Kidny

Kidny

தொல்பொருள் பிரதேசம் எல்லோருக்கும் சொந்தமாகும்


சஹாப்தீன் -நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினர் பௌத்த கடும்போக்குவாதிகளின் பொல்லாங்குகளின்றி வாழலாமென்று நினைத்த போதிலும் நாளுக்கு நாள் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் பௌத்த கடும் போக்குவாதிகளின் அழுத்தங்களுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். மாணிக்கமடுவில் விகாரை அமைக்கும் விடயத்தில் நாம் தொடர்ந்து பொறுமைகாக்க முடியாது. கிழக்கு மாகாண முதலமைச்சர் மாணிக்கமடு அவர்களது என்கிறார். மே மாதம் 30ஆம் திகதி அங்கு எந்த நிர்மாணமும் மேற்கொள்ள முடியாதென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.இவரது நடவடிக்கையால் தர்கா நகரில் நடந்தது போன்ற சம்பவம் நடக்கலாம் என பொது பல சேனவின் செயலாளர் கலகொட அத்தஞானசார தேரர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 


முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் இவர் முன் வைத்துள்ள இக்கருத்துக்களையிட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பாராளுமன்றத்திலோ, இதற்கு வெளியிலோ எதனையும் கூறவில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு எச்சரிக்கை விடுக்கும் இத்தேரரை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதனை செய்வதற்கு அரசாங்கம் தயங்குமாயின் முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்ல வேண்டும். அரசாங்கத்தின் பங்காளிகள் என்று அலங்கரித்துக் கொண்டிருப்பதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது. ஆட்சி மாறிய போதிலும் முஸ்லிம்கள் விடயத்தில் காட்சி ஒன்றாகவே உள்ளது. முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகத்தின் மீது அக்கறையற்று இருப்பதும், சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருப்பதும்தான் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும். 

சிறுபான்மையினரின் பூர்வீக நிலங்கள்
மாணிக்கமடு மாயக்கல்லிமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையின் பின்னால் மிகப் பெரிய நில அபகரிப்பு திட்டம் உள்ளது. இதற்கான அத்திவாரம் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போதே தீட்டப்பட்டள்ளது. 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலங்களை தொல் பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளின் ஊடாக அபகரித்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது மாயக்கல்லிமலையில் வைக்கப்பட்டுள்ள சிலையும், அதனைத் தொடர்ந்து அங்கு முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் காட்டுகின்றது. 

மேற்படி 2014ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் கிழக்கு மாகாணத்தில் 246 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரியதென்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தொல்போருள் இடங்களை பாதுகாப்பது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் கடமையாகும். ஆனால், தொல்பொருள் இடங்களில் புத்தர் சிலை வைப்பதோ, விகாரை அமைப்பதோ சட்டத்திற்கு முரணானதாகும். தொல்பொருள் இடங்கள் தனியே ஒரு இனத்திற்கு மாத்திரம் உரியதல்ல. ஆனால், தொல்பொருள் இடங்களில் புத்தர் சிலையை வைப்பதும், பின்னர் அதனைச் சூழவுள்ள சிறுபான்மையினரின் காணிகளை அபகரித்துக் கொள்வதும், அபகரிக்கப்பட்ட காணியில் பௌத்த சிங்களவர்களை குடியேற்றுவதும்தான் காலத்திற்கு காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதிக்கு புறம்பான நடவடிக்கையாகும். இத்தகைய நடவடிக்கைகளை பௌத்த கடும்போக்குவாத தேரர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அரசாங்கம் உறுதுணையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும், மாவட்டங்களின் எல்லைகளை விஸ்தரித்தும், குறுக்கியும் அமைத்துக் கொண்டதனாலும் பேரினவாதிகள் சிறுபான்மையினரின் சனத்தொகை விகிதாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். தற்போது தொல்பொருள் திணைக்களத்திற்குரிய காணிகள் என்றும், வனபரிபாலன திணைக்களத்திற்குரிய காணிகள் என்றும் சிறுபான்மையினரின் காணிகளை அடாத்தாக பறித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அம்பாரை மாவட்டம்
மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் பௌத்த கடும்போக்கு இனவாதிகளையும், தேரர்களையும் கட்டுப்படுத்தாது அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டதனால்தான் இன்று வரைக்கும் பௌத்த இனவாத தேரர்கள் பௌத்த இனவாதிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளார்கள். அன்று அரசாங்கம் நீதியை நிலைநாட்டியிருந்தால் சிறுபான்மையினருக்கு இன்று ஏற்பட்டுள்ள அச்சம் ஏற்பட்டிருக்காது. மஹிந்தராஜபக்ஷ செய்த அதே தவறை இன்றைய அரசாங்கமும் செய்து கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த கடும்போக்குவாதிகள் செயற்பட்டதனை விடவும் மோசமான நிலைமைகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் அம்பாரை மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களம் 86 இடங்களை தொல்பொருள் திணைக்களத்திற்குரியது என்று அடையாளப்படுத்தியுள்ளது. இந்த 86 இடங்களும் சிறுபான்மையினரின் பிரதேசங்களிலேயே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவில் 36 இடங்களும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் 13 இடங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 11 இடங்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 09 இடங்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலகப்  பிரிவில் 06 இடங்களும், பொத்துவில் செயலகப் பிரிவில் 05 இடங்களும், சம்மாந்துறை செயலகப் பிரிவில் 04 இடங்களும், கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் 02 இடங்களும் தொல்பொருள் பிரதேசங்களாக அடையாளமிடப்பட்டுள்ளன. 

