Yahya

நல்லாட்சியின் அத்திவாரம் ஆட்டம் காணுகிறதா?
எஸ்.றிபான் - 

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை போல் பௌத்த கடும்­போக்­கு­வாத தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வினர் மீண்டும் முஸ்­லிம்­களின் மீதான தமது அடா­வ­டித்­த­னங்­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முஸ்­லிம்கள் நிம்­ம­தி­யாக வாழ­லா­மென்று நம்­பிய போதிலும் அது படிப்­ப­டி­யாகக் கருகிக் கொண்டு செல்கின்­றது.

முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­களும், வாழ்­வி­டங்­களும், பூர்­வீகக் காணி­களும் குறி­வைத்து தாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும் இத­னை­யிட்டு கவலை கொள்­ளாது அர­சாங்­கத்­திற்கு கூஜா தூக்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தலை­வர்கள் தரக் குறை­வா­ன­வர்­க­ளாக இருந்தால் சமூ­கத்­திற்கு என்ன நடக்­கு­மென்­ப­தற்கு இலங்கை முஸ்­லிம்­களின் இன்­றைய நிலை நல்­ல­தொரு எடுத்துக் காட்­டாகும். அர­சியல் தலை­வர்கள் தங்­களின் முகங்­களின் திரை­களை கிழித்துக் கொண்­டி­ருப்­ப­வர்­களை சமூகத் துரோ­கிகள் என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களும் தங்­களின் உண்மை நிலையை புரிந்துகொள்­ளாது போலித் தலை­வர்­க­ளுக்­காக சந்­தி­க­ளிலும், மேடை­க­ளிலும், சமூக இணைய தளங்­க­ளிலும் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

பள்­ளி­வா­சல்­க­ள் மீது தாக்­குதல்
இன்­றைய நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்ட போது முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல்கள் மீதான தாக்­கு­தல்கள் முற்­றாக இல்­லா­தி­ருந்­தன. பௌத்த கடும்­போக்­கு­வாத தேரர்­களின் தலை­மை­யி­லான முஸ்லிம் விரோத சக்­தி­களின் நட­வ­டிக்­கை­களும் ஓய்ந்து காணப்­பட்­டன. ஆயினும், இந்­நிலை நீடிக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களும், பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்­களும், முஸ்­லிம்­களின் காணி­களை பறி­முதல் செய்யும் வேலை­களும் நடை­பெறத் தொடங்­கின. இன்று இந்த அநியா­யங்கள் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. 

குரு­நாகல் நிக்­க­வ­ரெட்­டிய ஜும்ஆப் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல், கண்டி மீரா­மக்காம் பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சுத் தாக்­குதல், பொர­லஸ்­க­முவ பகு­தி­யி­லுள்ள பள்­ளி­வாசல் மீது தாக்­குதல், கொழும்பு – கண்டி வீதியில் அமைந்­துள்ள நெலுந்­தெ­னிய பள்­ளி­வா­ச­ல் மீது குண்டுத் தாக்­குதல்,  கொழும்பு – பொரளை ஜாமிஉல் அல்பார் பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் என சுமார் 40இற்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் மீது இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ள­ப்­பட்­டுள்­ளன. இத்­தாக்­கு­தல்கள் பெரும்­பாலும் அதி­காலை வேளை­க­ளி­லேயே நடை­பெற்­றுள்­ளன. இத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் இது வரையில் யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­களை முன்வைக்­க­வு­மில்லை.

