Yahya

சியாரங்களை தகர்க்கும் முயற்சி வரலாற்றை சிதைக்கும் சூழ்ச்சியே !

 
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயங்களை அழிப்பதில் திட்டமிட்ட செயற்பாடுகள் நடந்துவருவதென்பது மறுக்க முடியாத ஒரு அம்சமாகும். குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பூர்வீகத் தடயத்தில் மிகுந்த தொன்மைக்குரிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலடித்தடம் பதிந்திருக்கின்ற பாவாதமலை அடையாளத்தை அழிப்பதிலும் அது முஸ்லிம்களுக்குரியதல்ல என்பதை நிலைநாட்டுவதிலும் சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகள் பல்வேறு முனைப்புக்களில் திட்டமிட்டு செயலாற்றி, அது பௌத்தர்களுடைய அடையாளம் மாத்திரம் என்ற பரப்புரையையும் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற இன்னொரு இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத் தடயமான சியாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்வும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. 

இதனோர் அம்சமாகவே அண்மையில் காலிக் கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்க் சாலி வலியுள்ளாஹ் சியாரத்தின் பாதுகாப்பு மதில் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சிங்கள – பௌத்த ஆதிக்க மனோபாவமுடைய சிங்கள காடையர்களால் அல்லது முஸ்லிம்களில் ஒரு பகுதியினரால் இச்செயற்பாடு அரங்கேற்றப்பட்டிருக்கக்கூடும். இவர்களின் எவர்களானாலும் இச்செயற்பாடு மிகுந்த கண்டிப்புக்குரிய ஒன்றென்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இவ்வாறான ஈனச் செயல்களை முஸ்லிம் அல்லாதவர்களினால் மேற்கொளளப்படுகின்றதென்றால், அது நமது வரலாற்றுத் தடயத்தை இல்லாதொழிப்பதன் ஓர் இயங்கியலை நோக்கிய நகர்வாக அமைகின்றது. சியாரங்களில் இருக்கக்கூடிய உண்டியலை உடைத்து அதற்குள் இருக்கின்ற பணங்களைக் கொள்ளையிட்டுச் செல்வதென்பது வேறொரு தீய நோக்கிலான செயற்பாடாகப் பார்க்க முடியும்.

அவ்வாறின்றி சியாரங்களின் தொன்மையை பறைசாற்றக்கூடிய சுற்று மதில்களையோ அல்லது சியாரத்தின் மேற்பரப்பில் கட்டப்பட்டிருக்கின்ற கட்டிடங்களையோ சேதப்படுத்துதல் என்பது வரலாற்றுத் தொன்மையை அழித்து விடும் திட்டமிட்ட ஒரு செயற்பாட்டோடு தொடர்புபட்டதாகும்.
முஸ்லிம்களினால் சியாரங்கள் தகர்க்கப்படுகின்ற சம்பவங்கள் நடைபெற்ற வரலாற்றையும் நாம் அவதானிக்கலாம். இங்கு அவர்கள் உடைப்பதற்கு சொல்லப்படுகின்ற காரணம் சியாரம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றென்றும் அங்கு அந்நிய மத வழிபாட்டுச் செயற்பாட்டுக்குச் சமனான கிரியைகள் நடைபெறுவது கூடாதென்ற அடிப்படையிலாகும்.

மார்க்கத்தின் அடிப்படையில் சியாரம் கூடும் என்ற கொள்கையென்பது இஸ்லாத்தின் ஒரு தொன்மையான கோட்பாடாகவே காணப்படுகின்றது. இது ரஸுல்(ஸல்) அவர்களுடைய காலத்திலும் அனுமதிக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு முன்பிருந்த நபிமார்களுடைய காலங்களிலும் இது இருந்து வந்திருக்கின்றது. இதன்  ஓர் அம்சமாகவே நபிமார்களின் அடக்கஸ்தளங்கள் இது என்பதை காட்டுகின்ற வகையில் தொன்றுதொட்டு சில நபிமார்களுடைய ஸியாரங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பதுரு ஸஹாபாக்களுடைய சியாரங்களை நபி(ஸல்) அவர்களே தரிசித்திருப்பதை நம்பகரமான இஸ்லாமிய ஆதாரங்கள் எடுத்து வைக்கின்றன. இதனை இன்னும் வலுப்படுத்துவதாக பின்வரும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

