Ad Space Available here

குர்ஆனை உயிர்பிக்கும் ரமழான்..


ரமழான் என்றாலே முஸ்லிம்களக்கு மத்தியில் ஒரு புது  உற்சாகம்,  உத்வேகம். ரமழானுக்கு தயாராவது என்றாலே நம்மவர்களுக்கு  ஒரு புத்துணர்வு வந்துவிடும். உண்மையில் இவை ரமழானுக்கேயுரியபரகத். வேறு மாதங்களில் நாம் முயற்சித்தாலும் ரமழானில் செய்வது போன்று இபாதத்களில் நற்செயல்களில் மிகக் கட்டுப்பாட்டுடன் தீமைகளிலிருந்து தவிர்ந்து வாழ்வது கடினம்.

புரியாத புதிர் என்னவென்றால் ஒரு மாதம் மலக்குகளின் வாழ்க்கையை வாழும் நாங்கள் ரமழான்  முடிந்து அடுத்த தினமே மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுகிறோம். ரமழானில் பெற்ற பயிற்சிகள்அத்தனையையும் மறந்துவிடுகிறோம்.

ரமழான் என்ற  ஒன்றே எமது வாழ்க்கையில் வரவில்லை அப்படியான பயிற்சியொன்றையே நாம்  பெறவேயில்லை என்பது போல்  நமது நடத்தைகள் அமைந்திருக்கும்.

தொடர்ந்து ஒவ்வொரு ரமழானின் போதும் இப்படி நிகழ்வதற்கான காரணம்  என்ன? அல்லாஹ் இந்த ரமழான் என்ற பயிற்சித்திட்டம் மூலம் வெறுமனே  ஒரு மாதகாலம் அனைத்து மக்களும் ஆன்மீகஇன்பத்தில் மூழ்கிருயிருப்பதனை மாத்திரமா அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அல்லது ரமழான் நோன்புப் பயிற்சிக்கு ஏதாவது சமூகப் பெறுமானம் உள்ளளதா? 

ஒவ்வொரு வருடமும்  அல்லாஹ் எதிர்பார்க்கும் அந்த சமூகப் பெறுமானத்தைத நாம் நிறைவேற்றுகிறோமா? அல்லாஹ் எதிர்பார்க்கும் ரமழானின் உயர்ந்த இலக்குகளை நாம் அடைந்துகொள்கிறோமா?

என்பன தொடர்பிலான ஒரு சிரிய சுயவிசாரணையே  இந்த ஆக்கம்.

 

இதனை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ரமழான்களை கடந்தவர்களாக இருப்பீர்கள்.

நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா

இந்த ரமழான் எனக்குள் எந்த நிரந்தர மாற்றத்தை கொண்டுவந்துள்ளது? ஒவ்வொரு ரமழானையும் நான் தாண்டிச் செல்லும் போது அது எனது நாளாந்த வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

 என் வாழ்வில் நன்மைகள் அதிரிக்கின்றனவா? தீமைகள் குறைகின்றனவா? அல்லது வெறுமனே ரமழான் 30 நாட்களுக்குள் மாத்திரம் ரமழான் என்ற பயிற்சி எனக்குள் சுருங்கிவிடுகின்றதா? என்று ஒருமுறையாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

இந்த ரமழான் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் அல்லது தாக்கம் தான் என்ன? ரமழான் 30 நாள் முடிந்ததும் ரமழானுக்கு முன்னர் இருந்த அதே பழைய சமூகம் எந்த மாற்றமுமில்லாமல் இருக்கிறதா?

ரமழான் என்பது இறைவனால் மனித சமூகத்துக்கு அருளப்பட்ட மிக உன்னத ஒரு உயர்ந்த பயிற்சித்திட்ட ஒழுங்கு. அப்படியிருந்த போதும் ஏன் சமூகத்திலோ, தனிமனிதனிலோ  இந்த ரமழான் எந்தப் பாரியதாக்கத்தையும் செலுத்தவில்லை.

இதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும்.

1. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட இந்த ரமழான் என்னும் இப்பயிற்சித்திட்டம் சமகாலத்துக்கு பொருத்தமற்றது. அதனால் எதனையும் சாதித்துவிட முடியாது. அது வெறுமனே ஒரு ஆன்மீக சடங்கு மாத்திரம் தான்.

2. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட இந்தப் பயிற்சித்திட்டம் எம்மால் சரியாக புரியப்பட்டு உரிய ஒழுங்கில் நடைமுறைபடுத்தப்படவில்லை

முதல் காரணத்தை யாராவது ஏற்றுக்கொள்வதாக இருந்தால் நிச்சயம் அந்நபர் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவாறக கருதப்படுவார். முக்காலத்தையும் அறிந்த சர்வ அறிவின் உரிமையாளன் அல்லாஹ்முக்காலத்தையும் உணர்ந்து முக்காலத்துக்கும் பொருத்தமாக கடமையாக்கப்பட்ட கடமையே இந்த நோன்பு அதில் யாராலும் குறைகாண முடியாது. முதல் காரணத்தை எந்தவொரு உண்மையான முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

அப்படியானால் இரண்டாவது காரணம் தான் உண்மையான காரணமாக இருக்க முடியும்.

பல தசாப்தங்களாக பல ரமழான்களை நாம் கடந்து வந்தும் தனிமனிதனிலோ, சமூகத்திலோ அது எந்தப் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் நிச்சயம் அதற்கு பொறுப்பானவர்கள் நாங்களாகவேஇருக்க முடியும். இதற்கு எந்தவித்திலும் இறைவன் பொறுப்பல்ல.

இறைவன் உயர்ந்த இலக்குகளுடன் கடமையாக்கிய இந்த புனித உயர்ந்த கடமையை நாம் தவறான முறையில் நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதே இதன் பொருள். அல்லாஹ் ரமழான் நோன்பின் மூலம் சமூகத்தில் என்ன மாற்றதை உருவாக்க நினைக்கிறான் என்பதனை நாம் மிகச்சரியாக உணரவில்லை என்பதே உண்மை.

ஏனென்றால் நாம் சிறந்த முறையில் இந்தக் கடமையை நடைமுறைபடுத்தியிருந்தால் சமூகமும் சமூகத்தின் தனிமனிதர்களும் ஒவ்வொரு ரமழானை சந்திக்கும் போதும் அவர்கள் மனிதப் புனிதர்களாக மாறிக்கொண்டே வந்திருப்பார்கள். சமூகம் வரவர இந்தளவு அதளபாதாளத்தை நோக்கி பயணித்திக்கொண்டிருக்காது.

ரமழான் என்றாலே நாங்கள் குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது வழக்கம். பலர் ஒரே ரமழானில் 10 குர்ஆனை விட அதிகம் ஓதி முடித்துவிடுவார்கள். குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்பதால் குர்ஆன் அதிகமதிகம்திலாவத் செய்யப்படுகிறது.

ஸஹாபாக்கள் சமூகத்துக்கு அல்லாஹ் ஒரு வருடம் தஹஜ்ஜத் தொழுகையை கட்டாய கடமையாக்கினான்.

இதன் பின்னணியை விளக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்

நபியவர்களும் ஸஹாபாக்களும் தஹஜ்ஜத்தில் அதிகம் குர்ஆன் ஓதுபவராக இருந்தார்கள். சில ரிவாயத்களில் நபியவர்கள் 4 அல்லது 5 ஜூஸ்களை ஓதுபவர்களாக இருந்திக்கிறார்கள் என்பதனை புரிந்துகொள்ள முடியும்.ஸஹாபாக்களை பொறுத்தவரையில் குர்ஆனின் வசனங்கள் அவர்களுக்கு நேரடியாக விளங்கிகொள்ளக் கூடியவை. தஹஜ்ஜத நேரம் மிக அமைதியான ஆள்சந்தடி இல்லாத நேரம்.அந்த நேரத்தில் நாம் வாசிக்கும் கருத்துக்கள் ஆழ்மனதில் அப்படியே பதிந்துவிடும். ஸஹாபாக்கள் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் குர்ஆனை தஹஜ்ஜத்தில் திருப்பி திருப்பி ஓதும் போது குர்ஆனின்சிந்தனைகள் கருத்துக்கள் ஸஹாபாக்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்து அவை அவர்களின் இரத்தத்தில் ஊறிவிடும்.

இரவில் அவர்கள் பெறும் இந்தப் பயிற்சி தான் பகல்வேளைகளில் சமூகத்தில் எத்தனை பாரிய பிரச்சினைகள் சோதனைகள் வந்த போதும் நிலை குழையாமல் உறுதியாக நிற்க ஸஹாபாக்களுக்கு துணை புரிந்தது. இப்படி குர்ஆனை அத்திரவாரமாக இட்டு கட்டியெழுப்பப்பட்ட சமூகம் தான் மிகச் சிறந்த சமூகமாக மாறி இஸ்லாம் இன்று வரை நிலைத்திருக்க துணை நின்றது.

ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் வழங்கிய இந்தப் பயிற்சி ஸஹாபாக்களின் உயர்ந்த தஃவா  பணிக்கு மிகவும் உந்து சக்தியாக உயிர்நாடியாக அமைந்தது. நபியவர்களும் ஸஹாபாக்களும் குர்ஆனிய மனிதர்களாகவே வாழ்ந்ததன் மிக முக்கிய ரகசியம் இது தான்.

இங்கு நாம் ஒரு விடயத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஸஹாபாக்களின் தாய்மொழி அறபு ஆகவே ஸஹாபாக்கள் குர்ஆன் ஒதும் போது குர்ஆனின் சிந்தனைகள் கருத்துக்கள் ஸஹாபாக்களை நேரடியாகபாதித்தது. ஆனால் எங்களை பொறுத்தவரையில் சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்கு அறபு மொழியறிவு இல்லை. தொழுகையில் குர்ஆன் ஓதப்படும் போது பெரும்பாலானோருக்கு குர்ஆனின் சிந்தனைகள்கருத்துக்கள் புரிவதில்லை.

பல சந்தர்ப்பங்களில் குர்ஆனின் சிறு வசனங்களை கேட்டுக் கூட பலர் இஸ்லாத்தை தழுவியதுண்டு. இறுதித் தூதர் அவர்களின் தலையை வெட்டிச் செல்ல வந்த உமர்(றழி) அவர்களின் மனது மாறியதும்குர்ஆனின் ஒரு சிறுபகுதியை செவிமடுத்துதான்.

இதிலிருந்து குர்ஆனின் சிந்தனைகள் கருத்துக்கள் எத்தனை கடின மனதுடைய மனிதனையும் உடனடியாக மாற்றக் கூடியது. அதனை கேட்பவர்களின் சிந்தனையில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தக் கூடியது. எனப்நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

விடயத்துக்கு வருவோம் ரமழானில் நாம் அதிகம் அதிகம் குர்ஆனை ஓதுகிறோம். நீண்ட நெடுநேரம் குர்ஆனின் நீண்ட சூராக்களை ஒதி தொழுகையில் நின்று வணங்குகிறோம். அன்று ஸஹாபாக்களின்சமூகத்தில் குர்ஆன் ஏற்படுத்திய தாக்கத்தை சமகாலத்தில் நமது சமூகத்தில் ஏற்படுத்துவதனை காண முடியவில்லை.

இதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று தான் இந்த உயர் அமல்களில் உயிரோட்டமான பகுதியான குர்ஆன் திலாவத்தை நாம் அதனை அறிந்து விளங்கி செய்யாமை.

பலரும் சொல்வார்கள் குர்ஆனை விளங்கி ஓதுங்கள் என்று. நம்மில் பெரும்பாலானோருக்கு குர்ஆனை விளங்குதல் என்றாலே புரியாத வார்த்தையாக இருக்கிறது. இன்னும் சிலர் வெறுமனே குர்ஆன்மொழிபெயர்ப்பு எதனையாவது எடுத்து வாசித்தால் அது தான் குர்ஆனை விளங்குதல் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

சமகாலத்தில் குர்ஆனை விஞ்ஞானத்துடன் இணைத்து 4 பாகங்கைள கொண்ட தப்ஸீரை எழுதிய பெரும் விஞ்ஞான ஆய்வாளரான ஸஹ்லுல் நஜ்ஜார். இவர் எகிப்தை சேர்ந்தவர். தனது சிறுபராயஅனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

நான் சிறுவயதில் இருக்கும் போது ரமழான் காலம் வந்தால் இரவு நேர தொழுகைக்கு பின் நமது மஸ்ஜிதில் குர்ஆன் ஹல்காக்கள் நடைபெறும். அதனுடன் சேர்த்து குர்ஆன் சம்பந்தமான கருத்துப்பரிமாறல்களும் கலந்துரையாடல்களும் அந்த ஹல்காக்களில் நடைபெறும். 

இக்கலந்துரையாடல் ஸஹர்வரை நீழும் அதுவரை நானும் அந்த மஜ்லிஸில் இருந்து கொண்டு அவர்களின் குர்ஆன் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு செவிசாய்த்துக்கொண்டிருப்பேன். இந்த நிகழ்வு தான்எதிர்காலத்தில் குர்ஆனில் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுகளுக்கு எனக்கு ஆர்வமூட்டியது என்கிறார் விஞ்ஞான ஆய்வாளரும் தப்ஸீர் ஆசிரியருமான ஸஹ்லுல் நஜ்ஜார்.