இவ்வாறு 2014ஆம் ஆண்டு இடங்கள் அடையாளங் காணப்பட்டு தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரியவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போது பாராளுமன்றத்தில் இருந்த எந்தவொரு தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இதிலுள்ள ஆபத்தை உணரவில்லை. அதில் சிறிதளவு கவனத்தைக் கூட செலுத்தவில்லை. தேர்தல் மேடைகளிலும், ஏனைய விழாக்களிலும் உரிமைகளைப் பற்றியும், விடுதலை பற்றியும், சுயநிர்ணயம் பற்றியும் பேசிக் கொள்வதில் அர்த்தமில்லை. 

தேசிய தொல்பொருள் இடங்களை பாதுகாத்துக் கொள்வது சிங்களவர்களின் கடமை மட்டுமல்ல. தமிழ், முஸ்லிம்களினதும் கடமையாகும். இதே வேளை, தொல்பொருள் பிரதேசம் என்ற பேரில் சிங்களவர்களுக்குரிய குடியேற்றப் பிரதேசங்கள் உருவாக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது. மேலும், தொல்பொருள் இடங்கள் என்ற பேரில் சிறுபான்மையினரின் பூர்வீக வாழ்விடங்கள் பறிக்கப்படுவதனை தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கக் கூடாது. மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைப்பதற்கும், அங்கு முஸ்லிம்களின் காணியில்  விகாரை அமைப்பதற்கும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஒத்தாசை வழங்கிக் கொண்டிருப்பது தன்னிலை மறந்த செயற்பாடாகும்.

பக்கச்சார்பு நடவடிக்கைகள்
தொல்பொருள் பிரதேசம் எல்லா இனங்களுக்குரிய நாட்டின் பொதுச் சொத்தாகும். இலங்கையை பௌத்த மன்னர்கள் மாத்திரமன்றி, தமிழ் மன்னர்களும் ஆட்சி செய்துள்ளார்கள். மாகான்ராசா போன்ற முஸ்லிம் சிற்றரசர்களும் ஆட்சி செய்துள்ளார்கள். ஆதலால், இலங்கை தனியே ஒரு இனத்திற்கும், மதத்திற்குமுரிய நாடல்ல. மூவனிங்களுக்கும் சொந்தமான நாடாகும். இந்நாட்டை ஆட்சி செய்த மன்னர்களின் பண்டைய இடங்களை பாதுகாப்பது அவசியமாகும். இவ்விடங்களில் புதிய கட்;டடங்களை அமைப்பதோ, திருத்த வேலைகளைச் செய்வதோ, புதிதாக மத அடையாளங்களை வைப்பதோ, சிதைப்பதோ குற்றச்செயலாகும். 2015ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய உள்வீதியில் தேர் வலம் வருவதற்காக சில கட்டுமாண பணிகளை கோயில் நிர்வாகம் ஆரம்பித்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இக்கட்டுமாண பணிகளை தொல்பொருள் திணைக்களம் தடை செய்தது. 

இதே வேளை, மாயக்கல்லிமலைப் பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்திற்குரியதாகும். இங்கு திணைக்களத்தின் அனுமதியின்றியே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய எந்த சட்ட நடவடிக்கையையும் திணைக்களம் எடுத்துள்ளதாக தெரியவில்லை. இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் பக்கச்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இலங்கையின் வரைபடம் மாற்றியமைக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. அதன்படி 1901ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வரை படத்தில் ஜெய்லானி கூரைக்கல 'முஹம்மதியா ஸியாரம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரை படத்தில் 'முஹம்மதியா ஸியாரம்' எனும் சொல் நீக்கப்பட்டது. இதே வேளை தொல்பொருள் திணைக்களத்தினால் இடப்பட்டுள்ள பெயர் பலகையில் குறிப்பட்ட இடம் கி.மு. 02ஆம் நூற்றாண்டிற்கான பௌத்த மடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்தினால் 04அடி உயரமான தாதுகோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தொல்பொருள் இடங்கள் ஒரு மதத்தினருக்கு மாத்திரம் உரித்தானது என்ற பௌத்த இனவாதிகளின் சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். இதனைச் செய்யாது பௌத்த கடும்போக்குவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது சட்டத்தின் கைகளை கட்டி வைத்திருப்பதுதான் சிறுபான்மையினர் மத்தியில் காணப்படும் பலத்த சந்தேகங்களாகும்.