இந்­நி­லையில் பாணந்­துறை  பழைய பஸார் பகு­தி­யி­லுள்ள பள்­ளி­வாசல் மீதும், வெல்­லம்­பிட்­டிய கொஹி­ல­வத்தை பகு­தி­யி­லுள்ள பள்­ளி­வாசல் மீதும் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் பெற்றோல் குண்டு, கல்­வீச்சுத் தாக்­கு­தல்கள் இவ்­வாரம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 
ஒரு பக்கம் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. மறு­பக்கம் சிங்­க­ள­வர்கள் வசிக்­காத பிர­தே­சங்­களில் உள்ள முஸ்­லிம்­களின் காணி­களை சண்­டித்­த­னத்தில் பறித்து விகா­ரைகள் அமைக்கும் நட­வ­டிக்­கைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

நல்­லாட்­சியில் கூட முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்­பில்லை என்­பது நிரூ­ப­ண­மாகிக் கொண்­டி­ருக்­கின்­றது. அதே வேளை, இன்­றைய அர­சாங்­கத்­திற்கும், மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்­திற்­கு­மி­டையே எந்த வேறு­பா­டு­க­ளையும் காண முடி­ய­வில்லை. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் மந்த நட­வ­டிக்­கை­க­ளிலும் மாற்­றங்­களைக் காண முடி­ய­வில்லை. 

அத்­து­மீறல் நட­வ­டிக்கை
இதே வேளை, கடந்த திங்­கட்­கி­ழமை திரு­கோ­ண­மலை சேரு­நு­வர பொலிஸ் பிரிவில் தோப்பூர் – நீணாக்­கேணி பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளினால் பூர்­வீக கால­மாக பயிர்ச் செய்­கைக்கு உட்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் காணி­யையும், குடி­யி­ருப்புக் காணி­யையும் அப­க­ரித்துக் கொள்­வ­தற்­கான செயற்­பா­டு­களை பௌத்த தேரர்கள் சிலரும், அவர்­க­ளுடன் சென்­றி­ருந்த இளை­ஞர்­களும் மேற்­கொண்­டுள்­ளார்கள். இவர்கள் கன­ரக வாக­னங்­களின் உத­வி­யுடன் காணியின் பாது­காப்பு வேலி­களை உடைத்து எறிந்­துள்­ளார்கள்.

துப்­பாக்கி வேட்­டுக்­களும் தீர்க்­கப்­பட்­ட­தா­கவும், இதனை பாது­காப்பு அமைச்சின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­ற­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்­துள்ளார். தோப்பூர் பிர­தே­சத்தில் நடை­பெற்ற இச்­சம்­ப­வத்­தினால் அங்கு பதற்ற நிலை ஏற்­பட்­டது. முஸ்­லிம்கள் பாது­காப்புக் கருதி பள்­ளி­வா­சலில் தஞ்­ச­ம­டைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

பௌத்த தேரர்கள் மற்றும் இளை­ஞர்­களின் அத்­து­மீறல் நட­வ­டிக்­கை­க­ளினால் முஸ்­லிம்­க­ளுக்கும் இவர்­க­ளுக்கு இடையே வாக்­கு­வா­தங்கள் ஏற்­பட்­டன. இந்­நி­லையில் குறிப்­பிட்ட  இடத்­திற்கு வருகை தந்த சேரு­நு­வர பொலிஸார் குறிப்­பிட்ட பிரச்­சி­னைக்கு நீதி­மன்­றத்தின் மூல­மாக தீர்­வினைப் பெற்றுக் கொள்­ளு­மாறு இரு தரப்­பி­ன­ரையும் சமா­தா­னப்­ப­டுத்­தினர். 

குறிப்­பிட்ட காணியை முஸ்­லிம்கள் சட்ட விரோ­த­மாக கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்­ளார்கள் என்று தெரி­வித்தே மேற்படி அடா­வடி அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது. இதே வேளை 1959ஆம் ஆண்டு எழு­தப்­பட்­டுள்ள உரிமை ஆவ­ணங்­களை முஸ்­லிம்கள் வைத்­துள்­ளார்கள்.