நான் இந்த உதாரணத்தை இங்கு குறிப்பிடக் காரணம் பாருங்கள் குர்ஆனை விளங்க, குர்ஆன் மீது ஆர்வம் வர ஸஹ்லுல் நஜ்ஜார் வசித்து வந்த பகுதியில் அமைந்திருந்த மஸ்ஜிதில் இருந்த ஒரு சிரிய வேலைத்திட்டமே இது. இப்படியான குர்ஆன் ஹல்காக்கள் நமது மஸ்ஜித்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் எங்கு குறைவிடுகிறோம் என்று புரிந்திருக்கும்.

வெறுமனே குர்ஆனை விளங்குங்கள் என்று சொல்லிவிட்டு சான்றோர்கள் மௌனமாக இருப்பதில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. இதற்காக புதிய நவீன பயிற்சி நடைமுறைகளுடன்  கூடிய நவீனகாலத்திற்கேற்ற வேலைத்திட்டங்களை மஸ்ஜித்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சென்ற ரமழானில் நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் தான் இலங்கையில் ஒரு பகுதியில் மஸ்ஜிதில் கியாமுல்லைல் தொழுகைக்கு முன்னர் கியாமுல்லைலில் ஓதப்படவிருக்கும் சூரா தொடர்பாக கியாமுல்லைலில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு சிறப்பான தப்ஸீர் விளக்கம் வழங்கப்பட்டு அதன் பின்னர் அழகிய குரல் கொண்ட இமாமைக்கொண்டு கியாமுல்லைல் தொழுவிக்கப்பட்டது. இந்த செயற்பாடால் கியாமுல்லைலில் ஓதப்படும் ஒவ்வொரு குர்ஆன் வசனத்துக்கும் நமக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த சூரா எதனை நாடுகிறது என்பது எமது மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

இதில் கலந்து கொண்ட பலரும் இந்த புது அனுபவம் மூலம், இந்த புது பயிற்சித்திட்டம் மூலம் தமக்குள் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்துகொண்டனர். வெறுமனே அழகிய குரலில் குர்ஆனை கேட்பதனை விடஓரளவு சூராவின் கருத்தை விளங்கி தொழுகையில் ஈடுபடும் போது தமது கவனம் தொழுகையில் சிதைவுறாமல் அழகிய முறையில் தொழக்கிடைத்ததாகவும். தமது சிந்தனையில் ஏதோ பெரும் புரட்சி நடந்துபோன்று உணர்ந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நாம் வாழும் சூழலில் இதுவும் ஒரு சிறந்த முண்ணுதாரமான பயிற்சித் திட்டம்.எமது சமூகத்தில் பெரும்பாலானோர் அறபியில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்குமிடத்து சில வேளை இப்படியான மேலதிக பயிற்சித்திட்டங்கள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் நம் சமூகத்தில்பெரும்பாலானோரின் தாய்மொழி தமிழ். இத்தனை பேருக்கும் அறபு மொழி கற்பித்து குர்ஆனை நேரடியாக வாசித்து விளங்கும் நிலைமைக்கு மக்களை அறிவுரீதியாக வளர்த்து எடுப்பது என்பது சற்றுகடினமான காரியம்.

ஆனால் மேற்கூறியவாறான புதுவகையான அணுகுமுறைகள் வேலைத்திட்டங்களை மஸ்ஜித்கள் திட்டமிட்டு முன்னெடுக்குமிடத்து சாதரண பாமரனும் குர்ஆனின் கருத்தை ஓரளவு தெளிவாக புரிந்துஅதனால் தாக்கம் பெறுவதற்கான வாய்ப்பை பெறுகிறான்.

குர்ஆனின் அடிப்படை நோக்கம் மனிதகுலத்துக்கு வழிகாட்டுவது. குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்று புரியாமல் அதிலிருந்து வழிகாட்டலை பெறுவதென்பது சாத்தியமில்லை. வழிகாட்டல்பெறுவதென்பது தான் குர்ஆனிலிருந்து நாம் அடைய வேண்டிய முதன்மை இலக்கு.

