Ad Space avaiable

அஸாத் சாலி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹலீம் தரப்பின் விளக்கம்..


இப்படியான ஒரு கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டும் என்று சிறிது காலமாக சிந்தித்து கொண்டிருக்கும் போது நீங்கள் கடந்த வாரம் திகதி நடாத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் கூறியவைகளை வைத்து அவசரமாக இதை எழுத வேண்டும் என தீர்மானித்தேன்.

கொழும்பு மா நகர சபையில் உறுப்பினராக, பிரதி மேயராக பதவி வகித்த நீங்கள் பிறகு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடன் இணைந்து போட்டியிட்ட போதும் மேயராகவோ பிரதி மேயராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ உங்களால் வரமுடியவில்லை. அதன்பிறகு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கிழக்கு மாகாணத்தில் மாகான சபைக்கு போட்டியிட்ட போதும் உங்களால் வெற்றியடைய முடியவில்லை.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் மூலம் நீங்கள் குரல் எழுப்பியதன் காரணமாகவும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் உங்களை சிறையில் அடைத்ததால் ஏற்பட்ட அனுதாபத்தின் காரணமாகவும் மத்திய மாகாண சபைக்கு கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நீங்கள் போட்டியிட்ட போது வந்தோரை வாழ வைக்கும் கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் உங்களை அமோக வெற்றியீட்ட வைத்தனர். அத்தேர்தலில் நீங்கள் போட்டியிட்ட போது இனி மேல் கண்டி மாவட்டத்தில் இருந்து போக மாட்டேன் இங்கு தான் அரசியல் செய்வேன் என உறுதியளித்தீர்கள் ஆனால் மக்கள் தந்த மாகான சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டது ஏன் என நீங்களும் அறிவீர்கள். இந்த நாட்டு மக்களும் அறிவார்கள்.

எப்படியாயினும் நீங்கள் இழந்துள்ள அரசியல் செலவாக்கை மீளப்பெற வார வாரம் ஊடகவியலாளர் மகாநாட்டை கூட்டி ஏதாவது ஒன்றை வீரமாக பேசி மக்களை திசை திருப்புகிறீர்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் முஸ்லிம்கள் அப்படி மடையர்கள் அல்ல என்பதை நீங்கள் மறந்து விடவேண்டாம். உங்களது சில நடவடிக்கைகள் ஞாபகம் ஊட்டுவது சிறந்தது என நினைக்கிறேன்.

நல்லாட்சி அரசாங்கம் 2015 ஜனவரி அமைக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் ஒரு ஊடக மகாநாட்டை கூட்டி உங்களையும் கௌரவ பைசர் முஸ்தபா அமைச்சர் அவர்களையும் ஹஜ் கமிட்டி உறுப்பினர்களாக ஜனாதிபதி அவர்கள் நியமித்ததாக கூறினீர்கள். அதன் பிறகு எமக்கு அறியக்கிடைத்தது சட்டரீதியாக ஹஜ் கமிட்டி முஸ்லிம் சமய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் அவர்களாலே நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் அதன்படி அமைச்சர் ஹலீம்  அவர்கள் அனுபவமிக்க கலாநிதி ஒருவரின் தலைமையில் உலமாக்கள் சட்டத்தரணிகள் நிருவாக சேவை அதிகாரிகள் அடங்கிய திறமையான உறுப்பினர்களை கொண்ட ஹஜ் கமிட்டியை நியமித்துள்ளார்கள். ஹஜ்ஜுக்கு பொறுப்பான ஒருவராக நீங்களும் கடமையாற்றினீர்கள். அப்போது என்ன நடந்தது? இலங்கையிலிருந்து சென்ற ஹாஜிகளுக்கு நடந்த அநியாயம் என்ன? அவர்களுடைய பணம் எப்படி சூறையாடப்பட்டது என ஊடகங்களிலும் வெளியாகியது. இதுபற்றி அவ்வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற ஹாஜிகளுக்கும் ஹஜ் முகவர்களுக்கும் நன்றாகத்தெரியும். அதனாலோ என்னவோ உங்களை ஹஜ் கமிட்டி உறுப்பினராக தற்போதைய அமைச்சர் நியமிக்காமல் விட்டு இருக்கலாம். ஆனால் அனுபவசாலியான நீங்கள் இந்த நியமனம் அமைச்சரால் தான் செய்ய வேண்டும் என்பதை அறியாமல் இருந்தது தான் புரியாமல் இருக்கின்றது.

