Kidny

Kidny

அரசாங்கத்தின் சாணக்கியமில்லாத நடைமுறையும், அதிகரிக்கும் எதிர்ப்பலையும்!


கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி
இரு தலைவர்களைக் கொண்ட ஒரு குடும்பம் போன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டை வர்ணிக்கலாம். கூட்டுக் குடும்பத்திலுள்ள பல உறுப்புக்களையும் ஒரே விதமாக கவனிப்பதென்பது சாத்தியமில்லாத விடயம். அதேபோன்று, குடும்பத்துக்குள் கருத்து முரண்பாடுகளும், பிரச்சினைகளும் வரும்போது ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லையென்றும் குடும்பத் தலைவர்கள் நியாயம் கூறிக் கொள்வார்கள்.

நாட்டில் இன்று நல்லாட்சியின் நிலைமை குறித்து, சாதாரண பொதுமக்கள் தொடக்கம் படித்த புத்திஜீவிகள் பல்வேறு தரப்பினரும் வெவ்வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அரசாங்கத்துக்கு சார்பானவர்களிடம் கூட எதிர்மறையான கருத்துக்கள் வளர்ந்து வருகின்றன என்பது தான் அரசாங்கத்துக்கு ஆபத்தான செய்தியாக கூறவேண்டியுள்ளது.

கடந்த மே 01 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்துகொண்டிருக்கின்றது. 58 லட்சம் வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் ஆதரவு இன்னும் குறையாமல் இருக்கின்றது என்பது அரசாங்கத்துக்கு  கூட்டு எதிர்க் கட்சி எடுத்துக் காட்டிய தொழிலாளர் தின பாடமாகும்.

அதேபோன்று, தேர்தல் தள்ளிப் போடப்பட்டு வருகின்றமைக்கு என்ன காரணம் என்பதை இன்று அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கடந்த மே தினத்துடன், அரசாங்கத்தின் தேர்தல் பயம் இன்னும் அதிகரித்திருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மே தின உரையின் போது இதனைத் தெரிவித்தார்.
“அரசாங்கம் இந்த சனக் கூட்டத்தையும் எனக்குள்ள ஆதரவையும் கண்டு இன்னும் எத்தனை மாதங்களுக்கு தேர்தலைத் தள்ளிப் போடும் என்பதைப் பார்ப்போம் என மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. கூறியது மட்டுமல்லாமல், முடியுமானால் ஏதாவது ஒரு தேர்தலை நடாத்திக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்திருந்தார். இது அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகரித்துள்ள செல்வாக்கும், அதனை நிரூபிக்கும் வகையில் கடந்த மே தினக் கூட்டத்தில் சேர்க்க முடியுமான மக்கள் வெள்ளமும் அரசாங்கத்தின் பிரதான இரு கட்சிகளுக்கும் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லியது. கூட்டணியிலிருந்து பிரிந்து தனித்து அரசாங்கத்தை அமைக்க எத்தனிக்கக் கூடாது என்பதே அதுவாகும்.

இதேவேளை, எதிரணிக்கும், அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் தேவை வெகுவாக உணரப்படுகின்றது. அக்கட்சிகளின் பேரம் பேசும் பலம் அதிகரிக்கின்றது என்பதை சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகள் புரிந்து கொண்டு சாதிக்க துணிய வேண்டும் என்பது அரசியல் சாணக்கியம் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த ஓரிரு வாரங்களாக அரசாங்கத்துக்குள் நடைபெறும் அதிகார மோதல்களும், கட்சி உட்பூசல்களும் பொது மக்கள் மேடைக்கு வந்திருப்பது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என்பதை கூட்டுக் குடும்பத்தின் ஒரு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அறிவித்திருந்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிரச்சினையை மையப்படுத்தியதாகவே இந்தக் கருத்தை ஜனாதிபதி கூறியிருந்தார். இதனைச் சொல்வதற்கு அரசியல் அனுபவமுள்ள ஜனாதிபதி சந்தர்ப்பம் பார்த்து வந்தார். அமைச்சரவைப் பேச்சாளர் தொடர்பான சர்ச்சையை அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டார்.

