Kidny

Kidny

என்ன மாதிரியான காலத்தில் நாம் வாழ்கிறோம்? ( பாதிக்கபட்ட சகோதரரின் ஷாக் ரிப்போர்ட்)வெசாக்கிற்கு இருவாரங்களுக்கு முன்னைய ஒருநாள். இரவு ஏழு மணி இருக்கும். பலமாக கேட் தட்டும் சத்தம் கேட்டு போய் திறந்தேன். வெசாக் தன்ஸலுக்கு காசு கேட்டு வந்திருந்தார்கள்.

"ஒயாகே அம்மா அபிட தெஸீயக் தன்ஸலட தெனவ கியல கிவ்வா" (உங்களுடைய தாய் தன்ஸலுக்கு இருநூறு ருபாய் தருவதாக சொன்னார்). உம்மா அப்படிச் சொல்லவேயில்லை. அதே நேரம் வீட்டில் உண்மையாக யாருமே இருக்கவில்லை. அதை எவ்வளவு எடுத்து சொல்லியும், கேட்டுக்கு வெளியே இருந்து கொண்டு கத்த ஆரம்பித்தார்கள். 'மெஹம கெத்த வெட கரண்ட எபா ஓகொல்லோ' என்றும் இன்னும் சில வார்த்தைகளை கூறியும் ஏச ஆரம்பித்தார்கள்.

'தன்ஸலை நீங்கள் புனிதமாக கருதி செய்வது என்றால் பிறகு ஏன் வலுக்கட்டாயமாக காசு புடுங்குகிறீர்கள்' என்று கத்திக் கொண்டிருந்த அவர்களிடம் நறுக்கென்று நாலு வார்த்தையை கேட்க எத்தணித்தாலும், அதை ஒன்றுக்கு நூறு முறை யோசித்துவிட்டு பிறகு கேட்கவில்லை.

எனது வீட்டுப்பக்கம், சோம ஹிமியின் புகைப்படத்தை பேனராக தொங்கவிட்டுள்ள ஒரு இடம்வேறு. சொல்லவே தேவையில்லை.
ஏனெனில் இந்நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலையில் ஒருவார்த்தையை கூட நூறு முறை அளந்து பார்த்து பேச வேண்டி உள்ளது. அன்று அந்த சம்பவத்தின் போது பேச எத்தனிக்கையில் மனதிற்கு முன்னால் வந்து நின்றது ஒன்றே ஒன்றுதான்.

நான் பேசும் ஒரு சொல், எங்கு நான்கு கடைகளை தீக்கிறையாக்குமோ என்பதுதான் அது. அப்படி நடக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்.

இதை கோழைத்தனம் என்பதா? இல்லை சகிப்புத்தன்மை என்பதா? என்று புரியவில்லை. ஆனால் மோசமானதொரு காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிந்த நீரோடையாக தெரிகிறது.

அந்த தூசனம் பேசும் வாய் விட்ட சவால் பாரதூரமானது. "தம்பிகள் பிடித்துக் கொண்ட இடங்களை மீட்க வேண்டுமானால் நீங்கள் ஒரு ஹாமதுருவுடன் சென்று அந்த இடத்தை கைப்பற்றுங்கள். நாங்கள் கூட உதவிக்கு வருகிறோம். எந்த கொம்பன் எதிர்த்தாலும் சமாளிக்கலாம்" இதைக்காட்டிலும் நச்சு வார்த்தைகளை ஒருவனாலும் பரப்பமுடியாது.

ஒரு நாள் தூக்கத்திலிருந்து எழும்பும் போது இன்ன ஊரில் நூறு நூற்றியைம்பது முஸ்லிம்களை சிங்கள இனவெறியர்கள் வெட்டிப்போட்டார்கள் என்று செய்தி வந்தால் கூட கண்ணீர்விட்டு கதறியழுவேனே தவிற அது எப்படி இந்த நாட்டில் அப்படி நடக்கும் என்று ஒரு துளி அதிர்ச்சி கூட ஏற்படாது.

இதற்கு யார் காரணம்? இதை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்று பார்த்தால் உண்மையில் விடை தெரியாமல் சமூகமே திக்குத் தெரியாத திசையில் அலைந்து கொண்டிருக்கிறது.

வாழவும் வேண்டும். உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் கூடாது என்கின்ற போது ஒரு கூட்டம் வாழ்வதற்காக எல்லா சமரசங்களையும் செய்து சரணடைகிறது. இதில் குறிப்பாக அரசியல்வாதிப் பெருமக்கள் அடக்கம்.
இன்னொரு கூட்டம் காபிர்கள் கொலைசெய்யப்பட வேண்டும் என்கிற ரேஞ்சில் ஆதாரங்களை அடுக்கி பதிவு போட்டு தமது வீரத்தை பறைசாற்றிக் கொள்கிறது.

மக்களின் பாதுகாப்பை இந்த இடத்தில் உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமை. அவர்கள் இன்னும் 'So Called' முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருப்பதை விட்டுவிட்டு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று சட்டத்தரணிகள் மற்றும் சிவில் தலைமைகளும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக கடுமையாக போராட வேண்டும்.

ஏனென்றால் ஒன்று இறைநிந்தனை. படைத்த ரப்பை தூசனத்தால் தூற்றுபவனுக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அடுத்தது முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு.

எங்கு அமைச்சரவையில் இதற்காக குரலுயர்த்தும் போது அமைச்சுப்பதவி பறிபோயிடுமோ என்று பயப்படுபவராக இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களும், இனியாவது அரசியல் ஒரு சாக்கடை என்று அதற்குள் இறங்க எத்தனிக்கும் நல்லவர்களை தடுத்துவிட்டு இப்போது வாய்பிளப்பதை விட்டுவிட்டு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கட்டும்.
படைத்த இறைவன் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!
என்ன மாதிரியான காலத்தில் நாம் வாழ்கிறோம்? ( பாதிக்கபட்ட சகோதரரின் ஷாக் ரிப்போர்ட்) என்ன மாதிரியான காலத்தில் நாம் வாழ்கிறோம்? ( பாதிக்கபட்ட சகோதரரின் ஷாக் ரிப்போர்ட்) Reviewed by Madawala News on 5/17/2017 09:04:00 PM Rating: 5