உங்களை ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் ஒருவராக நியமிக்காமல் இருந்ததாலோ என்னவோ நீங்கள் தொடர்ந்து அமைச்சர் ஹலீம் அவர்களை பற்றி ஊடகவியலாளர் மகாநாடுகள் நடத்தி மிகவும் மோசமாக இன்னுமொருவரை பேசக்கூடாத முறையில் பேசுகிறீர்கள். கடந்த காலங்களில் பேசியதை விட்டுவிட்டு கடைசியாக கடந்த வாரம் ஊடகவியலாளர் மகாநாட்டில் நீங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் பற்றியும் அமைச்சர் ஹலீம்அவர்கள் பற்றியும் பேசிய சில விடயங்கள் பற்றி எனக்கு தெரிந்த விடயங்களை கூறுவது நல்லது என நினைக்கிறேன்.

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் நிதியத்தை கணக்காய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளீர்கள். இது ஒரு அரச திணைக்களம் யார் வேண்டாம் என்று சொன்னாலும் கணக்காய்வு திணைக்களம் மூலம் அவ்வப்போது ஒவ்வொரு திணைக்களத்தையும் கணக்காய்வு செய்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.

முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் உயர் பதவியில் அனைவரும் அமைச்சரின் உறவினர்கள் என கூறியுள்ளீர்கள். நீங்கள் அனுபவமிக்க அனுபவசாலி ஒரு அரச திணைக்களத்திற்கு அதிகாரிகள் நியமிப்பது எப்படி என்பதை கூட நீங்கள் அறியாமல் இருப்பது பற்றி கவலையாக உள்ளது. திணைகளத்தின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், உதவி பணிப்பாளர் போன்ற அனைத்து உயர் பதவிகளுக்கும் இலங்கை நிருவாக சபையை சேர்ந்த அதிகாரிதிகளை பொதுச்சேவைகள் ஆணைக்குழு மூலமே நியமிக்கப்படுகின்றனர். இது தவிர முகாமைத்துவ சேவையை சேர்ந்தவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தினரையும், கனிஷ்ட சேவையாளர்களையும் இணைந்த சேவைகள் பணிப்பாளர்களால் நியமிக்கப்படுவர். இது தவிர அமைச்சருக்கு வேறு ஒருவரையும் நியமிக்க முடியாது. எப்படி இருப்பினும் அமைச்சர் ஹலீம் அமைச்சராக நியமிக்கப்பட்டதின் பின் அவரால் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதை நான் நன்றாக அறிவேன். முன்னால் பணிப்பாளர் ஜனாப் ஸமீள் பதவி உயர்வு பெற்று சென்றதன் பின் புதிய பணிப்பாளராக நிருவாக சேவையை சேர்ந்த ஜனாப் மலிக் அவர்கள் பொது சேவை ஆணைக்குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் முன்பு மோட்டார் வாகன போக்குவத்து திணைக்களத்தில் வேலை செய்து ஊழல் செய்த ஒருவரை அமைச்சரின் சகோதரர் ஜனாப் பாஹிம் அவர்களால் உதவி பணிப்பாளராக நியமித்து உள்ளதாக கூறியுள்ளீர்கள். முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிகிக்கொள்ள வேண்டும். குறித்த அதிகாரிக்கு எதிராக இருந்த வழக்கில் அவர் குற்றமட்டவர் என நீதிமன்ற விசாரணை மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டவர். அதுவும் அவர் இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த அதிகாரி என்பதையும் அவரை ஒரு இடத்தில் நியமிப்பதும் இடம்மாற்றம் செய்வதும் பொது சேவைகள் ஆணைக்குழுவின் கடமை இதில் அமைச்சருக்கு தலையீடும் செய்ய முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஹஜ் கோட்டாவை பற்றி கூறியுள்ளீர்கள். இலங்கைக்கு உரித்தான ஹஜ் கோட்டா 2800, ஆனால் கடந்த காலங்களில் ஈரான் போன்ற சில நாடுகளில் இருந்து ஹஜ்ஜுக்கு வராத காரணத்தினால் 2010-2012 போன்ற காலங்களில் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு கோட்டா அதிகரித்து கொடுக்கப்பட்டது. இருந்த போதும் மக்காவில் புனித மஸ்ஜித் கட்டுமான வேலைகள் நடைபெறுவதால் 2013ம் ஆண்டு முதல் கோட்டா வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி இலங்கைக்குரிய 2800 கோட்டா வழங்கப்பட்டது. இது அமைச்சர் ஹலீம் பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே 2800 தான் கிடைத்தது. இருந்த போதும் 2015ம் ஆண்டு மக்காவில் ஏற்பட்ட இரண்டு  விபத்துகள் காரணமாக பல ஆயிரக்கணக்கான ஹாஜிகள் மரணித்ததால் 2016ம் ஆண்டு சகல நாடுகளுக்குரிய கோட்டாக்கள் 2௦% குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கைக்கு 2240  கோட்டாவே கிடைத்தது. ஆனால் இவ்வருடம் மீண்டும் 2800 கிடைத்துள்ளது என அறிகிறோம். கோட்டா கூட்டுவதும் குறைப்பதும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் முடிவுப்படி செயல்படும். இருந்தாலும் கூட்டுவதற்கான முயற்சியை அமைச்சர் எடுத்து வந்துள்ளதாக கேள்விப்பாட்டோம்..