குர்ஆனை அறபியில் ஓதும் போது 1 எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கின்றது. ரமழானில் அதனை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. ஆனால் குர்ஆனின் முதன்மை இலக்கு அதுவல்ல. குர்ஆனைவாசித்து விளங்கும்படி தூண்டுவதற்கு தான் இந்த அளவில்லாத அளவு நன்மைகளை அல்லாஹ் எங்களுக்கு வழங்குகிறான். குர்ஆனை விளங்குதல் என்ற பிரதான இலக்கை நோக்கி பயணிக்காமல் ஓதுதல் என்ற கிளைஇலக்கை மட்டும் தொடர்ந்தேர்ச்சியாக நீண்ட நேரம் நிறைவேற்றுவதால் நாம் குர்ஆனின் பிரதான இலக்கை பின் தள்ளவிடக் கூடாது .

அதாவது குர்ஆனை விளங்குதல் என்ற இலக்கை இரண்டாம் பட்சமாக்கி துணை இலக்கான அறபியில் ஓதுதல் என்ற இலக்கை முதன்மைப்படுத்துவதால் உரிய இலக்கை அடைந்துகொள்ள முடியாது.

இந்த நிலை மாற வேண்டும். மாற வேண்டும் என்பதன் அர்த்தம் யாரும் குர்ஆனை விளங்காமல் ஓதக் கூடாது என்பதல்ல. நாங்கள் மெது மெதுவாக அடுத்த கட்டத்துக்கு நகர முயற்சிக்க வேண்டும்என்பதனையே வலியுறுத்துகிறேன்.

இந்தப் புனித குர்ஆன் மூலம் வழிகாட்டல் என்ற ஒளியை இந்த இருளால் சூழப்பட்டுள்ள பூமி பெற வேண்டும். அதற்கு முதலில் நாங்கள் குர்ஆனை, குர்ஆனின் சிந்தனைகளை புரிந்துகொண்டவர்களாக மாறவேண்டும்.

இல்லையேல் அடுத்த மதங்களின் வேதப் புத்தகம் போல் வெறுமனே பரகத்துக்காக அல்லது மந்திரசக்திக்காக ஓதப்படும் நூலாக இந்த அற்புத குர்ஆன் மாறிவிடும்.

வரலாற்றில் இருண்டு போன இந்த உலகை தலைகீழாய் புரட்டி உலகின் மிகச்சிறந்த மனிதர்களை உருவாக்குதல் என்ற பெரும்பணியை செய்த இந்தக் குர்ஆனை அப்படியான ஒரு நிலைக்கு தள்ளுவது என்பதுநாம் குர்ஆனுக்கு செய்யும் துரோகம்.

குர்ஆனின் சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மஸ்ஜித்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. ரமழான் காலங்களில் அந்தப் பொறுப்பு இரட்டிப்பாகிறது.

நோன்பு திறக்க கஞ்சியும், சிறந்த சிற்றுடிண்களை ஏற்பாடு செய்வதும், மஸ்ஜிதை இருப்பதனை விட இன்னும் பெரிதாக விஸ்தரிப்பதற்கு பணம் சேர்க்க திட்டமிடுவதுமல்ல மஸ்ஜித்களின் மிகப் பிரதான பணி.

ரமழான் காலங்களில் மக்கள் வேறு நாட்களைவிட ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் மஸ்ஜித்க்கு வருவார்கள். ஆர்வத்துடன் வருபவர்களுக்கு மணித்தியால கணக்கில் காதில் இரத்தம் வரும் வண்ணம்சத்தமாக பயான் செய்து பயமுறுத்துவதில் பயன் இல்லை என்பதனையே நமது இறந்த கால வரலாறு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

நான் மேலே காட்டிய சில உதாரணங்கள் போல ஒரு வழித்தொடர்பாடல் இல்லாமல் இருவழி தொடர்பாடலுடன் கூடிய வகையில் குர்ஆனை விளங்குதவற்கான பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட வேண்டும்.இதற்கு நவீன இலத்திரனியல் சாதனங்களையும் பயன்படுத்துவது விளைவை சிறந்ததாக்க உதவும்.

இந்தப் பயிற்சிகளை நடாத்துபவர்களாக, ஒழுங்குபடுத்துவபர்வகளாக சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் நியமிக்கப் பட வேண்டும். வெறுமனே தர்ஜூமாவை பார்த்து அதனை தமிழில் சொல்வதில்நாம் எதிர்பார்க்கும் சிறந்த விளைவை எதிர்பார்க்க முடியாது.