முஸ்­லிம்கள் சட்­டத்­திற்கு மாற்­ற­மாக காணி­களை அப­க­ரித்து வைத்­துள்­ளார்கள் என்றால், அதற்­கான ஆதா­ரங்­களை முன்வைத்து நீதி­மன்­றத்தின் மூல­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். ஆனால், ஒரு குழு­வினர் சட்­டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்­பட முடி­யாது. அவ்­வாறு செயற்­ப­டு­கின்­ற­வர்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை கைது செய்து நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

ஆனால், பொலிஸார் பௌத்த தேரர்கள் எத்­த­கைய சட்ட விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தில்லை. இங்கு கூட சட்­டத்தை கையில் எடுத்துச் செயற்­பட்­டுள்­ள­வர்கள் யாரென்று தெளி­வாகத் தெரிந்­தி­ருந்தும் பொலிஸார் அவர்­களை கைது செய்­ய­வில்லை. நீதி­மன்­றத்­திற்கு செல்­லு­மாறு கேட்­டுள்­ளனர். இதுபோன்று ஏனைய மதத் தலை­வர்கள் செயற்­பட்­டி­ருந்தால் சட்டம் அதன் கட­மையை இறுக்­க­மாக செய்­தி­ருக்கும் என்­பதில் ஐய­மில்லை. நாட்டில் சட்டம் எல்­லோ­ருக்கும் சம­மா­கவே செயற்­ப­டு­மென்று ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள், அதி­கா­ரிகள் எனப் பலரும் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆனால், பௌத்த தேரர்கள், பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் விட­யத்தில் சட்டம் தூங்கிக் கொண்டே இருக்­கின்­றது. 

இத்­த­கைய செயற்­பா­டுகள் மேலும் அதி­க­ரித்துக் கொண்டு செல்­வ­தற்­கான வாய்ப்­புக்­களே காணப்­ப­டு­கின்­றன. இந்­ந­ட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோர் மௌன­மா­கவே உள்­ளார்கள். முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள், அமைச்­சர்கள் அடங்கிப் போயுள்­ளார்கள். இவர்கள் சமூ­கத்தின் பாது­காப்பை விடவும் தமது அமைச்சர் பத­வியின் பாது­காப்­பிற்கே முக்­கி­யத்­துவம் அளித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத­னால்தான் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை விமர்­சனம் செய்­யாது.

பௌத்த கடும்­போக்­கு­வாத தேரர்­களை விமர்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக அறிக்­கை­களை விடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் நாடு­க­ளுக்கும், வேறு நாடு­க­ளுக்கும் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோர்­க­ளுடன் விஜயம் செய்து முஸ்­லிம்கள் பாது­காப்­பாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் தலை­வர்­களின் இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் கண்­டிக்­கத்­தக்­கது. 

முஸ்­லிம்­களை சர்­வ­தேச ரீதி­யாக விற்று அர­சாங்­கத்­திற்கு நற்­சான்­றிதழ் பெற்றுக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அர­சாங்­கத்தை பாது­காத்துக் கொள்­வது ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் கட­மை­யாகும். ஓவ்­வொரு பிர­ஜை­யையும் பாது­காப்­பது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். ஆனால், அர­சாங்கம் முஸ்லிம் விட­யத்தில் தமது கட­மையில் குறை­களைக் கொண்­டி­ருக்கும் போது அதனை சுட்­டிக்­காட்டி நிவர்த்தி செய்­வது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் ஆகி­யோர்­களின் கட­மை­யாகும்.