இதே வேளை, தேசிய தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும், ஆலோசனைக் கூட்டங்களும் ஜனாதிபதி முதல் அதிகாரிகள் மட்டம் வரை அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சிறுபான்மை சமூகத்தின் அமைச்சர்கள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் கலந்து கொள்வதற்கு அழைப்புக்கள் வருவதில்லை. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும், பெரும்பான்மையினத்தின் அமைச்சர்கள், பௌத்த கடும்போக்குவாத தேரர்களே கலந்து கொள்கின்றார்கள். தேசிய சொத்தை பாதுகாக்கும் திட்டத்திற்கு சிறுபான்மையினரும் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால், தவிர்க்கப்பட்டே வருகின்றமை மூலமாக சிறுபான்மையினரின் நிலங்களை விழுங்கும் செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. 

மாயக்கல்லிமலை புத்தர் சிலை
சட்டத்திற்கு முரணாக மாயக்கல்லிமலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு அரசாங்கமோ, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளோ நடவடிக்கைகளை எடுக்கமாட்டார்கள் என்பது தெளிவாகவே தெரிகின்றது. ஆனால், பிரச்சினை இத்தோடு முடிந்து விடாது. சட்ட விரோதமாக தொல்பொருள் இடத்தில் சிலையை வைத்தவர்களுடன் அம்பாறை கச்சேரியில் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளார்கள். மட்டுமல்லாது அங்கு விகாரை அமைப்பதற்காக முஸ்லிம்களின் காணிகளை சுவிகரிப்பதற்கும் தீர்மானம் எடுத்துள்ளார்கள். காணியையும் அளந்து எல்லையிட்டுள்ளார்கள். மேலும், ஜனாதிபதி அங்கு புதிய கட்டடம் அமையாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் புத்தர் சிலை அகற்றப்படுமென்று தெரிவிக்கவில்லை. இதே வேளை, ஒரு வாரத்தில் புத்தர் சிலை அகற்றப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் காலப் போக்கில் புத்தர் சிலை விவகாரத்தை மறந்து விடுவார்கள் என்பதற்காக சொல்லப்பட்ட சமாளிப்பு வார்த்தைகள் என்று தெரியவந்துள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்றும் ஈனச் செயலை கைவிட வேண்டும். சமூகத்திற்கு அரசியல் தலைமை கொடுக்க முடியாதவர்கள் அப்பொறுப்பை செய்யக் கூடியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

மாயக்கல்லிமலையில் வைக்கப்பட்டுள்ள சிலை இறக்காமத்தில் இன்னும் 12 இடங்களில் புத்தர் சிலை வைப்பதற்கானதொரு ஒத்திகையாகும். இதனை வெற்றிகரமாக செய்ய வேண்டுமென்பதற்காகவே அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பௌத்த சிங்களப் பேரினவாதம் அனுமதியை கேட்டுள்ளது. தலையாட்டுவதற்கே பழக்கப்பட்டவர்கள் இதற்கும் தலையை அசைத்துள்ளார்கள். 

தீகவாபி விகாரைச் சூழவுள்ள பிரதேசங்களில் இப்போதைக்கு சிங்களவர்கள் இல்லாதுள்ள போதிலும் இப்பிரதேசங்களில் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைத்து பௌத்தர்களின் பிரதேசமாக காட்டவும், பௌத்தர்களை குடியேற்றவும் பேரினவாதம் திட்டமிட்டுள்ளது. அத்தோடு, தீகவாபியை மையப்படுத்தி பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றை அமைக்கும் திட்டங்களையும் சிங்களப் பேரினவாதம் கொண்டுள்ளது. இவ்வாறு அமையும் பட்சத்தில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் இதற்குள் உள்வாங்கப்படலாம். சிங்கள பேரினத்தின் இந்த நீண்ட கால திட்டங்களை புரிந்து கொள்ளாது மண் கோட்டாவிற்கும், அமைச்சர் பதவிக்கும், வேறு தேவைகளுக்கும் முஸ்லிம் சமூகத்தினதும், தமிழ் சமூகத்தினதும் பூர்வீக நிலங்களை விட்டுக் கொடுக்க முடியாது. அம்பாறை மாவட்டத்தில் இவ்விதமாக பேரினவாதம் தமது கோரக் கரங்களால் அழுத்திக் கொண்டிருக்கையில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சமூகத்தினரும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது பௌத்த இனவாத சக்திகளுக்கோ அதிக வாய்ப்பை கொடுக்கும். அவர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலகுவாக இருக்கும். 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்று நம்முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை.

தொல்பொருள் பிரதேசம் எல்லோருக்கும் சொந்தமாகும் தொல்பொருள் பிரதேசம் எல்லோருக்கும் சொந்தமாகும் Reviewed by Madawala News on 5/14/2017 11:40:00 PM Rating: 5