Ad Space Available here

அமைச்சர் பௌசி அவர்களே... இது சாத்தியமானால் உங்கள் மரணம் சரித்திரமாகும்!


-ஜெம்ஸித் அஸீஸ்-

கடந்த வியாழன்... எல்லோரும் “நிலாம் நானா” என அன்பாக அழைக்கும் மூத்த ஊடகவியலாளர்
எம்.ஏ.எம். நிலாம் அவர்களின் மூத்த புதல்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணித்த செய்தி கேள்விப்பட்டு வைத்தியசாலை சென்றேன்.

ஜனாஸாவை பிரேத அறைக்கு (Mortuary) அனுப்பி விட்டார்கள்.

பிரேத அறைக்கு வெளியே பலர் நின்றிருந்தனர்.

எப்போதும் கலகலவென்றிருக்கும் நிலாம் நானா உடைந் போயிருந்தார்.

குடும்பத்தினர், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று… பலரும் கூடியிருந்தார்கள்.

வைத்தியசாலை செயலொழுங்குகளை முடித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் ஜனாஸா குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்கனவே வைத்தியருடன் தொடர்பு கொண்டு பேசியிருந்த சிரேஷ்ட அமைச்சர் பௌசியும் அவ்விடத்திற்கு வருகை தந்தார்.

அதிகாரிகளின் அனுமதி பெற்று அமைதியாக பிரேத அறைக்குச் சென்று ஜனாஸாவைப் பார்வையிட்டார்… பிரார்த்தித்தார்…. ஆறுதல் சொன்னார்…

கௌரவ அமைச்சர் அவர்களே!

மரண வீடுகளுக்குச் செல்வது, ஆறுதல் சொல்வது… உங்களது வழக்கம். நல்ல பழக்கம்.

“குருவி இறந்து போனாலும் அமைச்சர் பௌசி அங்கு நிற்பார்” என்று பொது மக்கள் ஹாஷ்யமாக அளவளாவிக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் ஜனாஸாவுக்குரிய இறுதிக் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள்.

வாக்குகளை இலக்கு வைத்து நீங்கள் மரண வீடுகளுக்கு செல்வதில்லை.

உங்கள் தேர்தல் தொகுதி அல்லாதவர் மரணித்தாலும் வீடு தேடிச் செல்வதை சகலரும் அறிவர்.

அது நீங்கள் உங்களுக்குள் வகுத்துக் கொண்ட பொலிஸியாக (கொள்கையாக) இருக்க வேண்டும்.

சகோதரத்துவம், மனிதநேயத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

உள்ளங்களை அறிந்த அல்லாஹ் உங்கள் எண்ணத்துக்கு நிறைவான கூலியை தர போதுமானவன்.

கௌரவ அமைச்சர் அவர்களே! இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் மேலான கவனத்திற்கு இன்னும் சில விடயங்களை கொண்டு வர விரும்புகின்றேன்.

மரணித்தவரின் இறுதித் கடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே இன்னும் சிலவற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மரணித்தவரின் இறுதித் கடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே இன்னும் சிலவற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தற்போது பாராளுமன்றத்தில் முஸ்லிம்களில் நீங்கள்தான் பழுத்த அனுபவமுள்ள ஓர் அரசியல்வாதி.

இலங்கை அரசியல் வரலாற்றில் உங்களுக்கென்று தனியானதோர் அத்தியாயம் இருக்கிறது.

பிரிந்து நின்று பகைமை பாராட்டும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக நீங்கள் இருப்பது பற்றி சிந்திக்கலாமே!

முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் முஸ்லிம் பா.உறுப்பினர்களில் பெரும்பாலானோரை ஓர் உடன்பாட்டுக்கு கொண்டு வருதல், எல்லோரும் சேர்ந்து பொது விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல் முதலான முயற்சிகளுக்கு நீங்கள் தலைமைத்துவம் வழங்கலாமே!

பாராளுமன்ற வளாகத்தில் தேவையேற்படின் உங்கள் தலைமையில் கூடிக் கதைக்கலாம்!

முஸ்லிம் தேசிய கூட்டணியமைப்பது குறித்தும் யோசிக்கலாம். எல்லோரையும் விட மூத்தவர் நீங்கள். உங்கள் தலைமைத்துத்தை மற்றவர்கள் ஏற்பதற்கு வாய்ப்புகள் அதிகம்!

இப்படி… இப்படி… சிந்திக்கலாம்! செயற்படலாம்!

மனித வாழ்க்கை குறுகியது. தற்காலிகமானது.

மரணம் எப்போது யார் வீட்டுக் கதவைத் தட்டும் என்பதை யார்தான் அறிவார்?!

உங்களுக்குப் பின் அடுத்த அரசியல் வாரிசு பற்றிய கரிசனையோடு இருப்பது தெரிகிறது.

அது மலையில் மாடேற்றும் பணி. அதனை ஒருபுறம் வையுங்கள்.

மரண வீடுகளுக்கு… மரணித்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்கு... கொடுக்கும் முக்கியத்துவம் போலவே கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு நேரம் ஒதுக்குங்கள்!

மரணித்தவரின் இறுதிக் கிரியையில் பற்கேற்பது பர்ளு கிபாயா!

மரணத்தின் விளிம்பை நோக்கி நகரும் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக தூக்கி நிறுத்துவது பர்ளு ஐன் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சாத்தியமானால் உங்கள் மரணம் சரித்திரமாகும்!
அமைச்சர் பௌசி அவர்களே... இது சாத்தியமானால் உங்கள் மரணம் சரித்திரமாகும்! அமைச்சர் பௌசி அவர்களே... இது சாத்தியமானால் உங்கள் மரணம் சரித்திரமாகும்! Reviewed by Madawala News on 5/13/2017 02:29:00 PM Rating: 5