Ad Space Available here

ஞானசாரரின் 2ஆவது இனிங்ஸ். (ஒரு விரிவான பார்வை)


இலங்கையின் தொல் பொருள் முக்கியத்துவமிக்க இடங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனியில் இனவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதை மலர்ந்த சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து அவதானிக்க முடிகின்றது. ஒரு நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள் என்பது குறிப்பிட்ட ஒரு இனத்தின் சொத்தல்ல. நாட்டின் பிரஜைகள் அனைவரும் பாதுகாக்கவேண்டிய வரலாற்று உரிமையாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஜனாதிபதி மைத்திரி- பிரதமர் ரணில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு 2015ஆம் ஆண்டு உதயமான அரசாங்கத்தில் இனவாதத்துக்கு இடமிருக்கப்போவதில்லை என்று சிறுபான்மையினர் பூரண நம்பிக்கை வைத்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகாக்கள்  இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் என்ற பிரசாரத்தினூடாகவே நல்லாட்சியின் உரிமையாளர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளை அபகரித்துக்கொண்டனர்.

அதுவரையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருந்த 95சதவீதமான முஸ்லிம்களின் வாக்குகளும் மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தையே பலப்படுத்தின.
இனவாதத்துக்கு இனியும் இடமில்லை என்பதே நல்லாட்சியின் முஸ்லிம்களுக்கான வாக்குறுதி. நல்லாட்சியின் உதயத்தோடு பல பலசேனாக்களும், பல லேக்களும் அடங்கிவிட்டதாகவே முஸ்லிம்கள் நம்பியிருந்தனர். நாட்டில் தேசிய ஒற்றுமை, சகவாழ்வு குறித்த அமைச்சொன்று உருவாக்கப்பட்டு நாட்டு மக்களின் மனங்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியும் ஆரம்பமானது.

எனினும், முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதிய இனவாதம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும்போது வெளியான அரச வர்த்தமானியை மையமாக வைத்து, நாட்டின் தொல்பொருள் முக்கியம்வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதாகவும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகவும் கூறிக்கொண்டு கலகொட அத்தே ஞானசார தேரரை அடிப்படையாகக் கொண்ட பொதுபல சேனா உட்பட சிங்கள பௌத்த இனவாத அமைப்புகள் மீண்டும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி காலத்தில் 2014.10.10 அன்று வெளியாகிய அரச வர்த்தமானி அறிவித்தலின்படி திருக்கோவிலில் 36 இடங்களும், இறக்காமத்தில் 13 இடங்களும், அட்டாளைச்சேனையில் 11 இடங்களும், ஆலையடிவேம்பில் 9 இடங்களும், அக்கரைப்பற்றில் 6 இடங்களும், பொத்துவிலில் 5 இடங்களும், சம்மாந்துறையில் 4 இடங்களும், கல்முனையில் 2 இடங்களிலும் என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம், தமிழர்களின் 86 இடங்கள் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 35ஆயிரம் ஏக்கர்கள் அளவில் காணியை இழக்கும் அபாயமும் உள்ளது.

தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் நொண்டிச் சாட்டைக் கூறிக்கொண்டு பொதுபல சேனா உட்பட பௌத்த இனவாத அமைப்புகளின் கூட்டணி கிழக்குக்கு ஊர்வலமாக செல்ல முற்பட்டதே நல்லாட்சியில் இனவாதிகளின் ஆட்டத்தின் ஆரம்பமாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாக 450க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீதான 250க்கு மேற்பட்ட வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்திருந்தார்.
சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து இனவாதிகளின் அட்டகாசங்கள் அதிகரித்திருப்பதை அண்மையில் நடந்தேறிய சம்பவங்களை பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம். இனவாதிகளின் கொட்டத்தை அடக்குவதாகவும், ஏற்கனவே பதிவாகியுள்ள முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து விசாரணைகளை நடத்துவதாகவும் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சியும், நல்லாட்சியை பலப்படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் காக்கின்றனர்.

முஸ்லிம்களின் ஏக இறைவன் அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றல், பாணந்துறை பள்ளிவாசல் தாக்குதல், கொஹிலவத்தை பள்ளிவாசல் தாக்குதல், தோப்பூர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல், ஓனகம முஸ்லிம் கிராமத்தில் அத்துமீறல், எலுவிலையில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு, தேசிய சகவாழ்வு அமைச்சில் இலங்கை பௌத்த நாடு என்பதை ஏற்க, தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரை கட்டாயப்படுத்தல், லாஸ்ட் சான்ஸ் வியாபாரஸ்தளம் எரிப்பு என்று ஞானசார தேரர் உட்பட சிங்கள இனவாதிகளின் கொட்டம் தொடர்கின்றது.

