tg travels

புதிய அரசியல் அமைப்பு: முஸ்லிம் கட்சிகள் தெளிவற்ற நிலையில்


சஹாப்தீன் -
முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் புதிய அரசியல் அமைப்பு பற்றி கடந்த சில வாரங்களாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றதொரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கினற் போதிலும் புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம்களுக்குரிய அம்சங்கள் குறித்து ஒரு தெளிவான ஆவண ரீதியான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. புதிய அரசியல் அமைப்பு எவ்வாறு அமையுமென்பது நாட்டு மக்களுக்கு மூடு மந்திரமாகவே உள்ளது. அரசியல் கட்சிகளும் தெளிவற்றவையாகவே இருக்கின்றன. ஆயினும், அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. 

புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இவ்வாறுதான் தீர்வு அமைய வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸோ, ஏனைய முஸ்லிம் கட்சிகளோ எந்தவொரு முன் யோசனைத் திட்டத்தையும் அரசாங்கத்திடம் முன் வைக்கவில்லை.   

இதே வேளை, புதிய அரசியல் அமைப்பில் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அத்தோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படவுள்ளது. இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதிகாரப் பகிர்வும் இடம்பெறவுள்ளது. இவை புதிய அரசியல் அமைப்பு குறித்து பேசப்படும் முக்கிய அம்சங்களாகும்.

முஸ்லிம்களைப் பொறுத்த நிறைவேற்று ஜனாதிபதி முறை, தேர்தல் முறை மாற்றம் ஆகியன பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஜனாதிபதித் தேர்தல் நாடு பூராகவும் நடத்தப்படுகின்றது. ஜனாதிபதியை தெரிவு செய்வதில் சிறுபான்மையினர் வாக்கு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்துள்ளது. 

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் இன்று பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளார்கள். தொகுதிவாரி தேர்தல் முறையோ அல்லது கலப்பு தேர்தல் முறையோ எது அமுல்படுத்தப்பட்டாலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 10ஐ விடவும் குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு வெளியே முஸ்லிம்களினால்; பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியாது. 

இவ்வாறு புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம்களுக்கு பாதக நிலைமைகள் உள்ளன. இதே வேளை, கடந்த வருடம் ஒக்டோபர் 08ஆம் திகதி கொழும்பு தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய அரசியலமைப்பில் சந்தேகங்கள் உள்ளன. மேலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் ஆபத்தும் உள்ளதென்று தெரிவித்திருந்தார். 

முஸ்லிம்களின் இத்தகைய சந்தேகங்களை அரசாங்கமோ, முஸ்லிம் காங்கிரஸோ ஏனைய முஸ்லிம் கட்சிகளோ தீர்க்கும் வகையிலான முடிவுகளை அறிவிக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு புதிய அரசியல் அமைப்பில் பாரிய அநீதிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்ற சந்தேகங்கள் உள்ள நிலையில் புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது சகல விதமான சட்ட மூலங்களையும் கண்களை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றவர்களாகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கிகாரத்துடனே முஸ்லிம்களுக்கு அநீயாயங்கள் நடைபெற்றன. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திலும் அனைத்தையும் ஆதரிக்கும் போக்கிலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இதனால்தான் ரவூப் ஹக்கீம் புதிய அரசியல் யாப்புக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுள்ளார். 