அடுத்து முக்கியமான விடயம் தான் ஹஜ் கோட்டா மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த பல வருடங்களாக அமைச்சர் ஹலீம் அவர்கள் பதவியேற்க முன்பிருந்தே ஹஜ் செய்ய தேவையுள்ளவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டு பதிவு செய்யப்பட்டு இலக்கங்கள் அடிப்படையில் ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது. 2௦16 ம் ஆண்டு சகல பதிவுகளையும் புதிக்கப்பட்டு மீள இலக்கங்கள் வழங்கப்பட்டது. அதன் அடப்படையில் 12௦௦௦க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பதியப்பட்டுள்ளன என எல்லோருக்கும் தெரியும். அதில் 2240 பேர் கடந்த வருடம் ஹஜ் செய்து விட்டனர். மீதமுள்ள சுமார் பத்தாயிரம் விண்ணப்பதாரிகளில் சுமார் 5௦௦௦ பேருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வருடம் ஹஜ் செய்வதாக இருந்தால் 2௦17.04.21ம் திகதி முன் ரூ25௦௦௦ மீளளிக்கப்படும் டெபொசிட் பணத்தை செலுத்தி பயணத்தை உறுதி செய்யுமாறு – இந்தப்பணம் அவர்கள் ஹஜ் செய்ய புறப்பட்டு முன் அவர்களுக்கு திருப்பி செலுத்தப்படும் – இது வரை சுமார் 2200 உறுதி செய்து பணம் செலுத்தி உள்ளனர் என பத்திரிக்கை மூலம் அறியக்கிடைத்தது. ஆகவே மேலும் 600 பேருக்கு உறுதி செய்யுமாறு அடுத்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாக அறிகிறோம். எப்படி இருப்பினும் 15 ஆயிரம் பேர்களிடமிருந்து பணம் அறவிடவில்லை என்பதை நாம் அறிவோம். அது மட்டுமல்ல நீங்கள் மேலும் சொல்லியுள்ளீர்கள்  கடந்த வருடம் செலுத்திய பணம் யாருக்கும் திருப்பிக்கொடுக்கப்படவில்லை என்று. இது ஒரு அப்பட்டமான பொய். 2௦15 ம் ஆண்டோ 2௦16 ம் ஆண்டோ அமைச்சர் ஹலீம் அவர்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின் இப்படியான ஒரு தொகை பணம் அறவிடப்படவில்லை என்பதை நாம் அறிவோம். இம்முறை மீளளிக்கப்பட இருக்கும் தொகையே அறவிடப்படுகிறது. இது ஒரு புறமிருக்க ஹஜ் விடயத்தில் ஒரு விடயத்தை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம். அமைச்சர் ஹலீம் அவர்கள் அமைச்சராக நியமிக்க முன் ஹஜ் விடயம் எப்படியோ ஒரு மாபியாவாக உடன் இருந்தது என்று சகல முஸ்லிம்களுக்கும் தெரியும். ஹஜ் செல்ல 7-8 லட்சம் அறவிடப்பட்டனர் இதை 4-5 இலட்சமாக குறைக்க அமைச்சர் ஹலீம் அவர்களால் முடிந்ததையிட்டு இந்த நாட்டு முஸ்லிம்கள் அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம்.

