமாக்களை அறிவீனர்கள்; என்று விமர்சிப்பதும் நமது சமூகம் எங்கே போய்க்கொண்டிருப்பதைக் காட்டுகின்றது?

இந்த மேற்கத்திய நாடுகளும் NGOS களும் ஏன் பணத்தை வாரி இறைத்து அவர்களின் கலாசாரப் பின்னணியில் உருவான இந்த மனித உரிமைகளுக்கு ஏற்றவிதத்தில் நமது மார்கத்தையே மாற்ற, அதற்கு துணைபோக நமது சமூகத்திற்குள்ளிருந்தே சிலரை வாங்கியிருக்கின்றார்கள் என்று இன்னும் புரியவில்லையா?

எனவே மனித உரிமை என்பதை வரைவிலக்கணப்படுத்த முடியாத நிலையில் அவை எங்கே இருந்து வந்தன? (What are the sources?) என்பது முக்கியமாகும்.

மேற்கத்திய அறிஞர்களால் சட்டங்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவையாவன:
1) eternal law

2) divine law

3) natural law

4) positive law

( இவற்றிற்கான சரியான தமிழ் பதங்கள் தெரியவில்லை- ஓரளவு பொருந்தக் கூடிய தமிழ்பதங்கள் தர முயற்சிக்கப்படுகிறது )

Eternal Law- நித்திய சட்டம்
---------------------------
இறைவன் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதற்கென்று சில விதிகளை வைத்திருக்கின்றான். அவை நமக்குத் தெரியாது. ஆனாலும் அவை நிரந்தரமான விதிகள். உதாரணமாக, பூமி சூரியனை சுற்றுகிறது. ஏன் பூமியை சூரியன் சுற்றக் கூடாது? நமக்குத் தெரியாது. ஆனாலும் அது நிரந்தர விதி. மனிதனுக்கு ஏன் பசிக்க வேண்டும்? மனிதன் ஏன் பசியில்லாதவனாக இருந்திருக்கக் கூடாது? தெரியாது. ஆனால் அது நிரந்தர விதி. இந்த இறைவனின் நியதியை ( இறை நம்பிக்கையற்றோர், இயற்கையின் நியதி என்பர்) eternal law என்று அழைக்கப்படும்.

Divine Law- தெய்வீகச் சட்டம்
-----------------------------
இந்த நித்திய சட்டத்தின் ( eternal law) ஒரு சிறுபகுதியை இறைவன் வேதப் புத்தகங்களினூடாக ( தௌறாத், சபூர், இன்ஜீல், புர்கான்) மனினதனுக்கு இறக்கிவைத்திருக்கின்றான். அவை divine law ( தெய்வீக சட்டம்) எனப்படும்.


Natural Law -இயற்கைச் சட்டம்
-------------------------------
இறைவனால் அருளப்பட்ட மொத்த சட்டத்தையும் மனித பகுத்தறிவு புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. அதனால்தான் மார்க்கம் ஒரு dogma என்பார்கள். ஒரு பெண் காழி நீதிபதியாக ஏன் நியமிக்கப்படக்கூடாது, என்ற இறை சட்டத்தின் அடிப்படையை இந்த 21 ம் நூற்றாண்டிலும் புரிந்துகொள்ள முடியாத பகுத்தறிவுதான் நம்மிடம் இருக்கும்போது அன்றைய மனிதன் எப்படி மொத்த தெய்வீக சட்டத்தையும் புரிந்திருப்பான். நாம் சாப்பிட்டபின் விரலை சூப்ப வேண்டிய சுன்னத்திற்கான பகுத்தறிவு நியாயத்தை 1400 வருடங்களுக்கு முன் யாரும் புரிந்திருக்கவில்லை, ஆனால் இன்றுதான்  விஞ்ஞானம் அதன் காரணத்தை அறிந்திருக்கிற்றது.

எனவே, தெய்வீக சட்டத்தில் மனித பகுத்தறிவு புரிந்துகொள்ள முடிந்தவை natural law என அழைக்கப்பட்டது. அதே நேரம் மதசார்பற்ற இயற்கைச் சட்டம் பற்றியும் ( secular natural law ) பேசப்பட்டிருக்கின்றது. இந்த இயற்கைச் சட்டங்கள் ( natural law) மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையாக அமைந்திருக்குன்றன. எனவே இவை தொடர்பாக சற்று விரிவாக அடுத்த தொடரில் ஆராயலாம்.

( தொடரும்)

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தமும் சிலரின் குழப்பங்களும் - பாகம் 2 முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தமும் சிலரின் குழப்பங்களும் - பாகம் 2 Reviewed by Madawala News on 5/13/2017 01:27:00 PM Rating: 5