Ad Space Available here

அஷ்ரஃபின் மரணம்: விசாரணை அறிக்கை எங்கே ?


நல்ல வசதியோடும் செல்வங்களோடும் வாழ்ந்த குடும்பத் தலைவன் ஒருவன் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் அவனை பிரதானமாகக் கொண்ட செயற்பாட்டுக் கட்டமைப்பு ஸ்தம்பித்து விடும். அவனது நண்பர்கள், வியாபார பங்காளிகள் சொத்துக்களைப் பிரிப்பதில் அக்கறை காட்டுவார்கள். அவனிடம் தொழில் செய்தோர் அவனுடைய பெயரைச் சொல்லி சிறிய சிறிய வியாபாரங்களை தொடங்கிவிடுவார்கள். ஆனால் அவனது வீட்டில் ஒரு வெறுமை இருக்கும். அவன் யாருக்கு நல்லது செய்தானோ அந்த நபர்கள் அவனது வெற்றிடத்தை உணர்ந்து கொண்டே இருப்பார்கள்.

இப்படித்தான்,முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக ஒரு வெற்றிடத்தை உணர்ந்து கொண்டே இருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியல் விடிவெள்ளியாக இருந்த மர்ஹூம் அஷ்ரஃப் இல்லாத காரணத்தால் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளம் சோபை இழந்து, வியாபாரமயமாகிப் போன கவலை ஒருபுறமிருக்க, அவரது மரணம் எங்ஙனம் நேர்;ந்தது என்பதைக் கூட அறிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் முஸ்லிம்களை பதினாறு வருடங்களாக வாட்டிவதைக்கின்றது.

இந்நிலையிலேயே, தகவல் அறியும் சட்ட மூலத்தின் கீழ் மறைந்த தலைவரின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள தகவல்களை தமக்கு வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஜனாதிபதி செயலகத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு உரிய தகவல் வழங்காமல் அதற்கான காரணத்தைக் கூறி பதில் அனுப்பப்பட்டுள்ளது. தாங்கள் கோரிய தகவல் 12 வருடங்களுக்கு முந்தியது என்பதால் தேடிப் பெற முடியாது என்று அதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

தவறிழைத்த வாரிசுகள்
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி காலையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிக்கொப்டரில் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் நோக்கி அஷ்ரஃப் உள்ளிட்ட குழுவினர் பயணித்துக் கொண்டிருந்த போது அரநாயக்க, ஊரக்கந்தை மலைப்பகுதியில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகியது இதனால் அஷ்ரப் மற்றும் அந்த ஹெலிக்கொப்டரின் விமானிகள் உள்ளடங்கலாக எல்லோருமே உயிரிழந்தனர். இதனால் அஷ்ரஃபின் பயணம் முடிந்தது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பயணமும் ஒரு மலையில் தொலைந்துபோனது என்றுதான் சொல்ல வேண்டும்.

தலைவரின் மரணம் ஒவ்வொரு வீட்டையும் மரணவீடாக்கியிருந்தது. அவரது பாசறையில் பயின்றவர்கள் ஒற்றைக்காலில் நின்று, இந்த மரணத்தின் பின்னாலிருக்கின்ற மர்மத்தை வெளியில் கொண்டு வருவார்கள் என்று முஸ்லிம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கட்சியைக் காப்பாற்ற வேண்டும், கட்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனரே தவிர மரணத்தின் மர்மத்தை அவர்கள் துலக்கவில்லை.

அவருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த அவருடைய பாரியார் பேரியல் அஷ்ரஃப், இன்றிருக்கின்ற மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளடங்கலாக எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் தலைவரின் மரணம் எப்படி நேர்ந்தது? அது தற்செயலான விபத்தா? திட்டமிட்ட விபத்தா என்பதை உறுதிசெய்து அவ்விடயத்தை மக்களுக்கு கூறவில்லை. ஒரு வீதி விபத்தில் இறக்கின்ற சாதாரண மனிதனின் உயிர் எவ்வாறு பிரிந்தது என்பதை பிரேதபரிசோதனை மூலம் அறிந்து கொள்வதில் காட்டுகின்ற கரிசனையை கூட முஸ்லிம் அரசியல்வாதிகள் அஷ்ரஃபின் மரணத்தில் காட்டவில்லை.