குறைந்தது அண்மையில் இலங்கையில் வெளியாகிய அல்குர்ஆனிய சிந்தனை என்ற சிறந்த தப்ஸீர் நூலையாவது ஓரளவு வாசித்திருப்பது சிறந்த பலனை தரும்.

ஆரம்ப வேலைத்திட்டம் என்பதால் இந்த தப்ஸீரையே நம்மத்தியில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நாம் இப்போது இருக்கும் தரத்துக்கு இந்த ரமழானுக்குள்இந்த தப்ஸீரை வாசித்து ஓரளவு கலந்துரையாடினாலே போதும் குர்ஆன் சம்பந்தமான எமது பார்வை ஓரளவு முழுமையாக மாறிவிடும்.

குர்ஆன் தனது சிந்தனை மூலம் நம்மை எங்கே அழைத்து செல்கிறது என்பதனையும் புரிந்து கொள்ள முடியுமாயிருக்கும். மஸ்ஜித்களில் குழுவாக நின்று இந்தப் பணியை முன்னெடுப்பது சிரமமாக இருந்தால்பிரத்தியேகமாக நீங்கள் அல்குர்ஆனிய சிந்தனை என்ற அந்த தப்ஸீரை இந்த ரமழானுக்குள் சற்று ஆழ்ந்து வாசித்து முடிக்க முயற்சித்தால் ரமழானின் இலக்கை ஓரளவுக்கு அடைந்து கொள்ள முடியும் எனஎதிர்பார்க்கலாம்.

ரமழான் குர்ஆனின் மாதம் அம்மாதத்தில் குர்ஆனை புரிந்துகொள்ளல் என்ற வேலைத்திட்டத்தில் நாம் கவனம் செலுத்தாமல் மற்ற எந்த வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்தினாலும் அது பூரண விளைவைதராது.

மாற்றத்தின் அடிப்படை குர்ஆன். முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தவர்களின் சிந்தனை குர்ஆனிலிருந்து தான் கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்பொழுது தான் சமூகம் சீரான மாற்றத்தை நோக்கி சீராகபயணித்துக்கொண்டிருக்கும்.

இல்லையேல் இப்படித்தான் நாம் ஆயுள் உள்ளவரை ரமழான் வந்து வந்து போகும் ஆனால் நாமும் நமது சமூகமும் எந்த மாற்றத்தையும் சந்தித்திராமல் ஓரே இடத்தில் தேங்கி நிற்போம்.

இப்படியே எமது நிலை தொடர்ந்தால் அல்லாஹ் உயர் இலக்குகளுடன் மறுமைவரை வரும் மனித குலத்துக்கு கடமையாக்கிய ரமழான் என்ற பயிற்சித்திட்டம் வெறுமனே ஒரு சடங்கு தான், அதில் எந்தசமூகப் பயனுமில்லை என்ற முடிவுக்கு நீண்டகாலத்தில் நமது சமூகம் வந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இது படுபயங்கரமான ஒரு நிலை. நாங்கள் யதார்தத்தை விளங்கி அதற்கு ஏற்றாற் போல் அல்லாஹ் நமக்கு காட்டித்தந்த வரையறைக்குள் நமது திட்டங்களை மேம்படுத்தாமல் இருக்கும் காரணத்தினாலேயேஇப்படியான அபாயங்கள் உருவாகிறது  என்பதனை நாம் புரிந்து. இந்த விடயத்தில் இன்னும் சீரியஸாக நமது கவனத்தை குவிக்க முயற்சிக்க வேண்டும்.

நூன் வாசித்த ஒரு அறிஞரின் கருத்தை இங்கு பகிர்வது பொருத்தம் என கருதுகிறேன். 

நமது பிள்ளைகள் ஆங்கில வகுப்புக்குச் செல்கிறார்கள்.சில காலங்களில் ஆங்கிலத்தை விளங்கி வாசிக்கவும் பேசவும் கற்றுக்கொள்கிறார்கள்.அதே பிள்ளை 6 வயதலிருந்து குர்ஆன் மத்ரஸாவுக்கு செல்கிறது 6 அல்லதது 7 வருடங்கள் குர்ஆனை ஓதுகிறார்கள் ஆனால் அவர்கள் குர்ஆனை விளங்கி வாசிக்கவோ அறபியில் பேசவோ கற்றுக்கொள்வதில்லை.

ARM INAS
குர்ஆனை உயிர்பிக்கும் ரமழான்.. குர்ஆனை உயிர்பிக்கும் ரமழான்.. Reviewed by Madawala News on 5/10/2017 03:47:00 PM Rating: 5