tg travels

மூன்று மாகாண சபைகளில் ஆட்சி மாற்றம் நிகழுமா?


மாகாண சபைகள் சிலவற்றில் ஆட்சி மாற்றம் நிகழுமா? என்ற கேள்வி தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

மத்திய மாகாண சபையில் அமைச்சர் பதவியை பிரமித்த பண்டார தென்னகோன் இராஜினாமா செய்ததை அடுத்தே மாகாண சபைகளின் ஆட்சிமாற்றம் தொடர்பில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

58 உறுப்பினர்களை கொண்ட மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வசம் 33 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி வசம் 25 ஆசனங்களும் உள்ளன.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 33 உறுப்பினர்களில் 11 பேர் சுயாதீனமாக செயற்படுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்த விடயம் சாத்தியமாகும் பட்சத்தில் 11 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படும்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆக குறைவடையும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆக அமைந்திருக்கும்.
இதற்கமைய மத்திய மாகாண சபையின் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிவசமாகும்.

இது தொடர்பில் பிரதமர் நாடு திரும்பியதும் தாங்கள் தீர்மாணம் ஒன்றை மேற்கோள்வதாக எதிர்கட்சி தலைவர் சானக அயிலப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமத்திய மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அவர்கள் இன்று வடமத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக சத்தியக்கடதாசிகளையும் மகஜரையும் கையளிக்க முயன்றபோதிலும் மாகாண ஆளுனர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பதவிக் காலம் நிறைவுபெறவுள்ள வடமத்திய மாகாண சபையில் 33 ஆசனங்கள் உள்ளன.இதில் தற்போது 21 ஆசனங்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், 11 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஒரு ஆசனம் மக்கள் விடுதலை முன்னணிக்கும் உள்ளன.

2012 ஆம் ஆண்டு இறுதியாக இந்த மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது.
மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த கே.ஏ.நந்தசேனவை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி எம்.ஹேரத்திற்கு அந்த பதவி வழங்கப்பட்டதை அடுத்தே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 உறுப்பினர்களில் 17 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

மாகாண சபையில் 17 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 4 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு ஆசனமுமாக தற்போதைய நிலை காணப்படுகின்றது.

இதற்கமைய சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்த அணி வசம் மாகாண சபையின் பெரும்பான்மை உள்ளது.அவர்கள் இன்று மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் பேஷல ஜயரத்னவிற்கு எதிரான சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்க முயன்றனர்.

எனினும் ஆளுநர் பீ.பி.திசாநாயக்க அதனை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென் மாகாண சபையின் பெரும்பான்மை அதிகாரத்தையும் மாற்றியமைக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பதவிக் காலம் நிறைவடையவுள்ள தென் மாகாண சபையில் 55 ஆசனங்கள் உள்ளன.இறுதியாக நடைபெற்ற தேர்தல் முடிவின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 33 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 14 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு ஐந்து ஆசனங்களும், ஜனநாயகக் கட்சிக்கு 3 ஆசனங்களும் கிடைத்திருந்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவான உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்தால் எத்தகைய நிலை ஏற்படும்?

மாகாண சபை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆட்சி மாற்றங்களுக்கான முயற்சி தொடர்பில் அரசியல் மேடையிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாகாண சபைகளில் ஆட்சி மாற்றம் நிகழுமா? மூன்று மாகாண சபைகளில் ஆட்சி மாற்றம் நிகழுமா? Reviewed by Madawala News on 5/15/2017 11:15:00 PM Rating: 5