இருப்பினும் இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் வீரசேகரவை கொண்ட தனிநபர் விசாரணைக்குழு ஒன்றை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் நியமித்திருந்தார். குறித்தொதுக்கப்பட்ட காலப்பகுதியில் அவ்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அஷ்ரஃபுடன் நெருக்கமாக இருந்த அம்மையார் அதனை பகிரங்;கப்படுத்தவும் இல்லை, அஷ்ரஃபின் அரசியல் வாரிசுகள் என்று இன்று கூவித்திரிவோரும் மரணத்தின் காரணம் என்னவென்பதை அறிந்து மக்களுக்கு கூறவில்லை.

பொறாமைக் காரர்கள்
மு.கா. ஸ்தாபக தலைவர் அஷ்ரஃப் அப்போது சந்திரிக்கா ஆட்சியின் தூணாக இருந்தார். முஸ்லிம் அரசியலில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவர் சமகாலத்தில் பெருந்தேசிய அரசியலின் தீர்மானிக்கும் சக்தியாக மு.கா.வை வளர்ச்சியடையச் செய்திருந்தார். இதனை பலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சிங்கள அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மு.கா.வும் அதன் தலைவரும் இருப்பதை பிற்போக்கு சிந்தனையுள்ள பெருந்தேசிய சக்திகள் விரும்பவில்லை. கொழும்பில் மையங் கொண்டிருந்த முஸ்லிம் அரசியலின் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை அஷ்ரஃப் கிழக்கிற்கு கொண்டு வந்ததை தென்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளே விரும்பியிருக்கவில்லை. அத்துடன் ஆயுதக் குழுக்களுக்கு சவாலாகவும் தமிழர் அரசியலில் இருந்து விலகியும் தனியொரு அரசியல் அடையளத்தை முஸ்லிம்கள் கட்டியெழுப்பக் காரணமான அஷ்ரபை புலிகள் கொன்றொழிக்க திட்டம் போட்டிருந்ததாக பரவலாக பேசப்பட்டது.

இதேவேளை, இலங்கையில் ஆதிக்கம் செலுத்த நினைத்த மேற்கத்தேய நாடுகளின் தலையீட்டுடனான உடன்படிக்கைகள், ஏற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஒருவர் என்றும் முஸ்லிம்களுக்கு பாதகமான எதனையும் எதிர்க்கும் தைரியசாலி என்றும் அவரை கூற முடியும். அதுமட்டுமன்றி, சோம தேரருடன் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அஷ்ரஃப் நடாத்திய விவாதமும் அவரது பாராளுமன்ற உரைகளும் கடும்போக்கு சக்திகளிடையே பலமான அதிர்வை ஏற்படுத்தியிருந்த காலமது.
அந்த வகையில், இது ஒரு திட்டமிட்ட விபத்தாக அல்லது கொலையாக இருக்கும் பட்சத்தில் இதனை மேற்சொன்ன யாருமே நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, அந்த விமானத்தில் பயணித்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகம் எழுந்தது. புலிகள் அவரை தற்கொலைக் குண்டுதாரியாக அனுப்பியிருக்கலாம் என்று சிலர் கருதினர். 

கடும்போக்கு சக்திகள் ஒரு இயந்திரக் கோளாறை திட்டமிட்டிருக்கலாம் என்று ஆழஊடுருவி நோக்கும் சிலர் அனுமானிக்கின்றனர். அதேபோன்று, கறிவேப்பிலையாக முஸ்லிம்களை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் அன்றைய பெருந்தேசிய ஆட்சியாளர்கள் மீதும் ஒரு சிறிய சந்தேகப் பார்வை எழுந்தது.
ஆனால், இதுவெல்லாம் வெறும் சந்தேகங்களும் அனுமானங்களும்தான். 
இதற்கான உண்மையான காரணத்தை ஓரளவுக்கு மேற்படி விசாரணை அறிக்கை உள்ளடக்;கியிருக்கும். எனவேதான் அதனை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது. 