அரசாங்கத்தின் நிலைத்த தன்மைக்கு இரு கட்சிகளினதும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் அவசியமானது. ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அதனை தொடர்ந்தும் இழுத்துச் செல்லாமல், முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம் ஜனாதிபதி தயவாகவும், காரமாகவும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சரவைக்குள் சிறுபிள்ளைகள் போன்று குற்றம் சாட்டிக் கொள்வதும், வாக்குவாதங்கள் புரிந்து கொள்வதும், ஒருவர் கருத்தை மற்றவர் மக்கள் மேடையில் வெட்டி எதிர்ப்புத் தெரிவிப்பதும் கூட்டரசாங்கத்துக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதை யாரும் சொல்லி விளங்கப்படுத்த தேவையில்லாத ஒன்றாகும்.

மேல் மாகாண அமைச்சர் இசுர தேவப்பிரியவுக்கும், அமைச்சர் சம்பிக்கவுக்கும் பனிப்போர் நடைபெறுகின்றது. தற்பொழுது, இது பகிரங்க விவாத அழைப்பு வரை சென்றுள்ளது. இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புப் போக்கொன்றை கூட்டுப் பொறுப்பில்லாமல் முன்னெடுத்து வருகின்றமை அனைவரினதும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அமைச்சர் ராஜிதவின் நடவடிக்கையை அமைச்சர் ஜோன் செனவிரத்ன விமர்சிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்காவுக்கும் இடையிலான பனிப்போர் தற்பொழுது பகிரங்க மேடைக்கு வந்துள்ளது. இதேபோன்று கூட்டுக் குடும்பத்திலுள்ள பல்வேறு அமைச்சர்கள் ஒருவரை மற்றொருவர் எதிர்த்து சாவல் விட்டு வருகின்றனர்.

சில அமைச்சர்கள் ஒரே கட்சிக்குள் அமைச்சர்களிடையே மோதல் ஆரம்பிக்கும் போது, அதில் குளிர்காய ஆரம்பிக்கின்றனர். சிலர் தங்களது கூட்டுக் குடும்ப வாழ்க்கையை நினைவுகூர்ந்து சமாதானம் செய்து வைக்கின்றனர்.

அரசாங்கத்திலுள்ள இரு பெரும் கட்சிகளும் தங்களுக்கே பலம் இருப்பதாக கருத்திக் கொண்டிருக்கின்றனர். தங்களது இருவேறுபட்ட முரண்பாடான கொள்கைகளை மறந்துவிட்டு, அரசாங்கம் ஒன்றை அமைப்பதனை மட்டும் இலக்காகக் கொண்டு கூட்டுச் சேர்ந்தவர்கள் தற்பொழுது தங்களது கொள்கையை நினைபடுத்தும் நேரம் வந்துள்ளது. ஏனெனில், தேர்தல் வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியும் தங்களுக்கு ஒரு தசாப்தத்துக்கும் மேலாக காத்திருந்து அடைந்து கொண்ட அரசாங்கத்தை தங்களுக்கு மட்டும் அனுபவிக்க முடியும் எனக் கனவுகாண்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சிக்காகப் பாடுபட்ட பலருக்கு உரிய பதவிகளை வழங்க முடியவில்லையே என்ற கவலை தலைமைக்கும், தங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்காமல் இருக்கின்றதே என்ற கவலை கட்சித் தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களின் போது பொதுமக்களின் ஆதங்கங்களை அதிகாரிகள் முன்வைக்கும் விதம் இதற்கு சான்றாகும்.
மக்கள் நடாத்தும் ஆர்ப்பாட்டங்களின் போது நாங்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டோம். இனி வாக்குக் கேட்டு யாரும் வரக் கூடாது எனத் தெரிவிக்கும் நிலைமை அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள மக்கள் தலைவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே உள்ளது.

மஹிந்த குழுவுடன் இருந்து விட்டு அரசாங்கத்தில் ஜனாதிபதியின் அனுசரணையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்கள் இன்று பேச ஆரம்பித்திருப்பது, தேர்தலில் உயிரைப் பணயம் வைத்து அரசாங்கம் அமைக்க பாடுபட்டவர்களுக்கு ஒரு கவலையாக மாறியுள்ளது. இவ்வாறான ஸ்ரீ ல.சு.க.யிலுள்ள அமைச்சர்களுக்கு உரிய பதிலை அளிக்க முடியாமல் ஜனாதிபதி மௌனம் சாதிக்கின்றார். ஒரு தரப்பு இல்லாது போனால், அடுத்த தரப்பு இரு கரம் கூட்டி வரவேற்க காத்திருப்பது ஜனாதிபதி தீர்மானம் தாமதமாவதற்கு காரணமாக இருக்கலாம்.
கடந்த மே தினக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் வராதவர்களுக்கு நடவடிக்கை எடுப்பது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. மே தினக் கூட்டத்துக்கு முன்னரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதனை அறிவித்தது. இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் பிரச்சினை. எடுக்காமல் இருப்பதும் பிரச்சினை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அரசாங்கத்துடன் இருந்து கொண்டு மறைமுகமாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குபவர்கள் மே தினத்தின் பின்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களை நீக்கும் பணிகளை ஜனாதிபதி துணிந்து முன்னெடுத்துள்ளார்.