அல்லாஹ்வை அவமதிப்பு, முஸ்லிம்களை அச்சுறுத்தல், தோப்பூர் சம்பவம், ஓனகம சம்பவம், சகவாழ்வு அமைச்சில் அட்டகாசம் போன்றவற்றில் ஞானசார தேரரும் சிங்கள பௌத்த இனவாதிகளும் நேரடியாக தொடர்புபட்டிருந்தனர்.

பாணந்துறை பள்ளிவாசல் தாக்குதல், கொஹிலவத்தை பள்ளிவாசல் தாக்குதல், எலுவிலையில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு, லாஸ்ட் சான்ஸ் வியாபாரஸ்தளம் எரிப்பு போன்றன இனவாதிகளின் வெறுப்புப் பேச்சு, முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரம் போன்றவற்றின் தீய விளைவுகளும் ஆகும்.

ஓனகம கிராமத்தில் அத்துமீறல்

பொலன்னறுவை தம்பாளை சின்னவில்பட்டி, ஓனகம பகுதியில் கடந்த ஞாயிறன்று(15) பிற்பகல் 1.10 அளவில் அத்துமீறிய பொதுபலசேனா மற்றும் ராவணா பலய அமைப்பினர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 5 மாட்டுப் பண்ணைகளை தாக்கி சேதப்படுத்தினர். முஸ்லிம்கள் வெளியேற வேண்டுமென்றும் அச்சுறுத்தல் விடுத்தனர்.

ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நடத்திய தாக்குதலில் 4 மாட்டுப் பண்ணைகள் முற்றாக சேதமடைந்ததில் 3 இலட்சங்கள் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மாடுகளின் கயிற்றை வெட்டிவிட்டதில் 22 மாடுகளை காணவில்லை. பிரதேச விவசாய சங்க தலைவர் நூர்தீன் தாஹிர் தெரிவித்தார்.

மகாவலிகங்கை கரையோர பிரதேசங்களில் முஸ்லிம்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயமும் பண்ணை வளர்ப்பும் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 1927ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருவதற்கான காணி உறுதிகளும் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கையிலே பௌத்த இனவாதிகள் வரலாற்று சிறப்பு மிக்க புனித பூமி என்ற போர்வையில் இங்கு அட்டகாசம் புரிந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு வருகை தந்த பொலிஸாரும் இவர்களின் தாக்குதலைத் தடுப்பதற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

தோப்பூர் தாக்குதல் சம்பவம்

தோப்பூர் செல்வநகர் நினாகேணிப் பகுதியில் அமைந்துள்ள புஞ்சி பன்சல என அழைக்கப்படும் விகாரைக்கு ஏற்கனவே உள்ள 6 ஏக்கர் காணிக்கு மேலதிகமாக மேலும் 49 ஏக்கர் காணியை விகாரையுடன் இணைத்துக்கொள்வதற்காக பௌத்த இனவாதிகள் தோப்பூர் முஸ்லிம்கள் மீது கடந்த செவ்வாயன்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் மேற்படி பிரதேசத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காகவே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக மூதூர்- தோப்பூர் எல்லைப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து இரவோடிரவாக பாதுகாப்பான பிரதேசங்களுக்கு சென்றனர். பிரச்சினை மாகாண ஆளுநர் ஒட்ஸ்ரின் பெர்னோன்
டோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்தே முஸ்லிம்கள் வீடுகள் நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். பௌத்த இனவாதிகளின் தாக்குதலில் முஸ்லிம்களின் வீடுகள், உடைமைகள், பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவத்தை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் இவ்வாறு விபரிக்கிறார்,

வெடிச்சத்தமும் வால் வீச்சும் மேலோங்கியிருந்தன. அச்சத்துடன் முஸ்லிம் மக்கள் ஓடி வந்த காட்சிகள் 2006 ஆம் ஆண்டு மூதூர் வெளியேற்றத்தையும் அதற்கு முன்னர் விடுதலை புலிகள் காலத்தில் இருந்த பதற்றமான நிலைமையையே காட்டின. மீண்டும் ஒரு முறை யுத்தத்தின் கொடூரத்தை அனுபவித்ததுபோல் இருந்தது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் எமக்கு எட்டியது. நான் உடனே சம்பவத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையால் பாரிய உயிர்ச்சேதங்களை தவிர்க்கமுடிந்தது."