அந்தக் கடமையை இதுவரை இவ்விரு தரப்பினரும் சரியாகச் செய்யவில்லை.
இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தச் செய்யும் விடயத்தில் எல்லோரும் தவறிழைத்திருக்கின்றார்கள். அஷ்ரஃபில் தனிப்பட்ட அக்கறையை கொண்டுள்ள பேரியல் அஷ்ரஃபோ, தனக்கு தலைமைப் பதவி கிடைக்க காரணமானவர் என்ற அடிப்படையில் றவூப் ஹக்கீமோ அல்லது றிசாட் பதியுதீன், ஏ.எல்.அதாவுல்லா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சேகு இஸ்ஸதீன், எம்.ரி. ஹசன்அலி, பசீர் சேகுதாவூத், அன்வர் இஸ்மாயில், நஸீர் அகமட் என பிற்காலத்தில் அதிகாரத்தில் இருந்த எல்லோருமே இதைச் செய்வதற்கு கடமைப்பட்டிருந்தவர்கள். அதைச் செய்யாமல் விட்டது, அஷ்ரஃபுக்கும் இந்த சமூகத்திற்கும் செய்த மாபெரும் வரலாற்றுத் துரோகம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

பசீரின் விண்ணப்பம்
இந்நிலையிலேயே, தகவலுக்கான உரிமைச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் 2016 ஆகஸ்ட் 4ஆம் திகதி நிறைவேறியதை தொடர்ந்து கடந்த பெப்ரவரியில் இலங்கையில் தகவல் உரிமைக்கான சட்டம் அமுலுக்கு வந்தது. இதன்படி பொது அதிகார சபை என்ற வகுதிக்குள் அடங்கும் நிறுவனங்களிடம் இருந்தும் பொதுமக்கள் தகவலை கோரிப் பெறமுடியும். 

விதிவிலக்கான தகவல்கள், நிலைமைகள் தவிர எந்தவொரு தகவலையும் முறைப்படி கோரிப் பெறுவதற்கான சட்டவலுத் தன்மையை இந்தச் சட்டம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கியிருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் உள்ளடங்கியுள்ள குறிப்பிட்ட தகவல்களை தமக்கு வழங்குமாறு அக்கட்சியின் தவிசாளராக இருந்த பசீர்சேகுதாவூத், ஜனாதிபதி செயலகத்தில் முறைப்படி விண்ணப்பித்திருந்தார். அந்த சட்டத்தினால் குறித்துரைக்கபட்டதன் படி அதற்கான பற்றுச்சீட்டு உடன் வழங்கப்பட்டதுடன், பின்னர், 'சுவடித் திணைக்களத்திற்கு தேடலுக்காக அனுப்பப்பட்டுள்ளது, அது கிடைத்ததும் அறிவிக்கப்படும்' என்று ஒரு கடிதமும் தனக்கு அனுப்பப்பட்டதாக பசீர் கூறுகின்றார்.

இவ்வாறிருக்க, அண்மையில் ஏப்ரல் 25ஆம் திகதியிட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன், விண்ணப்பதாரியான பசீருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். 'உங்களால் கேட்கப்பட்ட தகவலை (12வருடங்களுக்கு மேற்பட்டது) தேடியெடுக்க முடியாமல் இருக்கின்ற காரணத்தால், உங்களுடைய மேற்படி கோரிக்கையை நிராகரிப்பதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன்' என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தகவல் உரிமைச் சட்டத்தின் 32(1) பிரிவின் படி இத்தீர்மானத்திற்கு எதிராக தாங்கள் 2 மாதத்திற்குள் தகவல் உரிமை ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்ய முடியும் என்ற விடயத்தையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சரியான முறையிலேயே செயற்பட்டிருக்கின்றார். எவ்வாறெனின், இச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் இருக்கின்ற தகவல்கள் 10 வருட காலத்திற்கு பேணப்பட வேண்டும் என்றும், அமுலுக்கு வந்த திகதிக்குப் பின்னர் உருவாகும் தகவல்கள்  12 வருடங்களுக்கு பேணப்பட வேண்டும் எனவும் இச்சட்டம் வரையறை செய்திருக்கின்றது. அதாவது, இக்காலப்பகுதிக்கு மேற்பட்ட தகவல்களை வழங்க வேண்டிய கடப்பாடு இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