'நான் பெண்களை சியாரத்துச் செய்வதை முன்னர் தடுத்திருந்தேன். இப்பொழுது அதனை அனுமதிக்கின்றேன் ' இந்த நம்பகரமான நபிமொழியில் இருந்து ஸியாரத் என்பது முதலில் ஆண்களுக்கும் பின்னர் பெண்களுக்குமாக இஸ்லாம் அனுமதித்திருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இதனூடாக சியாரம் முறைமை என்பது இஸ்லாத்தில் இருந்து வருகின்ற ஒன்றென்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அதுமாத்திரமன்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய புனித ரவ்ழா ஷரீப் அன்றுதொட்டு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது..அது போன்றே அங்கு அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோருடைய சியாரங்கள் அமைந்திருப்பதையும் பார்க்கின்றோம். அதுவும் இம்மூன்று சியாரங்களும் கட்டடங்கள் சூழ மேல் முகட்டோடு இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

மதீனாவில் அமைந்திருக்கின்ற ஜென்னத்துல் பகீ என்ற மையவாடியில் ரஸுல்(ஸல்) அவர்களின் அருமை மகளார் பாத்திமா(ரழி) உட்பட்ட உறவினர்கள், அடங்கப்பெற்றிருக்கின்ற பகுதியை பிரத்தியேகமாக அடையாளப்படுத்தி உள்ளனர். மற்றும் உஹது மலையடிவாரத்தில் ஹம்ஸா(ரழி) அவர்களுடைய கபுர் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது மாத்திரமன்றி இவைகளெல்லாம் சியாரத் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கின்றோம்.

ஆகவே ரஸுல்(ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களை அடுத்து வந்தவர்களின் காலங்களிலும் சியார முறைமை பேணப்பட்டு வந்திருப்பதை இதனூடாக தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அந்தத் தொடர்ச்சியே இன்று வரை தொடர்ந்து வருகின்ற ஒரு நீண்ட பாரம்பரிய வழிபாட்டு முறைமையாக பேணப்பட்டு வருவதைக் காண்கிறோம். ஆயின் சியாரம் என்பது இஸ்லாத்திற்குற்பட்ட செயற்பாடு என்பதை ஆணித்தரமான ஆதாரங்கள் வலியுறுத்தி நிரூபித்து நிற்கின்றன.

சியார முறைமை என்பது முஸ்லிம்களிடையே ஆகுமென்றும், ஆகாதென்றும் இரண்டு விதமான கருத்தாளர்கள் இருந்த போதிலும் அதற்கப்பால் சியாரம் என்கின்ற அம்சம் முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயத்தை மற்றும் தொன்மையை பறைசாற்றுவதற்கு வலுவானதொரு ஆதாரமாக இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஏனென்றால் சியாரத்தின் நீளம், அங்கு கட்டப்பட்டிருக்கின்ற கட்டிடத்தொன்மை என்பனவெல்லாம் நமது வாழ்காலத்தை பறைசாற்றவும் உறுதிப்படுத்தவும் இன்றியமையாத அம்சங்களாக இருக்கின்றன.

அந்த வகையில் முஸ்லிம்களின் வரலாற்றை எழுதுவதற்கும் பேசுவதற்கும் மூலகங்களாகக் கூட அவை அமைகிறது.  உதாரணமாக அண்மையில் உடைக்கப்பட்ட காலிக் கோட்டை சியாரம் என்பது ஒல்லாந்தர்கள் காலியில் கோட்டையை நிர்மாணிப்பதற்கு முன்பிருந்தே இந்த இடத்தில் சியாரமும் அதனை அண்மித்த பகுதியில் சுத்தமான குடிநீர்க் கிணறும் காணப்படுகின்றது. ஆக இந்த சியாரத்தை தகர்ப்பதென்பது அல்லது அதனோடு அண்டிய கட்டிடங்களை சிதைப்பதென்பது குறைந்தபட்சம் சுமார் என்னூறு வருடகால தொன்மையை நாம் இழப்பதற்கு வழிவகுக்கின்றன.

