tg travels

42வது நாளாக தொடரும் மரிச்சுக்கட்டி முஸ்லிம்களின் உரிமை போராட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரில் ஆதரவு..


வடக்கில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் மரிச்சுக்கட்டி, மாவில்லு, வெப்பல், கொண்டச்சி, கரடிக்குளி, பாலக்குளி, விலாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பகுதிகள் வில்பத்து மற்றும் மாவில்லு பேணட் காட்டுப் பகுதிக்கு சொந்தமானவை என்றும் குறித்த பகுதிகளில் யாரும் வாழ முடியாது என்றும் அரசாங்கம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மரிச்சுக்கட்டியில் கடந்த 42 நாட்களாக முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு முஸ்லிம்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தது.

கடந்த 24.03.2017 அன்று ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது வெளிநாட்டு பயணத்திற்கு மத்தியில் மாவில்லு பேணட்காடு வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார். 

இதில் மாவில்லு, மரிச்சிக்கட்டி, வெப்பல், விலாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. குறித்த ஐந்து பகுதிகளும் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் “3அ” பிரிவின் பிரகாரம் மாவில்லு பேணட் காடு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவில்லு பேணட்காடு பிரதேசத்தின் எல்லைகளாக வடக்குப் புறமாக 08 தனியார் ஆதன எல்லைகளும், கிழக்குப் புறமாக அருவி ஆற்றின் வவுனியா, மன்னார் எல்லைகள் முதல் அநுராதபுர மாவட்டத்தின் எல்லைகள் வரையிலும், தெற்குப்புற எல்லைகளாக மோதர ஆற்றுப்படுக்கை மற்றும் வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் வடக்கு எல்லைகளும், மேற்குப் புறமாக 202 தனியார் ஆதன எல்லைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தல் பிரகாரம் பாரியளவில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ம் ஆண்டு தற்போது ஜனாதிபதி வெளியிட்டுள்ள மாவில்லு பிரகடனத்தின் மூலம் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது முஸ்லிம்களே.

“மாவில்லு பேணட் காடு” என்ற பெயரில் ஜனாதிபதி தற்போது வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் முசலிப் பிரதேசத்தின் 82 வீதமான பகுதிகள் காடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 சதவீதமான நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு வீதமானவை வயல் நிலங்களாகும். ஒரு பகுதியில் தான் முஸ்லிம்கள் வாழ முடியும். 

இதுவரை முசலிப் பிரதேச மொத்த சனத்தொகையில் வெரும் 40 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இன்னும் 60 சதவீதமானவர்கள் மீள்குடியேற வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஜனாதிபதியின் மாவில்லு பிரகடனத்தின் மூலம் மீதமுள்ள 60 வீதமானவர்களின் மீள்குடியேற்றம் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. மட்டுமன்றி ஏற்கனவே குடியேறியவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கடந்த 13.03.2017 ம் திகதியிட்டு முசலிப் பிரதேச சபையினால் அப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. குறித்த கடிதத்தில் 13.03.2017ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் குறித்த பகுதி காடுகளுக்கு சொந்தமாக்கப்படவுள்ளது என்றும் இதில் மாற்றுக் கருத்துக்கள், ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் இருப்பின் தெரிவிக்கும்படியும் கோரப்பட்டிருந்தது. 

இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு குறித்த காலக்கெடு முடிவெதற்கு முன்பாகவே ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

மக்கள் வாழும் பகுதியை காடு என பிரகடனம் செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டு ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் இருப்பின் தெரிவிக்கும்படி பிரதேச செயலகத்தினால் கடிதம் அனுப்பிவிட்டு இரண்டு வார காலம் முடிவெதற்கு முன்பாகவே ஜனாதிபதி கையெழுத்திட்டு குறித்த பகுதியை மாவில்லு வனப் பகுதி என பிரகடனம் செய்து விட்டார்.

அங்கு வாழும் மக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுப்பது தான் அரசின் நிலைபாடாக இருந்திருந்தால் ஏன் கால அவகாசம் முடிவடைய முன்னால் ஜனாதிபதி கையெழுத்திட்டார்? என்கிற சந்தேகம் வலுப்பெருகிறது.

முஸ்லிம்கள் என்ன எதிர்ப்பு வெளியிட்டாலும் நாங்கள் உங்கள் பூர்வீக நிலத்தை காடு என அறிவிப்போம் என்கிற நிலையில் இருந்து கொண்டுதான் முசலி பிரதேச சபை குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது என்பதும் இங்கு தெளிவாக புரிந்து விடுகிறது.

ஆக மொத்தத்தில் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு தெளிவாக செவி சாய்க்கிறார் ஜனாதிபதி மைத்ரி என்பது மிகத் தெளிவாக புரிந்து விடுகிறது.