அந்த அடிப்படையிலேயே 12 வருடங்களுக்கு முன்னைய தகவலாக அஷ்ரஃப் மரண அறிக்கை காணப்படுவதாகவும் அதை தேடிப் பெறமுடியாதிருப்பதாகவும் கூறி, பசீர்சேகுதாவூதின் கோரிக்கை மறுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் தகவலுரிமைச் சட்டத்தின் பிரகாரம் தகவல் அதிகாரியால் ஒரு தகவல் வழங்கப்படாவிடத்து தகவல் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யவும், அங்கும் கிடைக்காத பட்சத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் விண்ணப்பதாரிக்கு உரிமை இருக்கின்றது. அதனையும் ஜனாதிபதியின் செயலாளர் தனது கடிதத்தில் பசீருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தார்மீக கடமை
மறைந்த தலைவர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையிலுள்ள தகவல்களை கோரி பசீர் சேகுதாவூத் சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஜனாதிபதி செயலகம் தகவலுரிமைச் சட்டத்தின் படியே கையாண்டிருக்கின்றது. அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லையாதலால் அந்த செயற்பாட்டை விமர்சிக்க முடியாது. மாறாக, தகவல் உரிமை ஆணைக்குழுவிற்கும் பின்னர் தேவையேற்படின் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கும் முறைப்பாடு செய்வதே இப்போதிருக்கின்ற வழியாகும். அந்தவகையில் மேன்முறையீடு செய்ய பசீர் நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.

ஆனால், நாட்டின் மிகவுயர்ந்த அரச நிர்வாக காரியாலயமான ஜனாதிபதி செயலகம் 12 வருடங்களுக்கு முன்னைய தகவல் எனக் கூறி ஒரு விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றமை, தகவல் உரிமைச் சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களுக்கு ஒரு பதச் சோறாக அமைந்திருக்கின்றது எனலாம்.
அதுமட்டுமன்றி, அஷ்ரஃபின் மரண விசாரணை அறிக்கையை தேடிப் பெற முடியாதிருக்கின்றது எனக் கூறுவது, அது தொலைந்து விட்டதா? என்ற இன்னுமொரு சிந்தனையோட்டத்தை முஸ்லிம்களுக்கு தூண்டிவிட்டிருக்கின்றது. ஒரு பெருந் தலைவனின் மரணம் பற்றிய அறிக்கைக்கு என்ன நடந்ததோ என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

மர்ஹூம் அஷ்ரஃப் என்பவர் ஒரு சாதாரண மனிதரல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் அரசியல் தலைவர். அடுத்த தலைமுறைக்கான அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவர். அவரது மரணம் எந்தளவுக்கு இந்த நாட்டில் அதிர்ச்சியையும் வெற்றிடத்தையும் ஏற்படுத்தியது என்பதை அரசாங்கமும் அதிகார தரப்பினரும் நன்கறிவார்கள். அந்த மரணத்தில் சந்தேகம் இருந்த காரணத்தினாலேயே விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. 

எனவே, இப்போது அதனைக் காணவில்லை என்றால் அதை என்னவென்று சொல்வது?!
அஷ்ரஃபின் மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காக மக்கள் இன்னும் ஆர்வமுடன் இருக்கின்றனர். இம் மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் பரவலாக முஸ்லிம்களிடையே இருக்கின்ற சமகாலத்தில் மேற்குறிப்பிட்ட தரப்பினர்களுள் ஒரு தரப்பினரே இதற்குப் பின்னால் இருந்திருக்கக் கூடும் என்ற ஒரு ஊகமும் உள்ளது. இந்நிலையில், அது கொலையா இல்லையா என்பதை அறிவதற்கு இருந்த ஒரு முக்கிய ஆவணத்தை தேடிப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு வேளை இந்த சந்தேகங்களை எல்லாம் பொய்யாக்கும் விதத்தில் அது ஒரு விபத்தே என்பதை இவ்விசாரணைக் குழு அடையாளம் கண்டிருக்குமாயின் அதனை பொது மக்களுக்கு அரசாங்கங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை முஸ்லிம் தலைமைகள், அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாது இப்போது அறிக்கையை காணோம் என்று கூறுவது தார்மீகமாகத் தெரியவில்லை.