வட மத்திய மாகாண சபை அமைச்சர் கே.எச். நந்தசேன நேற்று எந்தவித முன்னறிவித்தலும் இன்றி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்ற ஒரு கதி தனக்கும் வரும் என்று அறிந்த எஸ்.எம். ரஞ்ஜித் முன்னெச்சரிக்கையாக தனது அமைச்சுப் பதவியை கௌரவமான முறையில் இராஜினாமா செய்தார். இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் ஆதரவை அதிகப்படுத்தும் என்பது வெளிப்படை உண்மையாகும்.

இதேவேளை, அரசாங்கம் ஒரு மனதாக எடுத்த தீர்மானத்துக்கும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் எதிராக குரல் கொடுப்பது அரசாங்கத்துக்குள் கூட்டுறவு இல்லையென்பதை சொல்லாமல் பறைசாட்டுகின்றது. சைட்டம் தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட சகலரும் ஏகமனதாக எடுத்த தீர்மானம் ஒன்றிருக்கின்றது. இதனைத்தான் அரசாங்கம் சரிகண்டுள்ளது என்ற நிலைமை காணப்படுகின்றது.

இருந்தபோதிலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சைட்டத்தை மூடிவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இல்லாது போனால், அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் எடுக்கப் போவதாகவும் அவர் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலைமைகள் அனைத்தையும் ஊடகங்கள் வாயிலாகவும் சம்பந்தப்பட்ட பிரதேசத்தவர்கள் நேரடியாகவும் காணும் போது, அரசாங்கத்தைப் பற்றி அதிருப்தியான ஒரு மனநிலைமையையே மக்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பது தவிர்க்கமுடியாதது.
தேசியப் பிரச்சினைகள், நாட்டின் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு, பொது மக்களின் சமயலறைப் பிரச்சினை என்பனவற்றைப் பற்றி யோசிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சர்களுக்கு நேரமில்லாத ஒரு நிலைமை காணப்படுவதையே நடைமுறை அரசியல் களநிலவரம் எடுத்துக் காட்டுகின்றது.

அரசாங்கத்தின் மூன்று வருட காலம் நிறைவடையப் போகும் நிலையில், தற்போதைய அரசாங்க நிலைமைகள் அரசாங்கத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இழக்கச் செய்து வருகின்றது என்பது மட்டும் கண்கூடு.
பிரதமரின் தொழில்வாய்ப்பு பற்றிக் கூறிய வாக்குறுதியும் அது இளைஞர்களின் எண்ணங்களில் ஏற்படுத்தியுள்ள கனவும் இன்னும் காணல் நீராகவே உள்ளது. தேர்தல் நடக்கும் போது இருந்த பொருட்களின் நிலைமையல்ல தற்பொழுது இருப்பது.
இதன்பிறகும் அரசாங்கம் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடன் சுமையைக் காரணம் காட்டப் போகின்றதா? என்று கேட்பதற்கு யாருக்கும் வாய் கூசாது. கூட்டரசாங்கம் அமைத்து காட்டிய முன்மாதிரிகள் மக்களுக்கு கல்லில் செதுக்கிய சிலை போன்று அரசியல் அனுபவங்களாக பதிந்துள்ளது என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.

அரசாங்கம் தேர்தலுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றது.இரு பெரும் கட்சிகளுக்குள்ளும் உள்வீட்டுச் சமாச்சாரம் திருப்தியானதாக இல்லை. தேர்தல் வந்தால் முடிவு மட்டும் எப்படியிருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வெகுநேரம் எடுக்காது என்பது மட்டும் உண்மையாகும்.அரசாங்கத்தின் சாணக்கியமில்லாத நடைமுறையும், அதிகரிக்கும் எதிர்ப்பலையும்! அரசாங்கத்தின் சாணக்கியமில்லாத நடைமுறையும், அதிகரிக்கும் எதிர்ப்பலையும்! Reviewed by Madawala News on 5/13/2017 10:36:00 AM Rating: 5