இதே வேளை, அக்கரைப்பற்றில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்த நாட்டு மக்கள் அனைவரும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும். இந்த நாடு என்னுடைய நாடு என்ற அந்தஸ்து வேண்டும். முஸ்லிம்களை தமிழர்களும் தமிழர்களை முஸ்லிம்களும் ஏமாற்றாமல் இரு இனங்களும் ஒற்றுமைப்பட வேண்டும். அப்போதுதான் தீர்வுகளை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு முஸ்லிம் தலைமைகளின் பூரண ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியல் அமைப்பு சகல இனங்களையும் சமத்துவமாக பார்க்க வேண்டும். இனங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது. எந்த மதத்திற்கும் முன்னுரிமை அளிக்காது. மதச் சார்பற்ற நாடாக அரசியல் யாப்பின் மூலமாக பிரகடனம் செய்ய வேண்டும். இவைகளை கவனத்திற் கொள்ளாது புதிய அரசியல் அமைப்புக்கு கண்களை பொத்திக் கொண்டு ஆதரவு அளிக்க முடியாது. அரசாங்கம் தயாரித்து கையளிக்கும் யாப்பை கேள்விகள் கேட்காது ஏற்றுக் கொள்வதென்பது எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உயர்கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு அணுவளவேணும் பங்கம் விளைவிக்கப்பட மாட்டாது. பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை நிலையில் எந்தவித மாற்றமும் வருவதற்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 

ஆகவே, புதிய அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கின்றது. பௌத்த இனவாதிகளுக்கு உத்தரவாதங்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு ஒரு தரப்பினரை முழுமையாக திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையினரின் உரிமைகளை தாரைவார்ப்பதற்கு நல்லாட்சி எனும் பெயரில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய செயற்பாடுகளை சுட்டிக்காட்டாது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் கைகோர்க்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளமை சிறுபான்மையினரிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. 

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை புதிய அரசியல் யாப்பிலும் அளிக்கப்பட இருப்பது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை மேலும் வலுவூட்டுவதற்கானதொரு நடவடிக்கையாகும். இதனால், சிறுபான்மையினரின் நிலங்கள் பௌத்த மதத்தின் தேவைக்காக சுவிகரிக்கப்படுவதற்கும், பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள் திடீரென்று தோன்றுவதற்குமே பௌத்த மதத்திற்கு மாத்திரம் அரசியல் அமைப்பில் முன்னுரிமை அளிப்பது வழிவகுக்கும். 1972ஆம், 1978ஆம் ஆண்டுகளில் முன் வைக்கப்பட்ட அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அரசியல யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். இத்தீர்வில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் முக்கிய பாத்திரத்தை வகிப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் மாத்தரம்தான் முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க முடியும். கிழக்கு மாகாணத்தில்தான் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றார்கள். ஆதலால், கிழக்கு மாகாண முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு அரசியல் யாப்பு அவசியமாகும். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களை கவனத்திற் கொள்ளாது அரசாங்கத்தை திருப்திபடுத்திக் கொள்வதற்காக சிங்கள மக்களின் பிரதிநிதிகள் போல் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள்தான் கரையோர மாவட்டம், அதிகார அலகு ஆகியவற்றை கோரிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கல்முனையில் உள்ள மாவட்ட காரியாலயங்கள் திட்டமிட்ட வகையில் அம்பாரைக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக அரசாங்கம் முஸ்லிம்களை கணக்கில் எடுக்கவில்லை என்பது தெளிவாகின்றது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமைக் குறைபாடே கல்முனையில் உள்ள மாவட்ட தலைமைக் காரியாலயங்கள் அம்பாரைக்கு மாற்றப்படுவதற்கான பிரதான காரணமாகும். இந்த இலட்சணத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் உரிமைகளுக்குரிய உத்தரவாதங்களை ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. 

இதே வேளை, வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் நிர்ண உரிமைகள் வழங்க்கப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறும் போது அதனை அரசாங்கம் கவனத்திற் கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது. ஆளுமையில்லாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பின்னால் முஸ்லிம்கள் அணி திரள்வதனைவிடுத்து ஆளுமையுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் பின்னால் அணி திரண்டால் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியுமென்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. மாயக்கல்லிமலை சிலை விவகாரம், சிலாவத்துறை காணிப் பிரச்சினை ஆகியவற்றில் இரா.சம்பந்தனின் பங்களிப்புக்கள் அதிகமாகும். 

வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும். இதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியமாகுமென்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து செயற்படும் போதுதான் இரு சமூகங்களின் உரிமைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமென்பதில் ஐயமில்லை. இதற்கு இரு சமூகங்களினதும் அரசியல் தலைவர்கள் பேசி பொது உடன்பாட்டிற்கு வருதல் வேண்டும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் திட்டமிடலுக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதே வேளை, தேவைக்கேற்ப இரா.சம்பந்தனையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்வதற்கு தயாராவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களை திருப்திப்படுத்தாத எந்த தீர்வுத் திட்டத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. 

வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத் வடக்கும், கிழக்கும் இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டுமென்று அறிக்கைவிடுத்துள்ளார். முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வினை முஸ்லிம் காங்கிரஸ்தான் முன் வைக்க வேண்டும். வடக்கும், கிழக்கும் இணைந்தாலும், தனித்தனியே இருந்தாலும் முஸ்லிம்களுக்கு தீர்வு இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றியதொரு தீர்வு முஸ்லிம் காங்கிரஸிடம் இல்லாதிருப்பதனால்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்குரிய தீர்வினை சொல்ல வேண்டுமென்று கேட்பதற்காக உள்ளது. 

முஸ்லிம் அரசியல் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் பாம்புக்கும், மீனுக்கும் நடிக்கும் விலாங்கு மீன் வேசம் போடுவதனை தவிர்க்க வேண்டும். மாற்று சமூகத்திற்கு தீங்குகள் ஏற்படாத வகையில் எதனையும் கேட்டுக் கொள்வதில் தப்பில்லை. விட்டுக் கொடுப்பு இல்லாமல் தீர்வினை எந்த சமூகமும் பெற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம் சமூகத்திற்கு மாத்;திரம் தீங்குகளை ஏற்படுத்தக் கூடிய புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க முடியாது. ஏனைய சமூகங்களின் நன்மைகளுக்காக முஸ்லிம்கள் மாத்திரம் விட்டுக் கொடுப்புக்களை செய்யவும் இயலாது. 

ஆகவே, புதிய அரசியல் அமைப்பை அரசாங்கத்தினை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக கண்களை மூடிக் கொண்டு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆதரிக்க முடியாது. அதற்காக ஒத்துழைப்புக்களை வழங்குமாறு முஸ்லிம்களை கோரக் கூடாது. புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவதற்திற்கும், மதச் சுதந்திரத்திற்கும், சுயநிர்ணயத்திற்கும், பாதுகாப்புக்கும், ஏனைய உரிமைகளுக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உத்தரவாதங்கள் இருந்தால் மாத்திரமே ஆதரிக்கலாம். அரசியல் யாப்பில் என்னவுள்ளதென்று தெரியாமலும், தாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு தேர்தல் தொகுதியை ஏற்படுத்திக் கொண்டும் புதிய அரசியல் யாப்புக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுக்கும் எட்டப்பர் நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவிடுதல் வேண்டும். இது முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி, தமிழர்களுக்கும் பாதக நிலைமைகளை ஏற்படுத்தும். முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சுய அரசியல் இலாபத்திற்காக தமிழ் பேசும் மக்கள் பலியாக முடியாது. தலைவர்கள் சமூகத்தை நேசிக்க வேண்டும். சமூகம் தலைவர்களை நேசிக்க வேண்டும். இந்நிலை முஸ்லிம்களிடையே காணப்படவில்லை. தலைவர்கள் சமூகத்தை நேசிக்கவுமில்லை. சமூகமும் தலைவர்களை நேசிக்கவில்லை. சமூகம் தங்களுக்கு நல்லது செய்கின்ற தலைவர்களையே நேசிக்கும் என்பது விதியாகும்.
Thanks : Virakesari 07.05.2017

புதிய அரசியல் அமைப்பு: முஸ்லிம் கட்சிகள் தெளிவற்ற நிலையில் புதிய அரசியல் அமைப்பு: முஸ்லிம் கட்சிகள் தெளிவற்ற நிலையில் Reviewed by Madawala News on 5/07/2017 11:40:00 PM Rating: 5