ஆனால், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தொடர்ச்­சி­யாக இக்­க­ட­மையை புறக்­க­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களும் இவர்­க­ளையே தலை­வர்கள் என்று போற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கண் இருந்தும் குரு­டர்­க­ளா­கவும், காது இருந்தும் செவி­டர்­க­ளா­கவும், வாய் இருந்தும் ஊமை­யர்­க­ளா­க­வுமே முஸ்­லிம்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத­னால்தான் தலை­வர்­க­ளுக்கு தகு­தி­யில்­லா­த­வர்­களை தலை­வர்கள் என்று அழைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஞான­சார தேரரின் கருத்­துக்கள் 
இந்த நாட்டின் ஆட்­சி­யா­ளர்­களை மௌனிக்கச் செய்­கின்ற ஒரு­வ­ராக பொது பல சேனவின் செய­லாளர் கல­கொட அத்த ஞான­சார தேரர் உள்ளார். இவ­ரது கருத்­துக்கள் இன­வாதத்தை தூண்­டு­வ­தாக இருக்­கின்­றன. பௌத்த சிங்­க­ள­வர்­களை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தூண்டும் விதத்தில் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­துள்­ளன. முஸ்­லிம்கள் நாட்­டிற்கு உரித்­து­டை­ய­வர்­க­ளல்லர் என்றும், பயங்­க­ர­வாத்­திற்கு துணை செய்­கின்­ற­வர்கள் என்றும், பௌத்­தர்­களின் காணி­களை அப­க­ரித்துக் கொண்­டி­ருப்­ப­வர்கள் என்றும் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்றார். தர்கா நகரில் நடந்­ததைப் போன்று நடக்கும் என்று பகி­ரங்­க­மா­கவே சொல்லிக் கொண்­டி­ருக்­கின்றார்.

நாட்டின் பொது அமை­திக்கும், முஸ்­லிம்­களை இழி­வு­ப­டுத்தும் வகை­யிலும் கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்கும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு முடி­யாத நிலை­யிலும், அவரின் நட­வ­டிக்­கை­களில் காணப்­படும் நியா­ய­மின்­மையை சுட்­டிக்­காட்ட முடி­யா­த­வர்­க­ளா­கவும் மௌனித்துப் போயுள்­ளார்கள். 

கடந்த ஆட்­சியில் பொதுபல சேனவின் நட­வ­டிக்­கை­களின் பின்­ன­ணியில் ஆட்­சி­யா­ளர்கள் இருந்­ததைப் போன்று இன்­றைய ஆட்­சி­யிலும் ஆட்­சி­யா­ளர்கள் ஞான­சார தேர­ருக்கு துணை­யாக இருக்­கின்­றார்கள். இத­னால்தான் தற்­போது அவர் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் காலத்தில் நடந்து கொண்ட முறை­கே­டான நட­வ­டிக்­கை­களை விடவும் மோச­மாக செயற்­ப­டு­வ­தற்கு முற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். ஆட்­சி­யா­ளர்­களும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்­டு­கின்­ற­வர்­களும் மௌனித்து கைகளை கட்டிக் கொண்­டி­ருந்தால் அந்த நாட்டில் அரா­ஜகம் ஆட்சி செய்­வ­தனை தவிர்க்க முடி­யாது. ஆதலால், நல்­லாட்சி அர­சாங்கம் படிப்­ப­டி­யாக சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மாத்­தி­ர­மின்றி நாட்டை நேசிக்கும் அனைத்து மக்­க­ளுக்கும் பொல்­லாட்­சி­யாக மாறிக் கொண்­டி­ருக்­கின்­றது. 

இவ்­வாரம் செவ்­வாய்க்­கி­ழமை (16.05.2017) மதியம் ஞான­சார தேரர் கிரு­லப்­ப­னையில் பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடாத்­திய ஊடக மாநாட்டில் தெரி­வித்த கருத்­துக்கள் இந்­நாட்டு முஸ்­லிம்­களை அச்சம் கொள்ளச் செய்­துள்­ளது. முஸ்­லிம்­களின் மனங்­களை புண்­ப­டுத்தி, அவர்­களின் உணர்­வு­களை தூண்டும் வகையில் கருத்­துக்­களை முன்வைத்­துள்­ள­மையை முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் கவ­னத்திற் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