உடனே ஸ்தலத்துக்கு விரைந்தோம். அங்கு நிலைமை படுமோசமாக இருந்தது. இராணுவம் பொலிஸ் பலத்தினூடாக தாக்குதல் தாரிகளை எதிர்கொள்ள முடிந்தது. சிங்
கள மொழி பேசிய அவர்கள் எமது பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வெளியேறியிருக்கின்றனர்."

கொஹிலவத்தை பள்ளிவாசல் 
தாக்குதல்

வெல்லம்பிடிய கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது முகமூடி அணிந்த காடையர்கள் கடந்த திங்களன்று காலை தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு தப்பிச்சென்றுன்னர். நள்ளிரவு 01.00 மணி அளவில் முகமூடியணிந்த இனவாதிகள் இவ்வாறு தாக்கியுள்ளனர். வேன் ஒன்றில் வந்த 8 பேர் அடங்கிய கும்பலொன்றே தாக்குதலை நடத்தியதாக பள்ளிவாசலில் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர். தாக்க வந்தவர்கள் பள்ளியின் முன்னால் இருந்த பெரிய கேட்டின் மீதேறி உள்ளே நுழைந்து கேட்டை உடைத்துள்ளதுடன், பள்ளியின் கண்ணாடிகள், கதவு, ஜன்னல் போன்றவற்றை கற்களால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். பூச்சு வேலைகளுக்காக பள்ளியில் தங்கியிருந்தவர்கள் எழும்பியவுடன் வந்திருந்த கும்பல் ஓடியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்திருந்ததாகவும், தாம் தாக்குதல் நடத்தும் போது, தாமே அதனை வீடியோவும் செய்துள்ளார்கள் என்றும் அதனை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை பள்ளிவாசல் தாக்குதல்

பாணந்துறை நகர் மத்தியிலுள்ள டவுன் பள்ளிவாசல்  கடந்த திங்கள்(15)அதிகாலை இனந்தெறியாத கும்பலினால் தாக்கப்பட்டது. பள்ளிவாசல் பின்புறமாகவுள்ள குப்பை மேட்டுப்பக்கமாக வந்தே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் உட்பகுதியில் ஒரு பகுதி தீ பற்றியுள்ளது. இச்சம்பவம் அல்லாஹ்வை அவமதித்து ஞானசார தேரர் பேசியதைத் தொடர்ந்தே நடந்துள்ளது. தேரர்கள் நேரடியாக தொடர்புபடாவிட்டாலும் இனவெறுப்புப் பேச்சுக்களின் தூண்டுதலே இனவாதிகளை இவ்வாறு செயற்பட வைக்கின்றது.

எலுவிலை குண்டுவீச்சு

பாணந்துறை எலுவிலை சந்தியில் கடந்த புதனன்று(17) அதிகாலை இனந்தெரியாத கும்பலினால் மூன்று இடங்களில் வீசப்பட்ட பெற்றோல் குண்டுகளில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான புத்தகக் கடையொன்று சேதமடைந்தது. இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசிவிட்டு கடையை எறிக்க முற்படுவதும் சி.சி.ரி.வி. கெமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். மோட்டார் சைக்கிளொன்றில் முகமூடியணிந்துகொண்டே வந்து தாக்கியுள்ளனர். இத்தாக்குதலுடன் பௌத்த இனவாதிகளுக்கு தொடர்புள்ளதாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் இனவாதிகளின் வெறுப்புப் பேச்சுகளின் விளைவேயாகும்.

சகவாழ்வு அமைச்சில் அத்துமீறல்

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு பொதுபல
சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனை கட்டாயப்படுத்தும் வீடியோ காட்சி தமிழர்களையும்
கோபமடையச் செய்திருந்தது.

இதுவரையில் ஞானசார தேரரின் அச்சுறுத்தல்கள் முஸ்லிம்களுக்குத்தான் என்று எண்ணியிருந்த தமிழ் மக்களும் ஞானசார தேரரின் சுயரூபத்தை கண்டுகொண்டனர்.


இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. இதை அனைவரும் ஏற்றாகவேண்டும். எனவே, வந்தேறுகுடிகளான  தமிழ், முஸ்லிம் மக்கள் எமது (பௌத்தர்களின்) கலாசாரம், மொழியை  கற்கவேண்டும். அப்போதே நல்லிணக்கம் சாத்தியமாகும் என்று அங்கு கர்ஜித்துள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் இங்குவந்து குடியேறியவர்கள். எனவே. இது யாருடைய நாடு என்பதை புரிந்துகொண்டால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைக்கும். இதை ஏற்கமால் இருப்பதுதான் தவறு. அதேவேளை, ஜப்பான், இத்தாலி, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்குச்சென்றால் அந்நாட்டின் மொழிகளை கற்கவேண்டும். ஆனால், இங்கு என்ன நடக்கின்றது? எமக்கு வேறுமொழிகளை கற்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.


முஸ்லிம்கள் தவறிழைத்தால் அங்கொடைக்கும், சிங்களவர்கள் தவறிழைத்தால் வெலிக்கடைக்கும் அனுப்படும் நிலையே காணப்படுகின்றது. மோடியின் வருகையின்போது அத்துமீறி நுழைந்த முஸ்லிம் ஒருவர் அங்கொடைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். முஸ்லிம்கள் பற்றி கடந்தகாலங்களில்பேசியபோது பின்னணியில் மஹிந்த என்றனர்: கோட்டா என்றனர்: அதன்பின்னர் நோர்வே என்றனர். ஆனால். நூம் உண்மையையே பேசினோம். எல்லா பள்ளிவாசல்களும் பங்கர்களாகியுள்ளன. ஐ.எஸ். உறுப்பினர்கள் இருக்கின்றனர். என்றும் கூறியுள்ளார்.

 Last  சான்ஸ் தீக்கிரை

வென்னப்புவ லாஸ்ட் சான்ஸ் நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டு நிறுவனம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. தீக்கிரையான வர்த்தக நிலையத்தில் இருந்து சந்தேகத்துக்கிடமான ஒரு லைட்டர் மற்றும் இரண்டு ஸ்குரூவ் டிரைவ்கள் மீட்கப்பட்டுள்ளதால் திட்டமிடப்பட்ட சம்பவம் என்பது உறுதியானாலும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் இதனை வெறும் மின்னொழுக்கென்று கூறியுள்ளார்.

லாஸ்ட் சான்ஸ் காட்சியறையில் 150 மில்லியன் பெருமதியான பொருட்கள் இருந்ததாக பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.  ஏற்கனவே முகநூல் மற்றும் சமூக வலையூடாக தங்கள் நிறுவனத்துக்கு செல்லவேண்டாம் என இன ரீதியான தகவல்கள் பரப்பப்பட்டு வந்ததாகவும் மின் உபகரணங்கள் இருப்பதால் வழமையாக வர்த்தக நிலையத்தை மூடும் போது மின் இணைப்புகளை முற்றுமுழுதாக துண்டிப்பதாகவும், இதனால் மின்னொழுக்குகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரபல விற்பனை நிலையங்களுக்கு தீ வைக்கப்படுவது சர்வசாதாரணமாகியுள்ளது. அளுத்கமை மல்லிகாஸ், பெஷன் பக் ஆகிய நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டும் சட்டம் கடமையைச் செய்வதில் பின்நிற்கின்றது.

இனவாதிகளின் ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து எங்கு? ஏது? நடக்குமோ! என்ற அச்சத்தில் முஸ்லிம்களின் நாட்கள் நகர்கின்றன. சிலர் மஹிந்த இருந்தால் கூட நடந்திராத அட்டூழியங்களும் நல்லாட்சியில் நடைபெற ஆரம்பித்துள்ளன என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

 முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் வேடிக்கை பார்க்குமா? சட்டம் தன் கடமையைச் செய்யாமல் இருப்பதில் இருந்து இது சிங்கள பௌத்த நாடென்பதை உறுதிப்படுத்தி, சிறுபான்மையினர் அடங்கிப் போகவேண்டும் என்பதை நிரூபிக்க முற்படுகின்றதா? என்ற கேள்வி சிறுபான்மையினரின் மனதில் படிய ஆரம்பித்துள்ளது.

-- 
Aadhil Ali Sabry
JOURNALIST
ஞானசாரரின் 2ஆவது இனிங்ஸ். (ஒரு விரிவான பார்வை) ஞானசாரரின் 2ஆவது இனிங்ஸ். (ஒரு விரிவான பார்வை) Reviewed by Madawala News on 5/23/2017 04:40:00 PM Rating: 5