அடுத்த விடயம் தான் ஹஜ் முகவர்கள் 145 நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் உறவினர்கள் ஹஜ் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று. கடந்த அரசாங்க காலத்தில் 96 முகவர்கள் இருந்த போது கடந்த வருடம் அதை 86 ஆக அமைச்சர் குறைக்கப்பட்டது என அறிகிறோம். இவ்வருடம் இதுவரை ஹஜ் முகவர்கள் நியமிக்கப்படவில்லை. ஹஜ் முகவர்கள் நியமிப்பது உயர் நீதிமன்ற வழிகாட்டலுக்கு அமைய நடாத்தப்படும். நேர்முக பரீட்சை மூலமே இவ்வருடத்திற்கான ஹஜ் முகவர்கள் தெரிவுசெய்யப்படுவர். இவ்வருடத்திற்கான ஹஜ் முகவர்களுக்கான நேர்முக பரீட்சை நடந்து கொண்டிருக்கின்றது. அதன்படி தகுதியான முகவர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். எப்படி இருந்த போதும் நீங்கள் சொல்வது போல் 145 பேர் விண்ணப்பித்து கூட இல்லை எனபதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம் கலாசார திணைக்களமும் ஹஜ் விவகாரமும் சிறந்த முறையில் நடைபெறுகின்றது. இதை திறம்பட அமைச்சர் ஹலீம் இயங்குவதோடு  அவரின் பிரத்தியேக செயலாளர் M H M பாஹிம் உறுதுணையாக இருக்கிறார் என்பதை இந்த திணைக்களத்திற்கு கடந்த ஆட்சி காலத்தில் பொறுப்பாக இருந்த கௌரவ அமைச்சர் பௌசி அவர்கள் இவ்வருட வரவுசெலவு விவாதத்தின் போது புகழ்ந்து பேசியதையும் மற்றும் அமைச்சர்கள்/பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பேசியதை நீங்கள் அறியாவிட்டால் ஹன்சார்டை எடுத்து படித்து பாருங்கள்.

அமைச்சரின் குடும்பத்தினர் முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினீர்கள் இதை நிரூபிக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு விடயத்தை ஞாபகமூட்ட விரும்புகிறேன் அமைச்சர் ஹலீம் அவர்களும் அவரது குடும்பமும் அரசியல் செய்வது இன்று நேற்றல்ல. 196௦ம் ஆண்டு முதல் அரசியல் செய்யும் ஒரு குடும்பம் தான் அவரது குடும்பம். மர்ஹூம் A C S ஹமீத் அவர்களை இந்நாட்டில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் 196௦ம் ஆண்டு முதல் அராசியல் செய்தவர்  அவரது மக்கள் தொடர்பு அதிகாரியாக, இணைப்பு செயலாளராக மற்றும் பிரத்தியேக செயலாளராக சுமார் 8 வருடம் சேவையாற்றிய அமைச்சர் ஹலீம் 1988, 1993, 1999 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மாகான சபை தேர்தல்களில் போட்டிட்டு வெற்றிஈட்டியது மட்டுமல்ல 1989 முதல் 1999 வரை மத்திய மாகான சபை சுகாதாரம், சமூக சேவை, முஸ்லிம் கல்வி, முஸ்லிம் கலாச்சாரம் உற்பட 1௦ம் மேற்பட்ட அமைச்சுப்பதவிகளை வகித்துள்ளதுடன் பல முறை பதில் முதலமைச்சராகவும் கடமையாற்றிய அனுபவமுள்ளவர் தான் அமைச்சர் ஹலீம். அல்ஹாஜ் A C S ஹமீத் அவர்கள் மறைவுக்குப்பின் 2௦௦௦, 2001, 2004, 2010, 2015ம் வருடங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். ஆக மொத்தம் 8 தேர்தல்களில் வெற்றியீட்டியுள்ள அவரோ அவரது குடும்பமோ என்றைக்கும் ஊழல் செய்த வரலாறு இல்லை. பணத்துக்காக, பதவிக்காக கட்சி மாறிய குடும்பம் இல்லை. அதனால் தான் எல்லா தேர்தல்களிலும் அவரை கண்டி மாவட்ட மக்கள் வெற்றியடைய செய்கின்றனர். விருப்பு வாக்கு முறை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை நடைபெற்ற உள்ளூராட்சி சபை, மாகான சபை, பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம் ஒருவர் பெற்ற ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவர் தான் அமைச்சர் ஹலீம். அதைத்தவிர கண்டி மாவட்ட மக்கள் அவருடனும் அவரின் குடும்பத்தினருடனும் நெருக்கமாக உள்ளனர்.

