Ad Space Available here

பாலத்தடி வீதியும் பள்ளி தலைவர் பதவியும் - அட்டாளைச்சேனையின் அவலம்


அட்டாளைச்சேனையையும் கோணாவத்தை பகுதியையும் இணைத்து ஒலுவில் வரை போக்குவரத்துக்கு முதுகெலும்பாக அமையும் ஊரின் முக்கிய பாதை இந்த பாலத்தடி வீதி. 

ஊரின் முக்கிய பெண்கள் பாடசாலை, கடற்கரை என்பவற்றை தொட்டு செல்லும் இந்த வீதி ஒவ்வொரு நாளும் சுமார் 8,000 தொடக்கம் 10,000 மக்களுடைய போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்கின்றது. இதில் கல்வி செல்வங்களான மாணவர்களும் ஊரின் முதுகெலும்பான மீனவர்களும் அளப்பெரிய பயனடைவது குறிப்பிடத்தக்கது. 

இந்த வீதி தான் இப்போது இழவு வீடாகியுள்ளது. 

கிழக்கு மாகாண சபை அமைச்சர் நசீர் அவர்களதும், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை அவர்களினதும் முயற்சியில் வீதி காபட் இடப்பட, பாடசாலையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் வீதியின் ஒரு பகுதி நிர்வாணமாக காட்சியளிக்கின்றது. 

17 அடி அகலம் கொண்ட வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் அமைக்கப்பட, குறித்த பகுதியில் மாத்திரம் 15 அடி அகலம் மாத்திரமே உள்ளது. இரு மருங்கிலும் தனியார் வீடுகள் வீதியை ஆக்கிரமித்துள்ளன. மேற்குறிப்பிட்ட பகுதி தார் இடப்படுவது தவிர்க்கப்பட்டு வீதி அபிவிருத்தி தொடரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி வீதி கூட தார் இட முயற்சிகள் நடைபெற்றதாகவும் அறியக்கிடைத்தது. அமைச்சர் நசீர் அவர்களால் பல முறை முயற்சித்தும் வீதியை திட்டமிடப்பட்ட அளவுக்கு விரிவாக்க முடியவில்லை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பினரும் ஆயுர்வேத வைத்தியருமான நக்பர் அவர்களுடைய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏலவே இதேபோன்றதொரு பிரச்சினை அக்கரைப்பற்று வீதியை புனரமைக்கும்பொழுது ஏற்பட அப்போதைய அமைச்சர் அதவுல்லாஹ், குறித்த பகுதியை தவிர்த்து வீதியை அபிவிருத்தி செய்தார். காலப்போக்கில் உரிமையாளர் தாமாகவே முன்வந்து அந்த நிலத்தை விட்டுக்கொடுத்தார். இது போன்ற  பிரச்சினைகளை கையாள இந்த சம்பவம் சிறந்த முன்னுதாரணமாகும். 

மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்ற போவதாக மார் தட்டிக்கொள்ளும்  முஸ்லிம் காங்கிரஸ், அதன் அதிகார ஆளுகைக்குட்பட்ட அட்டாளைச்சேனையில் ஆக்கிரமிக்கப்பட்ட இரண்டு அடி நிலத்தை காட்சியின் ஆதரவாளரிடம் இருந்து விடுவிக்க முடியாமை கட்சியின் இயலாமையை தெளிவுறுத்தி மாயக்கல்லி மலை மீட்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

குறித்த வீதியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் மாகாண அமைச்சர் நசீரின் பூர்வீக வதிவிடமும், முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் கல்வி செயலாளருமான பழீல் பி.எ அவர்களது வீடும், மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை அவர்களது வீடும் அமையப்பெற்றுள்ளது. 

முடிவுறும் தருவாயில் இருக்கும் அட்டாளைச்சேனை பெரியபள்ளிவாயல் தலைமை பதவிக்கு, வீதியின் காணியை ஆக்கிரமித்து இருக்கும் ஆயுர்வேத வைத்தியர் நக்பர் அவர்கள் போட்டியிட இருப்பது மேலதிக தகவலாகும். பொது தளங்களில் இவ்விரு விடயங்கள் தொடர்பாக ஊர் மக்களின் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 

அட்டாளைச்சேனை அஸ்லம் கட்டாரிலிருந்து
பாலத்தடி வீதியும் பள்ளி தலைவர் பதவியும் - அட்டாளைச்சேனையின் அவலம் பாலத்தடி வீதியும் பள்ளி தலைவர் பதவியும் - அட்டாளைச்சேனையின் அவலம் Reviewed by Madawala News on 5/13/2017 07:24:00 PM Rating: 5