முஸ்­லிம்கள் அல்­லாஹ்வின் பாதை என்று தெரி­வித்துக் கொண்டு எமது காணி­களை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தொல்­பொ­ருட்­களை அழிக்­கின்­றார்கள். காடு­களை அழிக்­கின்­றார்கள். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை வளர்க்கின்றார்கள். நாட்டில் சிங்­க­ள­வர்கள் விடு­தி­களில் தங்­கி­யி­ருப்­ப­வர்கள் போலவும், முஸ்­லிம்கள் நாட்­டிற்கு சொந்­தக்­கா­ரர்­க­ளா­கவும் மாறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 
முஸ்­லிம்கள் சவூ­தி­யி­ல­ிருந்து கிடைக்­கின்ற நிதி­க­ளுக்­காக வஹா­பி­ஸத்­திற்கு அடி­மை­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஐ.ஐ.ஆர்.ஐ.ஓ, ஐ.ஆர்.ஓ, அல் - ஷபாப், முஸ்­லிமாத், ஹிரா, நிதா, செரண்டிப் போன்ற 10 அமைப்­புக்கள் இலங்­கையில் தீவி­ர­வா­தத்தைப் பரப்பிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஜமா­அதே இஸ்­லாமி மதம் மாற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது.

ஹிரா பவுண்­டேசன் கிழக்கில் நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்கும் இஸ்­லா­மிய பல்­கலைக்கழ­கத்தில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களே உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளார்கள். இவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் முஸ்­லிம்கள் மீது அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இல்­லையேல் அவர்­களை சவூ­திக்கு அனுப்ப வேண்டும் என்­றெல்லாம் மிகவும் மோச­மான வகையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை முன் வைத்­துள்ளார். 

இவரின் இக்­க­ருத்­துக்­களை கேட்­கின்ற ஒரு சாத­ாரண பௌத்த சிங்­க­ளவர் முஸ்­லிம்கள் மிகவும் மோச­மா­ன­வர்கள், நாட்­டிற்கு எதி­ரா­ன­வர்கள் என்று நினைப்பர். மட்­டு­மன்றி முஸ்­லிம்­களின் மீது வெறுப்பைக் கொண்­ட­வர்­க­ளா­கவும் இருப்பர். மொத்­தத்தில் முஸ்­லிம்­களை எதி­ரி­களைப் பார்ப்­ப­தனைப் போன்று பார்ப்­பார்கள்.

இதனால், நாட்டில் இன­மோ­தல்­களே ஏற்­படும். மக்கள் மத்­தியில் ஆதா­ர­மற்ற வகையில் சட்­டத்­தையும், ஒழுங்­கையும் சீர்­கு­லைக்கும் வகையில் கருத்­துக்­களை முன்வைக்கும் இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்தால் மாத்­தி­ரமே நாட்டில் நிலைத்­தி­ருக்கும் அமை­திக்­கான அடித்­த­ளத்தை உறு­தி­யாக்கிக் கொள்­ளலாம். நாட்டில் மீண்டும் இன­வாத கருத்­துக்கள் மேலோங்கிக் கொண்­டி­ருப்­ப­த­னாலும், இவற்றின் பின்­ன­ணியில் அமைச்­சர்கள் சிலர் இருந்து கொண்­டி­ருப்­ப­த­னாலும் நிலை­யான சமா­தா­னத்­திற்­காக போடப்­பட்ட நல்­லாட்சி எனும் அத்­தி­வாரம் ஆட்டங் கண்டு கொண்­டி­ருக்­கின்­றது. 

கடந்த ஆட்­சியில் அமைச்சர் றிசாட் பதி­யு­தீனின் அமைச்சு அலு­வ­ல­கத்­திற்குள் சென்று பௌத்த கடும்­போக்கு தேரர்கள் அநா­க­ரி­க­மாக நடந்து கொண்­டார்கள். இதே போன்று அமைச்சர் மனோ கணே­சனின் அமைச்­சுக்கு சென்று அவரை எச்­ச­ரிக்கும் வகையில் ஞான­சார தேரர் கருத்­துக்­களை முன் வைத்­துள்ளார். நல்­லி­ணக்க அமைச்­ச­ராக மனோ கணேசன் இருக்கக் கூடா­தென்றும், இந்த அமைச்சை சிங்­க­ள­வ­ருக்கு வழங்க வேண்­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார். ஓர் அமைச்­சரின் அலு­வ­ல­கத்­திற்கு சென்று இவ்­வி­த­மாக நடந்து கொண்­டி­ருப்­பது நாட்டில் பௌத்த ஆதிக்­க­வா­தி­களின் நட­வ­டிக்­கைளின் உச்­சத்தைக் காட்­டு­கின்­றது.