மேலும் நீங்கள் சொன்னீர்கள் அமைச்சர் ஹலீம் அவர்கள் சகோதரர்கள் அமெரிக்கா/துபாய் நாடுகளில் இருந்து வந்துள்ளதாக. அமைச்சரின் சகோதரர் என்பதற்காக அவர்கள் சொந்த நாட்டுக்கு வராமல் இருப்பார்களா? இன்று மட்டுமல்ல அந்த நாடுகளில் தொழில் புரியும் அவர்கள் அடிக்கடி விடுமுறைக்காக  வந்து போகிறார்கள். இதில் என்ன தவறு? சகோதர்கள் மட்டுமல் அவுஸ்த்ரேலியாவில் தொழில் புரியும் அவரது மகன்மார்களும் விடுமுறைக்காக அடிக்கடி வந்து போகிறார்கள். ஒரு அரசியல்வாதி ஊடகவியலாளர் மகாநாட்டில் பேசும் விடயமா என்று சிந்தித்து பாருங்கள். அமைச்சர் ஹலீம் ஒரு முஸ்லிம் இல்லை என அடிக்கடி கூறுகிறீர்கள். ஒருவருடைய ஈமானை பற்றி அல்லாஹ் அறிவான். எப்படி இருப்பினும் ஒரு உலமாவின் மகன் தான் அமைச்சர் ஹலீம். இப்படியான சொற்பிரயோகங்கள் பாவிப்பதையிட்டு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்ளுங்கள். வீணான பலிகளை சுமத்தி மற்றவர்களின் மனதை புண்படுத்தினால் கேவலப்படுத்தினால் அல்லாஹ் எங்களையே கேவலப்படுத்துவான். இதற்காக பயந்து கொள்ளுங்கள்.

தொடர்ச்சியாக அமைச்சர் ஹலீம் பற்றி நீங்கள் கூறிவரும் குற்றச்சாட்டுகளை பற்றி பார்க்கும் போது ஒன்று விளங்குகின்றது உங்களுக்கு தேவையான விடங்களை முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தில் செய்து கொள்ள முடியுமான அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் அதற்காகத்தான் இப்படியான முறையில் பேசுகிறீர்கள். அமைச்சரவை மாற்றம் ஒன்றை பற்றி பேசப்படும் போது எப்படியாவது இவரது அமைச்சை பறித்து வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பேசுகிறீர்கள் என கண்டி மாவட்ட மக்கள் மட்டுமல்ல முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.

உங்களுக்கு அமைச்சர் ஹலீம் அவர்களை பற்றி பிரச்சினை இருக்குமானால் அதை நீங்கள் பேசி முடித்துக்கொள்ளுங்கள். இதற்காக சமுதாயத்தை காட்டிக்கொடுக்காதீர்கள் என வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

M.I.M. ராசிக்  (JP)
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்.
183/26, சம்பத் உயன,
தென்னக்கும்புர, கண்டி.

அஸாத் சாலி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹலீம் தரப்பின் விளக்கம்.. அஸாத் சாலி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹலீம் தரப்பின் விளக்கம்.. Reviewed by Madawala News on 5/06/2017 01:34:00 PM Rating: 5