முசலிப் பிரதேசத்தை சோமாலியாவாக மாற்றும் முயற்சியே “மாவில்லு பிரகடனம்”
----------------------------------------

ஜனாதிபதியினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மாவில்லு பேணட்காடு பிரகடனம் மீள்குடியேற்றத்தில் பாரிய சிக்கல்களை உண்டாக்குவதுடன் ஏற்கனவே மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

உதாரணத்திற்கு, முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மொத்த மக்கள் தொகையில் 80 வீதமானவர்கள் விவசாயிகளாகும். 20 வீதமானவர்கள் மீனவர்கள். அங்குள்ள விவசாயிகள் வருடத்திற்கு ஒரு போகம் மாத்திரமே விவசாயத்தில் ஈடுபடுவார்கள். விவசாயத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் நீர்பாசனத் திட்டங்கள் இரண்டும் “மாவில்லு பேணட் காடு” பகுதிக்குள்ளாகியுள்ளது. விவசாயம் செய்யும் காலத்தில் தேவையான தண்ணீரை இப்பகுதி மக்கள் எப்படி பெற்றுக் கொள்வது? என்கிற பாரிய பிரச்சினையும் இங்கு எழுந்துள்ளது. இலங்கையின் அரசி உற்பத்தியில் சுமார் 6.4 வீதத்தை இப்பகுதி விவசாயிகளே உற்பத்தி செய்கிறார்கள். மாவில்லு பேணட் காடு சட்டத்தின் மூலம் குறித்த அரிசி உற்பத்தி பாரியளவில் பாதிக்கப்படும்.

அது மாத்திரமன்றி மீன்பிடியில் ஈடுபடும் அப்பகுதி மீனவர்களும் இதன் மூலம் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள். வனப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “மாவில்லு” பகுதியில் தான் தமது வாழ்வாதார நன்னீர் மீன்பிடியை இவர்கள் மேற்கொள்வார்கள். காடுகள் சட்டப் பிரகாரம் இனிமேல் இவர்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாது. காடுகளுக்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதும் குற்றமாகும்.

அதே போல், விவசாய காலம் தவிர்ந்த நாட்களில் இங்குள்ள மக்கள் ஆடு, மாடு போன்ற மேய்ச்சலில் ஈடுபடுவார்கள் தற்போது ஜனாதிபதி அறிவித்துள்ள “மாவில்லு பேணட் காடு” சட்டப்படி இனிமேல் குறித்த பிரதேசத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பதை அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

தற்போது ஜனாதிபதி விடுத்துள்ள காடுகள் பிரகடனத்தின் மூலம் அப்பகுதி மக்கள் விவசாயத்திற்கான நீரைப் பெற்றுக் கொள்ளவோ, மீன்பிடிக்கவோ, விறகு தேடுவதற்கோ, ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காகவோ, மேய்க்கும் போது காட்டுக்குள் சென்று விடும் மாடுகளைத் தேடியோ குறித்த பகுதிக்குள் நுழைய முடியாது. அவ்வாறு நுழைந்தது உறுதி செய்யப்பட்டால் தண்டனைக்குறிய குற்றமாக அது மாறிவிடும். 

ஆக மொத்தத்தில் குறித்த பகுதியை சோமாலியாவைப் போல் மாற்றி பட்டினியில் செத்து மடிந்தாலும் பரவாயில்லை உங்கள் உரிமை உங்களுக்கு இல்லை என்ற நிலைபாட்டில் தான் ஜனாதிபதி இருக்கிறார் என்பது தெளிவாக புரியும் ஒன்றாகும்.

ஆகவே ஜனாதிபதியின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்து செய்யக் கோரி மரிச்சுக்கட்டியில் வடக்கு முஸ்லிம்கள் கடந்த 42 நாட்களாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் நேரில் ஆதரவு
-----------------------------

தமது பூர்வீக வாழ்விடங்களை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வரும் வடக்கு முஸ்லிம்களை நேற்று (06.05.2017) மரிச்சுக்கட்டியில் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவ்வரசாங்கம் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களின் இடங்களை ஏற்றுக்கொள்ள முடியாத பல காரணங்களை முன்வைத்து கையகப்படுத்தி வருகிறது. அதன் தொடராகவே மாவில்லு பிரகடனத்தின் மூலம் முசலி பிரதேச சபைக்குட்பட்ட  மரிச்சுக்கட்டி, மாவில்லு, வெப்பல், கொண்டச்சி, கரடிக்குளி, பாலக்குளி, விலாத்திக்குளம், பெரியமுறிப்பு போன்ற முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழும் காணிகளை காடு என்று தற்போது பிரகடனம் செய்துள்ளது. 

ஆளும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதுடன், காடு என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதின் மூலம் முஸ்லிம்களுக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறது.

இலங்கையில் நடைபெற்ற LTTE பயங்கரவாத யுத்தத்தின் போது, பயங்கரவாதிகளுக்கு துணை போகாமல் நாட்டை நேசித்த ஒரே காரணத்திற்காக வடக்கு முஸ்லிம்கள் தமது பூர்வீக இடங்களை விட்டும் விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டார்கள். 

யுத்தம் முடிவுற்றுள்ள இந்நிலையில் தாம் காலா காலமாக பூர்வீகமாக வாழ்ந்த காணிகளில் மீள்குடியேறும் முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற விடாமல், சொந்த இடங்களை வனப் பிரதேசமாக அரசாங்கமே அறிவித்து முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கையாகும்.

A.G ஹிஷாம் M.I.Sc 
செயலாளர்,
தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
42வது நாளாக தொடரும் மரிச்சுக்கட்டி முஸ்லிம்களின் உரிமை போராட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரில் ஆதரவு.. 42வது நாளாக தொடரும் மரிச்சுக்கட்டி முஸ்லிம்களின் உரிமை போராட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரில் ஆதரவு.. Reviewed by Madawala News on 5/07/2017 03:02:00 PM Rating: 5