அமை­தி­யாக இருக்க முடி­யாது
இவ்­வாறு நாட்டில் நடந்து கொண்­டி­ருக்­கையில் அர­சாங்­கமும், முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமை­தி­யாக இருக்க முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜபக் ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்­ற­வைகள் எனக்குத் தெரி­யா­தென்று சொன்­னதைப் போன்று இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சொல்ல முடி­யாது. அது போல முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஏனைய முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் கடந்த ஆட்­சி­யி­லி­ருந்­ததனைப் போன்று மௌன­மாக இருக்க முடி­யாது.

 கடந்த ஆட்­சியில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளை­யிட்டு அர­சாங்­கத்­திடம் கேள்வி கேட்­காது ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் ஒட்டி உற­வாடி தமது கள­வு­களை மறைத்துக் கொண்­டி­ருந்­த­மை­யால்தான் இன்­றைய ஆட்­சி­யிலும் முஸ்­லிம்கள் நாளுக்கு நாள் நெருக்­கு­வா­ரங்­களை சந்­தித்துக் கொண்­டி­ருப்­ப­தற்­கு­ரிய கார­ணங்­களில் ஒன்­றாகும். 

முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும், அமைச்­சர்­க­ளையும் அர­சாங்கம் தமது தேவைக்கு ஏற்­ற­வ­கையில் பயன்படுத்திக் கொண்டிருப்பதனையும், அதற்கேற்ற வகையில் இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதனையும் காணக் கூடியதாக உள்ளன. முஸ்லிம் அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அழைத்துச் செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும், வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தந்தால் அவர்களை சந்திப்பதற்கு இடமளிப்பதில்லை. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதுமில்லை. தலையாட்டுகின்றவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. தலையை அடமானம் வைத்தாவது சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று காரியம் செய்கின்றவர்களே தலைவர்களாக இருக்க முடியும். 

ஆட்சி மாறினால்தான் முஸ்லிம்கள் நாட்டில் நிம்மதியாக வாழலாம் என்ற முஸ்லிம்களின் கணிப்பு பிழைத்துள்ளது. யார் ஆட்சியில் அமர்ந்தாலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்பதாகவே பௌத்த கடும்போக்குவாதிகளின் நடவடிக்கைகளும், அரசாங்கத்தின் மௌனமும் காட்டுகின்றன.   இதனால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதனை விடவும் எதிர்க்கட்சியில் இருந்தால்தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு ஏற்படுமென்று தெரிகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருப்பதனால்தான் அக்கட்சியினால் பல நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாகவுள்ளது. 

ஆதலால், முஸ்லிம் கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்லுவதுதான் சிறந்த அரசியல் நகர்வாக இருக்குமென்பதே எமது அபிப்ராயமாகும்.

இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லிணக்க அரசாங்கம் இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ள போதிலும், இனங்களுக்கு இடையே நீடிக்கும் சமாதானம், ஒற்றுமையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஆபத்தில் உள்ளதாக சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளமையை அரசாங்கம் கவனத்திற் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நல்லாட்சியின் அத்திவாரம் ஆட்டம் காணுகிறதா? நல்லாட்சியின் அத்திவாரம் ஆட்டம் காணுகிறதா?  Reviewed by Madawala News on 5/20/2017 12:03:00 AM Rating: 5