Kidny

Kidny

மாயக்கல்லி: மலையில் செதுக்கப்படும் இனவாதச் சிலை ..


மிப்ராஃ முஸ்தபா 
எனக்கு தற்போது 51 வயதாகின்றது. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எனது வாப்பா இந்தக் காணியில் விவசாயம் செய்து வந்தார். வாப்பா 1997ஆம் ஆண்டு மரணமடைந்ததன் பின்னர் நான்தான் இந்தக் காணியை பராமரித்து வருகின்றேன். இந்தக் காணியில் செய்யும் விவசாயம் மூலமாகவே எமது வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். 

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் எமது காணிக்கு அருகிலுள்ள மாயக்கல்லி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளை தொல்பொருள் திணைக்களத்துக்கு ரியதாக அடையாளப்படுத்தி, அப்பகுதிக்கு எம்மை நுழையக் கூடாது எனக் கூறிச் சென்றார்கள். இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு மாயக்கல்லி மலையில் கல்முனை விகாராதிபதியின் தலைமையில் இனவாதக் குழு ஒன்று வந்து சிலை வைத்துள்ளதாக கேள்விப்பட்டு குறித்த இடத்துக்கு செல்வதற்காக சிலரை அழைத்த போது அவர்கள் யாரும் என்னோடு வருவதற்கு தயாராக இருக்கவில்லை.

நான் தனியாக அங்கு சென்று பார்த்த போது பொலிஸ் பாதுகாப்போடு ஒரு குழு மலையில் சிலையை வைத்த நிலையில் காணப்பட்டது. அங்கிருந்த தேரர்கள் எதற்காக நீ இங்கு வந்தாய் என என்னை அச்சுறுத்தினார்கள். அதற்கு நான் இது என்னுடைய காணி என்று சொன்னபோது, இந்த மலையில் சிலை வைத்தால் உனக்கு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார்கள். மலையில் சிலை வைத்தால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.இது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான சொத்து. எனது காணியில் நீங்கள் ஏதாவது செய்தால்தான் பிரச்சினை என்று கூறிய போது, உங்களுடைய காணி எமக்குத் தேவையில்லை. இந்த மலைதான் எமக்குத் தேவை என்றார்கள். பொலிஸார்கூட எனது காணிக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று உறுதியாகத் தெரிவித்தார்கள்.

சிலை வைத்ததன் காரணமாக ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படலாம் அல்லது சிலை உடைக்கப்படலாம் என்ற அச்சத்தினால் பொலிஸார் வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தனர். வழக்குப் போய்க் கொண்டிருப்பதால் சிலை வைத்ததற்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என பள்ளிவாயலில் அறிவித்தார்கள். இதனால் மக்களும் அமைதியாக இருந்தனர். இந்த நிலையில் திடீரென பொலிஸார் வழக்கை வாபஸ் வாங்கினர்.
இந்த வழக்கு கைவிடப்பட்டு ஓரிரு வாரங்களில் எனது காணிக்குள் ஒரு குழு அத்துமீறி நுழைந்து காணியை துப்பரவு செய்து கொண்டிருந்தனர். நானும் பதறியடித்துக் கொண்டு குறித்த இடத்துக்குச் சென்று இங்கு நுழைய உங்களுக்கு யார் அனுமதி அளித்தது எனக் கேட்டேன். எங்களுக்கு மேலிடத்தில் இருந்து அனுமதி வந்திருக்கிறது. உங்களுக்கு அனைத்தையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற பதில் அவர்களிடமிருந்து வந்தது.

இந்த அநியாயத்திற்கு எதிராக தமண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்தேன். முறைப்பாடு செய்து அடுத்த நாள் எனது காணிக்குள் விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவதற்கான வேலைகளும், அவர்களது மதச் சடங்குகளும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. முழு ஊருமே அந்த இடத்தில் திரண்டு விட்டது. இரு தரப்புக்குமிடையே பாரிய கைகலப்பொன்று உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டது. இறுதியில் அம்பாறை பொலிஸ் உயரதிகாரிகள் குறித்த இடத்துக்கு வருகை தந்தே இரு தரப்பினரையும் அங்கிருந்து அகற்றினர்.

கடந்த சில தினங்களாக எனது கையெழுத்தை என்னிடமிருந்து பலவந்தமாகவேனும் பெற்று காணியை சுவீகரித்துக் கொள்வதற்காக அரசாங்க அதிகாரிகள் சிலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். எனது காணிக்குப் பதிலாக வேறொரு காணியைப் பெற்றுத் தருவதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் உங்களது காணி எங்களுக்குத் தேவையில்லை. இந்த மலைதான் எமக்குத் தேவை என்று கூறிய இவர்களை எவ்வாறு நம்புவது? இந்தப் பிரச்சினை காரணமாக என்னால் இன்று சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனது காணியை உரியவர்கள் மீட்டுத் தந்தால் அது பெரியதொரு உதவியாக இருக்கும். இந்த விடயத்தில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கத்திடம்தான் நான் எதிர்பார்த்து நிற்கிறேன்.
மாயக்கல்லி: மலையில் செதுக்கப்படும் இனவாதச் சிலை .. மாயக்கல்லி: மலையில் செதுக்கப்படும் இனவாதச் சிலை .. Reviewed by Madawala News on 5/06/2017 04:09:00 PM Rating: 5