இந்த அடிப்படையில் ஸியாரத்தின் சுற்றுமதில் நாசப்படுத்தப்பட்டமை முஸ்லிம்களின் சிலரினால் மேற்கொள்ளப்பட்டாலும் சரி அல்லது சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளானாலும் சரி நமது தொன்மையைத் தொலைப்பதற்கு திட்டமிட்டுச் செய்கின்ற ஒரு அநீதியாகவே இதனை நோக்க வேண்டியுமுள்ளது.

எனவே இலங்கையில் காணப்படுகின்ற பாவாதமலையில் உள்ள ஆதம்(அலை) அவர்களின் பாதச்சுவடு, நாற்பது முழம் அதாவது அறுபது அடி நீளமுடைய சியாரங்கள் மற்றும் சாதாரண நீளமுடைய சியாரங்கள், தொன்மையான பள்ளிவாயல்கள் போன்றவைகளின் தடயங்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை நிறுவுவதில் பாரிய பங்களிப்பை நல்கக்கூடியவைகளாக இருந்து வருவதை நாம் சிந்திக்கவேண்டும்.

வரலாறு இல்லாத ஒரு சமுகம் விரைவாக தங்களது தொன்மைகளை இழந்து நாடோடிகளாக அல்லது பரதேசிகளாக அடையாளப்படுத்துவதிலிருந்து விடுபட முடியாத இக்கட்டைச் சந்திக்க நேரிடும். அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களும் ஆகிவிடக் கூடாதென்கின்ற கவனம் நமக்கு இன்று முக்கியப்படுகின்றது.  

இங்கு வாழுகின்ற முஸ்லிம்கள் வெறுமனே வந்தேறு குடிகளாகவும் இந்நாட்டுக்கு அந்நியவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு நம்மை குடிபெயர்ந்து செல்ல வேண்டுமென்று சிங்கள பேரினவாதிகள் அச்சுறுத்துகின்ற காலகட்டத்தில் நமது வரலாற்றை புடம்போட்டு வைக்கக்கூடிய ஆதாரச்சான்றுகளை மாற்று மதத்தினர்கள்தான் அழிப்பதற்கு கங்கனம் கட்டுகின்றனர். நம்மவர்களில் ஒரு பகுதியினரின் செயற்பாடு இதற்கு இசைந்து செல்வதென்பது ஒரு விவேகத்தின் வழிமுறை அல்ல.

பேரினவாத ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையை இல்லாமல் செய்வதற்கு எடுத்துவருகின்ற எத்தனிப்புக்கள் முஸ்லிம்களை இந்த நாட்டில் பூர்வீக வரலாற்றைக் கொண்டிராதவர்கள் என்று காட்ட எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும். இதற்கு ஒத்ததாக நம்மவர்களில் ஒரு பகுதியினர்களும் சியாரங்களைத் தகர்க்க கிளம்பியிருப்பதும், அதற்காக பிரச்சாரம் செய்வதும் நம்முடைய வரலாற்றை சிதைத்து குறைத்து மதிப்பிடுவதற்கு ஆதிக்க சக்திகளுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும். இதிலிருந்து முற்றாக நம்மவர்கள் தவிர்ந்து நடப்பதே நமது பூர்விவீக வரலாற்றுக்கு செய்யும் உபகாரமாகும்.


சியாரங்களை தகர்க்கும் முயற்சி வரலாற்றை சிதைக்கும் சூழ்ச்சியே ! சியாரங்களை தகர்க்கும் முயற்சி வரலாற்றை சிதைக்கும் சூழ்ச்சியே ! Reviewed by Madawala News on 5/06/2017 02:13:00 PM Rating: 5