வரலாற்றை தொலைத்தல்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் படி 12 வருடங்ளுக்கு மேல் பழமைவாய்ந்த தகவலை வழங்க வேண்டியதில்லை என்பது உண்மையே. ஆனால் இந்த நாட்டில் இருந்த ஒரு முஸ்லிம் தலைவன் என்ற அடிப்படையில், அவரோடு மேலும் பலரும் இறந்தார்கள் என்ற அடிப்படையில், இது சதித் திட்டமா என்பதையும் அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறியும் அடிப்படையிலும், இந்த முக்கியத்துவமான அறிக்கை இன்னும் பல வருடங்களுக்குப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அரசாங்க சுவடிக் கூடத்திலும் தேசிய நூதனசாலையிலும் வேறுபல பொறுப்புவாய்ந்த அரச அலுவலங்களிலும் எத்தனையோ தகவல்கள், அத்தாட்சிகளும், தொல்பொருட்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிங்கள மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் புனித ஸ்தலங்களாக மதிக்கப்படுவதுடன் அவர்களது வாழ்க்கையும் மரணமும் அடுத்த தலைமுறைக்கு போதிக்கப்படுகி;ன்றது. இது போதாது என்று இந்த மண்ணில் முற்காலத்தில் வாழ்ந்த பௌத்த மக்களின் ஆதாரங்களை தேடி ஆங்காங்கே தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்படி ஏனைய மக்கட் தலைவர்களின் ஆதாரங்கள் எல்லாம் நீண்டகாலத்திற்கு பாதுகாக்கப்படுகின்ற ஒரு நாட்டில், முஸ்லிம் தலைவர் ஒருவரின் மரணம் பற்றிய ஒரு ஆவணம், அதுவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தேடிப் பெற முடியவில்லை என்ற பதிலில் இருந்து, வேறு பல கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

இப்போது தேடிப் பெற முடியவில்லை என்றால் அது தொலைக்கப்பட்டிருக்கின்றது அல்லது தேடிப் பெற முடியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதே அதன் மறுதலை அர்த்தமாகும். அவ்வாறாயின் அந்த அறிக்கையின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது என்றோ, அது பத்திரமாக வைக்கப்படவில்லை என்றோ முடிவு செய்ய வேண்டியேற்படும். அதுமட்டுமன்றி, இந்தப் பதிலால் இந்த மரணத்தில் மர்மம் இருக்கின்றதோ என்ற சந்தேகம் முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களிடையே அதிகரித்திருப்பதையும் காண முடிகின்றது.
தகவல் அறியும் சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. அதில் சில வரையறைகள் காணப்பட்டாலும் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கும் அதை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு பொது மக்களுக்கும் இருக்கின்றது. அதன்படி ஜனாதிபதி செயலகத்தால் பசீர் சேகுதாவூதின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் தகவல் உரிமை ஆணைக்குழுவுக்கும், அதன்பிறகு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மேன்முறையீடு செய்தும் இவ்வறிக்கையிலுள்ள தகவலை வெளியில் கொண்டு வரவேண்டும். இச்சட்டமூலத்தை பரீட்சிப்பதற்கான ஒரு பரிசோதனையாக இது அமையும்.

ஒருவேளை தகவல் உரிமைச் சட்டமூலத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக அதை வெளிக் கொணர்வது சாத்தியமில்லாது போனால், நாட்டில் இருக்கின்ற ஏனைய சட்ட ஏற்பாட்டை பயன்படுத்தி அஷ்ரஃபின் மரணத்தில் புதைந்திருக்கின்ற மர்மத்தை நீக்க பாடுபட வேண்டியது அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மக்களினதும் பொறுப்பாகும்.

உண்மையாக அஷ்ரஃபின் மரணத்திற்குப் பின்னால் ஒரு சதிவலை இருந்திருக்குமானால், அந்த வலையை பின்னியவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால், இனிவரும் காலங்களிலும் அவர்கள் சதித்திட்டம் தீட்டலாம் என்பதையும், அதில் நீங்களும் விழ நேரலாம் என்பதையும்,ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் மனதில் கொண்டு செயற்படுவது நல்லது.

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 14.05.2017)
 
 

அஷ்ரஃபின் மரணம்: விசாரணை அறிக்கை எங்கே ? அஷ்ரஃபின் மரணம்: விசாரணை அறிக்கை எங்கே ? Reviewed by Madawala News on 5/14/2017 06:58:00 PM Rating: 5